என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருள் விற்ற 10 பேரை கைது செய்த போலீசார், மாவட்டம் முழுவதும் இன்று 2-வது நாளாக கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    ஈரோடு:

    தமிழகத்தில் போதைப்பொருட்களை முழுமையாக ஒழிக்க போலீஸ் சார்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர், ஜனவரி மாதங்களில் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் ஆபரே‌ஷன் கஞ்சா வேட்டை என்ற பெயரில் நேற்று முதல் ஒரு மாதம் கஞ்சா வேட்டைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீஸ் கமி‌ஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், ஐ.ஜி,க்கள், டி.ஐ.ஜி.க்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    அதில் கடந்த டிசம்பர் 2021 முதல் ஜனவரி 2022 இதுவரை நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக இந்த மாதம் நேற்று முதல் வரும் ஏப்ரல் மாதம் 27-ந் தேதி வரை ஒரு மாதம் ஆபரே‌ஷன் கஞ்சா வேட்டை 2.0 நடத்தப்பட வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இதையடுத்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை குறித்து ஒவ்வொரு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் அந்தந்த போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 இருசக்கர வாகனத்தில் 3 நபர்கள் வந்தனர்.

    அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    விசாரணையில் அவர்கள் ஈரோடு பெரிய தோட்டம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்கிற தக்காளி விக்கி (26), நாடார்மேடு பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் (20), சாஸ்திரி நகரை சேர்ந்த விக்னேஷ் குமார் (24) ஆகியோர் என தெரியவந்தது.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.4,750 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் விஜயமங்கலம், கள்ளியம்புதூர் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் விஜயமங்கலம் பகுதியை சேர்ந்த வரதராஜ், தமிழ்செல்வன் என தெரியவந்தது. அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    தாளவாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை சோதனை செய்தபோது அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர் தாளவாடி அடுத்த ஜிகினாரைய் அப்பகுதியை சேர்ந்த சின்னகாதி என தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யபட்டார்.

    இதேபோல் டி.என்.பாளையம் சத்தியமங்கலம்- அத்தாணி சாலையில் வாணிபுதூர் பாலம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ராஜ்குமார், ஆனந்த்பாபு என்பதும் ஒரு கிலோ கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதேபோல் பவானி பஸ் நிலையம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த ஒருவரைப் போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் சந்திரசேகரன் என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் இன்று 2-வது நாளாக கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தாளவாடி திகினாரை, அருள்வாடி, மெட்டல் வாடி,தொட்டகாஜனூர், ஜுர்கள்ளி, பனக்கள்ளி, ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. பனக்கள்ளி கிராமத்தில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதிபட்டனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. அவ்வப்போது சில கிராமங்களில் மழையும் பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டமாக காணப்பட்டது. முதலில் சாரல் மழையாக ஆரம்பித்து பின்னர் பலத்த மழையாக ஒரு மணி நேரம் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

    தாளவாடி திகினாரை, அருள்வாடி, மெட்டல் வாடி,தொட்டகாஜனூர், ஜுர்கள்ளி, பனக்கள்ளி, ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. பனக்கள்ளி கிராமத்தில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதிபட்டனர்.

    சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஜீர்கள்ளி,தொட்டமுதிகரை, கிராமத்தில் 20 ஏக்கர் பரப்பளவு உள்ள கரும்பு பயிர்கள் மண்ணில் சாய்ந்தது.

    அதேப்போல தொட்டகாஜனூர் கிராமத்தில் அனுமையன் (35) என்பவர் தோட்டத்தில் 400 நேந்திரம் வாழையும், குமார் என்பவர் தோட்டத்தில் 500 வாழையும் சாய்ந்து சேதமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் சாலை அண்ணா நகர் அருகே சாலையோரத்தில் இருந்த பழமையான மரம் சாலையில் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் மரத்தை பொக்லைன் மூலம் மரத்தை அகற்றினர் இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஈரோடு:

    வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் 2 நாள் வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.

    இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட செயலாளர் தங்கமுத்து தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் உள்பட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இதேபோல் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராக்கி முத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜய மனோகரன் உள்பட ஏராளமான வருவாய்த் துறை அலுவலர்கள் ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றனர். 

