என் மலர்tooltip icon

    கடலூர்

    சிதம்பரம் சட்டசபை தொகுதி 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டதால் தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடலூர்:

    சிதம்பரம் சட்ட சபை தொகுதிக்கு முதல் தேர்தல் கடந்த 1952–ம் ஆண்டு நடந்தது. இந்த தேர்தல் முதல் 1967–ம் ஆண்டு வரை நடந்த 4 சட்ட சபை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

    பின்னர் 1971, 1977, 1989, 2001 ஆகிய வருடங்களில் நடந்த சட்ட சபை தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் கடந்த 2006 மற்றும் 2011–ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்ட சபை தேர்தலில் இந்த தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது.

    10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற உள்ள தேர்தலில் சிதம்பரம் தொகுதி மீண்டும் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதனால் அந்த தொகுதி தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியதுடன் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

    பண்ருட்டி சட்டசபை தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் தி.மு.க வினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி சட்டமன்ற தொகுதி கடந்த 2009–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு பண்ருட்டி நகராட்சி, நெல்லிக்குப்பம் நகராட்சி, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி, தொரப்பாடி பேரூராட்சி, அண்ணாகிராம ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 44 கிராம ஊராட்சி, பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 14 ஊராட்சிகள் இணைந்து புதிய தொகுதியாக உருவெடுத்துள்ளது. இந்த புதிய பண்ருட்டி தொகுதியில் 2011 –ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக வெற்றிப்பெற்றது.

    தற்போது வருகிற மே 16–ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியான விவசாய தொழிலாளர்கள் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதனால் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு கொடுத்திருந்த பலர் ஏமாற்றம் அடைந்தனர்.

    தொகுதியை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தாமல் கூட்டணிக்கட்சி ஒதுக்கி பண்ருட்டி தொகுதி புறக்கணிக்கப்பட்டதாக திமுகவினர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். பண்ருட்டி சட்ட மன்ற தொகுதியை பொறுத்தவரையில் இந்த தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடுகிறது.

    இதுவரையில் கூட்டணி கட்சியின் வெற்றிக்கே பாடுபட்ட அதிமுகவினர் பல ஆண்டுகளுக்கு பிறகு சொந்த கட்சி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னதில் வாக்கு கேட்கப்போகும் உற்சாகத்தில் உள்ளனர்.

    கடலூர் அருகே கியாஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீடு எரிந்து சாம்பலானது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ரெட்டி சாவடி அருகே உள்ள நாகப்பனூரை சேர்ந்தவர் பாரதி (வயது 40). லாரி டிரைவர். இவரது கூரை வீட்டில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ வீடு முழுவதும் கொளுந்து விட்டு எரிந்ததால் யாரும் அருகில் செல்லமுடியவில்லை.

    இதனால் கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற நிலைய அலுவலர் ஆறுமுகம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்தும் எரிந்து சாம்பலானது.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து ரெட்டி சாவடி போலீசார் விசாரித்த போது சிலிண்டரில் ஏற்பட்ட கியாஸ் கசிவால் தீ விபத்து நடந்தது தெரிய வந்தது. இது குறித்து மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவையில் இன்று அம்பேத்கார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் இன்று அம்பேத்கார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. முதல் அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் சபாபதி, அமைச்சர்கள் ராஜவேலு,பன்னீர் செல்வம், தியாகராஜன், துணை சபாநாயகர் டி.பி.ஆர். செல்வம்,மற்றும் எம்.எல்.ஏக்கள் என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் மாலை அணிவித்தனர்.

    காங்கிரஸ் கட்சியினர் மாநில தலைவர்நமச்சிவாயம் தலைமையிலும், அ.தி.மு.க.வினர் மாநில செயலாளர் புருஷோத்தமன், தேர்தல் பொறுப்பாளர் கண்ணன் தலைமையிலும், தி.மு.கவினர் மாநில அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார், சிவா தலைமையிலும் மாலை அணிவித்தனர்.

    பாரதீய ஜனதா கட்சியினர் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் செயலாளர் விசுவநாதன் தலைமையிலும், பா,ம,கவினர் கோபி தலைமையிலும், மார்க்சிஸ்டு கட்சியினர் ராஜாங்கம் தலைமையிலும் தே.மு.திகவினர் செல்வராஜ், வக்கீல் அசோக்பாபு தலைமையிலும், விடுதலை சிறுத்தை கட்சியினர் தேவபோழிலன் தலைமையிலும் மாலை அணிவித்தனர்.

