search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATM Machine broken"

    பெரம்பலூரில் இன்று அதிகாலை ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் டவுன் வெங்கடேசபுரம் பகுதியில், பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் தனியார் வணிக வளாகம் உள்ளது.

    இந்த வணிக வளாகத்தில் வங்கி மற்றும் கல்வி நிறுவனங்களின் அலுவலகம், மத்திய அரசின் வருமான வரித்துறை அலுவலகம், தனியார் நிதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த வணிக வளாகத்தின் முகப்பில் இடதுபுறம் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரம் உள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் ஏ.டி.எம். மையத்திற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். பின்னர் அவர் தான் அணிந்திருந்த டி‌ஷர்ட் பனியன் கழட்டி, முகத்தை மூடிக்கொண்டு கண்காணிப்பு கேமராவை உடைத்தார்.

    தொடர்ந்து, தான் கையில் வைத்திருந்த கம்பால் ஏ.டி.எம். எந்திரத்தை சரமாரியாக அடித்து உடைத்தார். அதில் இருந்த பல லட்சம் ரூபாயை கொள்ளையடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்களில் சென்ற தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதி ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தில் நடந்த கொள்ளை முயற்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுகுறித்து புதிய பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார்.

    அதன் பேரில் ஊர்க்காவல் படையில் பணிபுரியும் பெரம்பலூர் மாவட்டம் அ.மேட்டூரை சேர்ந்த கண்ணன் (வயது 35) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளையனை பிடிக்க முயன்றார்.

    இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையன், தான் வைத்திருந்த கம்பால் ஊர்க்காவல்படை வீரர் கண்ணன் தலையில் ஓங்கி அடித்தான். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஆனாலும் விடா முயற்சியாக அவர் திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஊர்க்காவல் படை வீரர் கண்ணன் மற்றும் கொள்ளையன் தனுஷ்.

    இதுகுறித்து பெரம்பலூர் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் விரைந்து சென்று கொள்ளையனை பிடித்தனர். இதற்கிடையே நடந்த சண்டையில் கொள்ளையன் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த கண்ணன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்திருந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த திருடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனை துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணிகளின் மேற்பார்வையாளராக பணிபுரிபவர் என்றும், அவர் நாமக்கல் மாவட்டம் திருமலைபட்டி அருகே உள்ள இடையபட்டி கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் தனுஷ் (32) என்றும் தெரியவந்தது. தொடர்ந்து பெரம்பலூர் போலீசார் கொள்ளையனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊர்க்காவல் படை வீரரின் அதிரடி நடவடிக்கையால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.6 லட்சம் பணம் தப்பியது குறிப்பிடத்தக்கது.
    ×