என் மலர்
ஈரோடு
- தண்டபாணி வீட்டில் சமையல் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு கொண்டார்.
- இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு, நசியனூர் ரோடு, காந்திஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (77). ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை ஊழியர். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வயிற்றில் அதிக வலி ஏற்பட்டதால் மனம் உடைந்த தண்டபாணி வீட்டில் சமையல் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு கொண்டார்.
அதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே தண்டபாணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்னோர்களுக்கு பல வகையான தர்ப்பணங்கள் கொடுத்தனர்.
- பொதுமக்கள் ஏராளமானோர் கூடுதுறையில் குவிந்தனர்.
தை அமாவாசையையொட்டி இன்று (சனிக்கிழமை) ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கூடுதுறையில் குவிந்தனர்.
தொடர்ந்து அவர்கள் கூடுதுறையில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.
இதையொட்டி கூடுதுறையில் உள்ள 2 பரிகார மண்டபங்கள் மற்றும் தற்காலிக பரிகார மண்டபம் என பல்வேறு இடங்களில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு பல வகையான தர்ப்பணங்கள் கொடுத்தனர்.
மேலும் பக்தர்கள் பலர் ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பவானி போலீசார் கோவில் பகுதியில் தற்காலிக் போலீஸ் நிலையம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இதே போல் தை அமாவாசையையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடினர். தொடர்ந்து பொதுமக்கள் பலர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். அதே போல் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களும் ஏராளமானோர் வந்து புனித நீராடி பரிகாரம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் பலர் மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். இதனால் கொடுமுடி பகுதியில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
தை அமாவாசையையொட்டி சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி யம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதையொட்டி ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டு மின்றி மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கர்நாடகா மற்றும் கேரளா மாநில பக்தர்கள் பலரும் கோவிலலுக்கு வந்து அம்ம னை வழிபட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
- தனிநபர் ஒருவர் ரூ.50 ஆயிரம் வரை எவ்வித ஆவணங்களும் இன்றி பணத்தை கொண்டு செல்லலாம்.
- பொதுவாக பள்ளிகள், கல்லூரி வளாகங்களில் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியில்லை.
ஈரோடு:
ஈரோடு கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெளியிட்டு உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் நடத்தை விதிகள் அரசியலமைப்பு சட்டம், பிரிவு 324-ன்படி ஒரு தேர்தலை சுதந்திரமாகவும் மற்றும் நியாயமாகவும் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து சட்ட பாதுகாப்புகளும் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல், தேர்தல் அறிவிப்பு வெளியான 18-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் குறித்துக் கீழ்க்கண்டவாறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எந்தக்கட்சியும் அல்லது வேட்பாளரும், எந்த ஒரு சமய அல்லது மொழி அல்லது சாதியினரிடையே வேறுபாடுகளை தூண்டும் வகையில் எந்த வேண்டுகோளையும் விடுக்கக் கூடாது. வழிபாட்டிற்குரிய கோவில், மசூதி, தேவாலயம், குருத்துவாராக்கள் அல்லது பிற வழிபாட்டு தலங்களில் தேர்தல் குறித்த பிரச்சாரம் மற்றும் சுவரொட்டிகள் மற்றும் பாடல்கள் இசைத்தல் ஆகியவை செய்தல் கூடாது.
பொதுவாக பள்ளிகள், கல்லூரி வளாகங்களில் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியில்லை. பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் அனுமதி அளிக்கும் பட்சத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதியுடன் பள்ளி மற்றும் கல்லூரியின் அன்றாட பணிகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் பொதுக்கூட்டம் நடத்தலாம்.
வாக்காளர்களுக்கு பொருள், பணம் கொடுத்தல், வாக்காளர்களை மிரட்டுதல், ஆள் மாறாட்டம் செய்தல், வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர்களுடைய ஆதரவைக்கோருதல், வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தோடு முடிகிற 48 மணி நேர கால அளவில் பொதுக்கூட்டங்களை நடத்துதல், வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குப் போய் வர போக்குவரத்து வசதி செய்து கொடுத்தல் மற்றும் வாக்காளர் சின்னங்களை குறிக்கும் விதமாக எத்தகைய பொருட்கள் மற்றும் காகிதத்துண்டு சீட்டுகள் வழங்குதல் கூடாது.
அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், பிற கட்சிகள் ஏற்பாடு செய்கின்ற கூட்டங்களில் இடையூறு விளைவிக்கக்கூடாது.
