என் மலர்
கடலூர்
புதுவை முதல்–அமைச்சர் ரங்கசாமி கடந்த சட்டசபை தேர்தலுக்கு 2 மாதத்துக்கு முன்பாக என்.ஆர். காங்கிரஸ் கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்தார்.
இவர் அரசியலுக்கு வந்து முதன் முதலில் தேர்தலில் நின்றபோது தோல்வி அடைந்தார். அதற்கு அடுத்த தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைத்தது.
இந்த வெற்றிக்கு அவரது ஆன்மீக குருவான சேலம் அப்பா பைத்தியம் சாமியின் ஆசிதான் என்று அவர் கருதினார். அப்போது அப்பா பைத்தியசாமி உயிரோடு இருந்தார். அவர் புதுவைக்கு அடிக்கடி வருவது உண்டு. அவரை ரங்கசாமி சந்தித்து ஆசி பெறுவது வழக்கம்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக அப்பா பைத்தியசாமி ரங்கசாமிக்கு ஆசி வழங்கி நீ வெற்றி பெறுவாய் என்று கூறினார். இதன் மூலம் தான் வெற்றி கிடைத்ததாக ரங்கசாமி கருதினார்.
பின்னர் அப்பா பைத்தியசாமி இறந்து விட்டார். அவருடைய சமாதி கோவில் சேலம் ரெயில் நிலையம் அருகே உள்ளது. அவர் இறந்த பிறகும் சமாதிக்கு சென்று ஆசி பெற்றுவிட்டே எந்த காரியத்தையும் தொடங்குவதை ரங்கசாமி வழக்கமாக கொண்டுள்ளார்.
அப்பா பைத்தியசாமியின் ஆன்மீக குரு அழுக்கு சாமியார் சமாதி கோவில் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூரில் உள்ளது. இந்த கோவிலுக்கும் ரங்கசாமி அடிக்கடி செல்வார். எந்த ஒரு பெரிய முடிவு எடுப்பதாக இருந்தாலும் இந்த 2 கோவிலுக்கும் சென்று உத்தரவு பெற்றுவிட்டே செய்வது வழக்கம்.
இந்த தேர்தலில் ரங்கசாமி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. யாருடன் கூட்டணி, யார் வேட்பாளர்? என முடிவு எடுக்காமல் மவுனமாக இருந்து வருகிறார். இது சம்பந்தமாக அவரது கட்சி பிரமுகர் ஒருவர் கூறும்போது, இரு சாமியார்களிடம் இருந்து இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை. அது வந்ததற்கு பிறகு தான் அவர் அடுத்த கட்ட முடிவை எடுப்பார் என்று கூறினார்கள்.
சில நாட்களுக்கு முன்பு ரங்கசாமி பொள்ளாச்சி அழுக்கு சாமியார் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு வந்தார். அடுத்து சேலம் அப்பாபைத்தியசாமி கோவிலுக்கு செல்ல இருக்கிறார். இரு சாமியார்கள் உத்தரவு வந்ததும் அவர் கூட்டணி குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்ட அவர் தேய்பிறை காலத்தில் எந்த நல்ல விஷயங்களையும் செய்வதில்லை. நாளை அமாவாசை ஏற்பட்டு வளர்பிறை ஆரம்பிக்கிறது. எனவே நாளை அவர் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு ரங்கசாமி விரும்பினார். இதற்கு ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பே அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
ஆனாலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு ரங்கசாமி தொடர்ந்து ஆர்வமாக உள்ளார். இதற்காக ரகசிய தூது அனுப்பி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பண்ருட்டி:
பண்ருட்டியை அடுத்த சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). அண்ணாகிராமம் வட்டார த.மா.கா. துணைத்தலைவர். சட்டசபை தேர்தலில் அந்த கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு சண்முகம் பண்ருட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற போது, காரில் முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் சண்முகத்தை கடத்தி சென்றது. மேலும் அவரை மிரட்டி ரூ.1 லட்சத்தை பறித்து கொண்டு சண்முகத்தை விடுவித்து விட்டு தப்பி சென்றனர்.