    வருவாய்த்துறை அலுவலர்கள் விடுப்பு காரணமாக தாலுகா அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. ஜாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு போன்ற பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெறவில்லை.
    காட்டன் நூல் விலை உயர்வு எதிரொலியால் ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் கடும் பாதிப்பபு.
    ஈரோடு:

    காட்டன் நூல் விலை உயர்வு எதிரொலியால் ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் கடும் பாதிப்பபு.

    ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் செவ்வாய் கிழமை நடைபெற்று வருகின்றது. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவது வழக்கம்.

    கொரோனா தாக்கம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், நூல் விலை உயர்வு போன்ற காரணமாக  கடந்த சில வாரங்களாக விற்பனை மந்த நிலையில் இருந்து வந்தது. குறிப்பாக மொத்த வியாபாரிகள் வராத நிலையில், சில்லரை வியாபாரம் மட்டுமே கை கொடுத்து வந்தது. 

    இந்நிலையில் இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மொத்த வியாபாரம் வெறும் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. இந்நிலையில் கடந்த வாரம் காட்டன் நூலின் விலை மேலும் ரூ.2 ஆயிரம் அதிகரித்தது. 

    இதன் எதிரொலியாக தறிப்பட்டறையில்  உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் துணிகளின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் ரூ.20 வரை அதிகரித்தது. கடந்த வாரம்  ரூ.75 வரை விற்ற காட்டன் புடவை இந்த வாரம் ரூ.90-க்கு விற்பனையானது. இதேபோல் கடந்த வாரம் ரூ.90-க்கு விற்ற லுங்கி இந்த வாரம் ரூ.110-க்கு விற்பனையானது. 

    இதேபோல் கடந்த வாரம் ரூ.30-க்கு விற்பனையான பனியன் இந்த வாரம் ரூ.45&க்கு விற்பனையானது. இதனால் ஜவுளி வியாபாரம் கடுமையான பாதிப்பை சந்தித்தது. அதேநேரம் சில்லரை வியா பாரம் ஓரளவு நடந்தது. இன்று கூடிய சந்தையில் 40 சதவீதம் சில்லரை வியாபாரம் நடைபெற்றது.

    வெளிமாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. ஏற்கனவே நூல் விலை உயர்ந்து வியாபாரிகள் பாதிக்கப்பட்டு இருந்த  நிலையில் மேலும் ரூ.2 ஆயிரம் நூல் விலை உயர்ந்துள்ளதால் செய்வது தெரியாமல் தவித்து வருகின்றனர்.மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட அந்தியூர் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி.முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட அந்தியூர் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி.முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு சிறந்த போலீஸ் நிலையங்களை தேர்ந்தெடுத்து தமிழக முதல்&அமைச்சரின் சிறந்த போலீஸ் நிலையத்திற்கான முதல் 3 பரிசினை வழங்கி வருகிறது.

    அதன்படி இந்த வருடம் சிறந்த போலீஸ் நிலைய ங்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு 20 போலீஸ் நிலையங்களின் பட்டியலில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் போலீஸ் நிலையம் சிறந்த போலீஸ் நிலையமாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. 
    இதையொட்டி அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு கோவை மண்டல டி.ஐ.ஜி. முத்துசாமி நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார். 

    போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை காவலர்கள் அணுக வேண் டிய முறை பற்றியும்,  போலீஸ் நிலையத்தில் பராமரி க்கப்படும் பதிவேடுகளை கையாளுவது குறித்தும், புகார் அளிக்க வரும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அமரும் இருக்கை, குடிநீர் வசதி செய்து கொடுத்தல் பற்றியும் விசாரித்தார்.  

    வரவேற்புப்பதிவேடு பராமரித்தல், போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து தண்டனை பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    மேலும் காவல்துறை பொது மக்களின் நண்பன் என்பதை உணர்த்தும் விதத்தில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதையும், இன்ஸ்பெக்டர் மற்றும் அனைத்து போலீசாருக்கும் அவர் வலியுறுத்தினார். சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்டதற்காக இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்களுக்கு அவர் பாராட்டை தெரிவித்துக் கொண்டார்.

