என் மலர்
கடலூர்
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த கூட்டத்திற்கு கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் வந்திருந்தனர்.
நேற்று மதியம் நடந்த இந்த கூட்டத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கட்சி தொண்டர்கள் வெயிலில் நின்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உரையை கேட்டனர்.
கூட்டத்தில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக பிரிக்கப்பட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இருப்பினும் ஜெயலலிதாவை காண ஆர்வமிகுதியால் ஆண்கள் முண்டியடித்துக் கொண்டு பெண்கள் அமர்ந்து இருக்கும் பகுதிக்குள் நுழைந்தனர். இதனால், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டு ஆண்கள், பெண்கள் என இருபாலரும் ஒருவரையொருவர் நெட்டித்தள்ளிக் கொண்டனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கடும் வெயிலாலும், கூட்டநெரிசலாலும் மயங்கி விழுந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்கள் மீது தண்ணீரை தெளித்து பாதுகாப்பாக நிழல் உள்ள பகுதிக்கு அழைத்து சென்றனர்.
இந்த கூட்டநெரிசலில் சிதம்பரம் தெற்கு வாணியதெருவை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் கருணாகரன்டேவிட் (வயது 61), அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த முருகேசன் மகன் ராதாகிருஷ்ணன் (45), குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஜெயமணி(32), வல்லம்படுகை லோகநாதன் (55), கடலூர் ஆயுதப்படை பெண் போலீஸ் விஜயசாந்தி (24), சேத்தியாத்தோப்பு விழுப்பெரும்துரை ராமஜெயம் (32), காடாம்புலியூர் தாமரைக்கண்ணன் (56), விருத்தாசலம் செல்வராஜ் நகர் முத்துலட்சுமி (60), விருத்தாசலம் ராமசந்திரன்பேட்டை பூங்காவனம் (55) ஆகிய 9 பேரும் மயங்கி கீழே விழுந்தனர்.
அவர்கள் மீதும் அக்கம் பக்கத்தினர் தண்ணீர் தெளித்தும் தொடர்ந்து மயங்கிய நிலையில் இருந்தனர். இதையடுத்து, 9 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் மேல்சிகிச்சைக்காக கருணாகரன்டேவிட் கடலூர் அரசு மருத்துவமனைக்கும், ராதாகிருஷ்ணன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர். இறந்த கருணாகரன்டேவிட்டுக்கு மலர்கொடி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ராதாகிருஷ்ணனுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இதற்கிடையே விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் போலீஸ் விஜயசாந்தி உள்பட 7 பேரும் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.
அ.தி.மு.க. தேர்தல் பிரசார பாடல் குறுந்தகட்டினை விருத்தாசலம் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று நடந்த அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசி முடித்ததும், அ.தி.மு.க. சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசாரப் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினை அவர் வெளியிட, அதனை அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், கரூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான மு.தம்பிதுரை பெற்றுக் கொண்டார்.
நிறைவாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாரத முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரும், காட்டுமன்னார்கோவில் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.ஆர்.ராஜேந்திரன் நேரில் சந்தித்து, தன்னை அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை நைனார் மண்டபம் சுதானா நகரை சேர்ந்தவர் சேகர். அவரது மனைவி நாகவள்ளி (வயது 50). மகன்,பிரபாகரன் (26).
நாகவள்ளி மாதசீட்டு நடத்தி வந்தார். இதில் பணம் எடுத்தவர்களில் பலர், முறையாக அந்த தொகையை செலுத்தவில்லை. ஆனால் சீட்டுக்கான பணத்தை மாதந்தோறும் முறைப்படி செலுத்தி முடித்தவர்கள் தங்களுடைய முதிர்வு தொகையை திருப்பி தருமாறு கேட்டனர்.
மாதசீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால், நாகவள்ளி அவதியடைந்து வந்தார். மேலும் இந்த கடன் தொல்லையால் அவரது குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவரது மகன் பிரபாகரன்,வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபாகரனின் உடலை கண்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலத்தில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழக மக்களுக்காக எண்ணிலடங்காத திட்டங்களை எனது தலையிலான அரசு நிறைவேற்றி உள்ளது. நான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளின்படி திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். நான் சொன்னதை செய்தேன். அதற்கும் மேலாக சொல்லாத பலவற்றையும் செய்தேன். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் அதிகமான திட்டங்களை செயல்படுத்துவேன்.
சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதுடன் மக்கள் கல்வி உடல்நலம் போன்றவற்றிலும் எனது தலைமையிலான அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. விவசாயம் மேம்பாடு அடைய எனது அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஏழை எளிய மக்களுககு தரமான கல்வி வழங்கும் வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளால் அப்பல்கலைக் கழகத்தில் பல போராட்டம் நடத்தப்பட்டு 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கத்தின்படி நிர்வாகம் முறையாக செயல்படவும், நிதி நெருக்கடியில் இருந்து பல்கலைக்கழகம் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பவும் எனது தலைமையிலனா அரசு பல்கலைக் கழகத்தை எடுத்துக்கொண்டது. இதற்காக ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டு, 525 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி உள்ளது.
பல்கலைக்கழகத்தை அரசு எடுத்துக்கொண்டதால் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட அனைதுது படிப்பகளுக்கும் வெளிப்படையான முறையில் கல்வித்துறை இடஒதுக்கீட்டு விதியின்படி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஏனைய அரசு கல்லூரிகளில் வழங்கப்படுவதைப்போல் அனைத்து சலுகைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
கடலூர் மாவட்டத்தில் தானே புயல் தாக்கும் என்ற எச்சரிக்கை பெறப்பட்டவுடன் எனது அரசு துரித நடவடிக்கை எடுத்து தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெருமளவு உயிரிழப்பு தடுக்கப்பட்டது.
புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு 400 கோடி ரூபாய் அளவிற்கு நிவாரணம் வழங்கபப்டடது. புயலால் அழிந்த நீண்டகால பயிர்களை மீண்டும் பயிர் செய்ய உதவிகள் செய்யப்பட்டன. 800 கோடி ரூபாய் செலவில் சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் தனது ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை பட்டியலிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, 13 வேட்பாளர்களை அறிமுகம் செய்து, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்ற ஒப்புதலுடன் 1985–ம் ஆண்டு புதுவை காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி பல்கலைக்கழகத்தை தொடங்கி வைத்தார். மொத்தம் 800 ஏக்கர் பரப்பில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தற்போது 37 துறைகள், 15 பள்ளிகள் உள்ளது. 10 மையங்கள் மூலம் 175 முதுகலை, இளங்கலை ஆராய்ச்சி படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
காரைக்கால், அந்தமான் நிகோபார் தீவில் பல்கலைக்கழகத்தின் துணை வளாகம் உள்ளது. 2 லட்சம் நூல்கள் கொண்ட நூலகம், 19 மாணவ–மாணவிகள் விடுதிகள், வைபை வசதி கொண்ட வளாகம், 400 பேராசிரியர்கள், விரிவுரையாளர், அலுவலர்கள், 6 ஆயிரத்து 100 மாணவர்கள் உள்ளனர். 87 இணைப்பு கல்லூரிகளில் 45 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்முறையாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கடந்த தேசிய அளவிலான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பொறியியல், மேலாண்மை, மருந்தியல் ஆகிய படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலும் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையும் வெளியானது. 100 சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் புதுச்சேரி பல்கலைக்கழகம் 13–வது இடத்தை பிடித்துள்ளது. பெங்களூர் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ், ஐ.ஐ.எஸ்.சி. முதலிடத்தை பெற்றுள்ளது. மத்திய மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தின் நேஷனல் இன்ஸ்ட்டியூசனல் ரேங்கிக் பிரேம்வொர்க் என்ற அமைப்பு உள்கட்டமைப்பு, நூலகம், ஆய்வக வசதிகள் உள்பட பல்வேறு சிறப்பம்சங்களை கணக்கில் கொண்டு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
அனைத்து தரப்பினரும் இதை வரவேற்றுள்ளதால் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
விருத்தாசலம்:
முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நேற்று சென்னையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 21 அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா விருத்தாசலத்தில் நாளை மாலை தேர்தல் பிரசாரம் செய்கிறார். அப்போது கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 13 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
இதற்காக விருத்தாசலத்தில் சித்தலூர், ஆலிச்சிக்குடி சாலையில் 100 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு மேடைகள் அமைக்கும் பணி, தொண்டர்கள் நிற்க வசதிகள் ஹெலிகாப்டர் தளம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் நாளை(திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மேல் விருத்தாசலத்திற்கு வருகிறார்.
