என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • மீன் பண்ணை உரிமையாளர் முறைகேடாக பைப் லைன்கள் அமைத்து மக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீரை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
    • சம்பந்தப்பட்ட நபருக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டார்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள மானியதஹள்ளி ஊராட்சி மலையப்ப நகர் கிராமத்தில் பொதுமக்கள் தங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என நேற்று முன்தினம் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் ஆப்ரேட்டராக பணிபுரியும் பெண்ணின் மகன் இரண்டு ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தி வரும் மீன் பண்ணைக்கு (குட்டைகள்) நேரடியாக முறைகேடான முறையில் பைப் லைன்கள் அமைத்து தொடர்ந்து ஊராட்சி மக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீரை மீன் பண்ணைக்கு பயன்படுத்தியது காரணம் என பொதுமக்கள் புகார் கூறினர்.

    அதனை தொடர்ந்து நேற்று நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில் மீன் பண்ணை உரிமையாளர் முறைகேடாக பைப் லைன்கள் அமைத்து மக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீரை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதனால் சம்பந்தப்பட்ட நபருக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டார். மேலும் இந்தத் தண்ணீர் திருட்டுக்கு உடந்தையாக இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆபரேட்டரை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், மேலும் கடந்த ஆறு மாத காலத்தில் எந்த அளவுக்கு தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அதற்கான அபராதம் விதிக்க பரிந்துரை செய்துள்ளார்.

    இந்த ஆய்வின் போது மானியதஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி, துணை தலைவர் வீரம்மாள் ரங்கநாதன், ஊராட்சி செயலாளர் ஜெயலட்சுமி, தொப்பூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியிடம் இருந்த 2 குழந்தைகளை அழைத்து கொண்டு வந்து விட்டார்.
    • தமிழரசி கடந்த 4-ந் தேதி வீட்டில் இருந்த வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஏ.கோடுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது55). இவரது மகள் தமிழரசி (25). இவருக்கும் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

    இதில் இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் வீட்டினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோபித்துக் கொண்டு எடப்பாடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்து விட்டார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியிடம் இருந்த 2 குழந்தைகளை அழைத்து கொண்டு வந்து விட்டார்.

    இதனால் மனவேதனையில் இருந்த தமிழரசி கடந்த 4-ந் தேதி வீட்டில் இருந்த வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பழனி தனது மகளை உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து பழனி பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடிவருகின்றனர்.

    • மீண்டும் அவர்கள் வீடு திரும்பி வந்துபார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
    • பீரோவில் இருந்த நெக்லஸ், செயின் போன்ற 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது. தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சவுளூரைச் சேர்ந்தவர் அருண் (வயது31). இவரது மனைவி புவனேஸ்வரி. கணவன்-மனைவி இருவரும் பெங்களூ–ருவில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    இதற்காக 3 மாதம் ஒருமுறை தான் சொந்த ஊருக்கு வந்து செல்வார்கள். அதன்படி கடந்த மே மாதம் சொந்த ஊருக்கு வந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த பகுதியில் கோவில் திருவிழா நடந்து வருகிறது.

    சம்பவத்தன்று திருவிழா பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு கணவன்-மனைவி இருவரும் கோவிலுக்கு சென்றனர். மீண்டும் அவர்கள் வீடு திரும்பி வந்துபார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

    உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் பீரோவில் இருந்த நெக்லஸ், செயின் போன்ற 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது. தெரியவந்தது.

    இதுகுறித்து அருண் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். போலீசார் உடனே சம்பவம் இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அங்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.
    • பின்னர் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமினை பார்வையிட்டு சென்றார்.

    தருமபுரி,

    நடப்போம் நலம் பெறுவோம் எனும் நோக்கில், பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில், 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.

    மாவட்ட கலெக்டர் இல்லம் அருகேவுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பாா்வை பொறியாளர் அலுவலகம் முன்பிருந்து நடைப்பயிற்சியினை தொடங்கிய அமைச்சர் செல்பி பாலம் புதிதாக அமைக்கப்பட்ட சிப்காட் சாலை, தடங்கம் மேம்பாலம் வழியாக நடைப்பயிற்சி யினை மேற்கொண்டு மீண்டும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு தனது நடைபயிற்சியினை நிறைவு செய்தார்.

    பின்னர் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமினை பார்வையிட்டு சென்றார். இந்த நடைபயிற்சியின் போது மாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தடங்கம் சுப்பிரமணி, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் தர்மசெல்வன், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் ஏ.எஸ். சண்முகம், உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்து காணப்படுகிறது.
    • சுற்றுலா பயணிகள் பிரசித்தி பெற்ற மீன் சமையல் ருசித்து சாப்பிட்டு விடுமுறை நாளை கழித்து செல்கின்றனர்.

    ஒகேனக்கல்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் சுற்றுலா தலம் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது.

