என் மலர்
கடலூர்
பெண்ணாடம் :
பெண்ணாடம் அருகே உள்ள துறையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 40), விவசாயி. இவரது மனைவி வளர்மதி (39). இவர்களது மகள் அன்பழகி (20).
இவர் வடலூரில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் அவர் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வந்தார்.
அண்ணாதுரைக்கும் அவரது மனைவி வளர்மதிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினமும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த அன்பழகி மனமுடைந்தார். தொடர்ந்து தாயும், தந்தையும் சண்டைபோடுகிறார்களே என்று மனம் வருந்தினார்.
இந்த நிலையில் அண்ணாதுரையும், வளர்மதியும் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டனர். அன்பழகி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது அவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அன்பழகிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்றுமுன்தினம் தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கினார். சென்னை சைதாப்பேட்டையில் இருந்து பிரசாரத்தை ஆரம்பித்த அவர் புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு இரவில் அங்கு தங்கினார்.
பின்னர் நேற்று மாலை புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு கடலூருக்கு மாலை 5.20 மணிக்கு வந்தார். அங்கு மஞ்சக்குப்பம் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கருணாநிதி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
நாட்டில் நல்லாட்சி நடைபெற வேண்டும் என்பது தி.மு.க.வின் நோக்கம். நாங்களே ஆள வேண்டும் என்று கருதுகின்றவர்கள் அல்ல நாங்கள். தி.மு.க., தேர்தலுக்காக இருக்கும் அரசியல் கட்சி அல்ல. ஒரு சமுதாய மலர்ச்சி இயக்கம். சமுதாயத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்களை கை தூக்கி விடுகின்ற, பின்தங்கிய மக்களையெல்லாம் முன்னேற்ற பாடுபடுகின்ற ஒரு பாட்டாளி இயக்கம் தான் தி.மு.க.
பெரியாரும், அண்ணாவும், சமுதாயத்தில் சாதி கொடுமையெல்லாம் நீங்கி எல்லோரும் சமம் என்கிற நிலை உருவாக வேண்டும் என்பதற்காக பல்லாண்டு காலம் அரும்பாடுபட்டார்கள். ஆனால் இடையிடையே அதில் தலையிட்டு அவர்களுடைய கொள்கைகளுக்கு மாறாக, பெரியாருடைய எண்ணங்களுக்கு மாறாக, அண்ணாவின் கருத்துக்கு மாறாக ஏதேதோ நாட்டில் நடைபெறுகிறது.
நாங்கள் இந்த நாட்டில் சாதி வேறுபாடு இருக்க கூடாது, மதமாச்சரியங்கள் இருக்கக்கூடாது. எல்லோரும் சமம் என்ற நிலையில் பாடுபட்டு வருகின்றோம். அதற்கு மாறாக எது நடந்தாலும் அவர்களையெல்லாம் தூக்கி எறிய வேண்டும் என்ற உத்வேகத்தோடு தி.மு.க.விலே நாங்கள் இன்றைக்கு பணியாற்றுகின்றோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்களுக்கு பொதுமக்களாகிய நீங்கள், திராவிட மக்களாகிய நீங்கள், தமிழ் மக்களாகிய நீங்கள், எங்களுடைய கைகளை பலப்படுத்த துணைபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளத்தான் வந்திருக்கிறேன்.
நாங்கள் பலப்பட்டால் தமிழகத்தில் உள்ள சாதி பேதங்களை, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற சூழ்நிலைகளையெல்லாம் அகற்ற எங்களால் முடியும். எங்களையெல்லாம் உங்களுடைய சகோதரர்களாக கருதி, உடன் பிறப்புகளாக கருதி, எங்களை கைவிடாமல் எங்களுக்கு என்றென்றும் தோன்றாதுணைவர்களாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள தான் கடலூருக்கு வந்துள்ளேன்.
நாங்கள் உங்களோடு தோழர்களாக நின்று எந்த நேரத்திலும் ஏழை எளிய மக்கள், சாதாரண சாமானிய மக்கள் தான் எங்களுக்கு தோழர்கள் என்ற உணர்வோடு குரல் கொடுக்கிற இயக்கத்தின் சொந்தக்காரர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். நாங்கள் தியாகத்தை மதிப்பவர்கள், எந்த நேரத்திலும் உங்களுக்காக உதவக்கூடியவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இந்த காலத்திலே நம்முடைய சக்தியை எப்படியெல்லாம் பெருக்க வேண்டும் என்று யோசித்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று சாதாரண, சாமானிய ஏழை எளிய மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள எனக்கு உரிமை இருக்கிறது. ஏனென்றால் நானும் உங்களோடு சேர்ந்து கஷ்டப்பட்டவன், பாடுபட்டவன், பாடுபட்டு கொண்டே இருப்பவன், இன்னும் பாடுபடப் போகிறவன். எனவே உங்களுக்காக பாடுபடுகின்ற, உங்களுக்காக உழைக்கின்ற, அல்லும் பகலும் பேசிக்கொண்டு இருக்கிற, உங்களுக்காக கவலைப்படுகிற உங்களது தம்பிகளிலேயே ஒருவன் நான் என்பதை மறந்து விடக்கூடாது, உங்களது பிள்ளைகளில் ஒருவன் நான் என்பதை மறக்க கூடாது. நான் உணர்ச்சியோடு பேசுகிறேன். என்னுடைய தாகத்தை வெளியிடுகிறேன்.