பின்னர் அவர் காரில் ஏறி கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்கிறார். இந்த பிரசாரக் கூட்டத்தில் 3 மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்பதால் 5 மாவட்டத்தை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
மேலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் தகவல்களை முறையாக பரிமாற்றம் செய்யவும் விருத்தாசலம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஹெலி பேடு, மேடை அமைக்குமிடம் தொண்டர்கள் அமருமிடம் உட்பட பல பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த வசதியாக மேடைக்கு எதிர்புறம் கருவேப்பிலங்குறிச்சி சாலை, அந்த பகுதியிலுள்ள தனியார் பள்ளிகள், ஆலிச்சிக்குடி சாலை உட்பட 4 இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பணிகளை வடக்கு மண்டல ஐ.ஜி.பெரியசாமி பார்வையிட்டு மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
புதுவையில் கடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்– அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ்–17 இடங்களிலும், அ.தி.மு.க.–12 இடங்களிலும், தே.மு.தி.க. ஒரு இடத்திலும் போட்டியிட்டன.
இதில் என்.ஆர்.காங்கிரஸ்–15 இடங்களிலும், அ.தி.மு.க.–5 இடங்களிலும் வெற்றி பெற்றன.
கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த போது தங்கள் அணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமைப்பது என்று முடிவு செய்து இருந்தனர். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க.வை சேர்ந்துக் கொள்ளாமல் சுயேச்சை ஆதரவுடன் தனித்து ஆட்சியை அமைத்தது.
இதனால் என்.ஆர்.காங்கிரஸ் மீது அ.தி.மு.க. கடும் கோபத்தில் இருந்தது. ரங்கசாமி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.
இதன் பிறகு இருகட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த நிலையில் புதுவையில் ஒரு இடத்துக்கான டெல்லி மேல்–சபை எம்.பி. தேர்தல் நடந்தது.
அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் எம்.பி. சீட்டை ரங்கசாமி, அ.தி.மு.க.வுக்கு ஒதுக்குவதாக அறிவித்தார். இதனால் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கோகுல கிருஷ்ணன் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன் காரணமாக இருகட்சிகளுக்கும் இடையே மீண்டும் சுமூக உறவு ஏற்பட்டது. இப்போது நடக்கும் சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்தன.
இரு கட்சிகளை சேர்ந்த 2–ம் நிலையில் உள்ள தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் புதுவை முதல்–அமைச்சர் ரங்கசாமி முடிவு எடுப்பதற்கு காலதாமதம் செய்து வந்தார். மேலும் அ.தி.மு.க. தரப்பில் கூறப்பட்ட நிபந்தனைகளையும் ஏற்க தயக்கம் காட்டினார்.
கடந்த 4–ந் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் புதுவையில் உள்ள 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனால் கூட்டணி அமைவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஆனாலும் அ.தி.மு.க. கூட்டணியில் சேர என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் இருந்து தூது அனுப்பப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வில் இருந்து உரிய சிக்னல் வரவில்லை. எனவே இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி வருமா? இல்லையா? என்பது பற்றி சந்தேகம் நிலவி வந்தது.
இந்த நிலையில் நேற்று புதுவை அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்கள். மாநில அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் கண்ணன், என்.ஆர். காங்கிரஸ் அரசையும், முதல்–அமைச்சர் ரங்கசாமியையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாகி விட்டது. ரவுடி ராஜ்ஜியமாக புதுவை மாறிவிட்டது. ஆட்சியில் ஊழல் அதிகமாகி விட்டது. இந்த ஆட்சியை அகற்றியே தீர வேண்டும் என்று பேசினார்.
கடந்த காலங்களில் என்.ஆர்.காங்கிரஸ் அரசை அ.தி.மு.க.வினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனால் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படும் நிலை வந்ததையடுத்து அ.தி.மு.க.வினர் எந்த விமர்சனமும் செய்யாமல் மவுனம் காத்து வந்தனர்.
