என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • இந்த சாலை அகலப்படுத்துவதால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை.
    • மனித உயிர் இழப்புகளை தடுக்க ஒடசல்பட்டி கூட்ரோடு கணவாய் பகுதியில் அபாயகரமான வளைவு சாலையை நேரான சாலையாக மாற்றியமைக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி கிழக்கு மாவட்ட பா.ம.க செயலாளர் அரசாங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தருமபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    தருமபுரியில் இருந்து ஒடசல்பட்டி கூட்ரோடு கணவாய் பகுதி வழியாக மொரப்பூர், அரூர், திருவண்ணாமலை, கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான 4 சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகிறது.

    குறிப்பாக நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலை வழியாக தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

    எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் ஒடசல்பட்டி கூட்ரோடு கணவாய் பகுதியில் உள்ள வளைவான சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்துகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். குரங்குகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகளும் வாகனங்களில் சிக்கி இறப்பது தொடர்கதையாகி விட்டது.

    அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வரும் இந்த வளைவான சாலையை நேரான சாலையாக மாற்றி அமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது தருமபுரி-அரூர் பிரதான சாலை 4 வழிச்சாலையாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒடசல்பட்டி கூட்ரோடு கணவாய் பகுதியில் தின்னப்பட்டி பிரிவு சாலையில் அமைந்துள்ள வளைவான சாலையை நேர்படுத்தாமல் மீண்டும் பழைய படியே ஆபத்தான நிலையில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த சாலை அகலப்படுத்துவதால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. மேலும் விபத்துக்கள் தான் அதிகரிக்கும். எனவே மனித உயிர் இழப்புகளை தடுக்க ஒடசல்பட்டி கூட்ரோடு கணவாய் பகுதியில் அபாயகரமான வளைவு சாலையை நேரான சாலையாக மாற்றியமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

    இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது கட்சியின் மாவட்டத் தலைவர் அல்லிமுத்து, பசுமைத்தாயக மாநில துணைச் செயலாளர் மாது, மாநில செயற்குழு உறுப்பினர் பி.ராமலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் சரவணன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சேட்டு, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மோகன், சதீஷ், பெரியசாமி, ஒன்றிய செயலாளர் முனுசாமி, ஒன்றிய தலைவர் பெரியசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • மரவள்ளிக்கிழங்கு பயிர்களில் தற்பொழுது வெள்ளை பூச்சி தாக்குதல் அதிகரித்து உள்ளதால் செடிகளின் இலைகள் பழுத்து உதிர்ந்து வருகிறது.
    • நோய் தாக்குதலால் மகசூல் குறைந்து இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியதால் விவசாயி கள் பெறும் வேதனை அடைந்து வருகின்றனர்.

    கடத்தூர், ஜூலை.8-

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் ஆகிய சுற்றுப்பகுதி கிராமங்களில் பல ஆயிரம் எக்டேர் பரப்பளவில் விவசாயிகள் மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ளனர்.

    இந்த மரவள்ளிக்கிழங்கு பயிர்களில் தற்பொழுது வெள்ளை பூச்சி தாக்குதல் அதிகரித்து உள்ளதால் செடிகளின் இலைகள் பழுத்து உதிர்ந்து வருகிறது. இதனால் மகசூல் குறைந்து இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியதால் விவசாயி கள் பெறும் வேதனை அடைந்து வருகின்றனர்.

    பாப்பி ரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் தோட்டக்கலை துறை அலுவலர் பொன்முத்து, உதவி தோட்டக்கலை துறை அலுவலர் சுரேஷ் மற்றும் ஏசுதாஸ், பூபதி, வசந்தி ஆகிய அதிகாரிகள் விவசா யிகளுக்கு தடுப்பு நடவடிக் கைகள் குறித்து ஆலோச னைகள் வழங்கினார்.

    இதேபோல்மொரப்பூர் வட்டாரத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் கலைவாணி மரவள்ளி கிழங்கு தோட்டங்களில் கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு மரவள்ளி செடிகளில் செம்பேன் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும் கட்டுப்படுத்தவும் ஆலோச னைகள், தெளிக்க வேண்டிய மருந்துகள் குறித்து எடுத்து ரைத்தார்.

