என் மலர்
திண்டுக்கல்
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தட்டச்சு பள்ளியில் ஆங்கிலம் இளநிலை பாடம் பயின்ற மோனிஷா என்பவர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
- மோனிஷா தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் வேதியியல் இளங்கலை 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
ஆண்டிபட்டி:
தமிழகத்தில் மாநில அளவிலான தட்டச்சு தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் 4 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
இதற்கான முடிவுகள் இணையதளம் மூலம் வெளியானது. இதில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தட்டச்சு பள்ளியில் ஆங்கிலம் இளநிலை பாடம் பயின்ற மோனிஷா என்பவர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதனையடுத்து மாணவிக்கு பயிற்சி மைய நிர்வாகி மற்றும் சக மாணவிகள் இனிப்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் வேதியியல் இளங்கலை 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த பயிற்சி மையத்தின் மூலம் கலந்துகொண்டு தேர்வு எழுதியவர்களில் 131 பேர் சிறப்பு முதல் வகுப்பிலும், 62 பேர் முதல் வகுப்பிலும், 21 பேர் 2-வது வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போதைய பா.ஜ.க. அரசு சிறப்பு சட்டத்தை நீக்கிய பின்னரும் தீவிரவாதம் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.
- தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், சாலைவசதி உள்ளிட்ட அனைத்து துறைகளும் சிறப்பாக உள்ளன. ஸ்டாலின் சிறந்த முதல்வராக செயல்படுகின்றார்.
கொடைக்கானல்:
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் தலைவருமான பரூக் அப்துல்லா கொடைக்கானல் வந்தார். கொடைக்கானலில் இவரது தந்தை ஷேக் அப்துல்லா வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்ட அரசு விருந்தினர் மாளிகையில் உணவருந்தி சிறிது நேரம் ஓய்வெடுத்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
43 ஆண்டுகளுக்குப் பிறகு நான் கொடைக்கானலுக்கு வந்தது மகிழ்ச்சியை தருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் அன்னை தெரசா ஆகியோர் கொடைக்கானலுக்கு வந்தது பசுமை நிறைந்த நினைவுகளாக உள்ளது. இதனை நினைவில் அசைபோடவே நான் இங்கு வந்தேன்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போதைய பா.ஜ.க. அரசு சிறப்பு சட்டத்தை நீக்கிய பின்னரும் தீவிரவாதம் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ராஜூரி மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. இன்னமும் தீவிரவாதம் அங்கு முடிவுக்கு வரவில்லை. இந்தியாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
ராகுல் காந்தியின் யாத்திரை சிறப்பாக உள்ளது. இது இளைஞர்களை எழுச்சியூட்டும் வகையில் வெகுவாக கவர்ந்துள்ளது. ராகுல் காந்தி சிறப்பாக அரசியல் நகர்வுகளை செய்து வருகிறார்.
இந்தியா என்பது பன்முகம், பல மொழி, பல்வேறு மதங்களைக் கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு இந்தியா. இங்கு ஒரே நாடு ஒரே மொழி என்பது சாத்தியமில்லை. ஜி 20 மாநாடு தற்போது உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவை சீர்படுத்த உதவுவதாக இருக்கும்.
மோடியும், பாஜகவும் சிறப்பாக செயல்படுவதாக கூறுகின்றனர். ஆனால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு, விவாதம் செய்வதற்கு கூட அவர்கள் அனுமதிப்பதில்லை. ஒன்றுபட்ட இந்தியாவை நாங்கள் விரும்புகின்றோம். பிளவுபட்ட இந்தியா எங்களுக்கு தேவை இல்லை. தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது.
தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், சாலைவசதி உள்ளிட்ட அனைத்து துறைகளும் சிறப்பாக உள்ளன. ஸ்டாலின் சிறந்த முதல்வராக செயல்படுகின்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2000 வகையிலான பறவைகளின் இறகுகள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட அரிதான பொருட்களை சேகரித்து அருங்காட்சியகம் போல் வீட்டை மாற்றி உள்ளனர்.
- பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பழமையான பொருட்களின் மகத்துவம் குறித்து எடுத்து கூறி வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் 3 தலைமுறைகளாக பழமையான பொருட்களை சேகரித்தும் 2000 வகையிலான பறவைகளின் இறகுகள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட அரிதான பொருட்களை சேகரித்து கொடைக்கானலை சேர்ந்த ஜோஸ்வா, அவரது மகன் கேலப் ஆகியோர் அருங்காட்சியகம் போல் வீட்டை மாற்றி உள்ளனர்.
பலருக்கும் பல வகையான பொழுதுபோக்குகள் உள்ளன. விளையாட்டில் ஆர்வம், புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளிட்ட பலவகையான பொழுதுபோக்குகள் இருக்கும். ஆனால் சிலருக்கு மட்டும் அரிதான பொருட்களை சேகரித்து வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உலகில் பல்வேறு இடங்களில் பல வகையான மனிதர்கள் அரிதான பொருட்களையும், பழமையான பொருட்களையும் சேகரித்து வருவதை பார்க்க முடிகிறது.இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 3 தலைமுறைகளாக அரிதான மற்றும் பழமையான பொருட்களை சேகரித்து வருகின்றனர். தனது தாத்தா காலத்தில் ஆரம்பித்து அவரது மகன் 20 ஆண்டுகளாக பொருட்களை சேகரித்து தற்போது 3-ம் தலைமுறையாக இருக்கக்கூடிய 3 வயது சிறுவன் உட்பட இதனை பொழுதுபோக்காக வைத்துள்ளனர்.
குறிப்பாக இவர்கள் வீட்டையே அருங்காட்சியகம் போல் பழமையான பொருட்களை வைத்து நிரப்பி உள்ளனர். எளிதாக கிடைக்கக்கூடிய தீப்பெட்டியில் தொடங்கி அரிதாக கிடைக்கக்கூடிய ஓலைச்சுவடி வரை இவர்களது சேமிப்பு நீண்டு வருகிறது. பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்ட இவர்கள் உலகில் பல்வேறு மூலை முடுக்குகளில் கிடைத்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்களை சேகரித்து வைத்துள்ளனர்.
இதே போன்று பல்வேறு இடங்களில் இருந்து கிடைக்கக்கூடிய 2000 வகைகளுக்கும் மேலாக உள்ள பறவைகளின் இறகுகளும் உலகில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் தலைகளும் பழங்காலத்தில் கணக்கு எழுதிய ஓலைச்சுவடிகள் உலகில் அழிந்து போன பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட பத்திர தாள்கள், பல நூறு வருடங்களுக்கு முந்தைய கேமராக்கள், கடலில் கிடைக்கக்கூடிய அரிதான ஓடுகள் வரை இவர்கள் சேகரித்து வைத்துள்ளனர்.
தாங்கள் வாழ்ந்து வரும் வீட்டையே அருங்காட்சியகம் போல் புத்தகங்கள், பழைய பொருட்களோடு நிரப்பி வைத்துள்ளனர். அரிதான பழமையான பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வரக்கூடிய இவர்களது இந்த சேகரிப்பு தொடர்ந்து வருகிறது. இந்த சேகரிப்பின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பழமையான பொருட்களின் மகத்துவம் குறித்தும் எடுத்து கூறி வருகின்றனர். ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இது பெரிதும் உதவியாக உள்ளது. எனவே பழமையான பொருட்களை பாதுகாக்கும் இவர்களை அரசு கவுரவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
- விவசாயி தனது பெற்றோரின் பூர்வீக சொத்தை தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய கோட்டாட்சியரிடம் மனு அளித்தார்.
- பட்டா மாறுதல் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது60). விவசாயி. இவர் தனது பெற்றோரின் பூர்வீக சொத்தை தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய கோட்டாட்சியரிடம் மனு அளித்தார்.
இந்த மனுவிற்கு தீர்வு காணும் வகையில் மன்னவனூர் கிராம நிர்வாக அலுவலரான முன்னாள் ராணுவ வீரர் சாமிநாதனுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.
இதனையடுத்து ராஜகோபால் கிராம நிர்வாக அலுவலரை அணுகினார். அப்போது பட்டா மாறுதல் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சமாக சாமிநாதன் கேட்டுள்ளார். இது குறித்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு த்துறை போலீசாருக்கு ராஜகோபால் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு த்துறை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை சாமிநாத னிடம் கொடுத்த போது மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் உண்டியலில் போடுகின்றனர்.
- 5 அளவுள்ள நாணயங்களை தனித்தனியாக பிரிக்க புதிய எந்திரம் ரூ.2.5 லட்சம் மதிப்பில் கோவையில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.
பழனி:
தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதில் பலர் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும் வேண்டுதல் நிறைவேறியவுடன் காவடி எடுத்தும், தங்கதேர் இழுத்தும் பக்தர்கள் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் உண்டியலில் போடுகின்றனர். இந்த உண்டியல் குறிப்பிட்ட காலத்தில் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது. அவ்வாறு கிடைக்கும் வருவாய் அன்னதானம் மற்றும் கோவில் பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரூபாய் நோட்டுகளுடன் பலவகை நாணயங்களும் உண்டியலில் போடப்படுகிறது.
அவற்றை எண்ணுவதற்காக வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 2 அளவுகளில் நாணயங்களை பிரிக்க ஒரு எந்திரம் கோவிலில் உள்ளது.இருப்பினும் காணிக்கை நாணயங்களை பிரிக்க தாமதம் ஏற்படுகிறது. இதனால் 5 அளவுள்ள நாணயங்களை தனித்தனியாக பிரிக்க புதிய எந்திரம் ரூ.2.5 லட்சம் மதிப்பில் கோவையில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உண்டியல் என்னும் பணி எளிதாகவும், விரைவாகவும் நடக்கும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வடமதுரை, அய்யலூரை சுற்றி ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன. இங்கு கத்தரி, வெண்டை, தக்காளி, அவரை உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது.
- இப்பகுதி விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூரை சுற்றி ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன. இங்கு கத்தரி, வெண்டை, தக்காளி, அவரை உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. அவ்வப்போது மழை பெய்து வந்தபோதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் காய்கறிகள் பயிரிடுவதில் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இப்பகுதியில் விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்தனர். தற்போது ஒரு கிலோ ரூ.4-க்கு மட்டுமே மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பயிரிடும் செலவு, பராமரிப்பு, சுத்தப்படுத்துதல் என பல்வேறு பணிகளுக்கு பணத்தை செலவழித்த அவர்களுக்கு போதுமான லாபம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
எனவே இப்பகுதி விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மெட்டூரில் இருந்து பழக்கனூத்து, ஒட்டன்சத்திரம் வழியாக தாராபுரம் வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
- பணிகளை பொறியாளர் ஆய்வு செய்து விரைந்து முடிக்கவும், உரிய சாலை பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
செம்பட்டி:
திண்டுக்கல் அருகே மெட்டூரில் இருந்து பழக்கனூத்து, ஒட்டன்சத்திரம் வழியாக தாராபுரம் வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் காமலாபுரம் அருகே மெட்டூர் முதல் கன்னிவாடி வரை நடைபெறும், முதல்-அமைச்சரின் 4 வழிச்சாலைத் திட்டப்பணிகளை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் (சென்னை) சந்திரசேகர் செம்பட்டி அருகே காமுபிள்ளைசத்திரத்தில் ஆய்வு செய்தார்.
