என் மலர்tooltip icon

    கடலூர்

    அண்ணன்-தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலைய தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன்கள் வினோத்குமார் (வயது 21), சதீஷ்குமார்(19). வினோத்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த செங்கேணி மகன் லட்சுமணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் வினோத்குமார் வீட்டுக்கு சிலர் வந்து தங்கினர். இதுபற்றி அறிந்த லட்சுமணன், தன்னை கொலை செய்யத் தான் வினோத்குமார் சதித்திட்டம் தீட்டுகிறார் என நினைத்தார். பின்னர் அவர் கடந்த 21.5.2016 அன்று தனது ஆதரவாளர்கள் சேர்ந்து சதீஷ்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இருப்பினும் ஆத்திரம் தீராத லட்சுமணன், வீடு முழுவதும் வினோத்குமாரை தேடினார். அப்போது அங்குள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த வினோத்குமாரையும் அவர்கள் வெட்ட முயன்றனர். இதில் பதறிய அவர் வீட்டில் இருந்து வெளியேறி தெருவில் ஓடினார். ஆனால் லட்சுமணன் உள்ளிட்டோர் ஓட ஓட விரட்டிச் சென்று வினோத்குமாரை வெட்டிக் கொலை செய்தனர்.

    இந்த இரட்டைக்கொலை தொடர்பாக கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் நீதிபதி செந்தில்குமார் தனது தீர்ப்பில், லட்சுமணனுக்கு 2 ஆயுள் தண்டனையும், ரூ.7,500 அபராதமும், டேவிட், பாலமுருகன், சவுந்தர்ராஜன், அருண்குமார், சதீஷ், ஆனந்தராஜ், ராஜ்குமார், கணபதி, சுமன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.4500 அபராதமும் விதித்தார். அரசு தரப்பில் வக்கீல் பாஸ்கர் ஆஜராகி வாதாடினார்.
    நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் பலியாகினர்.
    நெய்வேலி:

    நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கினர்.

    இவர்களில் 6 பேர் உயிரிழந்தனர். 16 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறி உள்ளார்.

    என்எல்சியில் இரண்டு மாதங்களுக்குள் நடந்த இரண்டாவது விபத்து இதுவாகும். இதற்கு முன்பு மே மாதம் நடந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    நெல்லிக்குப்பம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    நெல்லிக்குப்பம்:

    நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளகேட் பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் ஏ.டி.எம். மையத்துக்குள் இருந்த எந்திரம் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் தலைமையில் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டனர். அப்போது எந்திரத்தின் வெளிப்பகுதி முழுவதும் உடைந்து தொங்கி கொண்டிருந்தது.

    பின்னர் போலீசார், ஏ.டி.எம். மையத்துக்கு எதிரே உள்ள வீட்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நேற்று அதிகாலை 3 மணி அளவில் மர்ம நபர்கள் 2 பேர் ஏ.டி.எம் மையத்திற்குள் சென்று உடனே மின் இணைப்பை துண்டித்துள்ளனர். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை சிறிதுநேரம் உடைத்தனர். ஆனால் எந்திரத்தில் உள்ள லாக்கரை உடைக்க முடியாததால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதையடுத்து போலீசார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம். எந்திரத்தில் எவ்வளவு பணம் இருந்தது என்பது குறித்து வங்கி அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அதிகாலையில் மர்மநபர்கள் 2 பேர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    பண்ருட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவதிகை செட்டி பட்டறை காலனி அருகில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனே போலீசார் விரட்டிச்சென்று 3 பேரை மடக்கிப்பிடித்தனர். 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன்(வயது 30), சிவனேசன்(33), ராஜசேகர்(35) ஆகியோர் என்பதும், தப்பி ஓடியவர்கள் ராஜா, ரகு, திலீப், சக்திவேல் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சிலம்பரசன் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.
    கடலூர் மாவட்ட ஆட்சியாளராக உள்ள அன்புச் செல்வன் இன்றுடன் ஓய்வு பெறுவதால், புதிய கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    கடலூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் அன்புச் செல்வன். இவர் கொரோனா தடுப்புப்பணியை மிகச் சிறப்பாக செய்து வந்தார். இந்நிலையில் இன்றுடன் அவர் ஓய்வு பெறுகிறார்.