    இதில் வேளாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்ற னர். விவசாயிகள் மரவள்ளி கிழங்கில் பாதிப்பு தடுக்கும் வகையில் மற்றும் நோய் பரவாமல் இருக்கும் வகை யிலான மருந்துகளை அந்த அந்த பகுதியில் உள்ள வேளாண்மை துறை அதிகாரி களின் அறிவுரை யின்படி பயன்படுத்தி பயனடைய வேண்டு எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்தாண்டில் பருத்தி ஏலம் தொடங்கப்பட்டுள்ளது.
    • குறைந்தபட்ச விலையாக குவிண்டாலுக்கு 5800 ரூபாயும் மற்றும் சராசரி விலையாக குவிண்டாலுக்கு ரூ.6109 ரூபாய் என ஏலம் நடைபெற்றது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்தாண்டில் பருத்தி ஏலம் தொடங்கப்பட்டுள்ளது.

    விற்பனைக் கூடத்தில் நேற்று மறைமுக பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் பென்னாகரம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 15 விவசாயிகள் கலந்துகொண்டு 114 பருத்தி மூட்டைளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர்.

    ஒழுங்குமுறை விற்பனைக் கூட மேற்பார்வையாளர்கள் வீரன், சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் பாப்பாரப்பட்டி மற்றும் பென்னாகரம் பகுதி வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    இதில் அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு 6209 ரூபாயும், குறைந்தபட்ச விலையாக குவிண்டாலுக்கு 5800 ரூபாயும் மற்றும் சராசரி விலையாக குவிண்டாலுக்கு ரூ.6109 ரூபாய் என ஏலம் நடைபெற்றது.

    மொத்தமாக 4075 கிலோ எடையுள்ள பருத்தி 2,49,012 ரூபாய்க்கு (இரண்டு லட்சத்து 49 ஆயிரத்து 12 ரூபாய்க்கு)ஏலம் நடைபெற்றது.

    • புதிதாக நியமிக்கப் பட்டுள்ள தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் தடங்கம் சுப்பிரமணியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
    • தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் மாவட்ட அமைப்பாளர் மற்றும் மாவட்டத் துணை அமைப்பாளர்களும் வாழ்த்து பெற்றனர்.

    தருமபுரி,

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங் களுக்கும் தி.மு.க. இளைஞர் அணிக்கு மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை நியமனம் செய்து இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    அதன்படி தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக எம்.ஜி.எஸ் வெங்கடேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோன்று தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர்களாக கே.ஆர்.சி. செல்வராஜ், பெ.ராஜகோபால், என்.எஸ். கலைச்செல்வன், கார்த்திக், முத்தமிழன், அசோக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதிதாக நியமிக்கப் பட்டுள்ள தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் தருமபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

    தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் மாவட்ட அமைப்பாளர் மற்றும் மாவட்டத் துணை அமைப்பாளர்களும் வாழ்த்து பெற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, நகர செயலாளர் நாட்டான் மாது, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ். சண்முகம், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பொன் மகேஸ்வரன், நகர துணை செயலாளர் முல்லைவேந்தன், கோமளவள்ளி ரவி மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அனைத்து மாண வர்களும் கலந்துக்கொண்டு தங்கள் உரிமையை உணர்ந்து வாக்களித்தனர்.
    • பள்ளி மாணவ, மாணவியரின் தலைவர், துணை தலைவர், அணித்தலைவர்கள், அணி துணைத் தலைவர்களுக்கான தேர்தல் நடைப்பெற்றது.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் தேர்தலின் அவசியம், விழிப்புணர்வு மற்றும் தலைமைப் பண்பை வளர்க்கும் விதமாக ஆண்டு தோறும் மாணவ தேர்தல் நடைப்பெறும்.

    இந்த ஆண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. நேற்று பள்ளி மாணவ, மாணவியரின் தலைவர், துணை தலைவர், அணித்தலைவர்கள், அணி துணைத் தலைவர்களுக்கான தேர்தல் நடைப்பெற்றது.

    இதில் அனைத்து மாண வர்களும் கலந்துக்கொண்டு தங்கள் உரிமையை உணர்ந்து வாக்களித்தனர். இத்தேர்தலின் சிறப்பு விருந்தினராக பள்ளியின் தாளாளர் வேடியப்பன் மற்றும் சாந்தி வேடியப்பன், பள்ளியின் நிர்வாக இயக்குநர்கள் தமிழ்மணி மற்றும் பவானி தமிழ்மணி பங்கேற்றனர்.

    முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான்இருத யராஜ், வெற்றி வேல், ஒருங்கிணைப்பாளர்கள் குருமூர்த்தி, புவனேஷ்வரி, மணிமேகலை, பிரவீணா ஆகியோர் மாணவர்களுக்கு வாக்களித்து தேர்தல் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    இவ்விழாவினை சமூக அறிவியல் துறை ஆசிரியர்கள் சதீஷ், முத்துசெல்வி, பிரபாவதி, ஷேனு, விக்னேஷ் மற்றும் ஆகாஷ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

    • பென்னாகரம் பகுதிகளில் உள்ள எலக்ட்ரிக்கல் கடைகள் தோறும் சோதனை மேற்கொண்டனர்.
    • நவாஸ் என்பவரை சிறப்பு படையினர் விசாரணைக்காக மாவட்ட வன அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று கைது செய்தனர்.