    போலீசாரின் குறைகளைக் கேட்டறிந்தும், சுற்றுப்புறத்தை தூய்மை யாக வைத்திருப்பதன் அவசியத்தை எடுத்து கூறினார். இந்த ஆய்வின் போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பவானி டி.எஸ்.பி. கார்த்திகேயன், அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.
    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கொடுமுடி:

    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கரூர் மாவட்டம் புகளூரை சேர்ந்தவர் கருணாநிதி (53). இவர் கொடுமுடி அருகே உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கொடுமுடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் நொய்யல் நோக்கி சென்று கொண்டு இருந்தார். 

    அள்போது பழைய சோளக்காளிபாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி தவறி அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்தார். 

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கருணாநிதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்து தகவல் அறிந்த கொடுமுடி போலீசார் இறந்த கருணாநிதி உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர் அருகே தனியார் பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே தனியார் பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர் அடுத்த பருவாச்சி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (58). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று பருவாச்சி பகுதியிலுள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தனது மோட்டார் சைக்கி ளுக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பருவாச்சி& புன்னம் பிரிவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக பழனிச்சாமி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தலை, கால் பகுதிகளில் பலத்த காயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே பழனிச்சாமி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதனையடுத்து அவரது மனைவி சரசாள் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    பருவாச்சி பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் சாலையில் முக்கிய இடங் களில் ஒளிரும் எச்சரிக்கை விளக்கு அமைத்து கொடுக்க வேண்டும் என்று பருவாச்சி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மின்வாரிய ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    மின்வாரிய ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு, கருங்கல் பாளையம் காந்திபுரம் முதல் வீதியை சேர்ந்தவர் மதனகோபால் (46). திருமணமான இவருக்கு ஒரு மகள் உள்ளார்.

    மதனகோபால் சங்ககிரி மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளர் ஆக பணியாற்றி வந்தார். கடந்த 8 மாதமாக தீவிர மது பழக்கத்திற்கு அடிமையானதால் சரிவர வேலைக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று மதன கோபால் மாலை குடிபோதையில் வீட்டுக்குள் சென்று கதவை உட்புறமாக தாழிட்டு கொண்டார்.  நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் கதவை தட்டி உள்ளனர். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. 

    இது குறித்து ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
    தீயணைப்பு துறையினர் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மதனகோபால் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  உடனே அவரை மீட்டு தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மதன கோ பால் இறந்து விட்ட தாக தெரிவித்த னர்.

    இது குறித்து ஈரோடு டவுன் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.
    கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணி பொதுமக்களிடம் அமைச்சர் முத்துசாமி கருத்து கேட்டறிந்தார்.
    ஈரோடு:

    கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணி பொதுமக்களிடம் அமைச்சர் முத்துசாமி கருத்து கேட்டறிந்தார்.

    சென்னிமலை, மொடக்குறிச்சி தாலுக்கா பகுதியில் செல்லும் கீழ்பவானி பிரத £ன கால்வாய் மற்றும் கிளைக்கால்வாய்களில் நடைபெறவுள்ள புனர மைப்பு பணிகள் தொடர்பாக  மாவட்டவருவாய் அலுவலர் டாக்டர்.முருகேசன் தலைமையில் அமைச்சர் முத்துசாமி விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    கீழ்பவானி திட்டத்தின்கீழ் சென்னிமலை வட்டத்திற்குட் பட்ட வடமுகம் வெள்ளோடு ஊராட்சியைச் சேர்ந்த செம்மாண்டம் பாளையம், கருக்கன்காட்டுவலசு, ஓலப்பாளையம், தென்முகம் வெள்ளோடு ஊராட்சியைச் சேர்ந்த தேவனாம் பாளையம், மொடக்குறிச்சி வட்டத்திற் குட்பட்ட முகாசி அனுமன் பள்ளி, சென்னியப்பள்ளி, அட்டவணை அனுமன் பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த பொட்டு முத்துப்பாளையம், வெள்ளிவலசு, சங்கராங்காடு, அரச்சலூர் ஆகிய பகுதிகளின் வழியே செல்லும் கீழ்பவானி பிரதான கால்வாய் மற்றும் கிளை கால்வாய்களில் நடைபெறவுள்ள புரனமைப்பு பணிகள் தொடர்பாக விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து கருத்துக்களை கேட்டறிந்தார்.