இப்போது உங்களுடைய வாக்குகளை எங்களுக்கு கொடுங்கள் என்று கேட்பதற்கு காரணம் ஓட்டு வேட்டை அல்ல. ஓட்டு வேட்டை என்ற பெயரால் தமிழக மக்களின் வரி பணத்தையெல்லாம் வாரி சுருட்டி கொண்டு இருக்கிற வஞ்சகர்களுக்கு பாடம் புகட்ட நீங்கள் உங்களுடைய வெற்றி முழக்கத்தை இன்று முதலே தொடங்குங்கள் என்று கேட்டுக்கொண்டு உங்களுடைய அன்பான வரவேற்புக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை தாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி சிதம்பரத்துக்கு புறப்பட்டு சென்றார்.
நெய்வேலி 27-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் அப்துல் ஜபார் மனைவி ரமாதேவி(வயது 51). இவர் தனது பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக விழுப்புரத்தில் உள்ள வீட்டை உதயகுமார் என்பவருக்கு ரூ.19 லட்சத்துக்கு விலைபேசி முன்பணமாக ரூ.5¾ லட்சத்தையும் வாங்கியுள்ளார்.
பின்னர் மீதி பணத்தை உதயகுமாரிடம் ரமாதேவி கேட்டபோது வீட்டை தனக்கு பதிவு செய்து தாருங்கள் அல்லது முன்பணத்தை வட்டியுடன் ரூ.7 லட்சம் தர வேண்டும் என உதயகுமார் கூறினார். இதையடுத்து ரமாதேவி தனது குடும்ப நண்பரான நெய்வேலி இந்திராநகர் மாற்றுக்குடியிருப்பை சேர்ந்த அந்தோணியம்மாள் மகன் தேவராஜிடம் பணத்தை கொடுத்து அனுப்பினார்.
ஆனால் தேவராஜ் அந்த பணத்தை கொடுக்காமல் 2 காசோலைகளை உதயகுமாரிடம் வழங்கினார். அந்த காசோலைகளை வங்கியில் பணமாக்க முயன்றபோது பணம் இல்லை என தெரியவந்தது. உடனே உதயகுமார் ரமாதேவியிடம் தொடர்பு கொண்டு பணத்தை கேட்டார். அப்போதுதான் தேவராஜ் ரூ.7 லட்சத்தை மோசடி செய்தது ரமாதேவிக்கு தெரியவந்தது.
இதை தட்டிக் கேட்ட ரமாதேவியை தேவராஜ் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் ரமாதேவி புகார் கொடுத்தார். அதன் பேரில் தேவராஜ், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அந்தோணியம்மாள் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியில் சிறுவர் சிறை உள்ளது. குற்ற சம்பவங்களில் ஈடுபடும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் இங்கு அடைக்கப்படுவார்கள்.
தற்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 17), கோட்டக்குப்பத்தை சேர்ந்த சரத் (17), நெய்வேலி சிவக்குமார் (16), கடலூர் மாவட்டம் காடுவெட்டியை சேர்ந்த அரவிந்தன் (16), கும்பகோணத்தை சேர்ந்த சக்தி (17) உள்பட 50–க்கும் மேற்பட்டோர் இங்கு அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சந்தோஷ்குமார் உள்பட 5 பேரும் சிறையில் இருந்து தப்பி செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து வார்டன் விஜயகுமாரை திடீரென சரமாரியாக தாக்கினர். மேலும் வார்டனின் கையில் இருந்த லத்தியை பிடுங்கி சரமாரியாக தலையில் தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதையடுத்து வார்டனிடம் இருந்த கூர் நோக்கு இல்லத்தின் சாவியை பிடுங்கிய 5 பேரும் வெளிப்பகுதியில் உள்ள இரும்பு கேட்டை திறந்து தப்பியோடி விட்டனர்.
