என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • பொதுமக்கள் வங்கி கடன் பெறவும், வீடு கட்ட அனுமதி பெறவும் முடியாமல் அவதிப்படுகின்றனர்.
    • திருத்தம் செய்த பிறகு நத்தம் ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    கோவை,

    நத்தம் நில ஆவணங்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் போது நத்தம் நிலவரித்திட்டத்தின் கீழ் பட்டா வழங்கியவர்களுக்கு ரயத்துவாரி மனை என பட்டா வழங்காமல் அரசு நத்தம் மனை எனவும், அரசு புறம்போக்கு எனவும் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் வங்கி கடன் பெறவும், வீடு கட்ட அனுமதி பெறவும் முடியாமல் அவதிப்பட்டு வருவதாக கோவை மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி கூறியிருப்பதாவது:-

    2006-ம் ஆண்டுக்கு பின்னர் நத்தம் நில ஆவணங்களில் ஏற்பட்ட பட்டா மாறுதல் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களின் பெயரில் ஏற்பட்ட நடப்பு மாறுதல்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொண்டு இணையவழி சேவைக்கு கொண்டு வரும் நிலையில் உள்ளது.

    நத்தம் நிலவரித்திட்டத்தின் கீழ் மனை பட்டா வழங்கப்பட்ட இனங்கள் அனைத்தையும் ரயத்துவாரி மனை என பதிவு செய்ய நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனரால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் பல மாவட்டங்களில் பட்டா வழங்கப்பட்ட இடங்களையும், அரசு நத்தம் மனை என தவறாக நில ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தவறை ரயத்துவாரி மனை என நத்தம் நில ஆவணங்கள் கணினியில் பதியும் போது சரி செய்ய வேண்டும்.

    ஆனால், தற்போது வரை அவ்வாறு செய்யாமல் நத்தம் ஆவணங்களில் தவறாக அரசு நத்தம் மனை மற்றும் அரசு புறம்போக்கு என உள்ளதை அப்படியே கணினியில் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் கிராம நத்தம் பகுதியில் குடியிருக்கும் ஏழை மக்களின் நலன்களுக்கு எதிரானது ஆகும்.

    எனவே இதை திருத்தம் செய்த பிறகு நத்தம் ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் நத்தம் மனைப்பகுதியில் குடியிருக்கும் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்கள் நத்தம் பட்டா கையில் வைத்திருந்தும் அரசு கணக்குகளில் அரசு நிலமாக இருக்கும் பட்சத்தில் பட்டாவை அடமானமாக வைத்து வங்கி கடன் பெறவும், வீடு கட்ட அனுமதி பெறவும் இயலாமல் போகிறது. எனவே, இதை கவனத்தில் கொண்டு உடனடியாக ரயத்துமனை என நத்தம் நிலவரித்திட்ட பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 100 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் உள்ள இப்பாலம் தற்போதும் உறுதி தன்மையுடன் உள்ளது.
    • இப்பாலத்திற்கு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் வர்ணம் பூசும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வனப்பகுதி வழியாக சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் கல்லாறு பகுதியில் ஆறு சென்றது. இதையடுத்து ஆங்கிலேயர்களால் கடந்த 1924-ம் ஆண்டு தூண்களே இல்லாமல் தூரிப்பாலம் சாலை வசதிக்காக கட்டப்பட்டது.

    அதன்பின் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மேட்டுப்பாளையம் கல்லாறு முதல் நீலகிரி மாவட்டம் கூடலூர் வரை தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் வந்தது. இதையடுத்து கல்லாறு பகுதியில் தூரிப்பாலம் பகுதியில் கனரக வாகனங்கள் சென்று வரும் வகையில் கூடுதலாக ஒரு பாலம் கட்டப்பட்டது. அதன்பின் இப்பகுதியிலுள்ள தொங்கு பாலமான தூரிப்பாலம் பயன்பாடில்லாமல் இருந்தது.

    இருப்பினும் 100 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் உள்ள இப்பாலம் தற்போதும் உறுதி தன்மையுடன் உள்ளது.

    இதையடுத்து இச்சாலையின் வழியாக வரும் சுற்றுலா பயணிகள் இப்பாலத்தின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்வது வழக்கமாக உள்ளது.