    இந்நிகழ்ச்சியில் சென்னிமலை ஊராட்சி ஒன்றியதலைவர் காயத்திரிஇளங்கோ, கீழ்பவானி வடிநிலகோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவிசெயற் பொறியாளர்கள்அப்புசாமி, சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவிபொறியாளர்கள் உட்பட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர். 
    நம்பியூர் அருகே குழந்தைகளுடன் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நம்பியூர்:


    நம்பியூர் அருகே குழந்தைகளுடன் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நம்பியூர் அருகே உள்ள மலையம்பாளையம் பகுதியை சேர்ந்த மயிலாள் (45). அதே பகுதியில் விவசாயக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டார்.

    மயிலாள் மகள் நந்தினியை கோவை மாவட்டம் கவுண்டன் புதூரை சேர்ந்த முருகன் என்பவருக்கு கடந்த 8 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார். அவர்களுக்கு அதிஸ், அட்ஷயன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் முருகன் அடிக்கடி மது குடித்துவிட்டு சண்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவருடன் கோபித்து கொண்டு நந்தினி கடந்த ஒரு வருடமாக மலையம்பாளையத்தில் உள்ள தாயின் வீட்டில் மகன்களுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முருகன் சமாதானம் பேசி ஊருக்கு அழைத்து சென்று ள்ளார். பின்னர் தனது தாயின் ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்காக நந்தினி மற்றும் முருகன், மகன்களுடன் வந்துள்ளார்.

    சம்பவத்தன்று நந்தினி தனது மகன்களுடன் மலையம்பாளையம் சென்று வருவதாக கூறிச்சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. எனவே எனது மகளை கண்டுபிடித்து தருமாறு மயிலாள் வரப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினி மற்றும் அவரது மகன்களை தேடி வருகின்றனர்
    ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.106.42-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.106.42-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

    சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.

    இந்நிலையில் கடந்த 21-ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கியது. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. 

    இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.ரூ.106-க்கு விற்பனைஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் டீசல் ரூ.105.58-க்கு விற்பனையானது. இன்று மேலும் 82 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.106.40-க்கு விற்பனையானது. 

    இதேபோல் நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.95.83-க்கு விற்பனையானது. இன்று மேலும் 67 காசுகள் உயர்ந்து 96.50 காசுக்கு விற்பனை ஆனது.தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள், சிறு வியாபாரிகள் திணறி வருகின்றனர். 

    இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னிமலை அருகே குட்டையில் குளித்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே குட்டையில் குளித்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள தளவாய் பாளையம் அடுத்த சின்னேகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (39). சென்ட்ரிங் தொழிலாளி.  இவரது மனைவி வைதேகி. இவர் களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. 

    இந்த நிலையில்  சதீஷ் குமார் மற்றும் ஊத்துக்குளி ஆர்.எஸ் அடுத்த ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த குழந்தைவேல் மகன் சதீஷ்குமார், சிவசாமி மற்றும் நண்பர்களுடன் சென்னிமலை அருகே  உள்ள அய்யம்பாளையம் முதலைமடை பகுதிக்கு வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் அருகே உள்ள எல்.பி.பி., கசிவு நீர் குட்டையில்  குளித்தனர். இதில் சின்னே கவுண்டன் பாளையத்தை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி சதீஷ்குமார் குட்டையின் நடுப்பகுதிக்கு சென்று குளித்து கொண்டு இருந்தார். 

      மற்றவர்கள் குட்டையின் ஓரத்தில் குளித்து கொண் டிருந்தனர். நீண்ட நேர மாகியும் சதீஷ்குமார் கரைக்கு வரவில்லை.  இதையடுத்து அவர்கள் சதீஷ்குமாரை குட்டையில்  தேடினர். ஆனால் அந்த பகுதியில் அவர் இல்லை.

    இதையடுத்து அவர்கள் சத்தம் போட்டு அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் இது குறித்து கூறினர். பொது மக்கள் வந்து குட்டையில் சதீஷ்குமாரை தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இது குறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குட்டையில் தேடினர். நீண்ட நேரத்துக்கு பிறகு சதீஷ்குமார் உடல் பிணமாக மீட்கப்பட்டது.

    இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமார்  உடலை கைப்பற்றி பெருந் துறை அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    ×