என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி வரைபடம்.
கிராமங்கள் இல்லாத ஈரோடு கிழக்கு தொகுதி
- காவிரிக்கரையோர தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இருக்கிறது.
- வடமாநிலத்தவர்கள் பெரும்பாலும் எலக்ட்ரானிக் கடை, கார்மெண்ட்ஸ் அதிக அளவில் வைத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இவற்றில் ஈரோடு கிழக்கு தொகுதி மிக சிறிய பரப்பளவு, குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி கிராமங்கள் இல்லாத தொகுதியாக உள்ளது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் தொடங்கி மாநகராட்சி பகுதிகுள்ளேயே நிறைவடைகிறது.
ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் 37 வார்டுகளை ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளடக்கியுள்ளது.
தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதி வரிசையில் 98-வது எண் தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பின்போது ஈரோடு கிழக்கு தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.
கடந்த 5-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,10,713 ஆண் வாக்காளர்களும், 1,16140 பெண் வாக்காளர்களும், 23 இதர வாக்காளர்களும், 22 ராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 2,26, 898 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் வசதிக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
காவிரிக்கரையோர தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இருக்கிறது. கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் தொடங்கி ஈரோடு மையப்பகுதி முழுவதும் பிராமண பெரிய அக்ரஹாரம் வரை ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளடக்கியுள்ளது.
இந்த தொகுதியில் தான் புகழ்பெற்ற ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்), ஈரோடு பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் போன்ற முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பாலும் ஜவுளி சார்ந்த தொழில்கள் அதிக அளவில் உள்ளன.
இதேப்போல் ஜவுளி சார்ந்த குடோன்கள், விசைத்தறிகள் போன்றவற்றில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதேப்போல் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இந்த தொகுதியில் அதிக அளவில் உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். வளையக்கார வீதி, கிருஷ்ணா தியேட்டர் பகுதி, திருநகர் காலனி, ஈஸ்வரன் கோவில் வீதி, அகில் மேடு வீதி, மஜீத் வீதி, கொங்கலம்மன் கோவில் வீதி பகுதி உள்பட ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் கடந்த 20 வருடத்திற்கும் மேலாக தங்கி பல்வேறு தொழில் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கும் வாக்குரிமை உள்ளது. வடமாநிலத்தவர்கள் பெரும்பாலும் எலக்ட்ரானிக் கடை, கார்மெண்ட்ஸ் அதிக அளவில் வைத்துள்ளனர். இதேபோல் டீ கடை அதிக அளவில் வைத்துள்ளனர். இவர்களுக்கு இந்த தொகுதியில் கணிசமான வாக்கு உள்ளன.
தற்போது திருமகன் ஈ.வெ.ரா. மரணத்தை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 27-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. முக்கியமான கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.