    பென்னாகரம்,

    பென்னாகரம் பகுதியானது அடர்ந்த மலைகள் சூழ்ந்த பகுதி. இந்த பகுதியில் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டு, மசக்கல் காப்புக்காடு, பேவனூர் காப்புக்காடு, ஒட்டப்பட்டி காப்புக்காடு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட காப்புக்காடுகளை கொண்ட அடர் வனப்பகுதி.

    சமீப காலங்களாக பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் முயல், மான், உடும்பு போன்ற வனவிலங்குகள் வேட்டை யாடப்பட்டு வருகின்றனர்.

    பென்னாகரம் பகுதியில் இருந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கான பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டு வருவதாக மாவட்ட வனத்துறை யின ருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட வன அலுவலர் கே.வி.அப்பால நாயுடு உத்தரவின் பேரில் உதவி வனப்பாதுகாப்பு அலுவல வின்சென்ட், வேட்டை தடுப்பு சரக அலுவலர் ஆலய மணி, பென்னாகரம் வனவர் முனுசாமி உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு குழுவினர் பென்னாகரம் பகுதிகளில் உள்ள எலக்ட்ரிக்கல் கடைகள் தோறும் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது முள்ளுவாடி பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் முயலை வேட்டை யாடுவதற்கு பேட்டரியின் மூலம் அதிர்வலையை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள், ஒயர், மஞ்சள் நிற மின் விளக்கு ஆகியவை விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

    இதனையடுத்து கடை உரிமையாளரான முள்ளுவாடி பகுதியைச் சேர்ந்த நவாஸ் (50) என்பவரை சிறப்பு படையினர் விசாரணைக்காக மாவட்ட வன அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் வனவிலங்குகளை வேட்டையாட தேவையான மின் உபகரணங்கள் தயார் செய்து வழங்குவது உறுதியானது அவருக்கு அபராதம் விதித்து கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர். இதனால் பென்னாகரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • அரூர் பகுதியில் உள்ள மரவள்ளிகிழங்கு பயிரிட்டுள்ள விவசாய நிலங்கள் கள ஆய்வு செய்தனர்.
    • ஏத்தாப்பூர்-2 மரவள்ளி கிழங்கு ரகங்களை விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும். இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால் பாதிப்பிருக்காது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராஜேஸ்கண்ணன், பரிந்துரையின் பேரில் பாப்பாரப்பட்டியில் உள்ள தோட்டக்கலை மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் நேற்று அரூர் பகுதியில் உள்ள மரவள்ளிகிழங்கு பயிரிட்டுள்ள விவசாய நிலங்கள் கள ஆய்வு செய்தனர்.

    பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வெண்ணிலா தலைமையில் விஞ்ஞானிகள் ராஜபாஸ்கர்( பூச்சிகள் துறை), சிவக்குமார் (மண்ணியல் துறை), செல்வமணி (நோயியல் துறை) அருண்குமார் (வானியல் துறை) உள்ளிட்ட குழுவினர் அச்சல்வாடி பகுதியில் நோயால் பாதிக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு செடிகளை பார்வையிட்டு அங்குள்ள விவசாயிகளிடம் நோய் தடுப்பு முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    அப்பொழுது அவர்கள் கூறுகையில், தற்போது தாக்கியுள்ள பூச்சிகளை மெஜிஸ்டர் 2 மிலியை 1 லிட்டர் தண்ணீர் மற்றும் காதி சோப் 1 கிராம் கலந்து இலைகளில் ஊடுருவி செல்லும் வகையில் அடிக்க வேண்டும்.

    இலைகளின் கீழ் படும் வகையில் தெளிக்க வேண்டும்.விவசாயிகள் நோயின் தாக்குதல் அறிகுறி தெரிந்த உடனே தோட்டத்துறைக்குக்கோ அல்லது வேளாண்மை அறிவியல் மைத்திற்கோ தொடர்பு கொண்டால் உரிய ஆலோசனை வழங்கப்படும்.

    சிலந்தி செம்பேன் வெயில் காலத்தில் தாக்குதல் அதிகமாக இருக்கும். மழைக்காலத்தில் தாக்குதல் குறைவாக இருக்கும், விவசாயிகள் வெளியில் இருந்து மரவள்ளிக் குச்சி ரகங்களை வாங்குவதால் புதுப்புது பூச்சிகள் தாக்குதல் அதிகமாக உள்ளது.

