என் மலர்
ஈரோடு
- விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் ஒற்றையானை வழி தவறி ஊருக்குள் நுழைந்தது.
- சத்தியமங்கலம் மைசூர் சாலையில் போக்குவரத்து குறைந்ததும் வனத்துறையினர் யானையை விரட்டினர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் ஒற்றையானை வழி தவறி ஊருக்குள் நுழைந்தது.
சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் கிராமத்தின் வழியாக வந்த யானை வயல்வெளிகளை கடந்து நம்பியூர் காராப்பட்டு, கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒடைய க்குளம், காசிப்பாளையம் பகுதியில் சுற்றியது.
இதுப்பற்றி தெரிய வந்ததும் டி.என்.பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் யானையை விரட்டும் பணியிலும் ஈடுபட்டனர். இதற்காக வனத்துறை சார்பில் 50 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்.
பகல் நேரம் என்பதால் யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபடவில்லை. பின்னர் மாலை நேரம் ஆனதும் டிரோன் கேமரா மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அது வந்த திசையிலேயே மீண்டும் விரட்ட ஆரம்பித்தனர்.
அப்போது யானை கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றைக் கடந்து சென்றது. யானையை வனத்துறையினர் நேற்று மதியம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக பண்ணாரி வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் யானை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாறி மாறி சென்று வனத்துறையி னருக்கு போக்கு காட்டியது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் யானையை விரட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
சத்தியமங்கலம் மைசூர் சாலையில் போக்குவரத்து குறைந்ததும் வனத்துறையினர் யானையை விரட்டினர். ஒரு வழியாக இரவு 9 மணி அளவில் பண்ணாரி வனப்பகுதிக்குள் யானை சென்றது.
தொடர்ந்து அந்த யானை மீண்டும் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- பொங்கல் பண்டிகையையொட்டி இப்போது அந்தியூர் சந்தை களை கட்ட தொடங்கி விட்டது.
- சந்தைகளில் மாட்டுப்பொங்கலுக்கு தேவையான பொருட்களை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம். அந்தியூர் வாரச்சந்தை அந்தியூர் பஸ் நிலையம் அருகே 8 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. தற்போது அந்த பகுதியில் தாலுகா அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், கருவூலம் உள்ளிட்ட அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. இதனால் தற்போது அந்தியூர் சந்தை 3.5 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த வாரச் சந்தை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கால்நடை சந்தைகளும், திங்கட்கிழமை வார சந்தையும் நடந்து வருகிறது. இந்த வார சந்தையில் வணிகப் பொருட்கள் (மளிகை) மற்றும் காய்கறி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளான சின்னத்தம்பி பாளையம், வெள்ளை யம்பாளையம் தவிட்டு பாளையம், அண்ணாமடுவு, கந்தம்பாளையம், காட்டூர், செம்புளி சாம்பாளை யம், கள்ளிமடை குட்டை, புதுக்காடு, காந்திநகர், பர்கூர் மலை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விளைபொருட்களை விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.
இந்த நிலையில் வருகின்ற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 16-ந் தேதி மாட்டுப்பொங்கல் வருவதையொட்டி புகழ்பெற்ற அந்தியூர் மாட்டுச்சந்தையில் மாடுகள் விற்பனை மற்றும் மாடு களுக்கு தேவையான கயிறு, கொம்புகளுக்கு வர்ணம் பூசும் வண்ண கலர்கள், பெயி ண்ட்டு வகைகள் உள்பட பல்வேறு பொருட்களும் இன்று அதிகளவில் விற்ப னைக்கு வியாபாரிகள் கொண்டு வந்து இருந்தனர்.
இதையடுத்து விவசாயிகளும், வியாபாரிகளும் அந்தியூர் சந்தைக்கு இன்று அதிகளவில் வந்திரு ந்தனர். தொடர்ந்து அவர்கள் மாடுகளுக்கு தேவையான வண்ண கயிறு மற்றும் கலர் பொடிகளை ஆர்வத்து டன் வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர்.
கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் மாடுகள் வரத்து அதிக அளவில் இருந்தது. இதனை வாங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் ஈரோடு, மேட்டூர், சத்தியமங்கலம், கோபி, கேரள மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் சென்றனர்.
இதனால் வாரச்சந்தையில் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி இப்போது அந்தியூர் சந்தை களை கட்ட தொடங்கி விட்டது.
இதேபோல் மாவட்ட த்தின் பல பகுதிகளில் உள்ள சந்தைகளில் மாட்டுப்பொங்கலுக்கு தேவையான பொருட்களை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
- ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் கத்திரிகோலால் பிரியாவை குத்தினார்.
- இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் பெரியவலசு கொத்துக்காரர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). மரக்கட்டில், மேஜைகளுக்கு பாலீஸ் போடும் தொழிலாளி. இவரது மனைவி பிரியா (22). தறிபட்டறை தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
செந்தில்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதமாக பிரியா பிரிந்து வந்து குழந்தைகளுடன் வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் அருகே வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் சம்பவ த்தன்று செந்தில்குமார், பிரியா வசித்து வரும் வீட்டிற்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். இதற்கு பிரியா மறுப்பு தெரிவித்ததால் செந்தில் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் கத்திரிகோலால் பிரியாவின் வயிறு, கழுத்து ஆகிய பகுதிகளில் குத்தினார். பிரியா வலியால் கூச்சல்போட அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்து செந்தில்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.
ரத்த வெள்ளத்தில் துடித்த பிரியாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- ஈரோடு அடுத்த நசியனூரில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அர்ஜுனன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.
- ஓட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு அடுத்த நசியனூரில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அர்ஜுனன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். அதே பகுதியில் மற்றொருவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இருவருக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் அர்ஜுனன் வழக்கம்போல் ஓட்டலை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று அதிகாலை அர்ஜுனன் ஓட்டல் முன்பு கார் ஒன்று வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய மர்ம நபர் ஓட்டலின் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளார். பெட்ரோல் குண்டு வீசியதும் பயங்கர சத்தத்துடன் அது வெடித்து ஓட்டல் தீப்பிடித்து எரிந்தது.
இதை பார்த்தவர்கள் இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கும், பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 30 நிமிடம் போராடி தீயணைத்தனர். எனினும் கடையின் முன் பகுதியில் இருந்த 2 பிரிட்ஜ்கள், மேற்கூரை எரிந்து சேதமடைந்தது.
சம்பவ இடத்திற்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜானகிராமன் சென்று விசாரணை நடத்தினார். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவி பிடிக்கவில்லை. கடையின் முன்பு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது இன்று அதிகாலை காரில் இருந்து இறங்கி வந்த மரம் நம்பர் ஒருவர் பெட்ரோல் குண்டை ஓட்டல் மீது வீசியது பதிவாகி இருந்தது.
அதில் அந்த நபரின் முகம் தெளிவாக தெரிந்தது அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றது தெரிய வந்தது. ஓட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழகம்-கர்நாடக இடையே பயணிக்கும் வாகனங்கள் திம்பம் மலைப்பாதை வழியாக செல்கிறது. இவ்வழியாக
- 24-வது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஆசனூர், திம்பம், பவானிசாகர், பண்ணாரி உள்ளிட்ட பகுதியில் சிறுத்தை எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சிறுத்தைகள் தங்களது எல்லையை அதிகரித்து வருவதால் வனத்தையொட்டி உள்ள கிராமங்களில் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது.
தமிழகம்-கர்நாடக இடையே பயணிக்கும் வாகனங்கள் திம்பம் மலைப்பாதை வழியாக செல்கிறது. இவ்வழியாக அவ்வப்போது யானை, சிறுத்தை சாலையை கடந்து சொல்கிறது.
இந்நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி சரக்கு வாகனம் ஒன்று திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது 24-வது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றது.
அதனை வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். பின்னர் சிறுத்தை துள்ளி குதித்து ஓடி வனப்பகுதியில் மறைந்தது. சிறுத்தை நடமாட்டம் காரணமாக மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிறுத்தை அடிக்கடி திம்பம் மலைப் பாதையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மெதுவாகவும், எச்சரிக்கையுடனும் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
- தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது
- 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 30 போலி லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபி கலிங்கியம் தேர் வீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில், கோபி போலீசார் அங்கு சென்று வெளி மாநில லாட்டரி சீட்டுக்களை போலியாக அச்சிட்டு விற்பனை செய்து வந்த, கோபி கலிங்கியம் தேர் வீதியை சேர்ந்த சிவக்குமார்(42), கரட்டடிபாளையம் மாரிசாமி(52), வேட்டைக்காரன் கோவில் செல்வம்(60) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 30 போலி லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
- அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது
- அணைக்கு வினாடிக்கு 377 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
மேலும் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.99 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 377 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கன அடியும், தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 100 கன அடியும் என மொத்தம் பவானிசாகர் அணையி லிருந்து 2,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- சிறப்பாக பணியாற்றும் பஞ்சாயத்து, தலைவர்களை ஊக்கப்படுத்த உத்தமர் காந்தி விருது அறிவிக்கப்பட்டுள்ளது
- 37 பஞ்சாயத்துகளுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் வீதம், 3.70 கோடி ரூபாய் செலவில் உத்தமர் காந்தி விருது வழங்கப்பட உள்ளது
ஈரோடு,
ஊரக வளர்ச்சி அலகு, பஞ்சாயத்து தலைவர்களின் தலைமை பணியை வெளி கொணரும் வகையிலும், பஞ்சாயத்து சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையிலும், புதுமையான முயற்சி எடுத்து சிறப்பாக பணியாற்றும் பஞ்சாயத்து, தலைவர்களை ஊக்கப்படுத்த உத்தமர் காந்தி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2006 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த, 2006–07 முதல், 2009–10ம் ஆண்டு வரை, 4 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு, 15 விருதுகள் வீதம், 60 பஞ்சாயத்து தலைவர்களுக்கு நற்சான்றிதழ், கேடயம், ரூ.5 லட்சம் ரூபாய்க்கான வெகுமதியுடன் உத்தமர் காந்தி விருது வழங்கப்படும்.
