என் மலர்
செங்கல்பட்டு
- மருதேரி நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு இருவரும் தூங்கினர்.
- திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்போரூர்:
சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து திருப்போரூர் அருகே உள்ள மருதேரி பகுதிக்கு நேற்று இரவு அரசு பஸ் (60 எம்) சென்றது. டிரைவராக செந்தில்குமாரும், கண்டக்டராக கோபாலகிருஷ்ணனும் இருந்தனர்.
மருதேரி நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு இருவரும் தூங்கினர். நள்ளிரவு 1.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் திடீரென டிரைவர் செந்தில்குமார், கண்டக்டர் கோபால கிருஷ்ணனை தாக்கி டிக்கெட்டுடன் இருந்த பணப்பை, 2 செல்போன்களை பறித்தனர்.
இதனை தடுக்க முயன்ற டிரைவர் செந்தில்குமாரின் தலையில் கத்தி வெட்டும் விழுந்தது. பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
பணப்பையில் ரூ.8,500, 20 ஆயிரம் மதிப்புள்ள டிக்கெட் பண்டல்கள் இருந்தன.
இதேபோல் அதே பகுதியில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து பூச்செடிகளை ஏற்றி வந்த லாரி டிரைவர் கிருஷ்ண மூர்த்தியையும் மர்மகும்பல் தாக்கி ரூ. 5 ஆயிரம் மற்றும் 2 செல்போன்களை பறித்தனர். மேலும் லாரியின் முன்பக்க கண்ணாடியையும் உடைத்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி சர்வதேச 44வது "செஸ் ஒலிம்பியாட்" போட்டி தொடங்குகிறது.
- மாமல்லபுரம் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி சர்வதேச 44வது "செஸ் ஒலிம்பியாட்" போட்டி தொடங்குகிறது. இந்தபோட்டி ஆகஸ்ட் 10-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி மாமல்லபுரம் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மாமல்லபுரம், வெண்புருஷம் சாலை யோரத்தில் இன்று காலை ஏராளமான மிட்டாய் பாக்கெட்டுகள் குவியலாக வீசப்பட்டு கிடந்தன. இதுகுறித்து அறிந்ததும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
காலாவதியான கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் பாக்கெட்டுகள் அதிக அளவில் வீசப்பட்டு இருந்தது.
அதனை கொட்டியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக மாமல்லபுரம் பகுதியில் கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து வியாபாரிகள் கடைகளில் இருந்த காலாவதியான மிட்டாய் பாக்கெட்டுகளை சாலை யோரம் வீசி இருக்கலாம் என்று தெரிகிறது.
- கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதில் யார் பெரியவர் என்ற காரணத்திற்காக இச்சம்பவம் நடைபெற்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
- வழக்கை விசாரணை செய்த நீதிபதி குற்றச்செயலில் ஈடுபட்ட 2 மாணவர்களையும் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
வடலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அடுத்த பொத்தேரி பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதே கல்லூரியில் படிக்கும் வட மாநிலங்களை சார்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து கற்களை கொண்டு தாக்கி மோதி கொண்டனர்.
இதில் அவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளிவந்தது. இந்த நிலையில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதில் யார் பெரியவர் என்ற காரணத்திற்காக இச்சம்பவம் நடைபெற்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட சில மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தங்கி வந்த வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தியதில் அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் போதை பொருட்கள் அதை உபயோகிக்க உதவும் கருவிகளை கூடுவாஞ்சேரி போலீசார் கைப்பற்றினர்.
மோதலில் ஈடுபட்ட 2 மாணவர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி குற்றச்செயலில் ஈடுபட்ட 2 மாணவர்களையும் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து மாணவர்கள் இருவரும் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- சி.எஸ்.சி பொது சேவை நிறுவனம் பல இடங்களில் முகாம் அமைத்து இலவசமாக பதிவு செய்து கொடுத்து வருகிறது.
- மாமல்லபுரத்தில் தங்கியிருந்து வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் வருமான வரி கட்டாத சிற்பிகள், சாலையோர கடை வியாபாரிகள், பாசி, மணி விற்போர், கூலித்தொழில் செய்வோர் உள்ளிட்ட பலருக்கு தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் பதிவு நடை பெற்றது.
உச்சநீதிமன்றம் ஆணையின் படி வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் பதிவுகளை முடிக்கும் நிலை உள்ளதால் சி.எஸ்.சி பொது சேவை நிறுவனம் பல இடங்களில் முகாம் அமைத்து இலவசமாக பதிவு செய்து கொடுத்து வருகிறது.