    இதனால் கடலூர் மாவட்ட ஆட்சியராக சந்திரசேகர் சகாமுரியை நியமித்து தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 கொரோனா நிவாரண தொகை வழங்கப்படும் என்று கலெக்டர் அன்புசெல்வன் அறிவித்துள்ளார்.
    கடலூர்:

    கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கியும், பொருளாதார மீட்பு நடவடிக்கை மேற்கொண்டும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

    தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13 லட்சத்து 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 ரொக்கமாக அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி கடலூர் மாவட்டத்தில் தேசிய அடையாள வைத்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கிராம வாரியாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வருகிற ஜூலை மாதம் முதல் வாரத்தில் ரூ.1000 ரொக்கமாக வீட்டிற்கே சென்று வழங்கப்பட உள்ளது.

    இந்த நிவாரண தொகை வழங்கும் போது, மாற்றுத்திறனாளிகள் தங்களது அசல் தேசிய அடையாள அட்டையை காண்பித்தும், அதன் நகலை நிவாரண தொகை வழங்கும் அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வினியோக படிவம் பூர்த்தி செய்ய தேவையான விவரங்களை மாற்றுத்திறனாளிகள் அளிக்க வேண்டும்.

    அதாவது, தனி நபர் சம்பந்தப்பட்ட விவரம், கல்வித்தகுதி, வேலைவாய்ப்பு, அடையாள அட்டை மற்றும் யுடிஐடி விண்ணப்பம் நிலை ஆகியவை ஆகும். தேசிய அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கொரோனா நிவாரண தொகை வழங்கப்படும். இதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை 9499933472 என்ற எண்ணிலும், மாநில உதவி மைய எண் 18004250111 மற்றும் வாட்ஸ்- அப் எண் 9700799993 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    துப்புரவு பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை முகாம் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    புவனகிரி:

    புவனகிரி பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை முகாம் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்பந்தன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவர் ஜானகிராமன், சித்தமருத்துவர் ஜெயராஜ், சுகாதார ஆய்வாளர் தனசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்கள், அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும் கபசுர குடிநீர் பொடி, வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் புவனகிரி பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள் ராசு ராஜ்குமார் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    புதுப்பேட்டையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    புதுப்பேட்டை:

    தொரப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் மற்றும் புதுப்பேட்டை போலீசார், பொதுமக்கள் முககவசம் அணிந்து வருகிறார்களா? என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு ரூ.100 அபராதம் விதித்து எச்சரித்தனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் தீபன், செல்வம் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


    விருத்தாசலம் அருகே வட்டிக்கடை உரிமையாளரை தாக்கி நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் இளவரசன்(வயது 51). இவர் கருவேப்பிலங்குறிச்சியில் வட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி வீரலட்சுமி.

    இளவரசன் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு ஒரு பையில் 5 பவுன் நகை, லாக்கர் சாவிகள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் அதனை வீட்டில் ஒரு இடத்தில் வைத்துவிட்டு இளவரசனும், வீரலட்சுமியும் தூங்கினர்.

    இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டுக்கு வந்த மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். பின்னர் வீட்டில் இருந்த 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். இந்த சத்தம் கேட்டு இளவரசன் திடுக்கிட்டு எழுந்து மர்மநபர்களை பிடிக்க முயன்றார்.

    அப்போது அவர்கள், இளவரசனை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் சரிந்து விழுந்தார். இதையடுத்து வீரலட்சுமியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். அதற்குள் வீரலட்சுமி சத்தம் போட்டதால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர் காயமடைந்த இளவரசனை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் பற்றி அறிந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ் ணன், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளவரசன் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்களை உடனே பிடிக்க போலீசாருக்கு உத்தர விட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    நள்ளிரவில் வட்டிக்கடை உரிமையாளரை தாக்கி 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி கூறினார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி தலைமை தாங்கினார். கலெக்டர் அன்புசெல்வன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி பேசியதாவது:-

    தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வருகிற 2 மாதங்களுக்கு பொதுமக்கள் தங்களை தானே பாதுகாத்துக்கொள்ள தனி மனித இடைவெளியை பின்பற்றிட வேண்டும். அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். கைகழுவும் பழக்கத்தினை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் நோய் தொற்றை கட்டுப்படுத்த கிருமி நாசினிகள், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 64 பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, சப்-கலெக்டர்கள் பிரவின்குமார் (விருத்தாசலம்), விசுமகாஜன்(சிதம்பரம்), கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    இரண்டு தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டது.
    கடலூர்:

    உலகப்புகழ் பெற்ற நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம் விழா கடந்த 19ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அந்நிகழ்வில் கோவில் தீட்சிதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து இன்று தேர்த்திருவிழா நடைபெறுவதாக இருந்தது.

    இதற்கிடையே கோவில் தீட்சிதர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இருவருக்கு தொற்று உறுதியானது.

    இதனால் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் இன்று நடைபெற இருந்த தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவிலுக்கு முன்பாக ஏராளமாக  காவலர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


    கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி நேற்று ஆய்வு செய்தார்.
    கடலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதை தடுக்கவும், கண்காணிக்கவும் மாவட்டந்தோறும் முதன்மை செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சிறப்பு அதிகாரிகளாக தமிழக அரசு நியமித்தது. இதன்படி கடலூர் மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி நியமிக்கப்பட்டார்.

    இதையடுத்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் மற்றும் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில் அவர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக நேற்று கடலூர் வந்தார். அவரை மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் கலெக்டர் அன்புசெல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோர் வரவேற்றனர்.

    தொடர்ந்து அவர் சின்னகங்கணாங்குப்பத்தில் வெளி மாநில, மாவட்டத்தில் இருந்து கடலூர் மாவட்டத்திற்குள் வருவோரை சோதனை செய்வதற்காக போடப்பட்ட சோதனைச்சாவடியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன்பிறகு அங்கு சுகாதாரத்துறையினர் அமைத்துள்ள முகாமை பார்வையிட்டு, அங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்களை நேரில் சந்தித்து பேசினார்.

    அதன்பிறகு கொரோனா பாதித்தவர்களில் அதிகம் உள்ளதால் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட ஆல்பேட்டை கன்னிக்கோவில் தெரு, திருப்பாதிரிப்புலியூர் போடிச்செட்டி தெரு, வெள்ளிமோட்டான்தெரு ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அந்த பகுதியில் செய்துள்ள சுகாதாரப்பணிகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கட்டுப்பாட்டு பகுதியான சிதம்பரம் மீதிக்குடி, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, விடுதி ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டு, அங்கு கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, சுகாதாரப்பணிகள் போன்றவற்றையும், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களையும் நேரில் பார்வையிட்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    முன்னதாக கடலூர் சின்னகங்கணாங்குப்பத்தில் ககன்தீப்சிங்பேடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு வழங்கிய அறிவுரைகளை ஏற்கனவே காணொலி காட்சி மூலம் கலெக்டரிடம் விளக்கி உள்ளேன். காய்ச்சல், சளி, இருமல், சுவாசப்பிரச்சினை இருந்தால் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள், கடந்த 10 நாட்களாக யார், யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்ற விவரத்தை கண்டிப்பாக அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களையும் கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும்.

    கடலூர் மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவை அனைத்திலும் தேவையான படுக்கை வசதிகளை, மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒரு மருத்துவமனையில் நோய் தொற்று உள்ளவர்கள் 60 அல்லது 70 பேருக்கு மேல் வந்து விட்டால், தாமதமின்றி அடுத்த மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பி, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

    தற்போது கடலூர், சிதம்பரம் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர், வென்டிலேட்டர், உமிழ்நீர் பரிசோதனை கருவி, என் 95 முக கவசம் போன்றவை இருக்கிறதா? ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்று கண்டறிந்து, தேவைக்கேற்ப அவற்றை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    காய்ச்சல், இருமல், சளி, சுவாச பிரச்சினை இருந்தால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம். ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்தால் பாதுகாப்பாக இருக்கலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் நோய் தொற்று பரவுவதை தடுக்கலாம்.

    இவ்வாறு சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதா மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ×