என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திண்டுக்கல் அருகே கோவிலை உடைத்து உண்டியலை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்
- தாடிக்கொம்பு சந்தைதிடலில் பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோவில் உள்ளது.
- கொள்ளை போன நகை, பணம் ஆகியவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என தெரிகிறது.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்கொம்பு சந்தைதிடலில் பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு வைகாசி மாதம் திருவிழா நடத்தப்பட்டது. தினந்தோறும் கோவிலில் பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மார்கழி மாதம் என்பதால் திருவிளக்கு வழிபாடும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த கோவிலில் 2 இரும்பு கேட்டுகளையும் மர்மநபர்கள் உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த பெரிய இரும்பு உண்டியலை தூக்கிச்சென்றனர்.
அந்த உண்டியலை சுமார் 5 பேர் சேர்ந்தால்தான் தூக்கமுடியும். மேலும் இதனை மோட்டார் சைக்கிளில் கூட எடுத்துச்செல்ல முடியாது. எனவே இந்த உண்டியலை வாகனத்தில் அவர்கள் கடத்தி சென்றிருக்ககூடும். மேலும் கோவிலில் இருந்த சில்வர் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் திருடிச்சென்றுள்ளனர்.
இதுமட்டுமின்றி கருவறை கதவை உடைத்து அம்மனின் கழுத்தில் இருந்த தங்கநகை மற்றும் வெள்ளிகவசம் உள்ளிட்டபொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த கோவிலின் அருகே காம்பவுண்டு சுவர் இன்றி ஒரு விநாயகர் கோவில் உள்ளது. அந்த கோவில் உண்டியலில் நம்பர் பூட்டு இருந்ததால் அதனை எடுக்காமல் சென்றுவிட்டனர். இன்று காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கதவு திறந்து கிடந்தது கண்டும், உண்டியல் மாயமானது கண்டும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை போன நகை, பணம் ஆகியவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என தெரிகிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபமும் அருகிலேயே உள்ளது. இதனால் திருமணத்திற்கு வருபவர்கள் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்வது வழக்கம்.
எனவே இதனை நன்றாக நோட்டமிட்ட நபர்கள்தான் திட்டமிட்டு இந்த செயலை அரங்கேற்றி இருக்ககூடும் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த கோவிலுக்கு காவலாளி கிடையாது. அருகில் பல்வேறு வீடுகள் மற்றும் கடைகள் உள்ளது. மேலும் பகவதியம்மன் கோவில், உள்ளூர் அம்மன் கோவில் நகைகளும் இந்த கோவிலில்தான் உள்ளது. சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படவில்லை. இவை அனைத்தையும் சரியாக கணக்கிட்டு கொள்ளையர்கள் உண்டியலை தூக்கிச்சென்று கைவரிசை காட்டியுள்ளனர்.
அருகில் உள்ள நகைக்கடை முன்பு மட்டும் ஒரு சிசிடிவி கேமிரா உள்ளது. எனவே அந்த கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