இதில் உள்ளூர், வெளியூர், வெளிமாநில சிற்பிகள், ஓட்டல் தொழிலாளர்கள், நடைபாதை கடை ஊழியர்கள், குதிரை ஓட்டிகள், கடற்கரையில் கேளிக்கை நடத்துவோர், போட்டோ கலைஞர்கள், தள்ளுவண்டி கடை வைத்திருப்போர் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதுவரை பதிவு செய்துள்ளனர்.
சிற்பிகள் நலச் சங்கத்தின் நிர்வாகி இளையராஜா மற்றும் சக உறுப்பினர்கள் முன்னின்று நல வாரியத்தின் பதிவு பணிகளை கவனித்து வருகிறார்கள். இதனால் மாமல்லபுரத்தில் தங்கியிருந்து வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- திருக்கழுகுன்றம் அடுத்த தத்தலூரை சேர்ந்தவர் மதியழகன்.
- திருக்கழுகுன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றம் அடுத்த தத்தலூரை சேர்ந்தவர் மதியழகன் (வயது52). விவசாயியான இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர்.
வீட்டில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த 8-ந்தேதி அவரது வயலில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து திருக்கழுகுன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா, நொலம்பூர் கிராமத்திற்குட்பட்ட மேலபுதுகாலனியை சேர்ந்தவர் துலுக்காணம். இவரது மனைவி காந்தா (வயது 60). இவர் அச்சரப்பாக்கம் அருகே ஆத்தூர் சுங்கசாவடி அருகே சாலையோரமாக பலாப்பழக்கடை வைத்து நடத்தி வந்தார்.
இன்று காலை 6.15 மணிக்கு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரி காந்தா மீது மோதியது. இதில் காந்தா சம்பவ இடத்திலேயே பலியானார்.
- சென்னை ராமாபுரம் மைக்கேல் கார்டன் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ்.
- செல்போன்களை பறிமுதல் செய்து அவர்மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு:
சென்னை ராமாபுரம் மைக்கேல் கார்டன் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் ஜோசப் ஆல்வின் வயது (42). இவர் ஊர்ஊராக சென்று மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக தேர்ந்தெடுத்து அங்கு மக்களோடு மக்களாக கலந்து செல்போன்களை திருடுவதை தனது தொழிலாக வைத்துள்ளார்.
இந்நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு உதவிக்காக வரும் உறவினர்கள் இரவு நேரங்களில் ஆஸ்பத்திரி வளாகத்தில் தூங்கும்போது அவர்களோடு பேச்சு கொடுத்து நட்பாகி அங்கேயே தூங்குவது போல் நடித்து அவர்கள் தூங்கிய பிறகு செல்போன்களை திருடியுள்ளார். அதில் சென்னை சோழிங்கநல்லூர் அண்ணாதெருவை சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் கந்தன் என்பவரது போனை திருட முயற்சித்தபோது கந்தனிடம் ஜோசப் ஆல்வின் கையும் களவுமாக பிடிபட்டார். உடனடியாக செங்கல்பட்டு டவுன் நிலையத்தில் தகவல் அளித்து ஜோசப்ஆல்வினை ஒப்படைத்தார். அவரை விசாரித்த போலீசார் அவரிடமிருந்த செல்போன்களை பறிமுதல் செய்து அவர்மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
- மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதையொட்டி மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு.
- கலெக்டர் ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், 44-வது செஸ் ஒலியமியாட் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதையொட்டி, மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்வது குறித்து மாவட்ட கலெக்டர் ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சா.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
- கிழக்கு கடற்கரை சாலை சாலவான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் காமராஜர் பெயரில் புதிய நூலகம் திறக்கப்பட்டது.
- மாமல்லபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் காமராஜரை பற்றி பேசிய அப்பள்ளி மாணவர், மாணவிகளுக்கு பரிசுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டது.
கிழக்கு கடற்கரை சாலை சாலவான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் காமராஜர் பெயரில் புதிய நூலகம் திறக்கப்பட்டது. நூலகம் அருகில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதையடுத்து மாணவ, மாணவிகள் கோலாட்டம், பரதநாட்டியம், சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு மாமல்லபுரம் வட்டார நாடார் சங்கம் சார்பில் பரிசு, நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாமல்லபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் பேச்சு போட்டி, நடத்தப்பட்டது. விழாவில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், திருப்போரூர் வட்டார கல்வி அலுவலர்கள் பாஸ்கரன், சிவசங்கரன், தலைமை ஆசிரியர் ஜாக்குலின் எஸ்தர், நாடார் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் மின்சார சேவைகளும் சிறிது நேரம் தடைப்பட்டது.
