என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • எதேச்சதிகாரமாக சட்ட மசோதா தாக்கல் செய்த மத்திய அரசைக் கண்டித்து திண்டுக்கல்லில் வக்கீல்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • கோர்ட்டு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசா ரணை நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை திருத்தம் செய்வதாக இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்தும் இந்திய பார் கவுன்சிலிடமோ, சட்டத்துறை சார்ந்தவர்களி டமோ எந்த ஆலோசனையும் பெறாமல் எதேச்சதிகாரமாக சட்ட மசோதா தாக்கல் செய்த மத்திய அரசைக் கண்டித்து திண்டுக்கல்லில் வக்கீல்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மேலும் நீதிமன்றத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை மாவட்ட நீதி மன்றம் அருகே அமைப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் சங்கத் தலைவர் செந்தில்கு மார், செயலாளர் உதயகு மார், இணைச் செயலாளர் கண்ணன் மற்றும் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். கோர்ட்டு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.

    • ரைஸ் மில்களுக்கு மாவு அரைக்க பயன்படுத்துவதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 650 கிலோ ரேசன் அரிசியை பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து அரிசியை பறிமுதல் செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் ரேசன் அரிசியை பதுக்கி அதனை ரைஸ் மில்களுக்கு மாவு அரைக்க பயன்படுத்துவதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    முத்தழகுபட்டியில் ஒரு வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனை யடுத்து அங்கு சென்ற போலீசார் சந்தானம் மகன் அமுல்ராஜ் (வயது37) என்பவர் வீட்டில் 650 கிலோ ரேசன் அரிசி இருந்ததை கண்டு பிடித்தனர். அதனை பறிமுதல் செய்த போலீசார் அமுல்ராஜையும் கைது செய்தனர். இந்த அரிசியை யாரிடம் இருந்து அவர் வாங்கி வந்தார். யாருக்கு விற்பனை செய்ய வைத்திருந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ரேசன் கடைகளில் அரிசி வாங்க விருப்பம் இல்லாத நபர்களிடம் அதனை வாங்கி பாலீஸ் செய்து விற்கப்படுவ தாகவும், மாவு அரைக்க விற்கப்படுவதாகவும் புகார்கள் வருவதால் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

    • சுற்றுலாத்தல வனப்பகுதிக்குள் இவ்வாறான சான்றிதழ் இல்லாத வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
    • சுற்றுலாத்தலங்கள் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகளுக்காக அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் மூடப்படும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்மரக்காடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட விபத்து காரணமாக வனப்பகுதி சுற்றுலா தலங்களில் வாகன நிறுத்துமிடம் விரிவுபடுத்துதல், கழிவறைகள் அமைத்தல் ஆகிய மேம்பாட்டு பணிகளுக்காக 2 தினங்களாக அப்பகுதி மூடப்பட்டது.

    இந்நிலையில் மீண்டும் இன்று முதல் வனப்பகுதி சுற்றுலா தளங்கள் திறக்கப்படுகிறது. தற்பொழுது வனப்பகுதி சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல புதிய கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஓட்டுனர் உரிமம், வாகனபதிவு புத்தகம், வாகன காப்பீட்டுச் சான்றிதழ், வாகன மாசு சான்றிதழ் ஆகியவை முறையாக உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தல வனப்பகுதிக்குள் இவ்வாறான சான்றிதழ் இல்லாத வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மோயர் சதுக்கம் பகுதியில் வாகன நுழைவு கட்டணம் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்ல ஒரே நுழைவுக்கட்டணம் வசூல் செய்யப்படும். வனப்பகுதிக்குள் உள்ள சுற்றுலாத்தலத்தில் வாகன நுழைவு கட்டணம் அரசாணையின்படி வசூலிக்கப்படும். பேரிஜம் செல்வதற்கு நாள் ஒன்றுக்கு 50 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும், பேரிஜம் நுழைவு அனுமதிச்சீட்டு பெற பழைய கட்டணங்களே நடைமுறைப்படுத்தப்படும். பேரிஜம் செல்ல அனுமதி சீட்டு பெற்ற வாகனத்திற்கு மறைமுக கட்டணங்கள் வசூல் செய்யப்படமாட்டாது.சுற்றுலாத்தலங்கள் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகளுக்காக அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் மூடப்படும்.

    இவ்வாறு கொடைக்கானல் வனத்துறை அறிவித்துள்ளது.

