என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • சுற்றுலா வாகனங்களால் நேற்று மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
    • தொடர் விடுமுறையால் மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    மாமல்லபுரம்:

    தொடர் விடுமுறையால் மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் சனி, ஞாயிறு, சுதந்திர தினம் என சனிக்கிழமை முதல் இன்று (திங்கட்கிழமை) வரை 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச பட்டம் விடும் விழாவை காணவும், புராதன சின்னங்களை பார்வையிடவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக பட்டம் விடும் விழாவை காண கடந்த 2 நாட்களில் மாமல்லபுரத்திற்கு 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வந்து சென்றதாக சுற்றுலாத்துறையினர் தெரிவித்தனர்.

    நேற்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் களைகட்டியது.

    சுற்றுலா பயணிகள் வருகையால் நேற்று கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரம் களைகட்டியது. சுற்றுலாத்துறையின் பட்டம் விடும் விழா மைதானம் மற்றும் கடற்ரை பகுதியில் திருட்டு சம்பவங்களை தடுக்க மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் ஏராளமான போலீசார் சாதாரண உடையில் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    சுற்றுலா வாகனங்களால் நேற்று மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கிழக்கு ராஜவீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதியில் கடும் நெரிசலில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்றன. மாமல்லபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையின் நுழைவு வாயில் பகுதி வரை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் சாலையில் அணி வகுத்து நின்றன. இதனால் சாலையில் சென்ற வாகனங்களை நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

    • செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம்.
    • அடையாளம் தெரியாத வாகனம் முருகனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    அச்சரப்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் முருகன் (34). நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் முருகன் சென்னை- திண்டிவனம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் முருகனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே முருகன் பலியானார். அச்சரப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தர்மலிங்கம் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறார்.

    • தீவிபத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 புதிய மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன.
    • கம்ப்பூட்டர் உள்ளிட்ட பொருட்களும் நாசமானது. கீழ்தளத்துக்கு தீ பரவாததால் அங்கிருந்த மோட்டார்சைக்கிள்கள் தப்பியது.

    தாம்பரம்:

    தாம்பரம் மேம்பால அருகே பிரபல நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் விற்பனை மையம் இயங்கி வருகிறது. இன்று காலை ஊழியர்கள் விற்பனை மையத்தை திறந்து சுத்தப்படுத்திய போது முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    சிறுது நேரத்தில் தீ மளமளவென அந்த தளம் முழுவதும் பரவியது. இதில் அங்கு விற்பனைக்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளிலும் தீ பரவி பற்றி எரிந்தது.

    இதனால் விற்பனை மையம் முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

    தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் 4 வண்டிகளில் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீவிபத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 புதிய மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. அங்கிருந்த கம்ப்பூட்டர் உள்ளிட்ட பொருட்களும் நாசமானது. கீழ்தளத்துக்கு தீ பரவாததால் அங்கிருந்த மோட்டார்சைக்கிள்கள் தப்பியது.

    மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவி சென்ற அஸ்தினாபுரம், ராஜேந்திரபிரசாத் சாலை மிகவும் குறுகலானது ஆகும்.
    • பஸ் டிரைவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தில் மாணவி லட்சுமிஸ்ரீ பலியாகிவிட்டார்.

    தாம்பரம்:

    நாட்டின் 75-வது சுதந்திரதின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிலையில் பொழிச்சலூர் அருகே சுதந்திர தினவிழாவில் பங்கேற்று திரும்பிய பிளஸ்-2 மாணவி பஸ்மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    தாம்பரம் அருகே உள்ள நெமிலிச்சேரி, தனபால் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகள் லட்சுமி ஸ்ரீ(வயது17). சிட்லபாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    சுதந்திரதின விழாவையொட்டி பள்ளியில் நடந்த விழாவில் லட்சுமி ஸ்ரீ பங்கேற்க சைக்கிளில் வந்தார். அவர் கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

    விழா முடிந்ததும் காலை 11 மணியளவில் மாணவி லட்சுமி ஸ்ரீ வீட்டுக்கு செல்வதற்காக தனது சைக்கிளில் புறப்பட்டார்.

    அஸ்தினாபுரம், ராஜேந்திரபிரசாத் சாலையில் சென்று கொண்டு இருந்த போது, பொழிச்சலூரில் இருந்து அஸ்தினாபுரம் நோக்கி சென்ற அரசு பஸ்(எண்52எச்) திடீரென முன்னால் சென்ற மாணவி லட்சுமிஸ்ரீயின் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறிய லட்சுமிஸ்ரீ சைக்கிளோடு கீழே விழுந்தார். பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனே பஸ்சை நடுரோட்டில் நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    பஸ்மோதி மாணவி பலியானது பற்றி அறிந்ததும் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், மற்றும் பஸ்சில் இருந்த பயணிகள் அப்பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் சிட்லபாக்கம் போலீசார் மற்றும் சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பஸ் டிரைவரின் கவனக்குறைவால் விபத்தில் மாணவி பலியாகி விட்டதாக குற்றம் சாட்டினர்.