    இதையடுத்து ஓடந்துறை ஊராட்சி தலைவர் தங்கவேலு தூரிப்பாலத்தை புனரமைத்து இதனை நினைவு சின்னமாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து ஊராட்சி தலைவர் தங்கவேலு கூறியதாவது:-

    கல்லாறு பகுதியில் பழமை வாய்ந்த தூரிப்பாலமாக இது உள்ளது. இதனை பாதுகாப்பது ஊராட்சி சார்பில் எங்களுக்கும் கடமை உண்டு. இதனிடையே பாலத்தின் அருகில் ஊராட்சிக்கு சொந்தமாக அரை ஏக்கர் நிலம் உள்ளது. இதனை பராமரித்து இப்பகுதியில் பூங்கா அமைக்க அரசிடம் ஆலோசனை கேட்டு வருகிறோம். முதல் கட்டமாக இப்பாலத்திற்கு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் வர்ணம் பூசும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அரசு அனுமதியுடன் இப்பாலத்தை நினைவு சின்னமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் ஊராட்சி நிர்வாகத்திற்கு வருமானம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • 15 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது.
    • தொட்டியின் 4 தூண்களும் இடிந்து கீழே விழும் நிலையில் காணப்பட்டது.

    அன்னூர்

    கோவை மாவட்டம் அன்னூர் வட்டத்திற்குட்பட்ட காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டம்பட்டியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும்.

    இந்த நிலையில் தொட்டியின் 4 தூண்களும் இடிந்து கீழே விழும் நிலையில் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கிராம சபை கூட்டங்கள் மற்றும் கவுன்சிலர், ஊராட்சிபஞ்சாயத்து தலைவரிடமும் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பான செய்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நமது மாலைமலர் நாளிதழில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று இடிந்து விழம் நிலையில் இருந்து நீர் தோக்க தொட்டி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

    மேலும் புதிதாக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தேக்க தொட்டி கட்டப்படும் என பஞ்சாயத்து தலைவர் தெரிவித்தார். குடிநீர் தொட்டியை இடித்து அகற்றப்பட்டதற்காக, இது தொடர்பான செய்தி வெளியிட்ட மாலைமலர் நாளிதழுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • கோவையில் வாரந்தோறும் போலீசார் சார்பில் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும்.
    • கமிஷனர் பாலகிருஷ்ணன் பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று விசாரணை செய்தார்.

    கோவை,

    கோவை மாநகர காவல் நிலையங்களில் குறைதீர் முகாம் நடந்தது.

    வாரந்தோறும் புதன் கிழமைகளில் கோவை அனைத்து காவல் நிலையங்களிலும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு அவற்றின் மீது சட்டத்துக்கு உள்பட்டு விசாரணை நடத்தி முறையாக தீர்வுகள் எட்டப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், கோவை மாநகரில் உள்ள அனைத்து சட்டம்-ஒழுங்கு, புலனாய்வுப் பிரிவு காவல் நிலையங்கள், மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் தனிப்பிரிவுகளில் பொது மக்களின் மனுக்கள் மீதான குறைதீர் முகாம் நேற்று நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 162 மனுக்களில் சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் ஆகிய இருதரப்பினரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

    இது தொடர்பாக கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    இந்த விசாரணையின் போது 64 புகார்களில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகிய இருதரப்பினரும் சமாதானமாகி விட்டனர். 44 மனுக்கள் முறையாக விசாரிக்கப்பட்டு குறைகளுக்கு ஏற்ப இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டவாறு தீர்வு காணப்பட்டது. 6 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 மனுக்கள் மீது ஆவணங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக விசாரணை நிலுவையில் உள்ளது. 33 மனுக்களில் சம்மந்தப்பட்ட இருதரப்பினரும் நீதிமன்றம் சென்று தீர்வு கண்டு கொள்வதாக தெரிவித்ததையடுத்து அவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் பாலகிருஷ்ணன் பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று விசாரணை செய்தார்.

    • பரத் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு கிணற்றில் குளிக்க சென்றார்.
    • பரத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள வரப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் பரத் (வயது 18). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார்.