    இதனை தவிர்க்க மரவள்ளி ஆராய்ச்சி மையம் செயல்படும் ஏத்தாப்பூர் பல்கலை கழகம் சார்பில் தரப்படும் ஏத்தாப்பூர்-2 மரவள்ளி கிழங்கு ரகங்களை விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும். இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால் பாதிப்பிருக்காது.

    தற்போது சிலந்தி செம்பேன் தாக்குதல் ஏற்பட்டுள்ள பயிர்களில் உரிய மருந்துகள் அளித்தால் விளைச்சலில் பாதிப்பு இருக்காது என்று தெரிவித்தனர்.

    இந்த கள ஆய்வின் போது உதவித் தோட்டக்கலை அலுவலர் ராஜேஸ்கண்ணன், வேளாண்மை துறை உதவி இயக்குனர் சரோஜா,தோட்டக்கலை அலுவலர் சங்கீதா மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள், முன்னோடி விவசாயி திருமலை, மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

    • கடந்த 5.4.2023 ஆம் தினத்தன்று பொதுமக்கள் முன்னிலையில் இந்து சமய அறநிலை யத்துறையினரால் பொது ஏலம் விடப்பட்டது.
    • ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலம் ஏலம் எடுத்தவரிடம் இந்து சமய அறநிலையத் துறையினர் சுமார் 12 ஏக்கர் விவசாய நிலத்தை ஒப்படைத்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே வட்டுவனஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பி.கோடுபட்டி பகுதியில் சென்றாயசுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் 12 ஏக்கர் விவசாய நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 70 வருடமாக ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தை அறநிலைத்துறை யினர் ஏலம் விட நோட்டீஸ் அனுப்பியதை வாங்க மறுத்த ஆக்கிரமிப்பு காரர்களிடம் இருந்து சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நிலத்தின் மேல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தனர்.

    பின்னர் இந்து சமய அறநிலைத்துறைக்கு நிலம் சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு செய்து வந்தவர்களுக்கு மூன்று முறை காலக்கெடு கொடுத்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து கடந்த 5.4.2023 ஆம் தினத்தன்று பொதுமக்கள் முன்னிலையில் இந்து சமய அறநிலை யத்துறையினரால் பொது ஏலம் விடப்பட்டது.

    இதில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் 5 வருடத்திற்கு 15 லட்சத்து 20 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஜூலை 1-ம் தேதி முதல் ஏலம் எடுத்தவர்களுக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.

    இந்த நிலையில் ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்தவர்கள் நிலத்தை விட்டு வெளியேறாமல் விவசாய நிலத்தில் கடலைக்காய், மஞ்சள் கால்நடைகளுக்கு தீவனபயிர் வாழைமரம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டுள்ளனர்.

    மேலும் நேற்று இந்து சமய அறநிலையத் துறையினர் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் மருத்து வத்துறையினர் வருவாய் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஜேசிபி எந்திரம் உழவு டிராக்டர் கொண்டு நிலத்தில் உள்ள பயிர்களை அழித்தனர்.

    ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலம் ஏலம் எடுத்தவரிடம் இந்து சமய அறநிலையத் துறையினர் சுமார் 12 ஏக்கர் விவசாய நிலத்தை ஒப்படைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பசியை போக்குவதற்காக தொண்டு நிறுவனங்கள் தரமான முறையில் உணவு சமைத்து ஒரு நாளைக்கு 200 முதல் 300 பேருக்கு வழங்கி வருகின்றனர்.
    • இரண்டு நாட்களுக்கு முன்பு தருமபுரியில் உள்ள தன்னார்வலர்கள் வழங்கிய உணவு 70 பேருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி மயக்கம் அடைந்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேலம்- தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    மேலும் மருத்துவமனையில் 1200 படுக்கை வசதிகளுடன் உள்ளிருப்பு நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வசதிகள் உள்ளது. இந்த நிலையில் உள்ளிருப்பு நோயாளிகளின் உடன் வரும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் தங்கி வருகின்றனர்.

    வசதியற்ற நோயாளிகளும் இருப்பதால் இவர்களுடைய பசியை போக்குவதற்காக தொண்டு நிறுவனங்கள் தரமான முறையில் உணவு சமைத்து ஒரு நாளைக்கு 200 முதல் 300 பேருக்கு வழங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தருமபுரியில் உள்ள தன்னார்வலர்கள் வழங்கிய உணவு 70 பேருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி மயக்கம் அடைந்துள்ளனர். உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ நிர்வாகம் 70 பேருக்கும் சிகிச்சை அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    இதில் நேற்று முன்தினம் எழுவது பேரில் 30 பேர் சிகிச்சை பெற்று சென்றுள்ளதாகவும் 40 பேர் சிகிச்சை பெற்று வருதாகவும் தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து மருத்துவமனை நிர்வாகம் தொண்டு நிறுவனங்களுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் உணவுகளை வழங்கக் கூடாது என தடை செய்துள்ளது.