    இந்நிலையில் ஒரே இடத்தில் வாகன நுழைவுக் கட்டணம், மோயர் சதுக்கம்,பைன் மரக்காடுகள், தூண்பாறை, குணா குகை உள்ளிட்ட சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்க ஒரே நுழைவுச்சீட்டு கட்டணம் வசூலிப்பது, வாகனங்களுக்குரிய முழுமையான ஆவணங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் சரிப்பார்ப்பது என்பது கால விரயத்தை அதிகரிக்கும், அதோடு வாகனங்கள் நுழைவுச்சீட்டு என்பது அடாவடி நடவடிக்கை என உள்ளூர் டாக்ஸி ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கொடைக்கானல் நகராட்சி எல்லையில் உள்ள சுங்கச்சாவடி கட்டண வசூல் மையத்திற்கு ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும், சுங்க சாவடியையே அகற்ற வேண்டும் என்ற எதிர்ப்பு நிலையிலும் மற்றும் ஒரு டாக்ஸி ஓட்டுனர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது போல் வனத்துறையில் சுங்கச்சாவடி அமைத்து வசூல் செய்வது உள்ளூர் மற்றும் வெளியூர் டாக்ஸி,வேன் ஓட்டுநர்களையும் கடுமையாக பாதிக்கும் என கொடைக்கானல் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே வாகன நுழைவு கட்டணம் என்ற புதிய விதியையும்,வாகன சரிபார்ப்பு என கால நேரத்தை வீணடிப்பதையும் கொடைக்கானல் வனத்துறை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு குளத்தில் தேங்கி இருந்த குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
    • 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நத்தம்:

    நத்தத்தில் உள்ள அம்மன்குளத்தில் அரிமா சங்கம் மற்றும் மீனாட்சி மெட்ரிக் பள்ளி நிர்வாகம் சார்பில் தூய்மை பணிகள் முகாம் நடந்தது. இதற்கு நத்தம் அரிமா சங்க தலைவர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார்.

    பள்ளி முதல்வர் சத்யா முன்னிலை வகித்தார். இதில் மீனாட்சி பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு குளத்தில் தேங்கி இருந்த குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தூய்மை பணியில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • இன்று ஆவணி மாதப்பிறப்பையொட்டி அதிகளவு பூக்கள் வரத்து இருந்தது.
    • திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு அதிகளவு வாடாமல்லி வந்த நிலையில் விலை ஒரு கிலோ ரூ.15லிருந்து ரூ.30ஆக உயர்ந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அண்ணாவணிக வளாக பூ மார்க்கெட் உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளான நிலக்கோட்டை, செம்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, வெள்ளோடு, சித்தையன்கோட்டை, மயிலாப்பூர், செங்கட்டாம்பட்டி, போடிகாமன்வாடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பூக்கள் விளைவிக்கப்பட்டு கொண்டுவரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பூக்கள் விலை குறைந்தே காணப்பட்டது. இன்று ஆவணி மாதப்பிறப்பையொட்டி அதிகளவு பூக்கள் வரத்து இருந்தது. 40 டன் பூக்கள் வந்தநிலையில் வாடாமல்லி மட்டும் 30 டன் வந்துள்ளது. கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வருகிற 28-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கேரள மக்கள் அத்தப்பூ கோலம் போட்டு விருந்தினர்களை வரவேற்பார்கள். இதற்காக 9 நாட்கள் அத்தப்பூ கோலம் போடப்படுகிறது. இதில் வாடாமல்லி பூ முக்கிய பங்கு வகிக்கிறது.

    இன்று திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு அதிகளவு வாடாமல்லி வந்த நிலையில் விலை ஒரு கிலோ ரூ.15லிருந்து ரூ.30ஆக உயர்ந்தது. இருந்தபோதும் அதிகளவு பூக்கள் லாரி மூலம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மல்லிகை ஒரு கிலோ ரூ.600, முல்லை ரூ.200, கனகாம்பரம் ரூ.300, ஜாதிப்பூ ரூ.200, செண்டுமல்லி ரூ.50, கோழிக்கொண்டை ரூ.50, அரளி ரூ.150, ரோஸ் ரூ.150 என்ற விலையில் விற்பனையானது.

    அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் மற்றும் திருவிழாக்கள் வர உள்ளதால் பூக்கள் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பாலத்தின் அடியில் இன்று அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • போலீசார் உடலை கைப்பற்றி குடிபோதையில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு யாரேனும் தள்ளி விட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எரியோடு:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோடு சந்தைப்பேட்டை யில் புதிதாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் அடியில் இன்று அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் மல்லப்புரம் பஞ்சாயத்து நல்லாகவுண்டன்பட்டியை சேர்ந்த மனோகரன்(52) என தெரியவந்தது.