    இங்கு வெளிமாநிலம், வெளி மாவட்டம் மற்றும் உள் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 400 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்து காணப்படுகிறது.

    அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை ரசித்தும், தொங்கு பாலத்தில் நின்று அருவிகளில் தண்ணீர் விழுவதையும் பார்த்தனர்.

    மேலும் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சீனி அருவி ஆகிய அருவிகளில் குளித்தும் மகிழ்கின்றனர். பின்னர் இங்கு பிரசித்தி பெற்ற மீன் சமையல் ருசித்து சாப்பிட்டு விடுமுறை நாளை கழித்து செல்கின்றனர்.

    • இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி உருவப்படத்திற்கு தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • 50-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தருமபுரி,

    தருமபுரி மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்ட இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி உருவப்படத்திற்கு தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் நந்தன், தருமபுரி சட்டமன்ற தொகுதி செயலாளர் சக்தி (எ) சமத்துவன், செய்தி தொடர்பாளர் பாண்டியன் மாவட்ட பொருளாளர் மன்னன், கப்பல் செந்தில் அம்பேத்வளவன், விசிக முப்பதாவது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி உமா சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    50-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட ஒன்றிய அணி பொறுப்பாளர்கள் மற்றும் முகாம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலை செங்கல்மேடு அருகே அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • அந்த வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் 17 மூட்டைகளில் சுமார் 850 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.

    தருமபுரி, ஜூலை.8-

    தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் தலைமை காவலர்கள் சக்திவேல் மற்றும் கோவிந்தன் ஆகியோர் திருப்பத்தூர் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலை செங்கல்மேடு அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் 17 மூட்டைகளில் சுமார் 850 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தில் இருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்த அன்பு (வயது38) என தெரியவந்தது.

    பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். வாகனம் மற்றும் ரேசன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 1,017 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 772 கிலோவாக குறைந்தது.
    • மொத்தம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்து 87-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடு களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,017 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 772 கிலோவாக குறைந்தது.

    நேற்று முன்தினம் 1 கிலோ அதிகபட்சமாக ரூ.509-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.29 குறைந்தது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.480-க்கும், குறைந்த பட்சமாக ரூ.224-க்கும், சராசரியாக ரூ.414.35-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்து 87-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    • 20-க்கும் மேற்பட்ட ஏலதாரர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு கடைகளுக்கும் தனித்தனியே ஏலம் கோரினர்.
    • கோவில் வளாகத்தில் தேங்காய் தீபம், பூசணி தீப தட்டுகள் சேகரித்து சுத்தம் செய்தல் உரிமம் ரூ.2 லட்சத்து 500-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற காலபைரவர் கோவில் வளாக பகுதியில் 10 கடைகளில் பூஜை பொருட்கள் வைத்து விற்பனை செய்ய உரிமம் மற்றும் தேங்காய் தீபம், பூசணி தீபம், தட்டுகள் சேகரித்து சுத்தம் செய்தல் உள்ளிட்ட உரிமத்திற்கான பொது ஏலம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    உதவி ஆணையாளர்கள் ராஜா, உதயகுமார் மற்றும் போலீசார் முன்னிலையில் ஏலம் நடந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட ஏலதாரர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு கடைகளுக்கும் தனித்தனியே ஏலம் கோரினர்.

    இதையடுத்து 10 கடைகளில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் உரிம ஏலம் ஓராண்டுக்கு ரூ.63 லட்சத்து 49 ஆயிரத்திற்கு விடப்பட்டது.

    மேலும் கோவில் வளாகத்தில் தேங்காய் தீபம், பூசணி தீப தட்டுகள் சேகரித்து சுத்தம் செய்தல் உரிமம் ரூ.2 லட்சத்து 500-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • கல்லூரி மாணவர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தீயணைக்க முற்பட வேண்டும் என்பதைப் பற்றி கல்லூரி மாணவர்களிடையே எடுத்துரைத்தனர்.
    • வீரர்கள் மாணவர்களிடையே தீயை அணைப்பது பற்றிய செயல்முறை விளக்கத்தை செய்து காட்டினர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அரூர் வட்டார தீயணைப்பு துறையினர் கல்லூரி மாணவர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தீயணைக்க முற்பட வேண்டும் என்பதைப் பற்றி கல்லூரி மாணவர்களிடையே எடுத்துரைத்தனர்.

    இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் குமார் தலைமை தாங்கினார். அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் காமராஜ், கல்லூரி மாணவர்களுக்கு வீட்டில் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது பற்றியும் எதிர்வரும் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுப்பது பற்றியும் தமிழ்நாடு அரசு அவசரகால எண்களை பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

    தீயணைப்பு அதிகாரிகள் எவ்வாறு துரிதமாக செயல்படுகின்றனர் என்பதை பற்றியும் கூறினார். தீயணைப்பு வீரர்கள் மாணவர்களிடையே தீயை அணைப்பது பற்றிய செயல்முறை விளக்கத்தை செய்து காட்டினர்.