ஓர் அரசியல் கட்சி, வேட்பாளாரின் கடந்த கால சாதனைகள் மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும். அவரது பொது நல நடவடிக்கைகளுக்கு தொடர்பற்ற சொந்த வாழ்க்கை குறித்த நிகழ்வுகள் பற்றியும் குறை கூறுவதைத் தவிர்த்தல் வேண்டும். ஒரு தனி நபரின் அரசியல் கருத்துகளுக்காகவும், நடவடிக்கைகளுக்காகவும் அவர்களுடைய வீடுகளுக்கு முன்பு ஆர்பாட்டம் அல்லது மறியல்களை நடத்தக்கூடாது.
அரசியல் கட்சி வேட்பாளர் அவர்களுடைய தொண்டர்கள் எந்தவொரு தனி நபருடைய இடத்தில் அவருடைய அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் நடுதல், விளம்பரத்தட்டிகள் தொங்க விடுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், கோஷங்கள் எழுப்புதல் கூடாது.
போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க ஏதுவாக அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் தாம் நடத்த உத்தேசித்துள்ள கூட்டத்தின் இடம், காலம் ஆகியவை குறித்து உரிய காலத்திற்கு முன்னதாகவே உரிய அனுமதி பெற வேண்டும்.
ஓர் அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் கூட்டம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் ஏதேனும் கட்டுப்பாடுகள் அல்லது தடை உத்தரவுகள் செயலிலுள்ளனவா என்பதைப் பற்றி முன்னதாகவே அறிந்து அத்தகைய ஆணைகள் செயலிலிருந்தால் அவற்றை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
உத்தேசிக்கப்பட்ட கூட்டத்திற்காக ஒலி பெருக்கிகள் (அல்லது) வேறு பிற வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக அனுமதி அல்லது உரிமம் பெறுவதாக இருந்தால், கட்சி அல்லது வேட்பாளர் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு முன்கூட்டியே விண்ணப்பம் செய்து அத்தகைய அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். ஒலிபெருக்கிகள் எக்காரணத்தை கொண்டும் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை உபயோகிக்கக்கூடாது. பிற அரசியல் கட்சியினரை அல்லது அவர்களுடைய தலைவர்களைக் குறிக்கிற கொடும்பாவிகளை எரித்தல் போன்றவற்றிலும், இதுபோன்ற பிற நடவடிக்கைகளிலும் ஈடுபடுதல் குறித்து எந்தவொரு அரசியல் கட்சியும் (அல்லது) வேட்பாளரும் செய்யக்கூடாது.
தனிநபர் ஒருவர் ரூ.50 ஆயிரம் வரை எவ்வித ஆவணங்களும் இன்றி பணத்தை கொண்டு செல்லலாம். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் ரொக்கமாக கொண்டு செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ரூ.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள், மது பானங்கள், பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படின் அவற்றை பறிமுதல் செய்யப்படும்.
தமிழ்நாட்டில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரங்களின்போது பிளாஸ்டிக் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அனைத்து வாகனங்களிலும் ஏதாவது கட்சியின் பெயர் சின்னம் மற்றும் கொடி ஆகியவை இருப்பின் அவை அகற்றப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அனுமதி பெற்ற வாகனங்களில் மட்டும் ஏதேனும் ஒரு கொடி, பேனர், பதாகை வைத்துக்கொள்ள அனுமதி உண்டு.
அதே போல் வாக்குப்பதிவு அன்று அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் அமைதியாகவும், ஒழுங்காகவும் வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
வேட்பாளர்கள் ஒப்புதல் பெற்ற முதன்மை முகவர் மற்றும் வாக்குப்பதிவு முகவர் ஆகியோர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர் மற்றும் முதன்மை முகவர் ஆகியோருக்கு பயன்படுத்தும் வாகனத்திற்கு உரிய அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் அனுமதி அளிக்கும் பொருட்டு விதிக்கப்படுகின்ற கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதிலும் அவற்றிற்கு அனுமதிச் சீட்டுகளை பெறுவதிலும் அலுவலர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். அனுமதி பெறப்பட்ட வாகனங்களில் அனுமதி அளிக்கப்பட்ட விவரத்தை தெளிவாக தெரியும்படி ஒட்டி வைக்க வேண்டும்.
வாக்காளர்கள் நீங்கலாக உரிய அடையாள அட்டை (வாக்குச்சாவடி முகவர்) இல்லாமல் எவரும் வாக்குச்சாவடிகளில் நுழையக் கூடாது.
அமைச்சர்கள் அலுவல் முறை பயணம் செய்கையில் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடாது. மேலும் தேர்தல் பணிக்காக அரசு அதிகாரிகள் (அல்லது) பணியாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது.