பணிகளை விரைந்து முடிக்கவும், உரிய சாலை பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றவும், பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு (மதுரை) கண்காணிப்புப் பொறியாளர் மாரிமுத்துராஜன், கட்டுமான மற்றும் பராமரிப்பு (திண்டுக்கல்) கோட்டப் பொறியாளர் பரணிதரன்,
தரக்கட்டுப்பாடு (மதுரை) ஞானமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர்கள் (ஆத்தூர்) கண்ணன், வத்தலகுண்டு வீரன் மற்றும் உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- வனத்துச் சின்னப்பர் குருசடி அடுத்து பனிக்கரை வரை சாலை சீரமைப்பு மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் பால மாதங்களாக நடைபெற்று வருகிறது.
- மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பணி களை விரைந்து முடிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் வத்தலகுண்டு நெடுஞ்சாலை யில் வனத்துச் சின்னப்பர் குருசடி அடுத்து பனிக்கரை வரை சாலை சீரமைப்பு மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் பால மாதங்களாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் பாலப்பணிகள் முடிந்தும் முடியாமலும் உள்ளன.
சில இடங்களில் பணி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பணி தற்போதுவரை நடைபெற்று வருகிறது.ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட பால ப்பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் இந்தப் பணிகள் காரணமாக போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
பாலம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்ட இடத்தில் மேடாகவும், கரடு முரடாகவும் சாலைகள் உள்ள நிலையில் அந்த பகுதியில் தார்ச்சாலையை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.
பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் வத்தலக்குண்டு கொடை க்கானல் நெடுஞ்சாலையின் ஓரங்களில் வடிகால் வாய்க்கால் அமைக்கிறோம் என்ற பெயரில் ஏற்கனவே சாலையை குறுக்கி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் பல மாதங்களாக நடைபெற்று வரும் பணி களால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும், விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகன ஓட்டிக ளும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பணி களை விரைந்து முடிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இரவு நேரங்களில் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து சைக்கிள், மோட்டார் உள்ளிட்ட பொருட்களை திருடிச்செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
- தற்காலிக நடவடிக்கையாக இங்கு வேறுயாரும் வராத வகையில் வேலி அமைக்கவாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை இ.பி.காலனி, ஆனந்தன்நகர், புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து சைக்கிள், மோட்டார் உள்ளிட்ட பொருட்களை திருடிச்செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
இவ்வாறு திருடப்பட்ட பொருட்களை பாழடைந்த காவலர் குடியிருப்பில் பதுக்கி வைத்து சில நாட்கள் கழித்து அதனை விற்றுவிடுகின்றனர். நேற்றுஇரவு ஆனந்தன்நகரை சேர்ந்த அதிகாரி ஒருவர் வீட்டின் சுவர் ஏறி குதித்து ஒரு மோட்டார் திருடப்ப ட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வரும் நிலையில் கொள்ளையர்கள் காவலர் குடியிருப்பை தங்கள் வசிப்பிடமாக மாற்றியுள்ளனர். இங்கு விரும்பத்தகாத சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதும், தாங்கள் திருடிய பொரு ட்களை பதுக்கி வைக்கும் இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே போலீசார் இந்த காவலர் குடியிருப்பை இடித்து தரைமட்டமாக்கி கொள்ளையர்களின் அட்டகாசத்தை கட்டு ப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பகல் நேரங்களில் இந்த சாலையை கடக்கவும், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே தற்காலிக நடவடிக்கையாக இங்கு வேறுயாரும் வராத வகையில் வேலி அமைக்க வாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- டி.எஸ்.பி துர்க்கா தேவி தலைமையிலான போலீசார் சென்று காயமடைந்தவர்களை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேடசந்தூர்:
ஆந்திரமாநிலம் சத்திசாய் மாவட்டத்தை சேர்ந்த 22 அய்யப்ப பக்தர்கள் ஒருவேனில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். வேனை பிரசாந்த் என்பவர் ஓட்டிவந்தார்.
இன்று காலை வேன் திண்டுக்கல்-கரூர் 4 வழிச்சாலையில் விருதலைப்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கூச்சலிட்டனர்.
உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உடனடியாக வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி துர்க்கா தேவி தலைமையிலான போலீசார் சென்று காயமடைந்தவர்களை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் சிராமுழுநாயக்(42) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே வேனை ஓட்டிவந்த பிரசாந்த் என்பவர் தப்பிஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- அரசு பஸ் டிரைவர்களுக்கு விபத்தில்லாமல் பாதுகாப்பாக பஸ்களை இயக்குவது குறித்த அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- விபத்தை தடுப்போம், வளைவுகளில் முந்தாதீர் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மண்டல பொதுமேலாளர் டேனியல்சாலமன் வழிகாட்டுதலின்படி அரசு பஸ் டிரைவர்களுக்கு விபத்தில்லாமல் பாதுகாப்பாக பஸ்களை இயக்குவது குறித்த அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல், பழனி, தேனி, குமுளி, போடி உள்ளிட்ட வழித்தடங்களில் அடிக்கடி விபத்துகள் நடக்கும் பகுதிகளை கண்டறிந்து டிரைவர்கள் கவனமுடன் பஸ்களை இயக்க வேண்டும். மிதவேகம், மிகநன்று, வேகத்தை குறைப்போம், விபத்தை தடுப்போம், வளைவுகளில் முந்தாதீர் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தாடிக்கொம்பு சந்தைதிடலில் பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோவில் உள்ளது.
- கொள்ளை போன நகை, பணம் ஆகியவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என தெரிகிறது.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்கொம்பு சந்தைதிடலில் பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு வைகாசி மாதம் திருவிழா நடத்தப்பட்டது. தினந்தோறும் கோவிலில் பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மார்கழி மாதம் என்பதால் திருவிளக்கு வழிபாடும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த கோவிலில் 2 இரும்பு கேட்டுகளையும் மர்மநபர்கள் உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த பெரிய இரும்பு உண்டியலை தூக்கிச்சென்றனர்.
அந்த உண்டியலை சுமார் 5 பேர் சேர்ந்தால்தான் தூக்கமுடியும். மேலும் இதனை மோட்டார் சைக்கிளில் கூட எடுத்துச்செல்ல முடியாது. எனவே இந்த உண்டியலை வாகனத்தில் அவர்கள் கடத்தி சென்றிருக்ககூடும். மேலும் கோவிலில் இருந்த சில்வர் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் திருடிச்சென்றுள்ளனர்.
இதுமட்டுமின்றி கருவறை கதவை உடைத்து அம்மனின் கழுத்தில் இருந்த தங்கநகை மற்றும் வெள்ளிகவசம் உள்ளிட்டபொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த கோவிலின் அருகே காம்பவுண்டு சுவர் இன்றி ஒரு விநாயகர் கோவில் உள்ளது. அந்த கோவில் உண்டியலில் நம்பர் பூட்டு இருந்ததால் அதனை எடுக்காமல் சென்றுவிட்டனர். இன்று காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கதவு திறந்து கிடந்தது கண்டும், உண்டியல் மாயமானது கண்டும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை போன நகை, பணம் ஆகியவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என தெரிகிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபமும் அருகிலேயே உள்ளது. இதனால் திருமணத்திற்கு வருபவர்கள் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்வது வழக்கம்.
எனவே இதனை நன்றாக நோட்டமிட்ட நபர்கள்தான் திட்டமிட்டு இந்த செயலை அரங்கேற்றி இருக்ககூடும் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த கோவிலுக்கு காவலாளி கிடையாது. அருகில் பல்வேறு வீடுகள் மற்றும் கடைகள் உள்ளது. மேலும் பகவதியம்மன் கோவில், உள்ளூர் அம்மன் கோவில் நகைகளும் இந்த கோவிலில்தான் உள்ளது. சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படவில்லை. இவை அனைத்தையும் சரியாக கணக்கிட்டு கொள்ளையர்கள் உண்டியலை தூக்கிச்சென்று கைவரிசை காட்டியுள்ளனர்.
அருகில் உள்ள நகைக்கடை முன்பு மட்டும் ஒரு சிசிடிவி கேமிரா உள்ளது. எனவே அந்த கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