    சம்பவத்தன்று பரத் தனது நண்பர்களான சரவணன், கிருஷ்ணன் ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடுவதற்காக வெளியே சென்றார். விளையாடி முடித்ததும் பரத் நண்பர்களுடன் சின்னவதம்பசேரியில் உள்ள வெள்ளியங்கிரி என்பவரது தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்க சென்றனர். ஜாலியாக குளித்து கொண்டு இருந்த போது பரத் திடீரென நீரில் மூழ்கினார்். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இது குறித்து அவரது தந்தை வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனது மகனை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிணத்துக்கடவு அருகே உள்ள சொளவம்பாளையத்தை சேர்ந்தவர் வீரன். இவரது மகன் கோகுலகிருஷ்ணன் (18). இவரும் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் மயிலேரிபாளையத்தில் உள்ள மலையான் குட்டையில் குளிக்க சென்றார். நண்பர்களுடன் குளித்துக்கொண்டு இருந்த போது திடீரென கோகுல கிருஷ்ணன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

    தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் நீரில் மூழ்கி இறந்த கோகுலகிருஷ்ணனின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • சமூக இடைவெளி, கைகழுவுதல் போன்ற கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் இருந்து வருகிறது. கடந்த வாரங்களில் தினசரி பாதிப்பு 20 என இருந்த நிலையில், தற்போது 40-க்கு மேல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலையில் சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    மேலும், அனைத்து தொழிற்சாலைகளிலும் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்ற சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் அருணா கூறியதாவது:-

    கோவை, கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சா லையில் 54 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இங்கு பணியாற்றி வந்த ஒரு சிலருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தவிர, அனைத்து தொழிலாளர்களும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், சமூக இடைவெளி, கைகழுவுதல் போன்ற கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சுகாதார ஆய்வாளர்கள் மூலம் தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் கொரோனா பரவல் இருப்பதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேட்டுப்பாளையம்- கோத்தகிரி இடையே உள்ள காட்சி முனையை ஐ.டி. ஊழியர் பிரீதம் ரசித்து கொண்டிருந்தார்.
    • 2 மணிநேர தேடலுக்கு பிறகு தலையில் படுகாயத்துடன் மயங்கி கிடந்த பிரீதமை மீட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை பீளமேடு அருகே உள்ள பெரிய மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் பிரீதம் (வயது 21). ஐ.டி. ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் ஊட்டிக்கு சென்றார்.

    செல்லும் வழியில் கோத்தகிரி -மேட்டுப்பாளையம் இடையே உள்ள காட்சி முனையில் அமர்ந்து இயற்கையின் அழகை ரசித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் 25 பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று காட்சி முனையில் இருந்து தவறி விழுந்த பிரீதமை தேடினர். 2 மணிநேர தேடலுக்கு பிறகு தலையில் படுகாயத்துடன் மயங்கி கிடந்த அவரை மீட்டனர்.

    பின்னர் மீட்கப்பட்ட பிரீதமை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மின் விபத்தில் வனவிலங்குகள் சிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • தாழ்வான உயரங்களில் இருந்த மின் கம்பங்களின் உயரங்கள் 30 அடி வரை உயர்த்தப்பட்டுள்ளன.

    கோவை,

    கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் கடந்த மாதம் ஊருக்குள் நுழைந்த யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். இந்த யானை வனத்திற்குள் செல்லும்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின் கம்பத்தின் மீது மோதியதில் மின் கம்பம் முறிந்து யானை மீது விழுந்தது. அப்போது, மின்சாரம் தாக்கி யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

    இதைத்தொடர்ந்து அரசு சார்பில் வனப்பகுதிகளில் யானை வழித்தடங்களில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் பாதைகளின் உயரத்தை அதிகரிக்க அறிவுறுத்தியது.

    கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் கோவை மண்டல மின்பகிர்மான கழகத்தின் தலைமை பொறியாளர் வினோதன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், கோவை மாவட்டம் முழுவதும் வனத்தையொட்டிய பகுதிகள் மற்றும் மலை அடிவாரப்பகுதிகள், யானை வழித்தடங்களில் மின் விபத்தில் வனவிலங்குகள் சிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மின் பகிர்மானம் வட்டத்தை சேர்ந்த மதுக்கரை, எட்டி மடை, மாவுத்தம்பதி, புரவிபாளையம் ஆகிய வனச்சரகங்களில் யானை வழித்தடங்களில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் பாதைகளில் யானைகளை மின் விபத்தில் இருந்து காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி, தாழ்வான உயரங்களில் இருந்த மின் கம்பங்களின் உயரங்கள் 30 அடி வரை உயர்த்தப்பட்டுள்ளன. இப்பணிகளில் மின்வாரிய ஊழியர்களுடன் வனத்துறையினர் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

    இது குறித்து தெற்கு மேற்பார்வை பொறியாளர் குப்புராணி கூறுகையில், "மதுக்கரை, எட்டிமடை, மாவுத்தம்பதி, புரவிபா ளையம் பகுதிகளில் யானை வழித்தடங்களில் தாழ்வாக செல்லும் மின் பாதைகளில் 48 பகுதிகளில் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

    தவிர, யானை வழிகளில் உள்ள 83 மின் கம்பங்களுக்கு முள் கம்பி பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 75 மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. 36 மின் கம்பங்களை உயர்த்தி உள்ளோம். பழுதடைந்த நிலையில் இருந்த 15 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன" என்றார்.