மைதானங்கள் முதலிய பொது இடங்களை தேர்தல் கூட்டம் நடத்துவதற்கு தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் ஒரே மாதிரியான வரையறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில் அவ்விடங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும்.
மத்திய அல்லது மாநில அமைச்சர்கள் வாக்குச்சாவடிக்குள் அல்லது வாக்குச் சீட்டு எண்ணும் இடத்திற்குள் நுழையக் கூடாது. வேட்பாளர் அல்லது அவரது அனுமதி பெற்ற தேர்தல் முகவர் என்கிற முறையில் குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்குள் சென்றிடலாம்.
தனியார் கட்டிடங்கள் மற்றும் சுவர்களில் அனுமதி ஏதும் பெறாமல் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது. விளம்பரம் எழுதுதல் கூடாது. அவ்வாறு அனுமதியின்றி விளம்பரங்கள் எழுதுதல் குறித்து கட்டிட உரிமையாளர்கள் காவல் துறையினரிடம் புகார் அளிக்கலாம்.
பொது இடங்களில் அரசியல் கட்சியினர் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு தடை விதித்திருப்பதால் பொது இடங்களில் மேற்படி வகையில் விளம்பரம் செய்ய வழிவகையில்லை என்பதையும் அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்கப்படுகிறது.
அரசு வளாகம் மற்றும் கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள், அரசு நலத்திட்டங்கள் தொடர்பான அரசியல் கட்சியினரின் புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பு பலகைகள் ஆகியனவற்றை அந்தந்த அரசு அலுவலக நிர்வாகத்தின் மூலமாக உடன் அகற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் விகாஷ். இவர் காரில் ரூ.2 கோடி பணத்துடன் கோவை நோக்கி புறப்பட்டார்.
- சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் பகுதியில் ஒரு கார் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பவானி:
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் விகாஷ். இவர் காரில் ரூ.2 கோடி பணத்துடன் கோவை நோக்கி புறப்பட்டார். இந்த கார் ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமி நகர் பைபாஸ் அருகே இன்று காலை வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென அவரை பின் தொடர்ந்து வந்த கார் வழி மறித்து நின்றது. இதையடுத்து அந்த காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் விகாசை காரில் இருந்து கீழே இறக்கி விட்டுவிட்டு ரூ.2 கோடி பணத்துடன் அந்த காரையும் அவர்கள் வந்த காரையும் எடுத்து சென்று விட்டனர்.
இது குறித்து விகாஷ் சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த பணம் யாருக்கு கொண்டு செல்லப்பட்டது. முறையாக ஆவணங்கள் உள்ளதா? என்று விசாரித்தனர். மேலும் ஹவாலா பணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் பகுதியில் ஒரு கார் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த கார் விகாஷ் ஓட்டி வந்த காரா? என்று கண்டு பிடிக்க போலீசார் விகாசை அழைத்து சென்றனர். அப்போது அந்த கார் விகாஷ் ஓட்டி வந்த கார் என்பது தெரிய வந்தது. இது பற்றி தெரிய வந்ததும் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது இயல்பு.
- கடந்த 18 மாதங்களில் எங்களின் சாதனைகளின் அடிப்படையில் நாங்கள் வாக்குகளை கோருகிறோம்.
ஈரோடு:
ஈரோட்டில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது இயல்பு. கடந்த 18 மாதங்களில் நாங்கள் செய்த சாதனைகளின் அடிப்படையில்தான் நாங்கள் வாக்கு கேட்கிறோம்.
இந்த தொகுதியை காங்கிரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். அக்கட்சியின் வெற்றிக்காக பாடுபட உள்ளோம். சொத்து வரி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது குறித்த கேள்விக்கு அவர்கள் அரசை விமர்சிப்பது இயற்கையானது.
உண்மையில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவு வரி உயர்வு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மக்களும் அதை ஏற்றுக் கொண்டனர். இப்போது கடந்த 18 மாதங்களில் எங்களின் சாதனைகளின் அடிப்படையில் நாங்கள் வாக்குகளை கோருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காவிரிக்கரையோர தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இருக்கிறது.
- வடமாநிலத்தவர்கள் பெரும்பாலும் எலக்ட்ரானிக் கடை, கார்மெண்ட்ஸ் அதிக அளவில் வைத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இவற்றில் ஈரோடு கிழக்கு தொகுதி மிக சிறிய பரப்பளவு, குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி கிராமங்கள் இல்லாத தொகுதியாக உள்ளது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் தொடங்கி மாநகராட்சி பகுதிகுள்ளேயே நிறைவடைகிறது.
ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் 37 வார்டுகளை ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளடக்கியுள்ளது.
தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதி வரிசையில் 98-வது எண் தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பின்போது ஈரோடு கிழக்கு தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.
கடந்த 5-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,10,713 ஆண் வாக்காளர்களும், 1,16140 பெண் வாக்காளர்களும், 23 இதர வாக்காளர்களும், 22 ராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 2,26, 898 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் வசதிக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
காவிரிக்கரையோர தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இருக்கிறது. கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் தொடங்கி ஈரோடு மையப்பகுதி முழுவதும் பிராமண பெரிய அக்ரஹாரம் வரை ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளடக்கியுள்ளது.
இந்த தொகுதியில் தான் புகழ்பெற்ற ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்), ஈரோடு பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் போன்ற முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பாலும் ஜவுளி சார்ந்த தொழில்கள் அதிக அளவில் உள்ளன.
இதேப்போல் ஜவுளி சார்ந்த குடோன்கள், விசைத்தறிகள் போன்றவற்றில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதேப்போல் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இந்த தொகுதியில் அதிக அளவில் உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். வளையக்கார வீதி, கிருஷ்ணா தியேட்டர் பகுதி, திருநகர் காலனி, ஈஸ்வரன் கோவில் வீதி, அகில் மேடு வீதி, மஜீத் வீதி, கொங்கலம்மன் கோவில் வீதி பகுதி உள்பட ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் கடந்த 20 வருடத்திற்கும் மேலாக தங்கி பல்வேறு தொழில் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கும் வாக்குரிமை உள்ளது. வடமாநிலத்தவர்கள் பெரும்பாலும் எலக்ட்ரானிக் கடை, கார்மெண்ட்ஸ் அதிக அளவில் வைத்துள்ளனர். இதேபோல் டீ கடை அதிக அளவில் வைத்துள்ளனர். இவர்களுக்கு இந்த தொகுதியில் கணிசமான வாக்கு உள்ளன.
தற்போது திருமகன் ஈ.வெ.ரா. மரணத்தை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 27-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. முக்கியமான கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
- அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தரணியை உடனடியாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
- பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தரணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு:
சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (45). மூங்கில் கடை வைத்துள்ளார். இவரது மகன் தரணி (17). இவர் சென்னிமலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் தரணி அங்கு படிக்க விருப்பம் இல்லை என கூறியதையடுத்து அவரது தந்தை அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தரணியை சேர்த்தார். ஆனால் அங்கும் தரணி சரியாக பள்ளிக்கு செல்லாமல் செல்போனில் விளையாடி வந்துள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் தரணி வாந்தி எடுத்துள்ளார். இது குறித்து பெற்றோர் விசாரித்தனர். அப்போது தான் எலிபேஸ்ட் (விஷம்) தின்று விட்டதாக கூறியுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தரணியை உடனடியாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தரணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவனுக்கு இந்த தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது.
- மறைந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கிழக்கு தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை முடிந்த அளவு செய்து கொடுத்து உள்ளார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கே மீண்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த தொகுதியில் மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நிறுத்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
மேலும் இளங்கோவனை சந்தித்தும் தேர்தலில் போட்டியிட வலியுறுத்தினர். ஆனால் தனது மகன் இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத அவர் இதுகுறித்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இடைத்தேர்தல் என்பதால் ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்றும் மேலும் இளங்கோவன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என்றும் திட்டமிட்டு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட தயக்கம் காட்டி வருவதால் அவரது 2-வது மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக அவர்கள் இளங்கோவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவனுக்கு இந்த தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. மேலும் மறைந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கிழக்கு தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை முடிந்த அளவு செய்து கொடுத்து உள்ளார்.
எனவே இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு காங்கிரஸ் மேலிடம் சஞ்சய் சம்பத்தை களம் இறக்க முடிவு செய்து உள்ளது. வேட்புமனுத்தாக்கலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் முறைப்படி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
இளங்கோவன் குடும்பத்தில் இருந்து மீண்டும் ஒரு வேட்பாளர் களம் இறக்கப்படுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.
- பாஜக, பாமக, த.மா.கா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவோம்.
- பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவு அளிப்போம்.
திமுக சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதுதொடர்பாக, ஓபிஎஸ் தரப்பில் மவுனம் காத்து வந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தனது நிலைபாட்டை தற்போது அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக ஆதரவை கோர அதிமுக முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, சென்னையில் இன்று பாஜக தலைவர்களை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.