    இத்துடன் , ம.தி.மு.க, லோக்ஜனசக்தி, மற்றும் பல்வேறு அரசில் கட்சியினரும் மாலை அணிவித்தனர். மேலும் பீம்சேனா, மாணவர் கூட்டமைப்பு, பழங்குடியினர் மக்கள் கூட்டமைப்பு, அருந்ததியர் மக்கள் சங்கம், நாடக நுண்கலை மன்றம், தாழ்த்தப்பட்டோர் அரசு ஊழியர்சங்கம், அம்பேத்கார் தேசிய காங்கிரஸ் பீமாராவ் மக்கள் சமூக இயக்கம், அம்பேத்கார் தொண்டர்படை ஆகியவற்றின் நிர்வாகிகளும் மாலை அணிவித்தனர்.

    கோடை வெயிலின் தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 2–ம் வாரத்தில்தான் தெரியும். ஆனால் இம்முறை புதுவையில் ஏப்ரல் மாதமே கடும் வெயில் வாட்ட துவங்கி விட்டது.

    புதுச்சேரி:

    கோடை வெயிலின் தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 2–ம் வாரத்தில்தான் தெரியும். ஆனால் இம்முறை புதுவையில் ஏப்ரல் மாதமே கடும் வெயில் வாட்ட துவங்கி விட்டது.

    தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் வீட்டிற்குள் முடங்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை அதிகபட்சமாக 104 டிகிரி வெயிலை சந்தித்த மக்கள், நாள்தோறும் 100 டிகிரி வரை வெயிலின் அளவு இருப்பதை கண்டு கலக்கம் அடைந்துள்ளனர்.

    கத்திரி வெயில் தொடங்காத நிலையில் வெயிலின் உக்கிரம் மேலும் 4 நாட்களுக்கு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதேநேரத்தில் நடப்பாண்டு பருவ மழை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது சற்று ஆறுதல் தருவதாக உள்ளது. வழக்கமாக பருவமழை 94 சதவீதமாக இருக்கும். இந்தாண்டு 106 சதவீதம் வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பருவமழை காலங்களான ஆகஸ்டு முதல் செப்டம்பர் மாதங்களில் மழை பொழிவு அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளிலும், தி.மு.க. 9 தொகுதிகளிலும் போட்டியிட கூட்டணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்து தொகுதி பங்கீடு முடிவடைந்தது. தி.மு.க. தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு, இன்று வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே புதுச்சேரியில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து சென்னையில் இன்று இரு கட்சிகளின் நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, புதுச்சேரியில் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், தி.மு.க. 9 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

    அடுத்தகட்டமாக தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.
    தேர்தலில் தனித்து போட்டியா - கூட்டணியா என்று வரும் 22–ந்தேதிக்குள் முடிவு அறிவிப்பேன் என்று வேல்முருகன் பேட்டி அளித்துள்ளார்.

    நெய்வேலி, ஏப். 13–

    தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்குழு கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு கட்சி தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

    அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் உள்ளோமா, இல்லையா? என்று தெரியாத சூழ்நிலை உருவானதால் அந்த கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறினோம். இதையடுத்து எந்த அரசியல் கட்சிகளும் எங்களோடு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

    தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடுவதா– கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்று சூழ்நிலை உருவாகி உள்ளது. இது தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவின்படி வருகிற 22–ந் தேதிக்குள் முடிவை அறிவிப்பேன்.

    தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் கூட்டணிகள் மாற வாய்ப்பு உள்ளது. எனவே, நாங்கள் கூட்டணி குறித்த முடிவுகளுக்காக சற்று பொறுத்து இருக்கிறோம்.

    புதுவையில் 2 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். தமிழ் இனத்துக்கு துரோகம் செய்த காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைக்க மாட்டோம்.

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் பா.ம.க.– தி.மு.க.,மக்கள் நல கூட்டணி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடலூர் மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு கடலூரில் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது.
    கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் கூத்தரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கடலூர் மாவட்ட 14 வயது மற்றும் 16 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வருகிற 16-ந் தேதி(சனிக்கிழமை) கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடக்கிறது. 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு அன்று காலை 8 மணிக்கும், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 2 மணிக்கும் நடைபெற உள்ளது.

    இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள 14 வயதுக்குட்பட்டவர்கள் 1.9.2002 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்திருக்க வேண்டும். 16 வயதுக்குட்பட்டவர்கள் 1.9.2000 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்திருக்க வேண்டும்.

    இதேபோல் 19 வயது மற்றும் 23 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வருகிற 17-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு அன்று காலை 8 மணிக்கும், 23 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 2 மணிக்கும் நடைபெற உள்ளது.

    இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள 19 வயதுக்குட்பட்டவர்கள் 1.9.1997 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்திருக்க வேண்டும். 23 வயதுக்குட்பட்டவர்கள் 1.9.1993 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்திருக்க வேண்டும்.

    இந்த தேர்வில் கலந்து கொள்ள வரும் வீரர்கள் 2 புகைப்படம் மற்றும் பிறப்புசான்றிதழ் கொண்டு வர வேண்டும். வீரர்கள் வெள்ளை நிற சட்டை மற்றும் வெள்ளை நிற பேண்ட் அணிந்து வரவேண்டும். கிரிக்கெட் வீரர்கள் கடலூர் மாவட்டத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது கடலூர் மாவட்டத்தில் படிப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த தேர்வில் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    விருத்தாசலம் அருகே இளம்பெண்ணை கொன்று உடலை சாலையோரம் வீசி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சீவலூர்–உச்சிமேடு சாலையில் நேற்று இரவு 40 வயது மதிக்கதக்க பெண் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பர்த்தனர்.

    உடனே கருவேப்பிலங் குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று அரிவாளால் வெட்டி முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்த அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலத்த காயங்களுடன் கிடந்த அந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. ஆடை அலங்கோலமான நிலையில் கிடந்ததால் யாராவது அவரை கற்பழித்து கொன்று அந்த பகுதியில் வீசி சென்றார்களா? அல்லது முன் விரோதத்தில் கொலை செய்தார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமான பெண்கள் குறித்தும் பட்டியல் தயாரித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் என்ஜினீயரை, அவருடைய நண்பரே கொன்று வீட்டு தோட்டத்தில் புதைத்தார்.
    கடலூர்:

    கடலூரை அடுத்த கோண்டூர் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரது மகன் சதீஷ்குமார் (வயது 29). என்ஜினீயரான இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். கடந்த 1-ந்தேதி வேலைக்குச்சென்ற சதீஷ்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தியதில், சதீஷ்குமாரின் செல்போனுக்கு அவருடைய நண்பர் தினேஷ் கடைசியாக பேசியிருப்பது தெரியவந்தது. ஆனால் தலைமறைவான தினேஷ் போலீஸ் தேடுவதை அறிந்ததும் தேவனாம்பட்டினம் கிராம நிர்வாக அதிகாரியிடம் நேற்று காலை சரண் அடைந்தார்.

    விசாரணையில் சதீஷ்குமாரை கொன்று புதைத்ததை தினேஷ் ஒப்புக்கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கடந்த 1-ந்தேதி அன்று வேலைக்கு சென்ற சதீஷ்குமார், இரவு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவரை செல்போனில் தொடர்பு கொண்ட தினேஷ், தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதன்படி அவர், தினேஷ் வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் அவர்கள் கடலூருக்கு சென்று சினிமா பார்த்து விட்டு மீண்டும் தினேஷ் வீட்டுக்கு சென்றனர். அங்கு மது அருந்திய தினேஷ், சதீஷ்குமாரை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தார். அதற்கு சதீஷ்குமார் மறுத்ததால், ஆத்திரம் அடைந்த தினேஷ் சதீஷ்குமாரை தாக்கினார். படுகாயம் அடைந்த சதீஷ்குமார் அந்த இடத்திலேயே இறந்து விட்டார்.

    இதையடுத்து சதீஷ்குமாரின் உடலை வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் தினேஷ் புதைத்தார். மேலும் சதீஷ்குமாரின் மோட்டார்சைக்கிளை தேவனாம்பட்டினம் அருகே முட்புதருக்குள் போட்டுவிட்டு தினேஷ் சென்னைக்கு சென்று விட்டார். பின்னர் ஊர் திரும்பிய அவர் போலீசார் தேடுவதை அறிந்ததும், கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்தார்.

    இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் இன்று (புதன்கிழமை) சதீஷ்குமாரின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
    கடலூர் மாவட்டத்தில் மக்கள் நல கூட்டணி அதிக செல்வாக்குடன் திகழ்வதால் இங்கு போட்டியிட குறி வைத்து கட்சி நிர்வாகிகள் காயை நகர்த்தி வருகின்றனர்.
    கடலூர்:

    தமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் 16–ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஒவ்வொரு கட்சியும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன.

    தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க.– மக்கள் நல கூட்டணி, பா.ஜனதா, பா.ம.க. ஆகிய கட்சிகள் தேர்தல் களத்தில் மோதுகின்றன. தேர்தலில 5 முனை போட்டி நிலவுகிறது.

    மக்கள் நல கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    சமீபத்தில் த.மா.க.வும் மக்கள் நல கூட்டணியில் இணைந்தது. மேலும் இந்த கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக முன்னேறற்ற கழகம், சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஆகியவையும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4 கட்சிகளும் இணைந்தால் தே.மு.தி.க.– மக்கள் நல கூட்டணி மெகா கூட்டணியாக மாறிவிடும் சூழ்நிலை உள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் தே.மு.தி.க., விடுதலை சிறுத்தை கட்சிகள் அதிக செல்வாக்குடன் திகழ்கின்றன. மேலும் ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, த.மா.கா. ஆகிய கட்சிகளும் பரவலாக செல்வாக்குடன் திகழ்கின்றன.

    கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகள் உள்ளன. இங்குள்ள விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய தொகுதிகளில் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வெற்றி பெற்றது.

    எனவே, வருகிற சட்டசபை தேர்தலிலும் இந்த 3 தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிட தே.மு.தி.க. அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

    விடுதலை சிறுத்தை கட்சியினர் தனித்தொகுதியான காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிட முனைப்புடன் உள்ளனர். மேலும் பொது தொகுதியான பண்ருட்டி தொகுதியிலும் அவர்கள் போட்டியிட விரும்புகின்றனர்.

    மதி.மு.க.வினர் கடலூர், பண்ருட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறார்கள்.

    கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிட்ட பாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

    தற்போது சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தீவிரம் காட்டி வருகிறது.

    மக்கள் நல கூட்டணியில் தற்போது இணைந்து உள்ள த.மா.கா.வினர் கடலூர், பண்ருட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் போட்டியிடுகிறது. எனவே, த.மா.கா.வினர் 2–க்கும் மேற்பட்ட தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

    கடலூர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அதிக செல்வாக்குடன் உள்ளனர். அந்த கட்சியினர் கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட ஆர்வமாக உள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் மக்கள் நல கூட்டணி அதிக செல்வாக்குடன் திகழ்வதால் இங்கு போட்டியிட குறி வைத்து கட்சி நிர்வாகிகள் காயை நகர்த்தி வருகின்றனர்.

    தர்மபுரியில் ஜெயலலிதா நாளை தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
    தர்மபுரி:

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 16–ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 7 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது.

    இதையடுத்து முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 4–ந்தேதி 227 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

    மேலும் அன்றைய தினமே அவர் தனது தேர்தல் பிரசார பயண திட்டத்தையும் வெளியிட்டார். அதன்படி ஜெயலலிதா தமிழகத்தில் 14 நாட்களும், புதுச்சேரியில் ஒரு நாளும் ஆக 15 நாட்கள் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். அதன் முதல் கட்டமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து 2–வது பிரசார பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 3வது தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தர்மபுரியில் நாளை (புதன்கிழமை) மதியம் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனஅள்ளி, ஓசூர், தளி, ஊத்தங்கரை (தனி) ஆகிய 11 தொகுதிகளின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார்.

    இதற்காக தர்மபுரியில் பென்னாகரம் சாலையில் மேம்பாலம் அருகில் உள்ள டி.என்.சி. வளாகத்தில் 100 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, சீரமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. கூட்டம் நடக்கும் இடத்தின் அருகிலேயே ‘ஹெலிபேடு’ அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கூட்டம் நடக்கும் இடத்தை போலீஸ் அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் தினமும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் நாளை (புதன்கிழமை) மதியம் தர்மபுரிக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியவுடன் அவர் கார் மூலம் கூட்டம் நடக்கும் மேடைக்கு செல்கிறார்.

    முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பேச்சை கேட்க வரும் அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் சிரமமின்றி வந்து செல்ல வசதியாக தர்மபுரியில் இருந்து பென்னாகரம் செல்லும் சாலையில் தடுப்புக்கட்டைகளால் பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை முதல் ஹெலிபேடு வரை இரு புறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கூட்டம் நடைபெறும் மைதானத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் அமருவதற்கு தனித்தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது.

    பொதுக்கூட்டம் நடைபெறும் போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து, தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதுகாப்பு பணிக்காக தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான போலீசார் வந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்காக தர்மபுரி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள், கல்லூரிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

    முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகையை முன்னிட்டு கூட்டம் நடைபெறும் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. 11 தொகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கு தகுந்தாற்போல பாதுகாப்பு நடவடிக்கைகளை சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. நாகராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காகவும், தகவல்களை முறையாக பரிமாற்றம் செய்யவும், தர்மபுரியில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். ‘ஹெலிபேடு’, தார்சாலை, பந்தல் அமைக்கும் பணி, மக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் வெடிகுண்டு நிபுணர்கள் நேற்று தீவிர சோதனையிட்டனர்.
    ×