என் மலர்tooltip icon

    செய்திகள்

    நல்லாட்சி நடைபெற வேண்டும் என்பது தி.மு.க.வின் நோக்கம்: கடலூர் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேச்சு
    X

    நல்லாட்சி நடைபெற வேண்டும் என்பது தி.மு.க.வின் நோக்கம்: கடலூர் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேச்சு

    நல்லாட்சி நடைபெற வேண்டும் என்பது தி.மு.க.வின் நோக்கம் என்று கடலூரில் நடந்த பிரசார கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார்.
    கடலூர்:

    தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்றுமுன்தினம் தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கினார். சென்னை சைதாப்பேட்டையில் இருந்து பிரசாரத்தை ஆரம்பித்த அவர் புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு இரவில் அங்கு தங்கினார்.

    பின்னர் நேற்று மாலை புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு கடலூருக்கு மாலை 5.20 மணிக்கு வந்தார். அங்கு மஞ்சக்குப்பம் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கருணாநிதி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாட்டில் நல்லாட்சி நடைபெற வேண்டும் என்பது தி.மு.க.வின் நோக்கம். நாங்களே ஆள வேண்டும் என்று கருதுகின்றவர்கள் அல்ல நாங்கள். தி.மு.க., தேர்தலுக்காக இருக்கும் அரசியல் கட்சி அல்ல. ஒரு சமுதாய மலர்ச்சி இயக்கம். சமுதாயத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்களை கை தூக்கி விடுகின்ற, பின்தங்கிய மக்களையெல்லாம் முன்னேற்ற பாடுபடுகின்ற ஒரு பாட்டாளி இயக்கம் தான் தி.மு.க.

    பெரியாரும், அண்ணாவும், சமுதாயத்தில் சாதி கொடுமையெல்லாம் நீங்கி எல்லோரும் சமம் என்கிற நிலை உருவாக வேண்டும் என்பதற்காக பல்லாண்டு காலம் அரும்பாடுபட்டார்கள். ஆனால் இடையிடையே அதில் தலையிட்டு அவர்களுடைய கொள்கைகளுக்கு மாறாக, பெரியாருடைய எண்ணங்களுக்கு மாறாக, அண்ணாவின் கருத்துக்கு மாறாக ஏதேதோ நாட்டில் நடைபெறுகிறது.

    நாங்கள் இந்த நாட்டில் சாதி வேறுபாடு இருக்க கூடாது, மதமாச்சரியங்கள் இருக்கக்கூடாது. எல்லோரும் சமம் என்ற நிலையில் பாடுபட்டு வருகின்றோம். அதற்கு மாறாக எது நடந்தாலும் அவர்களையெல்லாம் தூக்கி எறிய வேண்டும் என்ற உத்வேகத்தோடு தி.மு.க.விலே நாங்கள் இன்றைக்கு பணியாற்றுகின்றோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்களுக்கு பொதுமக்களாகிய நீங்கள், திராவிட மக்களாகிய நீங்கள், தமிழ் மக்களாகிய நீங்கள், எங்களுடைய கைகளை பலப்படுத்த துணைபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளத்தான் வந்திருக்கிறேன்.

    நாங்கள் பலப்பட்டால் தமிழகத்தில் உள்ள சாதி பேதங்களை, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற சூழ்நிலைகளையெல்லாம் அகற்ற எங்களால் முடியும். எங்களையெல்லாம் உங்களுடைய சகோதரர்களாக கருதி, உடன் பிறப்புகளாக கருதி, எங்களை கைவிடாமல் எங்களுக்கு என்றென்றும் தோன்றாதுணைவர்களாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள தான் கடலூருக்கு வந்துள்ளேன்.

    நாங்கள் உங்களோடு தோழர்களாக நின்று எந்த நேரத்திலும் ஏழை எளிய மக்கள், சாதாரண சாமானிய மக்கள் தான் எங்களுக்கு தோழர்கள் என்ற உணர்வோடு குரல் கொடுக்கிற இயக்கத்தின் சொந்தக்காரர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். நாங்கள் தியாகத்தை மதிப்பவர்கள், எந்த நேரத்திலும் உங்களுக்காக உதவக்கூடியவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    இந்த காலத்திலே நம்முடைய சக்தியை எப்படியெல்லாம் பெருக்க வேண்டும் என்று யோசித்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று சாதாரண, சாமானிய ஏழை எளிய மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

    உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள எனக்கு உரிமை இருக்கிறது. ஏனென்றால் நானும் உங்களோடு சேர்ந்து கஷ்டப்பட்டவன், பாடுபட்டவன், பாடுபட்டு கொண்டே இருப்பவன், இன்னும் பாடுபடப் போகிறவன். எனவே உங்களுக்காக பாடுபடுகின்ற, உங்களுக்காக உழைக்கின்ற, அல்லும் பகலும் பேசிக்கொண்டு இருக்கிற, உங்களுக்காக கவலைப்படுகிற உங்களது தம்பிகளிலேயே ஒருவன் நான் என்பதை மறந்து விடக்கூடாது, உங்களது பிள்ளைகளில் ஒருவன் நான் என்பதை மறக்க கூடாது. நான் உணர்ச்சியோடு பேசுகிறேன். என்னுடைய தாகத்தை வெளியிடுகிறேன்.

    இப்போது உங்களுடைய வாக்குகளை எங்களுக்கு கொடுங்கள் என்று கேட்பதற்கு காரணம் ஓட்டு வேட்டை அல்ல. ஓட்டு வேட்டை என்ற பெயரால் தமிழக மக்களின் வரி பணத்தையெல்லாம் வாரி சுருட்டி கொண்டு இருக்கிற வஞ்சகர்களுக்கு பாடம் புகட்ட நீங்கள் உங்களுடைய வெற்றி முழக்கத்தை இன்று முதலே தொடங்குங்கள் என்று கேட்டுக்கொண்டு உங்களுடைய அன்பான வரவேற்புக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை தாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி சிதம்பரத்துக்கு புறப்பட்டு சென்றார்.

    Next Story
    ×