    போலீசாரின் சமாதான பேச்சுவார்தைக்கு பின்னர் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். பலியான மாணவி லட்சுமிஸ்ரீயின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சுதந்திரதின விழா முடிந்ததும் மாணவி லட்சுமிஸ்ரீ தனது பள்ளி தோழியான மற்றொரு மாணவியுடன் தனித்தனியாக சைக்கிளில் சென்று உள்ளனர். அவர்கள் ஒருவர் பின் ஒருவராக சாலையோரத்தில் செல்வது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.

    மாணவி சென்ற அஸ்தினாபுரம், ராஜேந்திரபிரசாத் சாலை மிகவும் குறுகலானது ஆகும். பஸ் டிரைவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தில் மாணவி லட்சுமிஸ்ரீ பலியாகிவிட்டார்.

    பல்வேறு ஆசை, எதிர்கால கனவுகளுடன் இருந்த மாணவியின் வாழ்க்கை நொடிப்பொழுதில் முடிந்து போனது அங்கிருந்தவர்களின் இதயத்தை நொறுக்கியது.

    மாணவி லட்சுமிஸ்ரீ பலியானது பற்றி அறிந்ததும் அவரது பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    இந்த விபத்து குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பஸ் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் மாணவி லட்சுமிஸ்ரீ பலியான சம்பவம் அவருடன் சுதந்திர தின விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற சக மாணவிகள் மற்றும் பள்ளி தோழிகளிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பட்டம் விடும் திருவிழா இன்று 3-வது நாளுடன் நிறைவு பெறுகிறது.
    • பட்டம் விடும் கலைஞர்கள் 100-க்கும் மேற்பட்ட பட்டங்களை பறக்க விட்டனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த பட்டம் விடும் கலைஞர்கள் 100-க்கும் மேற்பட்ட பட்டங்களை பறக்க விட்டனர்.

    முதல் நாளில் 8ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும். நேற்று 10 ஆயிரத்திற்கும் அதிகமானோரும் பட்டம் விடும் விழாவை பார்த்து ரசித்தனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான வாகனங்களால் கிழக்கு கடற்கரை சாலையில் தேவநேரி, பூஞ்சேரி என இருபுறமும் 3 கி.மீ, தூரத்திற்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. ராட்சத பல்லி, பொம்மை, ஓசை எழுப்பும் ராட்சத பட்டங்கள் என வித்தியாசமான பட்டங்கள் அனைவரையும் கவர்ந்தது.

    பட்டம் விடும் திருவிழா இன்று 3-வது நாளுடன் நிறைவு பெறுகிறது. இன்று விடுமுறையும் புராதன சின்னங்களை இலவசமாக பார்ப்பதற்கும், கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் பட்டம் விடும் திருவிழாவை ரசிக்க மாமல்லபுரம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று இரவு பேஷன்ஷோ, கலை நிகழ்ச்சியுடன் இரவு 9மணிக்கு பட்டம் விடும் விழா நிறைவு பெறுகிறது.

    டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உத்தரவின் பெயரில் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் கலந்து கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டு பட்டம் விடும் கலைஞர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனைவரையும் கவர்ந்த பட்டம் எது? என்று தேர்வு செய்து அந்த குழுவினருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட உள்ளது.

    • தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றி செல்லும் பஸ் ஆட்கள் இல்லாமல் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
    • தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரம்:

    தாம்பரம் பஸ் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையோரம் இன்று அதிகாலை தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றி செல்லும் பஸ் ஆட்கள் இல்லாமல் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். திடீரென கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த பஸ்சின் பின்பகுதியில் வேகமாக மோதியது. இதில் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ பஸ்சுக்கும் பரவியது. சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளும், பஸ்சும் கொளுந்து விட்டு எரிந்தது. அதிர்ஷ்டவசமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கிழே விழுந்த வாலிபர் தீயில் சிக்காமல் உயிர்தப்பினார். அவர் பஸ் தீப்பற்றி எரிவதை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதற்குள் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. பஸ் நிலையம் அருகே நடந்த தீவிபத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொத்தேரி அருகே திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பொத்தேரி பகுதியை சேர்ந்த பாபு (வயது 51), என்பவர் திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பாபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கடன் மேளா நடக்கிறது.
    • தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்துக்கு ஆய்வு கட்டணத்தில் இருந்து முழுமையாகவும் விலக்கு அளிக்கப்படுகிறது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா வருகிற 17-ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வரை நடக்கிறது.

    இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு தொழில் கடன் மேளா, கிளை அலுவலகம் முதல் தளம், எம்.ஜி.ஆர். சாலை, மறைமலைநகர் என்ற முகவரியில் நடைபெறும். இந்த கடன் மேளாவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சிறப்பு தொழில் திட்டங்கள், புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூலதன திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்படும்.

    இதில் தகுதிவாய்ந்த தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியத்துடன் ரூ.1.50 கோடி வரை கடன் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மேளாவில் அளிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகையும், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்துக்கு ஆய்வு கட்டணத்தில் இருந்து முழுமையாகவும் விலக்கு அளிக்கப்படுகிறது.

    இந்த வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் பயன் படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9445023494, 9342654834, 9445023507, 9444396821 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கடன் மேளா நடக்கிறது. இங்கு புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் குறித்து விளக்கம் தரப்படும்.

    இந்த காலத்தில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய 044-26257664, 26248644 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • சென்னை பெருங்களத்தூர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
    • பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    தாம்பரம்:

    சென்னை பெருங்களத்தூர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

    சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் பெருங்களத்தூர் வழியாகவே செல்வதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் திணறுகிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த மேம்பாலம் தாம்பரத்தில் இருந்து வண்டலூர், வண்ட லூரில் இருந்து தாம்பரம் செல்லும் திசையிலும், சதானந்தபுரம், நெடுங் குன்றம் வழியாக வண்ட லூர்-கேளம்பாக்கம் சாலைக்கு செல்லும் வகை யிலும், பெருங்களத்தூர் ரெயில்வே தண்டவாளத்தின் மேல்புறம் வழியாக பெருங் களத்தூர் ஊருக்குள் செல்லும் வகையிலும் கட்டப்பட்டு வருகிறது.

    தாம்பரம்-வண்டலூர் சாலையின் இரு திசைகளி லும் 1.2 கி.மீ தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை வழியாக சதானந்தபுரம் நோக்கி 750 மீட்டர் தூரத்துக்கு பாலம் அமைகிறது. பெருங்களத் தூரில் தண்டவாளத்தை தாண்டி செல்லும் வகையில் 800 மீட்டர் தூரத்துக்கு பாலம் அமைக்கப்படுகிறது.

    ரூ.235 கோடி மதிப்பில் பாலம் கட்டுமான பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங் கப்பட்டது. வருகிற டிசம்பர் மாதத்துக்குள் பாலத்தை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    ஆனால் பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள கடைகள், சதானந்தபுரம் மற்றும் பெருங்களத்தூர் பகுதிகளில் நிலம் கையகப் படுத்துதலில் தாமதம் ஏற் பட்டு வருகிறது. இதன் காரணமாக ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் பெருங் களத்தூர் மேம்பாலத்தில் வண்டலூர்-தாம்பரம் இடையே இரு திசைகளிலும் செல்வதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த மாத இறுதிக்குள் இந்த திசையில் கட்டுமான பணிகள் முடிந்து பாலம் திறப்புவிழாவுக்கு தயாராகி விடும்.

    மேலும் தண்டவாளத்தை தாண்டி ஸ்ரீநிவாசன் ராகவன் தெருவில் இறங்கி புதிய பெருங்களத்தூர் செல்லும் பாலம் வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் தயாராகி விடும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'புதிய பெருங் களத்தூர், பீர்க்கங்கரணை நோக்கி செல்லும் பாலம் பணிகள் முடிந்தால் ஜி.எஸ்.டி. சாலையில் போக்கு வரத்து நெரிசல் குறையும். பெருங்களத்தூர் பஸ் நிலையத்தை கிளாம்பாக் கத்துக்கு மாற்ற போக்கு வரத்து துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டதும் ஜி.எஸ்.டி. சாலையில் நெரிசல் கணிசமாக குறையும்' என்றனர்.

    • சுற்றுலாத் துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் கடலோர இடம் தயார் செய்யப்பட்டு இருந்தது.
    • கார்ட்டூன் வகை பட்டங்கள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று தொடங்கியது. இதற்காக அப்பகுதியில் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் கடலோர இடம் தயார் செய்யப்பட்டு இருந்தது.

    அமைச்சர்கள் மதி வேந்தன், தா.மோ. அன்பரசன் ஆகியோர் பட்டம் விடும் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

    இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ராட்சத பட்டம் செய்யும் கலைஞர்கள் 80-க்கும் மேற்பட்ட பட்டங்களை பறக்க விட்டனர்.

    குஜராத் கலைஞரின் வடிவமைப்பில் பறந்த கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பட்டம் விழாவிற்கு வந்திருந்த பெரியவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது. இதேபோல் ஏலியன், கார்ட்டூன் வகை பட்டங்கள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது.

