என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • பென்னாகரம் அருகே திருமணம் ஆன 10 நாட்களில் புதுப்பெண் மாயம் ஆனார்.
    • தினேஷ்குமாரை கிழே தள்ளி விட்டுள்ளார். அவர் எழுந்து பார்த்தபோது கீதாஞ்சலி காணவில்லை.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கொடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது27) விவசாயி. இவருக்கும் தருமபுரி மாவட்டம் செல்லமுடியை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுடன் கடந்த 18-ந்தேதி அன்று திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் 27-ந்தேதி அன்று கணவன்-மனைவி இருவரும் மதியம் பென்னாகரத்தில் உள்ள சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க வந்துள்ளனர்.

    பின்னர் படம் முடிந்து இருவரும் மோட்டர் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது தினேஷ்குமாரின் மனைவி தனது தாய் வீட்டிற்கு வரை சென்று விட்டு பிறகு செல்லலாம் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மோட்டர் சைக்கிளில் பென்னாகரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வாழதாசம்பட்டி ரோடு, ஏரங்காடு பட்டுபூச்சி அலுவலகம் அருகில் வந்தபோது மற்றொரு ஒரு மோட்டர் சைக்கிளில் 25 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் திடீரென்று தினேஷை வழி மறித்து நிறுத்தியுள்ளார்.

    பின்னர் அவர் மோட்டர் சைக்கிளில் இருந்த தினேஷ்குமாரை கிழே தள்ளி விட்டுள்ளார். அவர் எழுந்து பார்த்தபோது கீதாஞ்சலி காணவில்லை. உடனே பல இடங்களில் தினேஷ்குமார் தேடிபார்த்தபோது தனது மனைவி கிடைக்கவில்லை. இதனால் அவர் மாயமானது தெரியவந்தது.

    இது குறித்து தினேஷ்குமார் பென்னாகரம் போலீசாரிடம் சினிமா பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தபோது தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த வாலிபர் என்னை கீழே தள்ளி விட்டு கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கீதாஞ்சலியையும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரையும் தேடி வருகின்றனர். திருமணம் நடந்து 10 நாட்கள் ஆன நிலையில் புதுபெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • மண்டபத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் ஊராட்சி சென்னப்பன் கொட்டாய் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய திருமணம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறக்கப்பட்டது.

    மண்டபத்திற்க்கு அடிப்படை தேவைகளான சமையல் பாத்திரம், நாற்காலி, கேஸ் அடுப்பு, மணமக்கள் நாற்காலிகள் உள்ளிட்ட ரூ.5 இலட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் திருமன மண்டபத்தில் புகுந்து நாற்காலி, எலக்ட்ரிக் சுவிட்ச், கழிவறை பைப்புகள், ஜன்னல் கண்ணாடி, சாமிபடம் உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சேதபடுத்தி சென்றுள்ளனர்.

    அவ்வழியாக சென்றவர்கள் மண்டபம் திறந்து கிடப்பதையும், பொருட்கள் சேதமாகி உள்ளதையும் கண்டு மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த மாரண்ட அள்ளி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மண்டபத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தது.
    • வட்டாட்சியர் கனிமொழி, ஆர்.ஐ.பொன்மணி, விஏஒ அம்பேத்கர், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    அரூர்:

    ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் கடந்த 7ம் தேதி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 17பேர் உயிரிழந்தனர்.

    இதில் தரும்புரி மாவட்டம் அரூர் அருகே உள்ள டி.அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த வேடப்பன், ஆதிகேசவன், இளம்பரிதி, விஜயராகவன், ஆகாஷ், கிரி, சச்சின், என 7 பேர் மற்றும் நீப்பதுரை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் நேற்று அம்மாபேட்டை கிராமத்திற்கு வந்த கர்நாடகா மாநிலம் ஆனைக்கல் தாலுக்காவை சேர்ந்த தாசில்தார் கரியநாயக், சித்தராஜ், விஏஓ நாகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஒவ்வொரு வீடாக சென்று உயிரிழந்த நபர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ. 5 லட்சம் ரூபாய்கான காசோலையை வழங்கினர்.