இது குறித்து அரசு கூர்நோக்கு இல்ல பொறுப்பாளர் சந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு விரைந்து சென்ற போலீசார் வார்டனை தாக்கி விட்டு தப்பியோடிய 5 பேரையும் தேடி வருகிறார்கள். தப்பியோடிய 5 சிறுவர்களும் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர்.
இதற்கிடையே காயம் அடைந்த வார்டன் விஜயகுமார் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர்:
தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் 16–ந் தேதி நடைபெறுகிறது. தேர் தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
இந்த தேர்தலில் வேட்பாளர்களின் வசதியை கருதி அந்தந்த தொகுதிகளி லேயே வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலரே வேட்பு மனுக்களை பெற்றனர்.
அதன்படி திட்டக்குடி (தனி)தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் திட்டக்குடி தாலுகா அலுவலகத்திலும், விருத்தாச்சலம் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் விருத்தாச்சலம் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், நெய்வேலி தொகுதிக்கான வேட்பு மனுக்கள் மந்தாரக்குப்பத்தில் உள்ள தனித்துணை கலெக்டர் (நிலம் எடுப்பு) அலுவலகத்திலும் நடைபெற்றது.
பண்ருட்டி தொகுதிக்கான வேட்பு மனுதாக்கல் தாலுகா அலுவலகத்திலும், கடலூர் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் நடந்தது.
புவனகிரி தொகுதிக்கான வேட்பு மனுக்கள் புவனகிரி தாலுகா அலுவலகத்திலும், சிதம்பரம் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், காட்டுமன்னார் கோவில் (தனி) தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. செஞ்சி தொகுதிக்கு செஞ்சி தாலுகா அலுவலகத்திலும், மயிலம் தொகுதிக்கு மயிலம் தாலுகா அலுவலகத்திலும், திண்டிவணம் தொகுதிக்கு திண்டிவனம் சப்–கலெக்டர் அலுவலகத்திலும், வானூர் தொகுதிக்கு வானூர் தாலுகா அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இதே போல விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விழுப்புரம் தொகுதிக்கும், விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கும், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திருக்கோவிலூர் தொகுதிக்கும், உளுந்தூர் பேட்டை தாலுகா அலுவலகத்தில் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கும் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரிஷிவந்தியம் தொகுதிக் கும், சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் சங்கராபுரம் தொகுதிக்கும், கள்ளக்குறிச்சி தொகுதிக்கு கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்திலும் வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது. இதையொட்டி அந்தந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் 29–ந் தேதி ஆகும். மே மாதம் 2–ந் தேதி மாலை 3 மணி வரை மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். பின்னர் அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளரக குமரகுரு எம்.எல்.ஏ., தி.மு.க. வேட்பாளராக வசந்தவேல், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக வக்கீல் பாலு ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
நட்சத்திர அந்தஸ்து பெற்ற இந்த தொகுதியில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் வக்கீல் பாலு "மாலைமலர்'' நிருபரிடம் கூறியதாவது:-
2006 தேர்தலில் விருத்தாசலத்திலும், 2011 தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியிலும் போட்டியிட்டார். ஒவ்வொரு தேர்தலிலும் விஜயகாந்த் தொகுதி மாறி போட்டியிடுகிறார். அவருக்கு தோல்வி பயம் வந்து விட்டது. சினிமாவில் வேண்டுமென்றால் அவர் மாயை தோற்றத்தை உருவாக்கலாம். ஆனால் பொது வாழ்வில் அது எடுபடாது.
அவரது சொந்த ஊரான மதுரையிலும், அவர் தற்போது வசிக்கும் சென்னை மதுரவாயலிலும், பிரேமலதாவின் சொந்த ஊரிலும் அவரால் போட்டியிட முடியவில்லை.
சினிமா மோகத்தில் உளுந்தூர்பேட்டை மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கலாம் என்று நினைத்து உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் அவர் இந்த முறை வெற்றி பெற முடியாது. அவரது தோல்வி உறுதி. கடந்த 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயகாந்த் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். மொத்தத்தில் 29 நாட்கள் மட்டுமே சட்ட சபைக்கு சென்றுள்ளார்.
ஆனால் ஒரு கேள்வி கூட கேட்க வில்லை. மொத்தத்தில் ஒரு மணி நேரம் 1 நிமிடம் மட்டுமே பேசியுள்ளார். இவர் ஏன் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும்?
நான் அடிப்படையிலே பொதுமக்களுக்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ளேன். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 600-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் அகற்றப்பட்டுள்ளன.
