என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒடசல்பட்டி கூட்ரோடு கணவாய் பகுதியில் சாலையை நேராக மாற்றி அமைக்க வேண்டும்
- இந்த சாலை அகலப்படுத்துவதால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை.
- மனித உயிர் இழப்புகளை தடுக்க ஒடசல்பட்டி கூட்ரோடு கணவாய் பகுதியில் அபாயகரமான வளைவு சாலையை நேரான சாலையாக மாற்றியமைக்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி கிழக்கு மாவட்ட பா.ம.க செயலாளர் அரசாங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தருமபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
தருமபுரியில் இருந்து ஒடசல்பட்டி கூட்ரோடு கணவாய் பகுதி வழியாக மொரப்பூர், அரூர், திருவண்ணாமலை, கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான 4 சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகிறது.
குறிப்பாக நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலை வழியாக தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் ஒடசல்பட்டி கூட்ரோடு கணவாய் பகுதியில் உள்ள வளைவான சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்துகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். குரங்குகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகளும் வாகனங்களில் சிக்கி இறப்பது தொடர்கதையாகி விட்டது.
அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வரும் இந்த வளைவான சாலையை நேரான சாலையாக மாற்றி அமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தருமபுரி-அரூர் பிரதான சாலை 4 வழிச்சாலையாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒடசல்பட்டி கூட்ரோடு கணவாய் பகுதியில் தின்னப்பட்டி பிரிவு சாலையில் அமைந்துள்ள வளைவான சாலையை நேர்படுத்தாமல் மீண்டும் பழைய படியே ஆபத்தான நிலையில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சாலை அகலப்படுத்துவதால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. மேலும் விபத்துக்கள் தான் அதிகரிக்கும். எனவே மனித உயிர் இழப்புகளை தடுக்க ஒடசல்பட்டி கூட்ரோடு கணவாய் பகுதியில் அபாயகரமான வளைவு சாலையை நேரான சாலையாக மாற்றியமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
அப்போது கட்சியின் மாவட்டத் தலைவர் அல்லிமுத்து, பசுமைத்தாயக மாநில துணைச் செயலாளர் மாது, மாநில செயற்குழு உறுப்பினர் பி.ராமலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் சரவணன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சேட்டு, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மோகன், சதீஷ், பெரியசாமி, ஒன்றிய செயலாளர் முனுசாமி, ஒன்றிய தலைவர் பெரியசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