நேற்றைய பிரசாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் அரசை கடுமையாக கண்ணன் விமர்சித்து இருப்பதால் இருகட்சிகளுக்கும் இடையே கூட்டணி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. வுடன் கூட்டணி ஏற்படாததால் என்.ஆர்.காங்கிரசாரும் தனித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 39). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அருகில் ஆவட்டி கிராமத்தை சேர்ந்த சங்கர் (27) செங்கல் சூளை நடத்தி வந்தார். இவர் நாட்டு துப்பாக்கி வைத்து இருந்தார். ரவியும், சங்கரும் நண்பர்களாக பழகி வந்தனர். இரவில் முயல் வேட்டைக்கு சென்று வந்தார்கள்.
நேற்று முன்தினம் இரவு ரவி வீட்டில் இருந்தார். அப்போது சிலர் முயல் வேட்டைக்கு ரவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.
இந்த நிலையில் அங்குள்ள பாலத்தின் அருகே ரவி பிணமாக கிடந்தார். விசாரணையில் துப்பாக்கியால் சுட்டு குண்டு பாய்ந்து ரவி இறந்திருப்பது தெரிய வந்தது. சங்கரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து ரவியை தீர்த்துக்கட்டியது அம்பலமானது.
இதையொட்டி சங்கர் அவருடன் சூளையில் வேலை செய்த அய்யப்பன், கண்ணன், ஞானவேல், தர்மதுரை மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசில் சங்கர் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
ரவியும், நானும் நண்பர்கள். ரவிக்கு குடிப்பழக்கம் இருந்தது. சமீபத்தில் குடிபோதையில் ரவி என்னை தரக்குறைவாக திட்டினான். பொது இடத்தில் திட்டியதால் நான் வேதனை அடைந்தேன். அவமானம் தாங்க முடியாததால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.
செங்கல் சூளையில் வேலை செய்யும் தொழிலாளர்களிடம் இதுபற்றி கூறினேன். அவர்களும் ரவியை கொலை செய்ய சம்மதம் தெரிவித்தனர். செங்கல் சூளையில் வேலை செய்யும் தொழிலாளர்களை ரவியின் வீட்டுக்கு அனுப்பி அவரை முயல் வேட்டைக்கு என்று அழைத்து வருமாறு கூறினேன். அவர்கள் அழைத்து வந்தார்கள்.
ரவி உள்பட 8 பேர் முயல் வேட்டைக்கு புறப்பட்டு சென்றோம். சேப்பாக்கம் கிராமத்தின் ஒதுக்குபுறத்தில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றதும் ரவியை தாக்கினேன். அவர் கீழே விழுந்தார். உடனே என் நாட்டு துப்பாக்கியால் ரவியை சுட்டேன். அவர் உடலில் குண்டு பாய்ந்து செத்தார். இந்த கொலையை விபத்து என்று கூறி மறைக்க திட்டமிட்டோம். அவரது உடலை திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேப்பாக்கம் மேம்பாலம் அருகில் போட்டு உடலின் மீது மோட்டார் சைக்கிளை போட்டோம். விபத்தில் ரவி அடிபட்டு இறந்தது போல் காட்ட முயன்றோம்.
நாட்டு துப்பாக்கி மற்றும் பேட்டரி, டார்ச் லைட் ஆகியவைகளை கிணற்றில் வீசி விட்டு ஓடி விட்டோம். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
வில்லியனுர்:
வில்லியனுர் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது38).என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர். இவர் தனது வீட்டு மாடியில் உள்ள கூரை கொட்டகையில் வசித்து வந்தார். நேற்று இரவு இவர் தனது மனைவி அருள்மொழி மற்றும் 2 குழந்தைகளுடன் தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவில் திடீரென இந்த கூரை கொட்டகை தீப்பிடித்து எரிந்தது.
உடனே பார்த்தசாரதி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அலறியடித்தபடி அங்கிருந்து வெளியேறினர். அங்குள்ள கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் வீட்டில் வைத்திருந்த பீரோ, கட்டில், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள் எரிந்து சேதமானது. பீரோவில் வைத்திருந்த ரூ.16ஆயிரத்து 500 ரொக்க பணமும் தீயில் கருகி போனது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.