இரட்டை இலை சின்னம் பெற எங்களுக்கு தான் முழு உரிமை உள்ளது. ஒங்கிணைப்பாளராக நான் தொடருகிறேன். 2026ம் ஆண்டு வரை அதிமுக சார்பில் போட்டியிட முழு உரிமை உள்ளது.
இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன்.
சட்டவிரோதமாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.
பாஜக, பாமக, த.மா.கா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவோம்.
கூட்டணி கட்சிகள் எங்களிடம் தொடர்ந்து பேசி வருகின்றனர். பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவு அளிப்போம்.
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு உரிமை உள்ளது.
இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு நான் ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டேன். பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும்.
ஈபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயார். ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக இதுவரை ஈபிஎஸ் தரப்படன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
ஈரோடு இடைத்தேர்தலில் எங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இடைத்தேர்தலில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிக்காண அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எதிரொலியால், வீடு வீடாக சென்று அமைச்சர் முத்துசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிக்காண அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
இதன் எதிரொலியால், திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
வீடு வீடாக சென்று அமைச்சர் முத்துசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
- நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினிலாரி திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- அலுவலக அறை உடைக்கப்பட்டு உள்ளே சி.சி.டி.வி. கேமிரா சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
பவானி:
ஈரோடு மாவட்டம் நசியனூர் அடுத்த வேட்டுவபாளையம் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி (58). இவர் அதே பகுதியில் பப்பாளியில் இருந்து ஜாம் மற்றும் சாஸ் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றார். பின்னர் இன்று காலை 7.30 மணிக்கு திரும்ப வந்த பார்த்து பொழுது காம்பவுண்ட் கேட் உடைக்கப்பட்டு நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினிலாரி திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் உள்ளே சென்று பார்த்த போது அலுவலக அறை உடைக்கப்பட்டு உள்ளே சி.சி.டி.வி. கேமிரா சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர் அலுவலகத்திற்குள் உள்ளே புகுந்து மினிலாரி சாவியை எடுத்து திருடி சென்றது தெரிய வந்தது. திருட்டு போன லாரியின் மதிப்பு ரூ. 13 லட்சம் இருக்கும்.
இது குறித்து திருமூர்த்தி சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சித்தோடு போலீசார் கோவை-சேலம் போலீசாரிடம் தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர்.
லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். மூலம் கண்காணித்த போது லாரி கோவை கொடிசியா அருகே சென்றது தெரிய வந்தது.
இது குறித்து கோவை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவையில் நெடுஞ்சாலை துறை ரோந்து போலீசார் உடனடியாக அந்த திருட்டு லாரியை மடக்கி பிடித்தனர்.
அப்போது லாரியை திருடியது ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியை சேர்ந்த அர்ஜுனன் (29) என தெரிய வந்தது. பின்னர் அர்ஜுனனை போலீசார் கைது செய்து சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர்.
மேலும் திருட்டு போன லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் அர்ஜுனன் மீது ஏற்கனவே 7 திருட்டு வழக்குகள் நிலவையில் இருப்பது தெரிய வந்தது.
- ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் 4 பேர் கொண்ட நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. ஈரோடு மாநகராட்சி அலுவலகம் தேர்தல் நடத்தும் அலுவலகமாக மாறி உள்ளது.
இதையடுத்து இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. தேர்தல் சம்பந்தமாக வரும் புகார்களை பெறுவதற்காக இந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனை யொட்டி இன்று மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இங்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இதற்கென்று தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக 180042594890 என்ற இலவச எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
சுழற்சி முறையில் பணியாளர்கள் இதில் இருப்பார்கள். இங்கு வரும் புகார்கள் பறக்கும் படைக்கும், தேர்தல் அதிகாரிக்கும் தெரிவிக்கப்படும்.
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 4 பேர் கொண்ட நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொகுதி எல்லைகளில் இவர்கள் சுழற்சி முறையில் வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள். இந்த குழுவில் ஒரு டிரைவர், ஒரு கேமரா மேன், ஒரு போலீசார் உள்பட 4 பேர் இருப்பார்கள்.
இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக ரொக்க பணம் எடுத்து செல்பவர்கள் உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும்.
திருமண மண்டபங்களில் கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடத்துபவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற உத்திரவிடப்பட்டுள்ளது. நிலை கண்காணிப்பு குழுவை தொடர்ந்து பறக்கும் படை அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து கட்சி பிரமுகர்கள், போலீசார், அச்சக உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் தேர்தலில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பொதுமக்கள், வியாபாரிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் கூட்டத்தில் பேசினர்.