    இதில், அரூர் வட்டாட்சியர் கனிமொழி, ஆர்.ஐ.பொன்மணி, விஏஒ அம்பேத்கர், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • தீபாவளிக்கு இனிப்பு, காரங்களை தயாரித்து விற்கும் கடைகளுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
    • உணவுப் பொருள் தயாரிக்கும்பணியில் ஈடுபடுவோர் கண்டிப்பாக பயிற்சி, மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி மற்றும் ஓட்டல்களில்இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்கும் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது.

    இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர்சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    இனிப்பு, காரவகைகள் தயாரிக்க, தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். கலப்படபொருட்கள்பயன்படுத்தக்கூடாது. இனிப்பு வகைகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும்கூடுதலாக நிறமி சேர்க்கக் கூடாது.

    ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி, உணவுதயாரிக்க பயன்படுத்தக் கூடாது.

    தடை செய்யப்பட்ட, ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும். சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் பேப்பர், கவரில் பொட்டலமிடக் கூடாது மீறினால் அபராதம் விதிக்கப்படும்.

    பண்டிகை முன்னிட்டு இனிப்பு, கார வகைகளுக்கு சீட்டு நடத்துவோர் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.

    ஏற்கனவே உரிமம் பெற்றி ருந்தால் புதுப்பித்திருக்க வேண்டும். உரிமம் இல்லாமல் தயாரிப்பது கண்டறியப்பட்டால், வணிகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    சமுதாய கூடங்கள், கல்யாண மண்டபங்கள் மற்றும் இதர இடங்களில் இனிப்பு, கார வகைகளை தயாரிப்பவர்கள் அதற்கான உரிமம் பெறவேண்டும்.

    உணவுப் பொருள் தயாரிக்கும்பணியில் ஈடுபடுவோர் கண்டிப்பாக பயிற்சி, மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும்.

    பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கான விபரச்சீட்டில் தயா ரிப்பாளர் முழு முகவரி, உணவு பொருள் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்த தேதி, காலாவதியாகும்நாள், சைவ, அசைவ குறியீடு அவசியம் குறிப்பிட வேண்டும். பால் பொருட்களால் தயாரிக்கும் இனிப்பு வகைகளை, மற்ற இனிப்புகளுடன் கலந்துவைத்திருக்கக் கூடாது. இவற்றை எத்தனை நாட்களுக்குள் உபயோகிக்க வேண்டும் என்பதை லேபிளில் அச்சிட வேண்டும்.

    உணவு பொருட்கள் தொடர்பான புகார்கள் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தருமபுரி மருத்துவக் கல்லூரியில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார்.
    • ரூ.36.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது

    தருமபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் கூடுதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டிடம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை மையக்கட்டடம் கட்டப்பட்டு வரும் பணிகளை பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்திரமோகன், மாவட்ட கலெக்டர் கி.சாந்தி, முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    முதல் அமைச்சர் காணொலி காட்சியின் வாயிலாக 20.1.2022 அன்று ஆற்றிய உரையில் தருமபுரியில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ.36.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு சுமார் 4.25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தரைதளத்துடன் கூடிய 5 தளம் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடத்தின் பரப்பளவு 1.21 இலட்சம் சதுர அடி ஆகும். தரைதளத்துடன் கூடிய 5 தளத்தில் மாவட்ட கலெக்டர் அரங்கம், மாவட்ட வருவாய் அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பயிற்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட நகர் ஊரகமைப்பு அலுவலர், தமிழ் வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர், மாவட்ட சமுக நல அலுவலர், இந்து சமய அறநிலைய அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் அறை மற்றும் மற்ற பிற துறைக்களுக்கும் அறைகள் ஒதுக்கப்பட உள்ளது.இப்புதிய கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் வசதி, மின்தூக்கி வசதி மற்றும் நீரின் அவசியம் கருதி மழைநீர் சேமிப்பு வசதியும் ஏற்ப்படுத்தப்பட உள்ளது.

    தற்போது முதல் தளம் கூரை பணிகள் முடிக்கப்பட்டு இரண்டாம் தளத்தின் கான்கிரீட் தூண்கள் போடப்பட்டு இரண்டாம் தளத்தினுடைய கூரை சென்ட்ரிங் பணிகள் மற்றும் கம்பி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இப்பணிகளை பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்திரமோகன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார்கள். மேலும், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை மையக் கட்டிடம் ரூ.20.கோடி நிதி ஒதுக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது.