இதுபற்றி பண்ருட்டி போலீசில் சண்முகம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பண்ருட்டி பகுதியை சேர்ந்த ராஜசேகர், மோகன், கனகசபை ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணாடம்:
கடந்த சட்டசபை தேர்தலில் திட்டக்குடி தனித் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தமிழழகன். இவர் தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
இவர் கடந்த மாதம் பெண்ணாடத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த போது அவருக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் வந்தது. இது குறித்து அவர் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் தமிழழகன் எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியது சென்னை விருகம்பாக்கம் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பார்த்தசாரதி என்பவரது செல்போனில் இருந்து பேசியது தெரியவந்தது.
இதையடுத்து பார்த்தசாரதி எம்.எல்.ஏ. மீது பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பார்த்தசாரதி எம்.எல்.ஏ. முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு மீது விசாரணை நடத்திய சென்னை ஐகோர்ட்டு பெண்ணாடம் போலீசில் தினமும் ஆஜராகி கையெழுத்து விட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது, அதன்படி பார்த்தசாரதி எம்.எல்.ஏ. பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி தினமும் கையெழுத்திட்டு வந்தார். இதற்கிடையே நிபந்தனை ஜாமீனை தளர்த்த வேண்டும் என்று பார்த்தசாரதி எம்.எல்.ஏ. மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மனு மீது விசாரணை நடத்திய சென்னை ஐகோர்ட்டு எந்த போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதோ அந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கோர்ட்டில் ஆஜராகி நிபந்தனை ஜாமீனை தளர்த்துமாறு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி பார்த்தசாரதி எம்.எல்.ஏ. இன்று திட்டக்குடி ஒருங்கிணைந்த கோர்ட்டில் ஆஜர் ஆனார்.
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஆறுமுகம். இவர் புதுவை நெல்லிதோப்பு அருள்படையாட்சி வீதியை சேர்ந்த என்ஜினீயர் செந்தில் என்பவரிடம் பேரம்பேசி ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
என்ஜினீயர் செந்திலுக்கும் அவரிடம் வேலை பார்த்த குமார் என்பவருக்கும் இடையே சம்பள பண பிரச்சினை இருந்தது. இதுதொடர்பாக செந்தில் மீது குமார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் செய்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக சமாதானம் பேச சப்–இன்ஸ்பெக்டர்ஆறுமுகம் என்ஜினீயர் செந்திலை அழைத்துள்ளார். அப்போது என்ஜினீயர் செந்திலிடம் சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கில் இருந்து தப்பிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு பெற்றார்.
இந்த லஞ்ச பணத்தை கொடுக்கும் காட்சியே வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியானது. லஞ்ச பணத்தை கொடுப்பவர் யார்? என்று தெரியவில்லை. ஆனால், சாதாரண உடையில் உள்ள சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் அதனை பெறுவது தெளிவாக தெரிகிறது.
லஞ்ச பணத்தை பெறும் சப்–இன்ஸ்பெக்டர் அதனை மேஜை டிராயரில் வைக்கிறார். இந்த வீடியோ காட்சியே பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் பரவியது. அதோடு இது புதுவை காவல்துறையிலும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.
இது தொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணி ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் ஐ.ஜி.க்கு விளக்க அறிக்கை அனுப்பப்பட்டது. இதன் மீது ஐ.ஜி. பிரவீன்ரன்ஜன் நடவடிக்கை எடுத்து சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை சப்–இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஆறுமுகம். இவர் போலீஸ் நிலையத்தில் தனது இருக்கையில் இருந்தபடியே பேரம் பேசி லஞ்சம் வாங்கும் வீடியோ பதிவு நேற்று மாலை முதல் சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்–அப் ஆகியவற்றில் பரவியது.
2 நிமிடம் 50 நொடிகள் இந்த காட்சி ஓடுகிறது. உருளையன் பேட்டை போலீஸ் நிலையத்தில் தனது இருக்கையில் சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் அமர்ந்துள்ளார். அவரது எதிரே ஒரு நபர் அமர்ந்து பேசுகிறார். அவரது முகம் வீடியோவில் பதிவாகவில்லை. அப்போது ஒருவர் வந்து சப்–இன்ஸ்பெக்டரிடம் கையெழுத்து பெறுகிறார். இதைத் தொடர்ந்து சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் எதிரில் உள்ள நபரிடம் கொடுங்கள் என கை நீட்டுகிறார்.