    விவசாய கூலித்தொழி லாளியான இவர் மதுப்பழ க்கத்திற்கு அடிமையானவர். சம்பவத்தன்று சைக்கிளில் சென்றவர் பாலத்திற்கு அடியில் கீழே விழுந்தது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி மட்டும் உள்ளார். குழந்தை கள் இல்லை. குடிபோதையில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு யாரேனும் தள்ளி விட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • 2 பேர் கொலை வழக்கில் இன்று அல்லது நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
    • வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் 24 மணிநேர ரோந்து போலீசாரும் கண்காணித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் குடைப்பா றைப்பட்டியை சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவரது மகன்களான தட்சிணா மூர்த்தி கடந்த 2016-ம் ஆண்டிலும், சக்திவேல் 2019-ம் ஆண்டிலும் அடுத்தடுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட னர்.

    இந்த கொலை வழக்குகள் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து முருகேஸ்வரிக்கு பாது காப்பாக முத்தழகுபட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அருளானந்தபாபு(29) என்பவர் இருந்து வந்தார்.

    மிட்டாய் வியாபாரம் செய்து வந்த முருகேஸ்வரி யின் கம்பெனியில் அருளானந்தபாபுவும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-வத்தல க்குண்டு சாலையில் அருளா னந்தபாபு கடந்த 8-ந்தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட தட்சிணாமூர்த்தி, சக்திவேல் ஆகியோரது வழக்கில் இன்று அல்லது நாளை தீர்ப்பு வழங்கப்படஉள்ளது. இதனையடுத்து முருகே ஸ்வரியின் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் 24 மணிநேர ரோந்து போலீசாரும் கண்காணித்து வருகின்றனர்.

    • மீனாட்சி நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் பஸ் வசதி கேட்டு அரசு போக்கு வரத்துக்கழக பணிமனையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • முழுமையான சாலை வசதி அமைக்கப்பட்டவுடன் பஸ் வசதி இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் பஸ் வசதி கேட்டு அரசு போக்கு வரத்துக்கழக பணிமனையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பஸ் வசதிகேட்டு மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தோம். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும் முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தி னோம்.

    இதனைதொடர்ந்து அரசு போக்குவரத்துகழக அலு வலர்கள், வருவாய்த்துறை யினருக்கு மாவட்ட கலெக்டர் பஸ்வசதி விடுவத ற்கான சாத்தியகூறுகள் குறித்து அறிவுரை வழங்கி னார். இந்த வழித்தடத்தில் தார்சாலை இல்லை என்றும், தார்ச்சாலை வசதி இருந்தால் மட்டுமே அரசு பஸ் இயக்க முடியும் என போக்குவரத்து கழகம் தெரிவித்தது. இதனைதொடர்ந்து ரூ.20.60 லட்சம் மதிப்பில் ஓரடடுக்கு மெட்டல் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    பள்ளி திறந்து 3 மாதங்கள் ஆகியும் இதுவரை பஸ் இயக்கப்படவில்லை. எனவே அரசு போக்குவரத்து கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறோம். பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் சிரமத்துடன் பள்ளிக்கு வரும் நிலை ஏற்படுகிறது. மேலும் பல மாணவர்கள் இடையிலேயே கல்வியை நிறுத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர் என்றனர்.

    இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக மண்டலமேலாளர் டேனியல் சாலமன் தெரிவிக்கையில், மேற்கு மீனாட்சி நாயக்க ன்பட்டியில் செயல்பட்டு வரும் பள்ளி கட்டிடம், எம்.வி.எம்.அரசு மகளிர் கல்லூரி பின்புறம் மாற்ற ப்பட்டது. பஸ் வசதி கேட்டு மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் மணற்பா ங்கான ரோடுகளும், குண்டும், குழியுமான சாலைகளும் உள்ளதால் சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்கும் பட்சத்தில் பஸ்வசதி செய்து தரப்படும். இதுகுறித்த அறிக்கையை கல்வித்துறை, பள்ளிநிர்வாகம் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    முழுமையான சாலை வசதி அமைக்கப்பட்டவுடன் பஸ் வசதி இயக்கப்படும் என்றார்.

    • 100 நாள் திட்ட பெண் தொழிலாளர்களை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியதில் 42 பெண்கள் காயமடைந்தனர்.
    • காயமடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வி.குரும்பபட்டி புதுக்குளம் ஓடையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் இன்று 112 பெண் தொழிலாளர்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்டனர்.