இடைப்பட்ட காலத்தில் இவ்விருது வழங்கப்படவில்லை. எனவே கடந்த, 2022 முதல் மீண்டும் மாவட்டத்துக்கு, 1 வீதம் சிறந்த, 37 பஞ்சாயத்துகளுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் வீதம், 3.70 கோடி ரூபாய் செலவில் உத்தமர் காந்தி விருது வழங்கப்பட உள்ளது.
இதன்படி, ஈரோடு மாவட்டத்தில், 225 பஞ்சாயத்துகளில் சிறந்த நிர்வாக மேம்பாடு, புதுமை முயற்சி பணி, நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையும் பஞ்சாயத்தை ஊக்கப்படுத்த, http://tnrd.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
இத்தளத்தில் பஞ்சாயத்துக்கு வழங்கப்படும் பயனர் முகவரி, கடவு சொல்லை பயன்படுத்தி உள் நுழைந்து, அனைத்து காரணிகளை தேர்வு செய்து உள்ளீடு செய்து சேமிப்பதன் மூலம் படிவத்தை தாக்கல் செய்யலாம்.
இத்தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- அவரது வீட்டில் இருந்த நாய் திடீரென காணாமல் போனது
- 60 அடி ஆழமும் 15 அடி தண்ணீரும் உள்ள அந்த கிணற்றுக்குள் அந்த நாய் தவறி விழுந்து தவித்து கொண்டு இருந்தது தெரிய வந்தது
பெருந்துறை,
பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், ஊத்துக்குளி ரோடு, தங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் மாயக்கண்ணன். தொழி லாளியான இவர் தனது குடும்பத்துடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்த நாய் திடீரென காணாமல் போனது. இதையடுத்து அவர் உடனடியாக அந்த பகுதியில் நாயை தேடிப் பார்த்தார். அப்போது வீட்டிற்கு அருகே இருந்த தோட்டத்து கிணற்றுக்குள் இருந்து நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் கிணற்று அருகே சென்று பார்த்தார். சுமார் 60 அடி ஆழமும் 15 அடி தண்ணீரும் உள்ள அந்த கிணற்றுக்குள் அந்த நாய் தவறி விழுந்து தவித்து கொண்டு இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து அவர் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதை யடுத்து நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி சிறிது நேரம் போராட்டத்துக்கு பிறகு கயிறு கட்டி நாயை பத்தி ரமாக மீட்டனர்.
- பல்வேறு போட்டிகளில் வட்டார அளவில் முதல் இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் என பல்வேறு பரிசுகளை வென்றனர்
- மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான செவ்வியல் குழு பரதநாட்டியப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த னர்
பவானி,
பவானி வர்ணபுரம் ஒன்றாவது வீதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பலர் கல்வி பயின்று வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசு நடத்திய கலை திருவிழா போட்டியில் இப்பள்ளியில் பயிலும் ஆறாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் செவ்வியல் குழு, செவ்வியல் தனி நடனம், மனிதநேயப் பாடல், வில்லுப்பாட்டு, ஓவியம் இயற்கைக்காட்சி, களிமண்சுதை செய்தல், கதை சொல்லுதல், நாட்டுப்புறப்பாடல் என பல்வேறு போட்டிகளில் வட்டார அளவில் முதல் இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் என பல்வேறு பரிசுகளை வென்றனர்.
இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று செவ்வியல் (பரதநாட்டியம்) குழு நடன போட்டியில் முதலி டம் பெற்றது.
பின்னர் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான செவ்வியல் குழு பரதநாட்டியப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த னர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.