    இக்கட்டடமானது தரைத்தளம் மற்றும் ஆறு தளங்களுடன் மொத்த பரப்பளவு 46,502 சதுர அடியில் கட்டப்பட உள்ளது. பி.சந்திரமோகன், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு. இப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.

    இந்திகழ்ச்சியின் பொது பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் கோயம்புத்தூர் மண்டலம் ச.காசிலிங்கம், கண்காணிப்பு பொறியாளர் பெ.சண்முகம், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. அமுதவல்லி, செயற்பொறியாளர் அ.சிவக்குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • அருரில் உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது என்று ஆர். டி.ஒ. எச்சரிக்கை செய்தார்.
    • போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    அரூரில் உரிமம் பெறாமல் பட்டாசுகளை விற்பனை செய்ய கூடாது என அரூர் ஆர்.டி.ஓ வில்சன் ராஜசேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிரந்தர மற்றும் தற்காலிக உரிமம் பெற்ற கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யும் இடங்களை வருவாய், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பட்டாசு கடைகளில் பிற பொருள்களை விற்பனை செய்தல் கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக பட்டாசுகளை இருப்பு வைத்திருத்தல் கூடாது. பட்டாசு கடைகளின் அருகில் தீத்தடுப்பு சாத னங்களை வைத்திருத்தல் வேண்டும்.

    பட்டாசு கடைகளின் அருகில் எளிதில் தீப்பற்றக்கூடிய தீக்குச்சிகள், மெழுகு வர்த்திகள், விளக்குகளை வைத்திருக்க கூடாது. தீபாவளி பண்டிகை யொட்டி, அனைத்து பட்டாசு கடைகளையும் பாதுகாப்பான முறையில் செயல்படுத்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவரது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • ஓடும் ரெயில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • நவீன தொழிற்நுட்பம் மூலம் குற்றவாளியை கண்டறிந்துள்ளனர்.

    மயிலாடுதுறை இருந்து மைசூர் மார்க்கமாக செல்லும் விரைவு ரெயிலில் கடந்த 6-ந் தேதி பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண் பயணம் செய்தார்.

    அப்போது சேலம் மாவட்டம் காருவள்ளி என்ற இடத்தில் நள்ளிரவில் ரெயில் நின்று புறப்படும் சமயம் பார்த்து தூக்க மஞ்சுளாவின் கழுத்திலிருந்த இரண்டரை பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து ஒரு திருடன் தப்பித்து விட்டான்.

    இதே போல கோயமுத்தூ ரில் இருந்து மன்னார்குடி செல்லும் ரெயிலில், கடந்த 9-ந் தேதி கரூர் நடை மேடையில் ரெயில் நின்று புறப்படும் நேரத்தில், தஞ்சாவூரை சேர்ந்த கலா என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க நகையை பறிக்க முயன்ற போது, கையில் சிக்கிய ஒரு பவுன் தங்க நகையை மட்டும் பறித்துக் கொண்டு ரெயிலை விட்டு இறங்கி திருடன் தப்பி ஓடி விட்டான்.

    இது தொடர்பான 2 புகாரின் பேரிலும், சென்னை ரெயில்வே சைபர் க்ரைம் போலீசார், செல்போன் உரையாடல் களை சி.டி.ஆர். என்ற அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன், நகை பறிப்பில் ஈடுபட்டவர் தருமபுரி மாவட்டம், கொல்லஅள்ளி கிராமத்தை சேர்ந்த ராமன் (வயது 24) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தருமபுரி ரெயில் நிலைய நடைமேடை யில் அவர் சுற்றி திரிந்ததை அறிந்த போலீசார் ராமனை கைது செய்து அவரிடம் இருந்த தங்க நகைகளை மீட்டனர்.

    இது தவிர வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளரா என்று விசாரித்து வருகின்றனர்.

