என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் கடும் பாதிப்பு
காட்டன் நூல் விலை உயர்வு எதிரொலியால் ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் கடும் பாதிப்பபு.
ஈரோடு:
காட்டன் நூல் விலை உயர்வு எதிரொலியால் ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் கடும் பாதிப்பபு.
ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் செவ்வாய் கிழமை நடைபெற்று வருகின்றது. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவது வழக்கம்.
கொரோனா தாக்கம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், நூல் விலை உயர்வு போன்ற காரணமாக கடந்த சில வாரங்களாக விற்பனை மந்த நிலையில் இருந்து வந்தது. குறிப்பாக மொத்த வியாபாரிகள் வராத நிலையில், சில்லரை வியாபாரம் மட்டுமே கை கொடுத்து வந்தது.
இந்நிலையில் இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மொத்த வியாபாரம் வெறும் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. இந்நிலையில் கடந்த வாரம் காட்டன் நூலின் விலை மேலும் ரூ.2 ஆயிரம் அதிகரித்தது.
இதன் எதிரொலியாக தறிப்பட்டறையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் துணிகளின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் ரூ.20 வரை அதிகரித்தது. கடந்த வாரம் ரூ.75 வரை விற்ற காட்டன் புடவை இந்த வாரம் ரூ.90-க்கு விற்பனையானது. இதேபோல் கடந்த வாரம் ரூ.90-க்கு விற்ற லுங்கி இந்த வாரம் ரூ.110-க்கு விற்பனையானது.
இதேபோல் கடந்த வாரம் ரூ.30-க்கு விற்பனையான பனியன் இந்த வாரம் ரூ.45&க்கு விற்பனையானது. இதனால் ஜவுளி வியாபாரம் கடுமையான பாதிப்பை சந்தித்தது. அதேநேரம் சில்லரை வியா பாரம் ஓரளவு நடந்தது. இன்று கூடிய சந்தையில் 40 சதவீதம் சில்லரை வியாபாரம் நடைபெற்றது.
வெளிமாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. ஏற்கனவே நூல் விலை உயர்ந்து வியாபாரிகள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மேலும் ரூ.2 ஆயிரம் நூல் விலை உயர்ந்துள்ளதால் செய்வது தெரியாமல் தவித்து வருகின்றனர்.மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