எதிரே இருக்கும் நபர் எவ்வளவு? என கேட்கிறார். சப்–இன்ஸ்பெக்டர் மெல்லிய குரலில், ரூ.30 ஆயிரம் தரும் படி கூறுகிறார். எதிரே உள்ள நபர் ஆயிரம் ரூபாய் தாளை ஒன்று, இரண்டு என 30 தாள்களை எண்ணி ஆறுமுகத்திடம் கொடுத்தார்.
இதை குமாரிடம் கொடுத்து விடுவீர்களா? என கேள்வி கேட்கிறார். தொடர்ந்து மீண்டும் எவ்வளவு? என கேட்கிறார். அதற்கு ஆறுமுகம் சைகையில் 10 விரலை காட்டுகிறார். யார், யாருக்கு? என கேட்கிறார். அதற்கு ஆறுமுகம், மொத்தமாகத்தான் என கூறுகிறார்.
வேறு யாராவது வந்து என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வது? இது உங்களுக்கு மட்டும்தானா? என அந்த நபர் கேட்கிறார். அதற்கு ஆறுமுகம், உங்கள் வேலையை பாருங்க, நாங்க பார்த்துக்கொள்கிறோம் என்கிறார்.
இதையடுத்து எதிரே இருந்த நபர் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, ஏட்டு, ரைட்டர் எல்லாருக்கும் கொடுத்துவிடுவீர்களா? என கேட்கிறார். அதற்கு ஆறுமுகம், சைகையாலேயே கொடுங்கள் என கூறுகிறார். இதையடுத்து அந்த நபர் மீண்டும் ஆயிரம் தாள்களை ஒன்று, இரண்டு என எண்ணி 10 தாள்களை கொடுக்கிறார். அப்போது குமாரிடம் ஸ்டேட்மெண்ட் வாங்கிவிட்டீர்களா? என அந்த நபர் கேட்கிறார்.
இதைத்தொடர்ந்து ஆறுமுகம் குமாரை கூப் பிடுகிறார்? அவர் வந்தவுடன் ஒரு கோப்பில் கையெழுத்து வாங்கிவிட்டு, பணம் கொடுத்த நபரிடமும் ஆறுமுகம் கையெழுத்து வாங்குகிறார். வாங்கிய பணத்தை ஆறுமுகம் தனது டிராயரில் வைத்துக் கொள்கிறார். இவ்வாறு அந்த வீடி யோவில் காட்சிகள் ஓடுகிறது.
நெல்லித்தோப்பு அருள் படையாட்சி வீதியை சேர்ந்தவர் செந்தில். என்ஜினீயரான இவரிடம் குமார் என்பவர் வேலை பார்த்து வந்தார். அவருக்கும், என்ஜினீயருக்கும் ஆட்களுக்கு சம்பளம் வழங்கியதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குமார், வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யும்படி புகார் கொடுத்தார். இந்த புகாரின் மீது விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் என்ஜினீயர் செந்திலை சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் போனில் அழைத்து, இந்த புகாரை பதிவு செய்யாமல் குமாருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த அழைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் நடந்த சம்பவங்களையே செந்தில் தனது செல்போன் படம்பிடித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே உள்ள தொரவலூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம், தச்சு தொழிலாளி. இவரது மகள் அனிதா (வயது 16). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியிள் 10–ம் வகுப்பு மாணவி.
அனிதா, எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு எழுதிவந்தார். ஆங்கிலம் தேர்வை அவர் சரியாக எழுதவில்லை. இதனால் விரக்தியடைந்த அனிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.