- கடந்த 3 நாட்களுக்கு முன்பு வயிற்று வலி அதிகமாக உள்ளதாக மனைவியிடம் கூறியுள்ளார்
- வாய்க்காலில் விழுந்து இறந்தது கந்தசாமி என தெரியவந்தது
பெருந்துறை,
பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம் கீழேரி பாளையம் பகுதியை சார்ந்தவர் கந்தசாமி ( 72). இவர் தனது மனைவி கருணை அம்மாள், மகன் பூபதி, மகள் விஜயலட்சுமி ஆகியோருடன் குடியிருந்து வருகிறார்.
இவரது மனைவி கருணைஅம்மாள் அந்தப் பகுதியில் 100 நாள் வேலை செய்து வருகிறார். கந்தசாமி கொளப்பலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஸ்பின்னிங் மில்லில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
கடந்த இரண்டு வருடங்க ளாக இவருக்கு குடல் பிரச்சனை மற்றும் அல்சர் நோய் பாதிப்பு இருந்துள்ளது. இதனால் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வயிற்று வலி அதிகமாக உள்ளதாக மனைவியிடம் கூறியுள்ளார்.
அவர் மனைவி மாத்திரை சாப்பிட்டு விட்டு வீட்டில் இருக்கும் படி கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலை வீட்டில் வந்து பார்த்தபோது அவரது கணவர் கந்தசாமி வீட்டில் இல்லை.
உடனடியாக மகன் மற்றும் மகள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்க வில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் பெருந்துறை ஈரோடு ரோடு கீழ்பவானி வாய்க்காலில் ஆண் பிணம் மிதந்து வந்ததாகவும் அதனை தீயணைப்புத் துறையினர் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த தாகவும் இவர்களுக்கு தகவல் கிடைத்தது.
கருணை அம்மாளும் அவரது மகனும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது வாய்க்காலில் விழுந்து இறந்தது கந்தசாமி என தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசோதா பேகம் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்.
- தமிழகத்தில் கடந்த 1957-ம் ஆண்டு முதல் இதுவரை 101 சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடந்துள்ளது.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 102-வது இடைத்தேர்தல் ஆகும்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் திராவிட கட்சிகளே மாறி, மாறி போட்டியிட்டு வெற்றி பெற்றது.
இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது மகன் திருமகன் ஈவெராவுக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு வாங்கி கொடுத்தார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் த.மா.கா. வேட்பாளர் யுவராஜா போட்டியிட்டார்.
இதில் 8 ஆயிரத்து 904 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். இதனால் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு தொகுதி காங்கிரஸ் வசமானது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 67,300 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜா 58,396 ஓட்டுகள் பெற்று குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 11,629 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 10,005 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பெற்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதி காலியானது. இதையடுத்து இந்த தொகுதியில் 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும். தி.மு.க. அரசின் 1½ ஆண்டு ஆட்சி காலத்தில் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.
கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது தி.மு.க. போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் கடந்த முறை த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது அ.தி.மு.க. போட்டியிட போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான சந்திரகுமார், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோர் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரசும், அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட த.மா.காவும் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் 2-வது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களும் மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் த.மா.கா.வும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகரிடம் கேட்டபோது கூறியதாவது:-
கடந்த முறை எங்களது வேட்பாளர் யுவராஜா குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். எனவே இந்த முறை நாங்களும் போட்டியிட விரும்புகிறோம். இதுகுறித்து எங்களது கட்சி தலைவர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி வேட்பாளரை அறிவிப்பார். அதற்கான காலம் இன்னும் உள்ளது.
இதற்கிடையே தி.மு.க-அ.தி.மு.க. இடையே நேரிடையாக பலப்பரீட்சை ஏற்படுமா? அல்லது கூட்டணி தர்மத்திற்காக மீண்டும் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமா என்று தொண்டர்கள் எதிர்ப்பார்ப்புடன் காத்து உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 1957-ம் ஆண்டு முதல் இதுவரை 101 சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 102-வது இடைத்தேர்தல் ஆகும். இதுவரை நடந்த 101 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் 29 முறை எதிர்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
இதில் 1959-ல் அருப்புக்கோட்டையில் எஸ்.சுந்தரபாரதி, 2017-ல் ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரன் ஆகியோர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ஆவர். மற்றவர்கள் ஆளும் கட்சி அல்லது அதன் கூட்டணியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு இடைத்தேர்தலையும் ஆளும் கட்சியினர் கவுரவ பிரச்சினையாக கருதி தேர்தல் பணியாற்றி வருகின்றனர். கடந்த 1½ ஆண்டு கால தி.மு.க. ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று பா.ஜனதாவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதற்கு விடை சொல்லும் வகையில் அமைந்துள்ளது.