    • ஷபியின் செல்போன் எண், வாட்ஸ் அப்பையும் ஆய்வு செய்து வருகிறோம்.
    • ஷாரூக் ஷபி கோவைக்கோ, தமிழகத்தின் பிற பகுதிக்கோ வந்து சென்றாரா? இங்கு யாரையாவது சந்தித்தாரா? என விசாரித்து வருகிறோம்.

    கோவை:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் நோக்கி கடந்த 2-ந் தேதி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது.

    இந்த ரெயிலில் பயணித்த ஒரு குழந்தை உள்பட 3 பயணிகள், ரெயிலில் பயணித்த சக பயணி ஒருவரால் பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து, டெல்லியை ஷாகின் பாக்கை சேர்ந்த ஷாரூக் ஷபி (24) என்பவரை கைது செய்தனர்.

    இந்த சம்பவத்திற்கு பின்னணியில் தீவிரவாத கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் இந்த வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ. அதிகாரிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

    கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 23-ந் தேதி கோவை கோட்டைமேடு, ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான்.

    விசாரணையில், முபின் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர் என்பதும், மக்களை கொல்லும் நோக்கில் காரில் வெடி பொருளை நிரப்பி கார் வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டதும் தெரியவந்தது.

    இதேபோல் கடந்த நவம்பரில் கர்நாடக மாநிலம் மங்களூருவில் குக்கர் குண்டு வெடித்தது. இது தொடர்பாக ஷாரிக் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    இவர் கோவைக்கு வந்து தங்கியதும், இங்கு பல்வேறு இடங்களை நோட்டமிட்டதும் கண்டறியப்பட்டது.

    இந்த 2 வழக்குகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சிலரை கைதும் செய்துள்ளனர். தொடர்ந்து இந்த வழக்குகள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கேரளாவில் ரெயில் பயணிகள் எரித்து கொல்லப்பட்ட சம்பவமும், கோவை, கர்நாடகாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் என இந்த 3 சம்பவங்களும் ஒரே வகையிலான தாக்குதலாக இருப்பதால், கேரளாவில் ரெயில் பயணிகளை எரித்து கொன்ற வழக்கில் கைதாகி உள்ள ஷாரூக் ஷபிக்கு கோவையில் யாரிடமாவது தொடர்பு உள்ளதா? என கோவை மாநகர போலீஸ் விசாரித்து வருகிறது.

    கோவை மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கடந்த சில மாதங்களாக தீவிரவாதிகளால் தென் மாநிலங்களில் பொதுமக்களை குறிவைத்து இதுபோன்ற தாக்குதல் அரங்கேற்றப்படுகின்றன.

    ஷாரூக் ஷபி கோவைக்கோ, தமிழகத்தின் பிற பகுதிக்கோ வந்து சென்றாரா? இங்கு யாரையாவது சந்தித்தாரா? என விசாரித்து வருகிறோம்.

    சைபர் கிரைம் போலீசார் தொலை தொடர்பு நிறுவனங்கள், இணைய நெறிமுறை விவரப்பதிவு முறை ஆகியவற்றின் மூலம் எங்களது விசாரணையை மேற்கொண்டு வருகிறோம். மேற்கண்ட 3 சம்பவங்களுக்கு தொடர்புள்ளதா எனவும் ஆய்வு செய்கிறோம்.

    மேலும் ஷபியின் செல்போன் எண், வாட்ஸ் அப்பையும் ஆய்வு செய்து வருகிறோம். அதில் அவர் யார், யாரிடம் எல்லாம் பேசினார். அவர்களுக்கும், இவருக்கும் என்ன தொடர்பு, அவர்களின் பின்புலம் என்ன? கார் வெடிப்பில் கைதானவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுடன் இவர் பேசினாரா? அவர்களுடன் இவருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

    இதுவரை 100-க்கும் மேற்பட்ட அழைப்புகளை ஆராய்ந்துள்ளோம். தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். செல்போன் மட்டுமின்றி பிரத்யேக செயலி மூலம் பேசியுள்ளனரா, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்தனரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, கேரளா ரெயில் பயணிகள் எரிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஷபிக்கும், கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.