இதுகுறித்து பார்த்தசாரதி வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது வீட்டுக்கு யாரேனும் தீவைத்து இருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறினார். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்திய சுதந்திரத்துக்கு முன்னர் புதுச்சேரியில் பிறந்தவர்களுக்கு பிரான்ஸ் நாட்டு குடியுரிமையும் இருந்துவந்தது. சுதந்திரத்துக்கு பின்னர் அந்த உரிமை விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், 1962-ம் ஆண்டுக்கு முன்னர் பிறந்து, புதுச்சேரியில் வசித்துவருபவர்களுக்கு பிரான்ஸ் அரசு ஓய்வூதியம் அளித்து வருவதாககூறி, சில சமூகவிரோதிகள் இங்குள்ள மூத்த குடிமக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சலுகையை பெற ஆசைப்படும் முதியவர்களிடம் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் கமிஷனாக ஆயிரக்கணக்கில் பணத்தையும் சிலர் பெற்றுவருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இதுதொடர்பாக புதுச்சேரி அரசின் தலைமை செயலாளர் மனோஜ் பரிடா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் இதுதொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில் 1962-ம் ஆண்டுக்கு முன்னர் புதுச்சேரியில் பிறந்தவர்களுக்கு பிரான்ஸ் நாட்டு அரசு பென்ஷன் வழங்குவதாக வெளியாகியுள்ள வதந்திகள் முற்றிலும் தவறானவை. அதைப்போன்றதொரு புதிய சட்டம் ஏதும் பிரான்ஸ் அரசு சமீபத்தில் இயற்றவில்லை. அப்படியொரு திட்டமும் கிடையாது என தெரிவித்துள்ளனர்.
எனவே, இதுபோன்ற போலி வாக்குறுதிகளுடன் யாராவது உங்களை நாடிவந்தால் இதுதொடர்பாக அருகாமையில் இருக்கும் காவல் நிலையங்களில் பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
பெண்ணாடம்:
பெண்ணாடம் அருகே மாளிகை கோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ராகவன் (வயது 79). இவர் பெண்ணாடத்துக்கு சென்று வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.
மாளிகை கோட்டம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது குடிபோதையில் விழுந்து காயம் அடைந்த காரையூரை சேர்ந்த மோகன் (33) என்பவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த பாலகிருஷ்ணன் (31) மற்றும் கணேசன் (30) ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக ராகவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராகவன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதற்கிடையே ஆவேசம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ராகவன் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பாலகிருஷ்ணனையும், ஏற்கனவே காயம் அடைந்து இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மோகனையும் பிடித்து வைத்து கொண்டனர். ஆனால் காயம் இருந்ததாலும், அந்த கும்பலிடம் இருந்து கணேசன் நைசாக தப்பி ஓடிவிட்டார். எனினும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பொதுமக்கள் பறித்து வைத்து கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் மோகனையும், பாலகிருஷ்ணனையும் மீட்டு அவர்களை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள சூரக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெனிதா (வயது 17). (பெயர் மாற்றம்). பிளஸ்–2 மாணவி. இவரது தாயார், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் மணிகண்டன் மீது பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்தார்.
புகாரில் கூறியிருப்பதாவது:–
எனது மகள் ஜெனிதா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு ‘திடீர்’ உடல் நல குறைவுடன் மாலையில் வீடு திரும்பினார். பின்னர் அவள் மட்டும் தனியாக இருப்பதை அறிந்த மணிகண்டன் எங்களுடைய வீட்டுக்குள் புகுந்தான். ஜெனிதாவை பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டு தப்பி சென்றான்.
இதுபற்றி தகவல் அறிந்து திடுக்கிட்டு, அந்த வாலிபரின் வீட்டுக்கு சென்று தட்டிக் கேட்டோம். உடனே மணிகண்டனும் அவரது குடும் பத்தினரும் எங்களை சமாதானப்படுத்தினர். ஜெனிதாவை மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறினார்கள். அதனை நம்பி எனது குடும்பத்தினர் அமைதியாக வீடு திரும்பி விட்டோம்.
அதன்பிறகு வெளி மாநிலத்துக்கு வேலைக்கு சென்ற மணிகண்டனுக்கு வேறொரு இடத்தில் பெண் பார்த்து கல்யாணம் செய்து வைக்க முயற்சி நடப்பதாக தெரியவந்தது. மேலும், அந்த திருமணம் முடிந்தவுடன் வெளிநாட்டுக்கு மணிகண்டன் தப்பி செல்ல முயற்சி நடப்பதாகவும் தெரிகிறது. எனவே இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜெனிதாவின் தாயார் போலீசில் அளித்த புகாரில் கூறியிருந்தார்.
அதன்பேரில் மணிகண்டன் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமரைசெல்வி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