மருத்துவம், என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வழக்கு தொடர்ந்து வெற்றி கண்டுள்ளேன். சமச்சீர் கல்வியையும் தமிழகத்தில் போராடி அமல்படுத்தியுள்ளேன். இதனால் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிதம்பரம்:
சென்னையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு கடந்த 17–ந் தேதி செல்போனில் ஒருவர் பேசினார். அவர் அண்ணாமலை பல்கலைகழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்தார்.
அதிர்ச்சி அடைந்த ஆம்புலன்ஸ் சேவை மையத்தினர் சென்னை போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து அவர்கள் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பல்கலைக்கழகத்துக்கு போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே போனில் வந்த தகவல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து செல்போனில் பேசிய மர்ம நபர் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் போனில் பேசியவர் சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாதோப்பு மழவராயன் நல்லூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல்(வயது 40) என்பது தெரியவந்தது.
உடனே இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சக்திவேலை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் மும்பை மாநகராட்சியில் வரிவசூல் செய்யும் ஊழியராக பணிபுரிந்து வருவதும், விடுமுறையில் ஊருக்கு வந்தபோது குடிபோதையில் வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
பா.ம.க.வில் இருந்து பிரிந்து தமிழக வாழ்வுரிமை கட்சியை தொடங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தார். தற்போதைய சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சிக்கு அ.தி.மு.க.வில் தொகுதி ஒதுக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தியில் இருந்த வேல்முருகன், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினார். இந்த தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடுவதாக வேல்முருகன் நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக கடலூரில் வேல்முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று கட்சியின் செயற்குழு முடிவு எடுத்துள்ளது. செயற்குழு முடிவின்படி நான்(வேல்முருகன்) நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன். மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் செயற்குழு கூடி முடிவு செய்யும்.
கூட்டணி பலத்தையோ, பண பலத்தையோ நம்பி போட்டியிடாமல், தமிழக மக்களை நம்பி களம் காண்கிறோம். தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நியாயமான முறையில் தேர்தலை நடத்தும் என்று எதிர்பார்க்கிறோம். எங்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் வாக்களித்து எங்களுக்கு அங்கீகாரத்தை உருவாக்கித்தர வேண்டும் என்று வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறேன்.
அ.தி.மு.க. எங்களை கடைசி நிமிடத்தில் தேர்தலில் நிற்க சின்னம் கூட பெறமுடியாதபடி வெளியேற்றி இருக்கிறது. எங்களை வெளியேற்றியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுவதாக என் காதுக்கு வருகிறது. ஆனால் என்ன நடந்தது என்ற உண்மையை தேர்தலுக்கு பிறகு சொல்வேன்.
இந்த தேர்தலில் எந்த கட்சியையும் எதிரிகட்சியாக பார்க்கவில்லை. மற்ற கட்சிகள் ஆதரவு கேட்டால் கொடுப்பது பற்றி பரிசீலிப்பேன். ஆனால் பா.ம.க.வோடு மட்டும் ஒருபோதும் கூட்டணி வைத்துக்கொள்ளமாட்டோம்.
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை வாகன சோதனை நடத்தினர். அப்போது கடலூர் வழியாக சிதம்பரம் நோக்கி வந்த ஒரு காரை சோதனை நடத்தியபோது, அதில் ஏராளமான தங்க நகைகள் இருந்தன.
விசாரணையில், காரில் இருந்த சென்னை தியாகராயநகரை சேர்ந்த 2 வியாபாரிகள், உரிய ஆவணங்கள் இன்றி 930 கிராம் எடையுள்ள (மதிப்பு ரூ.80 லட்சத்து 24 ஆயிரம்) வைரம் பதித்த தங்க நகைகளை கடலூர், சிதம்பரம், காரைக்கால் பகுதிகளுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்துச்சென்றது தெரியவந்தது.
அனைத்து நகைகளையும், காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை ஒப்படைத்தால், நகைகள் திருப்பி ஒப்படைக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேபோல் சிதம்பரம் அருகே அத்தியாநல்லூரில் நேற்றுமுன்தினம் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், அ.தி.மு.க. தேர்தல் பிரசார பாடல்கள் பதிவு செய்யப்பட்ட ஆயிரத்து 290 சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை லியாட்ஸ் சாலையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சிதம்பரத்துக்கு சி.டி.க்களை கொண்டு சென்றபோது அதிகாரிகளிடம் சிக்கினார். சிறிது நேரத்தில் அவர் உரிய ஆவணங்களை அளித்தபின் சி.டி.க்கள் அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சேலம் பழைய மாநகராட்சி கட்டிடம் அருகில் நேற்று அதிகாலை ஒரு ஆம்னி பஸ்சில் இருந்து 6 பண்டல்கள் இறக்கப்பட்டன. அவற்றை செவ்வாய்பேட்டையை சேர்ந்த மகேந்திரகுமார் என்பவர் தனது வேனில் ஏற்றினார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தேர்தல் கண்காணிப்புக்குழு அதிகாரி வடிவேலு தலைமையிலான குழுவினர் அந்த பண்டல்களை பிரித்து சோதனையிட்டனர்.