    • தருமபுரி மாவட்டத்தில் வன உயிரினங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்
    • தரமற்ற விதைநெல்லால் அரூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்டரங்கில் விவசாயி களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதி நிதிகள், மற்றும் விவசா யிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

    அவர்கள் கூறும்போது, நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவைப் பருவம் தொடங்கவுள்ள நிலையில் கரும்பு கொள்முதல் விலையை அரசு அறிவிக்க வேண்டும். வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்சலுக்கு அனுமதிக்க வேண்டும். சின்னாறு(பஞ்சப்பள்ளி) அணையின் உயரத்தை உயர்த்த வேண்டும். நெற்பயிருக்கான காப்பீடு தொடர்பாக நிலவும் பல்வேறு குளறுபடிகளை களைய வேண்டும்.

    காட்டுப்பன்றி, மயில் போன்ற வன உயிரினங்களால் விவசா யிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிப்பு ஏற்பட்டால் விரைவாகவும், உரிய அளவிலும் இழப்பீடு வழங்க வேண்டும்.

    தருமபுரி மாவட்டத்தில் தரமற்ற, போலி விதைகள் நடமாட்டம் இருப்பது குறித்து பல மாதங்களுக்கு முன்பே விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவித்த நிலையிலும் மாவட்ட நிர்வாகம் கண் விழிக்காமல் இருந்ததன் விளைவாக தற்போது தரமற்ற விதைநெல்லால் அரூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

    வாணியாறு அணைப் பகுதியில் உள்ள பூங்காவை மேம்படுத்த வேண்டும். அலியாளம்-தூள்செட்டி ஏரி பாசன கால்வாய் இணைப்புத் திட்டத்தை தாமதமின்றி நிறை வேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

    இவற்றைக் கேட்டுக் கொண்ட மாவட்ட கலெக்டர் கோரிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வேளாண் இணை இயக்குநர் விஜயா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ராமதாஸ், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சாமிநாதன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • தருமபுரி அருகே விஷம் குடித்து லாரி டிரைவர் உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த திருமல்வாடி அருகே உள்ள சீங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் வயது (47) லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி ரேவதி, மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.

    மகேந்திர னுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளதும், அவ்வப்போது மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் சண்டை போட்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி மது குடித்துவிட்டு மனைவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மற்றொரு வீட்டிற்கு சென்று உள்ளார். இதில் மனமுடைந்த மகேந்திரன் பூச்சி மருந்தை குடித்துவிட்டு வாந்தி எடுத்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.

    இதனை அடுத்து மகேந்திரனை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனின்றி மகேந்திரன் நேற்று உயிரிழந்தார். இது குறித்து மாரண்ட அள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பொடுத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் வயது (31). வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் வலிப்பு நோயை குணப்படுத்த பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகாத நிலையில் நேற்று பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து விட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    • மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • மதுபான கடை திறப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தோமலஅள்ளி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மதுபான கடை செயல்பட்டு வந்துள்ளது. இதனை மூட வலியுறுத்தி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

    இதனால் அந்த அரசு மதுபான கடை மூடப்பட்டுள்ளது. இந்நிலை யில் தற்போது மூடப்பட்ட இடத்திற்கு அருகே மீண்டும் அரசு மதுபான கடை திறப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது.

    அந்த இடத்தில் மீண்டும் அரசு மதுபானக் கடை திறக்க கூடாது என கூறி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கடை திறந்தால், வெளியூர் பகுதியில் இருந்து ஏராளமானோர் மது அருந்த வருவார்கள், இதனால் அதிகமான வாகன போக்குவரத்து ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு தோமலஅள்ளி கிராமத்தை சேர்ந்த 50 பெண்கள் தருமபுரி கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது கலெக்டரிடம் மதுக்கடை திறக்க கூடாது என்று கோரிக்கையை வைத்து மனுவை அளித்தனர். 

    • தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமட்ற தொகுதிகளில் மொத்தம் 12, 27, 302 வாக்களார்கள் உள்ளனர் என்று கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.
    • வரைவு வாக்களர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    தருமபுரி மாவட்ட வரைவு வக்காளர் பட்டி–யலை இன்று காலை கலெக்டர் சாந்தி வெளி யிட்டார். அதில் கூறியிருப்பதாவது;-

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல்-2024 -ன்படி பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 182 வாக்குச் சாவடி மையங்கள், வாக்கா–ளர்களாக 1,19,277 ஆண்க–ளும், 1,16,349 பெண்களும், 17 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,35,643 வாக்காளர்கள் உள்ளனர்.

    பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் வாக்கா–ளர்களாக 1,25,361 ஆண்க–ளும், 1,16,780 பெண்களும், 9 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,42,150 வாக்காளர்கள் உள்ளனர். தருமபுரி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்க ளாக 1,29,383 ஆண்களும், 1,26,566 பெண்களும், 98 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,56,047 வாக்காளர்கள் உள்ளனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதியில் வாக்காளர்க ளாக 1,27,049 ஆண்களும், 1,25,908 பெண்களும், 15 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,52,972 வாக்கா ளர்கள் உள்ளனர்.

    அரூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்க ளாக 1,20,752 ஆண்களும், 1,19,716 பெண்களும், 22 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,40,490 வாக்கா ளர்கள் உள்ளனர்.

    மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் 5 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 885 வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர்க–ளாக 6,21,822 ஆண்களும், 6,05,319 பெண்க ளும், 161 மூன்றாம் பாலினத்த வர் என மொத்தம் 12,27,302 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 1489 வாக்குசாவடி நிலைய அலுவலர்கள் உள்ளனர்.

    சிறப்பு சுருக்க திருத்தம் -2024-ல் வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்த்தல், நீக்கம் அல்லது முகவரி மாற்றம் தொடர்பாக 27.10.2023 முதல் 9.12.2023 வரை விண்ணப்பம் செய்யலாம். மாவட்டத்தி–லுள்ள 885 வாக்குச்சாவடி மையங்க ளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை படிவங்கள் பெறப்படும். 5.1.2023 முதல் 30.9.2023 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி 12,676 படிவங்கள் பெறப்பட்டு அதில் 11,704 படிவங்கள் ஏற்று கொள்ளப்பட்டது.

    5.1.2023 முதல் 30.9.2023 வரை 21,141 படிவம்-7 வரப்பெற்றது. அதில் 20,908 படிவங்கள் ஏற்கப்பட்டது.

    சிறப்பு சுருக்கத் திருத்தம்-2024ன்படி, சிறப்பு முகாம் ஆனது எதிர்வரும் 4.11.2023, 5.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடி களிலும் நடைபெறுகிறது. 1.1.2024 என்ற தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க கோரி விண்ணப்பிக்க–லாம். (31.12.2006 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்த நபர்கள்)

    1.1.2007 முதல் 31.12.2007 வரை பிறந்த தேதியை கொண்ட 17 வயது நிரம்பிய நபர்களும் அட்வான்ஸ் பில்லிங்-ஆக விண்ணப்–பிக்கலாம், ஆனால் 1.4.2024, 1.7.2024, 1.10.2024 ஆகிய தகுதி நாட்களில் எந்த தேதி களில் தனியரின் வயது-18 பூர்த்தி அடையும் பொழுது தான் விண்ணப்பங்கள் பரிசீல னைக்கு எடுத்து கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) அசோக்குமார், வருவாய் வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • தருமபுரி வெளிப் பேட்டை தெரு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி நகர் வெளிப்பேட்டை தெருவில் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவில் பல லட்சம் மதிப்பில் புனர–மைக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த கோவில் மகா கும்பா–பிஷேக விழா கடந்த 25-ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து மூல மந்திர ஹோமம், தனபூஜை, மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி ஊர்வலமும், தீர்த்த குடம் மற்றும் புனித நீர் குடங்கள் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் யாகசாலை பூஜைகளும், தமிழ் மறை உபகார பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ மதுரை வீரன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றப் பட்டு பூர்ணாஹூதி நடை பெற்றது.

     விழாவின் முக்கிய நாளான இன்று காலை மங்கள இசையுடன் யாக வேள்வி மற்றும் யாத்ரா தானம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    பின்னர் மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து புனித நீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூலஸ்தான கோபுரம், ராஜ கோபுரம் மற்றும் பரிவார மூர்த்தி கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    பின்னர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார சேவை மற்றும் மகாதீபாரதனை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை ஒட்டி பக்தர்க–ளுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை வாணியர் சமூகத்தினர், எஸ்.எம். ஆறுமுகம் செட்டியார் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×