    சில தன்னார்வ அமைப்புகள் தருமபுரியில் நடைபெற்று வரும் கல்யாணம், காதுகுத்து, கருமாதி, சடங்கு, கோவில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடைபெறும் விருந்துக்களில் பரிமாறப்பட்டு மீதியாகும் சைவ, அசைவ உணவுகளை தன்னார்வ அமைப்புகள் அதனை பெற்று வந்து மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும் நோயாளி களின் உறவினர்களுக்கும் வழங்கி வந்துள்ளது.

    இதனை வாங்கி உண்ணும் நோயாளிகளும் நோயாளி களின் உறவினர்களும் இலைகளையும் மீதியாகும் உணவுகளையும் வளாக்கத்திற்குள்ளே வீசி எரிவதால் மருத்து வமனைக்குள் குப்பை நிறைந்து சுகாதாரமின்றி அசுத்தத்தை ஏற்படுத்தி வந்துள்ளனர்.

    • அரூர் பேருந்து நிலைய வளாகத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் மேம்படுத்தப்பட வுள்ளது.
    • மாற்று பேருந்து நிலையம் இல்லாததால் ஆங்காங்கே சாலையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் பேருந்து நிலையத்தின் மேம்பாட்டு பணிகள் குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கடந்த மாதம் ஆய்வு மேற்கொண்டார்.

    அரூர் பேருந்து நிலைய வளாகத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் மேம்படுத்தப்படவுள்ளது.

    இந்த பேருந்து நிலைய வளாகத்தில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாடகைக்கு விடப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டுள்ளன.

    தற்போது நவீன வசதியுடன் கூடிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

    இதையடுத்து, பேருந்து நிலையத்தின் மேம்பாட்டு பணிகள் குறித்து கடந்த மாதம் மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

    பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெறும்போது அரூரில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.

    அதன் பிறகு அரூர் பேரூராட்சி நிர்வாகம் மாற்று பேருந்து அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் நேற்று திடீரென்று அரூர் பேருந்து நிலையம் இடிக்கும் பணி துவங்கியதால் சென்னை, வேலூர், சேலம், கோயம்புத்தூர், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் மாற்று பேருந்து நிலையம் இல்லாததால் ஆங்காங்கே சாலையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அதேபோன்று பேருந்தில் வரும் பயணிகள் எங்கே பேருந்து நிலையம் எங்கே செல்வது என்று புரியாமல் தவித்து வருகின்றனர்.

    பயணிகள் அந்தந்த பகுதிகளுக்கு செல்ல ஏதுவாக மாற்று பேருந்து நிலையம் அமைத்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2 பேர் மாட்டு கொட்டகையில் பெண்ணை கற்பழிக்க முயன்றனர்.
    • அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வருவதற்குள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள போசிநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 32 வயது பெண். இவர் கடந்த 2-ம் தேதி இரவு 7 மணிக்கு கொட்டகையில் மாடு கட்டிக் கொண்டிருந்தார்.

    அப்போது, அங்கு வந்த அதேப் பகுதியைச் சேர்ந்த வெள்ளிங்கிரி (31), அவரது நண்பர் ராசிபுரம் தமிழரசன் ஆகிய இருவரும் அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றனர். இதனால் அவர் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வருவதற்குள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

    இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் கடத்துார் போலீசார் வெள்ளிங்கிரியை கைது செய்தனர்.

    தலைமறைவாக உள்ள தமிழரசனை தீவரமாக தேடி வருகின்றனர்.

    • 2 கடைகளில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
    • தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தாபாக்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மற்றும் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பானு சுஜாதா மேற்பார்வையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் அலுவலர்கள் அனுமந்தபுரம், எலுமிச்சன அள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல் மற்றும் தாபாக்களில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது 2 கடைகளில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    மளிகை கடைகளில் நடத்திய சோதனையில் காலாவதியான கடலை மாவு மற்றும் பல்வேறு உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தின்பண்டங்களில் தயாரிப்பு தேதி, காலாவதி ஆகும் தேதி பொறிக்கப்படாதது கண்டறியப்பட்டு அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 4 கடைகளுக்கு தலா ரூ.1,000 வீதம் 4 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

    ×