என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • பூங்காவில் வெள்ளை புலிகள், வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனிதக்குரங்குகள், காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன.
    • பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளின் செயல்பாடுகளை நடவடிக்கைகளை தொடர்ந்து 24 மணிநேரமும் ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    வண்டலூர்:

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.

    இந்த பூங்காவில் வெள்ளை புலிகள், வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனிதக்குரங்குகள், காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன.

    மேலும் புதிதாக திறக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    தற்போது இங்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு தினமும் 3 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்த பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளின் செயல்பாடுகளை நடவடிக்கைகளை தொடர்ந்து 24 மணிநேரமும் ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    • வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் வாகனங்கள் திரும்பும் இடம் மிகவும் குறுகலாக உள்ளது.
    • போக்கு வரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து காவல் துறை சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் .

    வண்டலூர்:

    சென்னை வண்டலூர் பூங்கா பகுதியில் ஜி.எஸ்.டி. சாலை மற்றும் வண்டலூர்- கேளம்பாக்கம் நெடுஞ்சாலையில் அதிக போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

    வண்டலூர் பூங்காவுக்கு செல்லும் வாகனங்களாலும், உயிரியல் பூங்கா அருகே பஸ் நிலையம் இருப்பதாலும், அருகே உள்ள தாலுகா அலுவலகத்துக்கு வரும் வாகனங்களை சாலை யோரத்தில் நிறுத்தி வைப்பதாலும், வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் வாகனங்கள் திரும்பும் பகுதி மிகவும் குறுகியதாக இருப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க தாம்பரம் மாநகர போக்கு வரத்து காவல்துறை சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதையடுத்து போக்கு வரத்து நெரிசலை குறிக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வண்டலூரில் ஆய்வு நடத்தினார்.

    இந்த ஆய்வில் போக்கு வரத்து போலீஸ் துணை கமிஷனர் குமார், உதவி கமிஷனர் ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் ஹேமந்த்குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நாகராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தனித்தனி பாதை வசதி ஏற்படுத்த வேண்டும். வண்டலூர் மேம்பாலத்தின் கீழ் வாகனங்கள் திரும்புவதற்கு வசதியாக மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பூங்காவை அப்புறப்படுத்தி வசதி ஏற்படுத்த வேண்டும்.

    வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் வாகனங்கள் திரும்பும் இடம் மிகவும் குறுகலாக உள்ளது. அதில் சாலையின் நடுவே தடுப்பு சுவரும் உள்ளது. எனவே அந்த தடுப்பு சுவரை அகற்ற வேண்டும். மேலும் உயிரியல் பூங்காவின் மதில் சுவரை அகற்றி கொஞ்சம் உள்ளே தள்ளி அமைத்து சாலை திரும்பும் இடத்தை அகலப்படுத்த வேண்டும்.

    கேளம்பாக்கம் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தை ஜி.எஸ்.டி. சாலைக்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கலெக்டரிடம் போக்கு வரத்து போலீஸ் அதிகாரிகள் எடுத்துக் கூறினார்கள்.

    இந்த கோரிக்கைகளை எழுதி கொடுங்கள். உடனே தீர்வு காணப்படும் என்று அவர்களிடம் கலெக்டர் ராகுல் நாத் கூறினார்.

    இதற்கிடையே வண்டலூர் பகுதியில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து காவல் துறை சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

    • நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளின் நலன் கருதி முன்கூட்டியே, அதாவது கடந்த 1-ந்தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
    • விவசாயிகள் பயன்படுத்தி நெல் விற்பனை செய்யலாம்.

    செங்கல்பட்டில் நெல் கொள்முதல் நிலையத்தில் விதிமீறல் தொடர்பான புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி திறக்கப்பட இருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளின் நலன் கருதி முன்கூட்டியே, அதாவது கடந்த 1-ந்தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பாண்டு 2022-2023-ல் சொர்ணவாரி கொள்முதல் பருவத்தில் தற்போது 14 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனை விவசாயிகள் பயன்படுத்தி நெல் விற்பனை செய்யலாம்.

    நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் தொடர்பாக ஏதேனும் குறைபாடோ, புகாரோ இருந்தால் நுகர்பொருள் வாணிப கழக தலைமை அலுவலக இலவச தொலைபேசி எண் 18005993540-ல் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் நெல் கொள்முதல் நிலையத்தில் விதி மீறல் தொடர்பாக புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-26421663, 044-26421665 ஆகியவற்றிலும், மாவட்ட கலெக்டர், செங்கல்பட்டு கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-27427412, 044-27427414 ஆகியவற்றிலும், கட்டுப்பாட்டு அறை வாட்ஸ் அப் எண்:9444272345 என்ற எண்ணிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை புகார் தெரிவிக்கலாம்.

    விவசாயிகள் தெரிவிக்கும் புகார்கள், கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், மதுராந்தகம், அச்சரப்பாக்கம், செங்கல்பட்டு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
    • ஆர்ப்பாட்டத்துக்கு வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்த இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் தற்போது மின்சார கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

    இந்தநிலையில் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ள தமிழக அரசை கண்டித்தும், மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் நாளை மறுநாள் (16-ந்தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் செங்கல்பட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.

    செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுகுன்றம் ஆறுமுகம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலைமை கழக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொள்கிறார்கள்.

    மேலும் ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், மதுராந்தகம், அச்சரப்பாக்கம், செங்கல்பட்டு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    ஆர்ப்பாட்டத்துக்கு வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்த இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் உள்ள சாலை வழியாகத்தான் புதிய பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், கோர்ட்டு ஆகிய இடங்களுக்கு வழக்கமாக பொதுமக்கள் சென்று வருகிறார்கள்.

    ஆர்ப்பாட்டம் நடைபெறும் 16-ந்தேதி காலை முதலே அங்கு தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆர்ப்பாட்டத்துக்கான மேடை அமைக்கும் பணிகள் நாளை தொடங்கப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

    ஆர்ப்பாட்டத்தில் அதிக அளவில் தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் போலீசார் எடுத்து வருகிறார்கள்.

    • சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
    • பொதுமக்கள் தங்களது அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

    வண்டலூர்:

    சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த நிலையில் நேற்று வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அணிவகுத்து நின்றன. இதனால் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து கேளம்பாக்கம் மற்றும் சென்னை நோக்கி செல்ல முடியாமல் வாகனங்கள் ஆமை வேகத்தில் சென்றன. சரியான முறையில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த முடியாத காரணத்தால் 1 மணி நேரத்திற்கு மேலாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் பொதுமக்கள் தங்களது அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதனை சரி செய்வதற்கு சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

    • சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரம் குமாரசாமி தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் முருகன்.
    • இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    மதுராந்தகம்:

    சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரம் குமாரசாமி தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் முருகன் (வயது 50). இவர் நேற்று மேல்மருவத்தூர் அடுத்த ஒரத்தூரில் உள்ள அக்கா வீட்டிற்கு வந்தார். அங்குள்ள கிணற்றில் குளிக்க சென்ற போது, நீச்சல் தெரியாமல் மூழ்கி இறந்தார். சம்பவ இடத்துக்கு சென்ற மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • சிற்றரசு அணுபுரம் சென்று விட்டு திருக்கழுக்குன்றம் சாலை வழியாக வெங்கப்பாக்கம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
    • சதுரங்கப்பட்டினம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வந்தவர் சிற்றரசு (வயது 41). வெங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் தனது சொந்த வேலை காரணமாக அணுபுரம் சென்று விட்டு திருக்கழுக்குன்றம் சாலை வழியாக வெங்கப்பாக்கம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் உள்ள புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி மோதியதில் தலையில் பலத்த அடிபட்டு சிற்றரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மண்டப வளாகத்தின் உள்ளே பத்திரிக்கையுடன் நுழையும் அனைவரையும் போலீசார் விசாரித்த பின்னரே உள்ளே அனுப்பினர்.
    • தலைமறைவு ரவுடிகளின் புகைப்படத்தை வைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    மாமல்லபுரம்:

