என் மலர்
உள்ளூர் செய்திகள்

வண்டலூர் பூங்கா பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை- கலெக்டர் நேரில் ஆய்வு
- வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் வாகனங்கள் திரும்பும் இடம் மிகவும் குறுகலாக உள்ளது.
- போக்கு வரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து காவல் துறை சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் .
வண்டலூர்:
சென்னை வண்டலூர் பூங்கா பகுதியில் ஜி.எஸ்.டி. சாலை மற்றும் வண்டலூர்- கேளம்பாக்கம் நெடுஞ்சாலையில் அதிக போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
வண்டலூர் பூங்காவுக்கு செல்லும் வாகனங்களாலும், உயிரியல் பூங்கா அருகே பஸ் நிலையம் இருப்பதாலும், அருகே உள்ள தாலுகா அலுவலகத்துக்கு வரும் வாகனங்களை சாலை யோரத்தில் நிறுத்தி வைப்பதாலும், வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் வாகனங்கள் திரும்பும் பகுதி மிகவும் குறுகியதாக இருப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க தாம்பரம் மாநகர போக்கு வரத்து காவல்துறை சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதையடுத்து போக்கு வரத்து நெரிசலை குறிக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வண்டலூரில் ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வில் போக்கு வரத்து போலீஸ் துணை கமிஷனர் குமார், உதவி கமிஷனர் ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் ஹேமந்த்குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நாகராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தனித்தனி பாதை வசதி ஏற்படுத்த வேண்டும். வண்டலூர் மேம்பாலத்தின் கீழ் வாகனங்கள் திரும்புவதற்கு வசதியாக மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பூங்காவை அப்புறப்படுத்தி வசதி ஏற்படுத்த வேண்டும்.
வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் வாகனங்கள் திரும்பும் இடம் மிகவும் குறுகலாக உள்ளது. அதில் சாலையின் நடுவே தடுப்பு சுவரும் உள்ளது. எனவே அந்த தடுப்பு சுவரை அகற்ற வேண்டும். மேலும் உயிரியல் பூங்காவின் மதில் சுவரை அகற்றி கொஞ்சம் உள்ளே தள்ளி அமைத்து சாலை திரும்பும் இடத்தை அகலப்படுத்த வேண்டும்.
கேளம்பாக்கம் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தை ஜி.எஸ்.டி. சாலைக்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கலெக்டரிடம் போக்கு வரத்து போலீஸ் அதிகாரிகள் எடுத்துக் கூறினார்கள்.
இந்த கோரிக்கைகளை எழுதி கொடுங்கள். உடனே தீர்வு காணப்படும் என்று அவர்களிடம் கலெக்டர் ராகுல் நாத் கூறினார்.
இதற்கிடையே வண்டலூர் பகுதியில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து காவல் துறை சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.