இதில் உடல் கருகியதால் வேதனை பொறுக்கமுடியாமல் அலறினார். அந்த சத்தம் கேட்டு திடுக்கிட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தீயை அணைத்து உயிருக்கு போராடிய அனிதாவை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
விருத்தாசலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் திருபுவனை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அங்காளன். இவர் பிப்டிக் சேர்மனாகவும் பதவி வகித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு என்.ஆர். காங்கிரசில் இருந்து விலகிய அங்காளன் எம்.எல்.ஏ. சமீபத்தில் காங்கிரசில் இணைந்தார். மேலும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு எம்.எல்.ஏ. பதவியையும் அங்காளன் ராஜினாமா செய்தார். அவர் வருகிற சட்டமன்ற தேர்தலில் திருபுவனை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட முடிவு செய்து தேர்தல் கள பணியில் ஈடுபட்டு வருகிறார்.
அங்காளனின் முதல் மனைவி கவிப்பிரியா. கடந்த 2008-ம் ஆண்டு இவரை அங்காளன் விவகாரத்து செய்து விட்டார். இதையடுத்து கவிப்பிரியா ஆரியபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் கவிப்பிரியா தனது உறவினர்களுடன் சட்டசபை வளாகத்துக்கு வந்தார். அங்கு முதல்-அமைச்சர் அலுவலக அறையில் இருந்த முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவர் சந்தித்தார்.
அப்போது ரங்கசாமிக்கு அவர் பூங்கொத்து கொடுத்து காலில் விழுந்து ஆசிபெற்றார். பின்னர் அவர் தனக்கு திருபுவனை தொகுதியில் போட்டியிட என்.ஆர். காங்கிரசில் வாய்ப்பளித்தால் தான் தயாராக இருப்பதாக கூறினார்.
இதையடுத்து கவிப்பிரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
திருபுவனை சட்டமன்ற தொகுதியில் அங்காளனை எதிர்த்து என்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கேட்டுள்ளேன். அவர் வாய்ப்பளித்தால் திருபுவனை தொகுதியில் போட்டியிடுவேன். முதல்-அமைச்சர் மீது திடீரென அங்காளன் வீண் குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக ஏன் அவர் இந்த குற்றச்சாட்டுக்களை கூறவில்லை? எனக்கு திருபுவனை தொகுதியில் ஓட்டு மற்றும் ஆதார் கார்டும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர்:
முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் மற்றும் மக்கள் அதிகாரம் சார்பில் கடலூர் புதிய பஸ் நிலையத்தை புதிய கலெக்டர் அலுவலகம் அருகில் அமைக்கக்கோரி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.
தலைவர் சுந்தரமூர்த்தி, செயலாளர் அல்லிமுத்து, முத்துக்குமரன், மக்கள் அதிகாரம் நகர செயலாளர் நந்தா, பொருளாளர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் மாநில தலைவர் கு. பாலசுப்பிரமணியன், மக்கள் அதிகாரம் மாநில தலைமை நிர்வாகிகள் பாலு, மாவட்ட செயலாளர் ராசாமணி, துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இதில் நிர்வாகிகள் விவேகானந்தன், பலராமன், ராஜேஷ் குமார், பாண்டியன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள். முடிவில் இணை செயலாளர் ராஜேஷ் குமார் நன்றி கூறினார்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வத்தராயன்தெத்து கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு, அரிசி வியாபாரி.
இவரது மகன் செல்வ தீபக் (வயது 24). இவரும் அரிசி வியாபாரம் செய்து வந்தார். இவர்களது வீடு சேத்தியாத்தோப்பு மேட்டுத்தெருவில் உள்ளது.
நேற்று வீட்டில் இருந்த செல்வதீபக் தனது தந்தையிடம் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் அதற்கு பணம் வேண்டும் என்று கேட்டார். ஆனால், செல்வராசு இன்னும் சில வாரங்கள் போகட்டும் அதன் பின்னர் தொழில் தொடங்க பணம் தருவதாக கூறினார். இதனால் மனம் உடைந்த செல்வதீபக் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சி அடைந்த செல்வராசு கதறி துடித்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். செல்வதீபக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே பள்ளிப்படை முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 27-ந்தேதி வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது.
வீட்டில் இருந்த மனைவி ஜெயஸ்ரீ (வயது 23) மற்றும் 3 வயது மகள் லக்ஷனா ஆகியோரை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த ராஜா தனது மகள், மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் 2 பேரும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ராஜா சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தாய்- மகள் என்ன ஆனார்கள், எங்கு சென்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