    இந்த பட்டம் விடும் திருவிழா நாளை வரை நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று சுமார் 8ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். இதில் சுமார் 3 ஆயிரம் பேர் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    பட்டம் விடும் திருவிழாவை காண சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பைக் மற்றும் கார்களில் ஏராளமானோர் வந்து குவிந்ததால் தேவனேரி கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இரவில் கலை நிகழ்ச்சி, இசைவிழா, பேஷன் ஷோ, உணவு திருவிழா உள்ளிட்ட பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    விடுமுறை நாளான இன்று பட்டம் விடும் திருவிழாவை காண அதிகமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை ராஜேஸ் வைத்யாவின் இசைக்கச்சேரி நடைபெற உள்ளது. போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் உத்தரவின் பெயரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தாய்லாந்தில் இருந்து வந்திருந்த சிறப்பு காற்றாடி கலைஞர் பெய்ரோ, பீட்டர் மற்றும் 6 பேர் கொண்ட குழுவினர் பிரமாண்ட பட்டங்கள் விட நேற்று முயற்சி செய்தனர். ஆனால் பட்டத்தின் எடைக்கு ஏற்ப காற்று வீசுவது குறைவாக இருந்ததால் பறக்கவிடப்படவில்லை. இன்று அவர்களின் ராட்சத பட்டங்கள் பறக்கும் என எதிர்பார்கபடுகிறது.

    இந்த பட்டம் விடும் திருவிழா நாளை வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிரியர் மணிமாறன் குறிப்பிட்ட 3 மாணவிகளுக்கு தொடர்ந்து ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்தார்.
    • பள்ளி வகுப்பறையிலும் பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தன்னிடம் படித்த 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு பள்ளி முடிந்ததும் சிறப்பு வகுப்பு நடத்தினார். அப்போது ஆசிரியர் மணிமாறன் குறிப்பிட்ட 3 மாணவிகளுக்கு தொடர்ந்து 'செக்ஸ்' தொல்லை கொடுத்தார். இதே போல் பள்ளி வகுப்பறையிலும் பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் 3 பேரும் பள்ளியில் நடைபெறும் சிறப்பு வகுப்புக்கு செல்ல மறுத்தனர். இதுபற்றி பெற்றோர் விசாரித்தபோது ஆசிரியர் மணிமாறன் செக்ஸ் தொல்லை கொடுத்து வருவதை அறிந்து அதிர்ந்து போனார்கள்.

    இதுபற்றி 3 மாணவிகளின் பெற்றோரும் ஆசிரியர் மணிமாறன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியில் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் ஏராளமானோர் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி நிர்வாகம் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

    தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் மகளிர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் மணிமாறன் 3 மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து மணமாறன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 6 குழுக்கள் பட்டம் விடும் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.
    • பட்டம் விடும் திருவிழா மதியம் 12 மணிக்கு துவங்கி மாலை 6.00 மணி வரை நடைபெறும்.

    மாமல்லபுரம்:

    தமிழகத்தில் முதல் முறையாக சுற்றுலாத்துறை மூலம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த பட்டம் விடும் திருவிழா இன்று முதல் 15.08.2022 வரை மூன்று நாட்கள் நடைபெறும். இதில் 10 குழுக்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து 4 குழுக்களும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 6 குழுக்களும் இந்த பட்டம் விடும் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.


    இந்த சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் பல்வேறு வடிவங்களில் எண்ணற்ற வண்ணங்களில் 100 க்கும் மேற்பட்ட பட்டங்கள் பறக்க விடப்பட்டுள்ளன. இந்த பட்டம் விடும் விழாவானது சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களை கவரும் விதத்தில் அமைந்துள்ளது.

    பட்டம் விடும் திருவிழா மதியம் 12 மணிக்கு துவங்கி மாலை 6.00 மணி வரை நடைபெறும். மேலும் பார்வையாளர்களுக்கென பிரத்யேகமாக மாலை 6.00 மணி முதல் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இன்று தாய் குடம் பிரிஜ்ட் பேண்ட் (Thaikkudam Bridge Band), 14.08.2022 மியூசிகல் பியூசன் (Musical Fusion) மற்றும் 15.08.2022 கிட்ஸ் டேலண்ட் ஷோ (Kids Talent Show) நடைபெறும்.

    பட்டம் விடும் திருவிழாவிற்கு கலந்துகொள்ள வரும் சிறுவர்களுக்கு அனுமதி இலவசம். மேலும் திருவிழா நடைபெறும் இத்திடலில் 30க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் சந்தர மோகன், சுற்றுலா இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.டி.அரசு, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், மாமல்லபுரம், சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் வளர்மதி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்,

    ×