அதில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் இருந்தன. ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து வியாபாரத்துக்காக ஆவணம் இன்றி வந்த சிகரெட் பண்டல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டம் ஏந்தல் கிராமத்தை சேர்ந்த அய்யாக் கண்ணு என்பவரது மகன்கள் 4 பேருக்கான தலா 36.5 சென்ட் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் நிலத்துக்கான பட்டா வழங்குவதற்காக சிறுப்பாக்கம் சர்வேயர் உதயசந்திரன் (வயது 58) ரூ.18 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து அய்யாக்கண்ணுவின் மகன்கள் மணிகண்டன் உள்பட 4 பேரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தனர். அதிகாரிகளின் திட்டப்படி, ரூ.18 ஆயிரம் லஞ்சம் பெற முயன்ற சர்வேயர் உதயசந்திரன் நேற்று கைது செய்யப்பட்டார்.
கடலூர்:
கடலூர் சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:–
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எறும்புகளை விட சுறுசுறுப்பாக பிரசாரம் செய்து வருகிறார்கள். மக்களை கூட்டி தாங்கள் பேசவில்லை. நாங்கள் பேசும் இடங்களுக்கு மக்கள் வருகிறார்கள்.
மக்களிடம் மாற்றத்திற்கான தேடல் உள்ளது. தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட வேண்டும். சில இடங்களில் காவல் துறையினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.
மது ஒழிப்பை அ.தி.மு.க – தி.மு.க. வும் தேர்தல் பிரசாரத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். 2011–ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வரும் ஜெயலலிதா தற்போது தான் மது விலக்கு குறித்து பேசுகிறார்.
சசிபெருமாளின் இறப்பை அடுத்து நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக மது ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டதை அடுத்து தி.மு.க.வும் இது குறித்து பேசுகிறது.
அதுபோல மது, ஊழல், லஞ்சம் ஒழிப்பு குறித்து பேசுவதே தற்போது நாகரிகமாக கருதப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட கட்சிகளால் இவற்றை ஒழிக்க முடியாது.
கச்சத்தீவை மீட்போம், ஈழ பிரச்சனையை ஐ.நா மன்றத்திற்கு எடுத்து சென்று அழுத்தம் கொடுப்போம் என்று கூறிவரும் காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சனையில் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
வேல்முருகன், சேதுராமன், ஜான்பாண்டியன் ஆகியோர் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைப்பதில் ஏமாற்றம் அடைந்தது வருத்தமாக உள்ளது. எங்களை வேல்முருகன் ஆதரித்தால் வரவேற்போம். தேர்தல் முடிவு புரட்சிகரமாக அமையும்.
விருத்தாசலத்தில் நடந்த அ.தி.மு.க பிரசாரக் கூட்டத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இது பற்றி தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தேர்தல் அறிக்கை என்பதே வெற்று அறிக்கை. நாங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. செயல்பாட்டு வரைவு அறிக்கை தான் வெளியிட்டுள்ளோம்.
கடலூரில் என்னை ஆதரித்து திரைபட இயக்குநர்கள் பாரதிராஜா, செல்வமணி உள்ளிட்டோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் வார்டனாக பணியாற்றியவர் ராஜேந்திரன் (வயது 38). அ.தி.மு.க. மாணவரணி செயலாளராகவும் இருந்தார்.
விருத்தாசலம் அருகிலுள்ள குப்பநத்தத்தை சேர்ந்த இவர் கடந்த 13-ந் தேதி விடுதிக்கு தேவையான மளிகைப்பொருட்கள் வாங்க விருத்தாசலத்திற்கு தனது மினி வேனில் சென்றார். அப்போது 2 கார்களில் வந்த 20 பேர் கும்பல் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர்.
இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.
இதற்கிடையே ராஜேந்திரனைக்கொன்ற கொலையாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் நேற்று விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் விருத்தாசலம்-கடலூர் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இதற்கிடையே ராஜேந்திரனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக குறுந்தங்கூரை சேர்ந்த ராஜவேல் (50), குப்பநத்தத்தைச் சேர்ந்த அய்யாசாமி மனைவி தனலட்சுமி (38), ராஜவேல் மகள் சூரியகாந்தி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய 15-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடிவருகிறார்கள்.