    அவர்கள் அந்தப் பகுதியில் வேலை செய்து கொண்டிரு ந்தபோது தேனீக்கள் திடீரென பெண் தொழிலா ளர்களை கொட்டத் தொடங்கியது. இதனால் அங்கிருந்த பெண்கள் அலறியடித்து ஓடினர். எனினும் தேனீக்கள் அவர்களை விரட்டி விரட்டி கொட்டியது.

    இதில் 42 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, செயலாளர் மார்ட்டின் கென்னடி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 42 பெண் தொழிலாளர்களை மீட்டு சிகிச்சைக்காக கோபா ல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் காயமடைந்த தொழிலாளர்கள் சிறிது நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பினர். இதில் பலத்த காயமடைந்த கோபால்பட்டியைச் சேர்ந்த முருகாயி (வயது 60), தெய்வானை (54), ராஜேஸ்வரி (65), மைதிலி (54), மாரியம்மாள் (68) ஆகிய 5 பேர் மேல் சிகிச்சை க்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பரபர ப்பான சூழ்நிலை நிலவியது.

    • வாரிசு சான்றிதழ் வழங்க வாலிபரிடம் வருவாய் ஆய்வாளர் ரூ.8000 லஞ்சமாக கேட்டுள்ளார்.
    • வாலிபர் லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அதிகாரிகள் ஆர்.ஐ.லஞ்சம் வாங்கும் போது கைது செய்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா காவேரியம்மாபட்டி வருவாய் ஆய்வாளராக இருப்பவர் பாண்டியன். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் அவரது தந்தை வேலுச்சா மிக்கு வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.

    அப்போது சான்றிதழ் வழங்க வருவாய் ஆய்வாளர் பாண்டியன் ரூ.8000 லஞ்சமாக கேட்டு ள்ளார். அதனால் இதுகுறி த்து மாரிமுத்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    இதை யடுத்து மாரிமுத்து ரசா யனம் தடவிய ரூ.8,000 பணத்தை வருவாய் ஆய்வாளர் பாண்டியனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி நாகராஜன் தலைமையிலான போலீசார் பாண்டியனை சுற்றிவளை த்து கைது செய்தனர்.

    • நத்தம் பழைய பேருந்து நிலையத்திற்குள் உள்ள மொபைல் கடைகள் செயல்பட்டு வரும் பகுதியில் திடீெரன மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
    • இதில் பயணி ஒருவருக்கு தலையில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    நத்தம்:

    நத்தம் பேருந்து நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான பல்வேறு வணிக வளாக கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான கட்டிடங்கள் சேதமடைந்து இடியும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் பழைய பேருந்து நிலையத்திற்குள் உள்ள மொபைல் கடைகள் செயல்பட்டு வரும் பகுதியில் திடீெரன மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

    இதில் அந்த வழியாக சென்ற குடகிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அழகர்சாமிக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதில் அவர் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இதைப்போலவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நத்தம் பழைய பேருந்து நிலையத்திற்குள் ஒரு பேன்சி மற்றும் சலூன் கடையில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடதக்கது.

    • ஊராளிப்பட்டி ஊராட்சி கிராம மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். தண்ணீருக்காக பல விவசாய தோட்டங்களை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
    • காவிரி கூட்டுக்குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளுக்கு வழங்கும் காவிரி குடிநீரை செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகம் தங்களது ஊராட்சிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் வந்துகொண்டு இருக்கிறது. அந்த ஊராட்சி வழியாக தான் ஊராளிப்பட்டி ஊராட்சிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் பைப்லையன் மூலம் செல்கிறது.

    இதை செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றநிர்வாகம் ஊராளிபட்டிக்கு செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் பைப் லைனை தடுத்து தங்களது ஊராட்சிக்கே தண்ணீரை திறந்து விடுகிறது என்று நத்தம் யூனியன் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். இதை யூனியன் ஆணையாளர்களும், அரசு அதிகாரிகளும் பலமுறை சொல்லியும் செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகம் கேட்காமல் மீண்டும் அதே பணியை திரும்பதிரும்ப செய்து வருகின்றனர்.

    இதனால் ஊராளிப்பட்டி ஊராட்சி கிராம மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். தண்ணீருக்காக பல விவசாய தோட்டங்களை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே காவிரி கூட்டுக்குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஊராளிபட்டி ஊராட்சி கிராம மக்கள் இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×