என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல் கட்சியினர் முற்றுகை"

    • கலந்தாய்வுக்கு நடைபெறுவதாக ஒரு மணி நேரத்திற்கு முன் 11 மணிக்கு வாட்ஸ் அப்பில் முதல்வர் தெரிவிக்கிறார்.
    • கிராமப்புற மாணவர்களுக்கு எவ்வாறு கலந்தாய்வு சென்றடையும் என்று தெரியவில்லை.

    தருமபுரி,

    தருமபுரியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 22 துறைக்கான இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

    இதில் ஓ.சி, பி.சி, எம்.பி.சி, எஸ்.சி, எஸ். டி, வகுப்பினருக்கான கலந்தாய்வு தனித்தனியாக நடைபெற்றது.

    மொத்த மாணவர்களுக்கான கலந்தாய்வில் 1972 காலியிடங்களில் 1405 மாணவ, மாணவிகள் தேர்வு செய்த நிலையில் மீதமுள்ள 567 காலியிடங்களுக்கான பொது கலந்தாய்வு (வரண்டா அட்மிஷன்) நேற்று நடைபெற்றது.

    இந்த கலந்தாய்வில் பங்கு பெற ஏராளமான மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வந்திருந்தனர். அப்போது இந்த கலந்தாய்வில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் (பொருப்பு), கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து பொது கலந்தாய்வில் இட ஒதுக்கீட்டினை முறையாக பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி வி.சி.க, பா.ம.க , கட்சியினர் கல்லூரி முதல்வரை முற்றுகையிட்டு கலந்தாய்வை நிறுத்த வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை அடுத்து தருமபுரி மண்டல கல்லூரி இயக்குனர் ராமலட்சுமி, நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது வி.சி.கவை சேர்ந்த பொறுப்பாளர்கள் கூறும்போது தொடர்ந்து இரண்டு வருடமாக இந்த கல்லூரியில் பொது கலந்தாய்வில் முதல்வர் ராஜேந்திரன் மற்றும் கமிட்டியினர் அரசு உத்தரவை மீறி தன்னிசையாக செயல்படுவதாகவும், முறையாக அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகளை சென்றடையும் வகையில் நாளிதழ் ஊடகம் வானொலி ஆகியவைகளில் பொது கலந்தாய்வு நடப்பதை செய்தியாக தெரிவிக்காமல் தன்னிச்சையாக வேண்டியவர்களுக்கு மட்டும் வாட்ஸ் அப்பில் அனுப்பி தேர்ந்தெடுக்கின்றனர்.

    எனவே அரசு வழங்கி உள்ள அறிக்கையின்படி வகுப்பு வாரியாக பிரித்து மதிப்பெண் அடிப்படையில் இடத்தை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதேபோல் பாமக நிர்வாகிகள் கூறும்போது கலந்தாய்வுக்கு நடைபெறுவதாக ஒரு மணி நேரத்திற்கு முன் 11 மணிக்கு வாட்ஸ் அப்பில் முதல்வர் தெரிவிக்கிறார். கிராமப்புற மாணவர்களுக்கு எவ்வாறு கலந்தாய்வு சென்றடையும் என்று தெரியவில்லை.

    இது அரசின் விதிமுறைக்கு எதிராக செயல்படும் செயலாகும். மேலும் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு அமருவதற்கு இருக்கை இன்றியும் குடிப்பதற்கு தண்ணீர் இன்றியும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    இதுதான் இவர்கள் நடத்தும் கலந்தாய்வா என்று கேள்வி எழுப்பினர். இதனை அடுத்து கல்லூரி இயக்குனர் ராமலட்சுமி அரசு விதிமுறைப்படி பொது கலந்தாய்வு நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    மேலும் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு அமருவதற்கு இருக்கையும் குடிப்பதற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

    ×