- உடனடியாக ரெயில்வே அதிகாரிகள் மாற்று வழிப் பாதையில் மின்சாரத்தைப் பெற்று ரயில்களை இயக்கினர்.
தாம்பரம்:
தாம்பரம் சானட்டோரியம், துர்கா நகர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் (வயது 19). பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு பெயிண்டராக வேலைபார்த்து வருகிறார். இவர் குரோம்பேட்டையில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் தாம்பரம் பகுதியை சேர்ந்த மாணவியை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
அவர் மாணவியிடம் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால் மாணவி இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்.
ஆனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாததால் மனமுடைந்த கிஷோர் இன்று காலை 8.30 மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள 60 அடி உயர உயர் மின் கோபுரத்தில் திடீரென ஏறினார். மாணவியை திருமணம்செய்து வைக்க வேண்டும் என்று கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் துணை மின் நிலைய செயற்பொறியாளர் பொன்னரசு உடனடியாக அப்பகுதி முழுவதும் மின் இணைப்பை துண்டித்தார். இதற்குள் தாம்பரம் போலீசாரும் அங்கு வந்தனர். உதவி கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் உயர் மின் அழுத்த கோபுரத்தின் உச்சியில் நின்று மிரட்டல் விடுத்த கிஷோருடன் மைக் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அவர் நீண்ட நேரம் கீழே இறங்க மறுத்து அடம்பிடித்தார். பின்னர் அவரது நண்பர்களை வரவைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து காலை 10.30 மணி அளவில் கிஷோர் கீழே இறங்க சம்மதித்தார். அவரை தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் பத்திரமாக கீழே இறக்கி மீட்டனர்.
கிஷோரின் இந்த திடீர் போராட்டத்தால் காலை 8.30 மணிமுதல் 10.30 மணிவரை 2மணி நேரம் தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், சானட்டோரியம், குரோம்பேட்டை பகுதிகளில் மின்சார சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதுபோல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் மின்சார சேவைகளும் சிறிது நேரம் தடைப்பட்டது. உடனடியாக ரெயில்வே அதிகாரிகள் மாற்று வழிப் பாதையில் மின்சாரத்தைப் பெற்று ரயில்களை இயக்கினர்.
இது தொடர்பாக கிஷோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வண்டலூர்:
தூய்மை பணிகள் தொடர்பாக செங்கல்பட்டு மண்டலத்தில் உள்ள 18 நகராட்சிகளை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா மறைமலை நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகர மன்ற தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.
நகராட்சி ஆணையர் லட்சுமி, நகர மன்ற துணைத் தலைவர் சித்ரா கமலக் கண்ணன், முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினராக வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவமுருகன், டாக்டர் மீராபாய், மறைமலை நகர் சுகாதார ஆய்வாளர் ஹனிபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மின்கம்பி திருட்டு குறித்து வயலூர் கிராம விவசாயிகள் அச்சரப்பாக்கம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
- மின் கம்பங்களுக்கு இடையே மின்கம்பிகள் மீண்டும் அமைத்து தரக்கோரி கோரிக்கை மனு அளித்தனர்.
மதுராந்தகம்:
அச்சரப்பாக்கம் அருகே நெற்குணம் ஊராட்சிக்குட்பட்ட வயலூர் கிராமத்தில் வயல்வெளி பகுதியில் ஏராளமான மின் கம்பங்கள் உள்ளன.
இதில் 7 மின் கம்பங்களில் உள்ள சுமார் 4000 மீட்டர் நீளமுள்ள அலுமினிய மின் கம்பிகளை வெட்டி மர்ம நபர்கள் திருடி சென்றனர். மின்தடை ஏற்படுத்தி மர்ம கும்பல் இந்த நூதன திருட்டில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த மின்கம்பி திருட்டு குறித்து வயலூர் கிராம விவசாயிகள் அச்சரப்பாக்கம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
மேலும் மின் கம்பங்களுக்கு இடையே மின்கம்பிகள் மீண்டும் அமைத்து தரக்கோரி கோரிக்கை மனு அளித்தனர்.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் விவசாயிகள் மின் மோட்டார்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக 60 ஏக்கர் நிலத்தில் கடந்த 3 மாதங்களாக 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே விவசாயிகளின் நலன் கருதி விரைந்து மின் கம்பங்களுக்கு இடையே மின்கம்பி அமைத்து தர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






