என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டி: நெய்வேலி தொகுதியில் வேல்முருகன் களம் இறங்குகிறார்
    X

    தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டி: நெய்வேலி தொகுதியில் வேல்முருகன் களம் இறங்குகிறார்

    சட்டசபை தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சியின் தலைவர் வேல்முருகன் நெய்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.
    கடலூர்:

    பா.ம.க.வில் இருந்து பிரிந்து தமிழக வாழ்வுரிமை கட்சியை தொடங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தார். தற்போதைய சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சிக்கு அ.தி.மு.க.வில் தொகுதி ஒதுக்கப்படவில்லை.

    இதனால் அதிருப்தியில் இருந்த வேல்முருகன், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினார். இந்த தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடுவதாக வேல்முருகன் நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக கடலூரில் வேல்முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சட்டமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று கட்சியின் செயற்குழு முடிவு எடுத்துள்ளது. செயற்குழு முடிவின்படி நான்(வேல்முருகன்) நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன். மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் செயற்குழு கூடி முடிவு செய்யும்.

    கூட்டணி பலத்தையோ, பண பலத்தையோ நம்பி போட்டியிடாமல், தமிழக மக்களை நம்பி களம் காண்கிறோம். தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நியாயமான முறையில் தேர்தலை நடத்தும் என்று எதிர்பார்க்கிறோம். எங்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் வாக்களித்து எங்களுக்கு அங்கீகாரத்தை உருவாக்கித்தர வேண்டும் என்று வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறேன்.

    அ.தி.மு.க. எங்களை கடைசி நிமிடத்தில் தேர்தலில் நிற்க சின்னம் கூட பெறமுடியாதபடி வெளியேற்றி இருக்கிறது. எங்களை வெளியேற்றியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுவதாக என் காதுக்கு வருகிறது. ஆனால் என்ன நடந்தது என்ற உண்மையை தேர்தலுக்கு பிறகு சொல்வேன்.

    இந்த தேர்தலில் எந்த கட்சியையும் எதிரிகட்சியாக பார்க்கவில்லை. மற்ற கட்சிகள் ஆதரவு கேட்டால் கொடுப்பது பற்றி பரிசீலிப்பேன். ஆனால் பா.ம.க.வோடு மட்டும் ஒருபோதும் கூட்டணி வைத்துக்கொள்ளமாட்டோம்.

    இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்தார்.

    Next Story
    ×