    • காலை மற்றும் மாலை நேரங்கள், விஷேச நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • புதிதாக போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வாசுதேவன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    வடவள்ளி,

    கோவை-மருதமலை சாலை கோவை நகரின் முக்கிய சாலையாக உள்ளது.

    இந்த சாலையில் வேளாண் பல்லைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், சட்டக்கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்டவை இந்த சாலையில் தான் இயங்கி வருகிறது.

    மேலும் முருகப்பெருமானின் 7-ம் படை வீடு என்று அழைக்கப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும்.

    இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் இந்த சாலையில் எப்போதுமே வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். அரசு பஸ்கள், லாரிகள், மோட்டார் சைக்கிள்கள் என வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். இதனால் எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாக காணப்படும்.

    அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்கள், விஷேச நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    மேலும் போக்குவரத்தை சீர் செய்வதற்கு, போக்குவரத்து போலீசார் என ஒரு போலீசார் கூட வடவள்ளி போலீஸ் நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பணியில் இல்லாமல் இருந்து வந்தனர்.

    இந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரை பணிக்கு அமர்த்தி போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று, சில நாட்களுக்கு முன்பு, வடவள்ளி போலீஸ் நிலையத்தில், புதிதாக போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வாசுதேவன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து அவர் வடவள்ளி-தொண்டாமுத்தூர் சந்திப்பில், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அந்த பகுதியில் சிக்னல் இல்லாதால் அவரே போக்குவரத்தை சீர் செய்து வாகனங்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். மேலும் இந்த பகுதியில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், மக்களும் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • யானை மடுவு உள்ளிட்ட 2 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளது.
    • இரவு நேரங்களில் தண்ணீருக்காக ஊருக்குள் வன விலங்குகள் புகுவது தற்போது குறைந்து உள்ளது.

    வடவள்ளி,

    கோவை மாவட்டம் மேற்கு மலைத்தொடர்ச்சி அடிவார பகுதியில் மருதமலை , ஓணாப்பாளையம், அட்டுக்கல், வெள்ளருக்கம்பாளையம், நரசீபுரம், பூண்டி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் என்பதால் போதிய மழை இன்றி வனப்பகுதியில் வறட்சியான சூழல் நிலவுகிறது.

    வனப்பகுதியில் யானை, மயில், புள்ளி மான்கள், சிறுத்தை, காட்டுப்பன்றிகள், காட்டு மாடுகள் உள்ளிட்டவை மேற்கு மலைத்தொடர்ச்சி வனப்பகுதியில் வசித்து வருகின்றன. கோடை காலத்தில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க ஆங்காங்கே வனப்பகுதியில் வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டிகள் கட்டி அவற்றில் சோலார் மூலம் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    அதிலும் யானைகள் ஒன்று கூடும் இடமான கோவை வனச்சரகத்தில் யானை மடுவு உள்ளிட்ட 2 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளது. அங்கு வனவிலங்குகள் தாகம் தீர்க்கும் வகையில் எப்போதும் தண்ணீர் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது தொட்டிகளை பார்வையிட்டு நீர் நிரப்ப ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உப்புக்கட்டிகள் அருகில் வைக்கப்படட்டு உள்ளது.கோவை வனத்துறை கோடைக்காலத்தில் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் இரவு நேரங்களில் தண்ணீருக்காக ஊருக்குள் வன விலங்குகள் புகுவது தற்போது குறைந்து உள்ளது. 

    • குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு சுவாசிக்க முடியாமல் மூச்சுத் தினறல் ஏற்பட்டுள்ளது.
    • தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூரை அடுத்து உள்ள அசோகபுரம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள ெரயில்வே பாலம் அருகில் கொட்டப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக இங்கு குப்பைகள் மலை போல் குவிந்துள்ளன. இங்கு அடிக்கடி மர்ம நபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்து விடுவதால் தீ விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு இங்குள்ள குப்பைகளில் இருந்து புகை வந்துள்ளது. தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது.இதன் காரணமாக அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு சுவாசிக்க முடியாமல் மூச்சுத் தினறல் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து கவுண்டம்பாளையத்தில் உள்ள கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    ×