    தாம்பரம் அருகே உள்ள நடுவீரபட்டு பகுதியை சேர்ந்தவர் நரேஷ்பாபு. ரவுடியான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

    இதையடுத்து மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள லீலாவதி அரங்கத்தில் ஆடம்பரமாக திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

    நரேஷ் மற்றும் அவரது அண்ணனுக்கும் அவர்களிடம் கூட்டாளியாக இருந்து தற்போது எதிரியாக உள்ள எதிர்தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது.

    இதில் எதிர்தரப்பை சேர்ந்த ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக திருமண நாள் அன்று நரேஷ்பாபுவை கொலை செய்ய எதிர்தரப்பினர் அரிவாள், கத்தி, போன்ற ஆயுதங்களுடன் மாறுவேடத்தில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனால் திருமண வரவேற்பின் போது ரவுடிகளுக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மோதலை தடுக்கும் வகையில் நரேஷ்பாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    மண்டபத்திலும், அங்குள்ள அறைகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மண்டப வளாகத்தின் உள்ளே பத்திரிக்கையுடன் நுழையும் அனைவரையும் போலீசார் விசாரித்த பின்னரே உள்ளே அனுப்பினர்.

    இதேபோல் தலைமறைவு ரவுடிகளின் புகைப்படத்தை வைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் வந்த அனைத்து வாகனங்களையும் தடுப்புகள் அமைத்து நிறுத்தி சோதனை செய்த பின்னரே அனுமதித்தனர்.

    இரவு 7 மணி அளவில் மணமக்கள் சொகுசு ஜாகுவார் காரில் பாதுகாப்புடன் வந்து இறங்கினர். இதைத்தொடர்ந்து போலீசாரின் அறிவுறுத்தலால் அவசர அவசரமாக வரவேற்பு, ஆடம்பர விருந்துகள் இரவு 10மணிக்குள் முடிக்கப்பட்டது.

    திருமண வரவேற்பில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காததால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    • வாரந்தோறும் ரூ.1500 கூடுதலாக பணம் தரவேண்டும் என்று சாராய வியாபாரிக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் நெருக்கடி கொடுத்தனர்.
    • ஒரு கட்டத்துக்கு மேல் பணம் கொடுக்க முடியாத சாராய வியாபாரி தான் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு லஞ்சமாக வாரந்தோறும் அனுப்பிய கூகுள் பே விபரத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

    மதுராந்தகம்:

    செய்யூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்தவர்கள் மோகனசுந்தரம், பாபு. இவர்கள் வெடால் கிராமத்தைச் சேர்ந்த சாராய வியாபாரியிடம் இருந்து புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபான வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து கொள்ள அனுமதி அளித்து லஞ்சமாக பணம் பெற்றனர்.

    இதற்காக வாரந்தோறும் இருவருக்கும் தலா ரூ.1000 சாராய வியாபாரி கொடுத்ததாக தெரிகிறது. இதனை அவர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன சுந்தரம் மற்றும் பாபுவுக்கு கூகுள் பே மூலம் அனுப்பி உள்ளார்.

    இந்த நிலையில் வாரந்தோறும் ரூ.1500 கூடுதலாக பணம் தரவேண்டும் என்று சாராய வியாபாரிக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் நெருக்கடி கொடுத்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் பணம் கொடுக்க முடியாத சாராய வியாபாரி தான் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு லஞ்சமாக வாரந்தோறும் அனுப்பிய கூகுள் பே விபரத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் வாங்கிய லஞ்ச பட்டியல் சமூக வலைதளத்தில் வெளியான சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீஸ் உயர்அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் சாராய வியாபாரியிடம் கூகுள் பே மூலம் பணம் பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகனசுந்தரம், பாபு ஆகிய இருவரும் மாவட்ட ஆயுதப்படைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சாராய வியாபாரியிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    • விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்ற விவரம் ஆன்லைன் மூலமாகவே தெரிவிக்கப்படும்.
    • தற்காலிக உரிமத்தின் ஆணையினை தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்தின் முன்பாகவே இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்ய முடியும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற ஆவணங்களுடன் 30.9.2022 வரை இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டிடத்திற்கான புளு பிரிண்ட் வரைபடம். கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம் காட்டும் ஆவணம். உரிமத்திற்கான கட்டணம் ரூ.500ஐ அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான். இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார் அட்டை/ வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை). வரி ரசீது, புகைப்படம் 1 (பாஸ்போர்ட் சைஸ்) இணைக்கப்பட வேண்டும்.

    விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்ற விவரம் ஆன்லைன் மூலமாகவே தெரிவிக்கப்படும். தற்காலிக உரிமத்தின் ஆணையினை தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்தின் முன்பாகவே இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்ய முடியும். வருகிற 30-ந்தேதிக்கு பின் ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

    மேலும் நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ்வழிமுறை பொருந்தாது.

    உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்காசியில் உள்ள ஜெயசீலன் தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • ஜெயசீலன் கடந்த சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தென்காசிக்கு சென்றார்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த இரும்புலியூர், பெரியார் நகர், 10-வது தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன். தொழில் அதிபர். இவர் தாம்பரம் பகுதியில் வருமான வரி செலுத்துதல் தொடர்பான ஆலோசனை வழங்கும் அலுவலகம் நடத்தி வருகிறார்.

    தென்காசியில் உள்ள இவரது தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயசீலன் கடந்த சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தென்காசிக்கு சென்றார்.

    பின்னர் நேற்று இரவு அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

    பீரோவில் இருந்த சுமார் 100 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம கும்பல் நகையை அள்ளி சென்று உள்ளனர். இது குறித்துதாம்பரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள். குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு கட்டத்துக்கு மேல் பணம் கொடுக்க முடியாமலும், சாராய வியாபாரம் செய்ய முடியாமலும் வியாபாரி தவித்தார்.
    • தொடர்ந்து பணம் கேட்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் தொல்லை கொடுத்து வந்தனர்.

    மதுராந்தகம்:

    செய்யூர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது. போலீசார் நடவடிக்கை எடுத்தும் இது நிற்கவில்லை.

    இதனால் செய்யூர் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரி ஒருவரிடம் செய்யூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும் 2 பேர் கூகுள் பே மூலம் லஞ்சமாக எவ்வளவு பணம் பெற்றனர் என்ற பட்டியல் வெளியாகி சமூக வலைதளத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

    அந்த சாராய வியாபாரியிடம் சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவரும் வாரம் ரூ.1000 லஞ்சமாக கூகுள் பே மூலம் பெற்று இருக்கிறார்கள். இதன் பின்னர் வாரத்துக்கு ரூ.1,500 தர வேண்டும் என்று அந்த சாராய வியாபாரிக்கு சப்-இன்ஸ்பெக்டர் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.

    ஒரு கட்டத்துக்கு மேல் பணம் கொடுக்க முடியாமலும், சாராய வியாபாரம் செய்ய முடியாமலும் அந்த வியாபாரி தவித்தார். ஆனாலும் தொடர்ந்து பணம் கேட்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் தொல்லை கொடுத்து வந்தனர்.

    இதைத் தொடர்ந்து அந்த சாராய வியாபாரி இதுவரை சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவருக்கும் எந்தந்த தேதிகளில், எவ்வளவு பணம் லஞ்சமாக கூகுள் பே மூலம் அனுப்பினார் என்ற விவரத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

    இந்த லஞ்ச பட்டியல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டிய போலீசாரே லஞ்சம் வாங்கிக் கொண்டு சாராய வியாபாரத்தை ஊக்குவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தற்போது அந்த சாராய வியாபாரி தலைமறைவாக உள்ளார். இந்த லஞ்ச பட்டியல், சப்-இன்ஸ்பெக்டர்களின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சாராய வியாபாரத்துக்கு லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    ×