    இந்நிகழ்வில் கல்லூரியின் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெருந்திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கோபிநாத் ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.

    • தூய இருதய ஆண்டவர் பேராலய பங்குத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தினமும் தூய இருதய ஆண்டவர் தேர் பவனியும், சிறப்பு திருப்பலியும் நடக்கிறது.

    தருமபுரி,

    தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலய பங்குத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி பேராலத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தப் பங்கு திருவிழா வருகிற 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி தினமும் தூய இருதய ஆண்டவர் தேர் பவனியும், சிறப்பு திருப்பலியும் நடக்கிறது.

    வருகிற 16-ம் தேதி திருவிழா சிறப்பு திருப்பலியும், சிறப்பு தேர் பவணியும், நற்கருணை ஆசீர் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வருகிற 17-ம் தேதி நன்றி திருப்பலியும், கொடி இறக்கும் விழாவும் நடக்கிறது.

    இதில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் தலைமையில் பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளின் நிர்வாகிகளும், ஆயர் இல்ல செயலர், தருமபுரி சமூக சேவை இயக்குனர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தைகள் மற்றும் பேராலய நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • கலந்தாய்வுக்கு நடைபெறுவதாக ஒரு மணி நேரத்திற்கு முன் 11 மணிக்கு வாட்ஸ் அப்பில் முதல்வர் தெரிவிக்கிறார்.
    • கிராமப்புற மாணவர்களுக்கு எவ்வாறு கலந்தாய்வு சென்றடையும் என்று தெரியவில்லை.

    தருமபுரி,

    தருமபுரியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 22 துறைக்கான இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

    இதில் ஓ.சி, பி.சி, எம்.பி.சி, எஸ்.சி, எஸ். டி, வகுப்பினருக்கான கலந்தாய்வு தனித்தனியாக நடைபெற்றது.

    மொத்த மாணவர்களுக்கான கலந்தாய்வில் 1972 காலியிடங்களில் 1405 மாணவ, மாணவிகள் தேர்வு செய்த நிலையில் மீதமுள்ள 567 காலியிடங்களுக்கான பொது கலந்தாய்வு (வரண்டா அட்மிஷன்) நேற்று நடைபெற்றது.

    இந்த கலந்தாய்வில் பங்கு பெற ஏராளமான மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வந்திருந்தனர். அப்போது இந்த கலந்தாய்வில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் (பொருப்பு), கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து பொது கலந்தாய்வில் இட ஒதுக்கீட்டினை முறையாக பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி வி.சி.க, பா.ம.க , கட்சியினர் கல்லூரி முதல்வரை முற்றுகையிட்டு கலந்தாய்வை நிறுத்த வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை அடுத்து தருமபுரி மண்டல கல்லூரி இயக்குனர் ராமலட்சுமி, நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது வி.சி.கவை சேர்ந்த பொறுப்பாளர்கள் கூறும்போது தொடர்ந்து இரண்டு வருடமாக இந்த கல்லூரியில் பொது கலந்தாய்வில் முதல்வர் ராஜேந்திரன் மற்றும் கமிட்டியினர் அரசு உத்தரவை மீறி தன்னிசையாக செயல்படுவதாகவும், முறையாக அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகளை சென்றடையும் வகையில் நாளிதழ் ஊடகம் வானொலி ஆகியவைகளில் பொது கலந்தாய்வு நடப்பதை செய்தியாக தெரிவிக்காமல் தன்னிச்சையாக வேண்டியவர்களுக்கு மட்டும் வாட்ஸ் அப்பில் அனுப்பி தேர்ந்தெடுக்கின்றனர்.

    எனவே அரசு வழங்கி உள்ள அறிக்கையின்படி வகுப்பு வாரியாக பிரித்து மதிப்பெண் அடிப்படையில் இடத்தை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதேபோல் பாமக நிர்வாகிகள் கூறும்போது கலந்தாய்வுக்கு நடைபெறுவதாக ஒரு மணி நேரத்திற்கு முன் 11 மணிக்கு வாட்ஸ் அப்பில் முதல்வர் தெரிவிக்கிறார். கிராமப்புற மாணவர்களுக்கு எவ்வாறு கலந்தாய்வு சென்றடையும் என்று தெரியவில்லை.

    இது அரசின் விதிமுறைக்கு எதிராக செயல்படும் செயலாகும். மேலும் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு அமருவதற்கு இருக்கை இன்றியும் குடிப்பதற்கு தண்ணீர் இன்றியும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    இதுதான் இவர்கள் நடத்தும் கலந்தாய்வா என்று கேள்வி எழுப்பினர். இதனை அடுத்து கல்லூரி இயக்குனர் ராமலட்சுமி அரசு விதிமுறைப்படி பொது கலந்தாய்வு நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    மேலும் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு அமருவதற்கு இருக்கையும் குடிப்பதற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

    ×