என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • மர்ம கும்பல் காரை திருட முடிவு செய்து நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சாவியை திருடிய நிலையில் காரை திருட முயன்றனர்.
    • காரில் இருந்து வந்த அலார சத்தம் கேட்டு உரிமையாளர் கணேஷ் குமார் வெளியே ஓடி வந்ததைப் பார்த்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    திருக்கழுக்குன்றம்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் வசித்து வருபவர் கணேஷ்குமார். இவர் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையம் அருகே இவரது வீட்டிற்கு முன்பு 5-க்கும் மேற்பட்ட கார்கள் விற்பனைக்காக நிறுத்தி வைத்திருந்தார்.

    அங்கு சில நாட்களாக நோட்டமிட்ட மர்ம கும்பல் காரை திருட முடிவு செய்து நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சாவியை திருடிய நிலையில், காரை திருட முயன்றனர். இதற்கிடையே காரில் இருந்து வந்த அலார சத்தம் கேட்டு உரிமையாளர் கணேஷ் குமார் வெளியே ஓடி வந்ததைப் பார்த்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    முன்னதாக திருடி பக்கத்து தெருவில் நிறுத்தி வைத்திருந்த ஒரு காரில் ஏறி தப்பி சென்றனர். இதனை அடுத்து காரைத் திருடிய மர்ம கும்பலை சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த வீராபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் கார்த்திகேயன்
    • செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த வீராபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). இவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்று போலீசார் ஆய்வு மேற்கொண்டதில், அவரது வீட்டில் பதுக்கி வைத்த சுமார் 20 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்

    இந்த புகையிலை பொருட்களை தொழிற்சாலை, ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் வடமாநில இளைஞர்கள் அதிகம் உள்ள மகேந்திராசிட்டி பகுதியில் கார்த்திகேயன் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மீனவர்கள் இன்று காலை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.
    • சாலையில் சரிந்த மரங்களை அகற்றும் பணியில் பேரூராட்சி, ஊராட்சி நிர்வாக ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நேற்று நள்ளிரவில் பலத்த இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்தது.

    இந்த மழை காலை வரை விட்டுவிட்டு பெய்தது. இதனால் மீனவர்கள் இன்று காலை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    பலத்த காற்று காரணமாக கல்பாக்கம் சாலை, தேவ நேரி, குழிப்பாந்தண்டலம், கடம்பாடி பகுதியில் சாலையோரம் நின்ற மரங்கள் முறிந்து விழுந்தன. வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தது. விவசாயிகள் அமைத்திருந்த புடலங்காய், பாவக்காய் செடிகளின் கொடிப் பந்தல்கள் சரிந்தது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். சாலையில் சரிந்த மரங்களை அகற்றும் பணியில் பேரூராட்சி, ஊராட்சி நிர்வாக ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • காஞ்சிபுரம் நெடுஞ்சாலையை கடந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வீடு திரும்புகின்றனர்.
    • காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி, பெங்களூர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இச்சாலையை கடந்து செல்கின்றன.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகரத்தில் உள்ள 90 சதவீதம் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை 1- வது வார்டு காஞ்சிபுரம் சாலை அருகே அமைந்துள்ளது.

    இந்த காஞ்சிபுரம் நெடுஞ்சாலையை கடந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வீடு திரும்புகின்றனர். வாகனங்களில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்களில் ஏற்றி வந்து செல்லும் போது வாகன நெரிசல் ஏற்பட்டு தினந்தோறும் சாலை விபத்துகள் ஏற்படுகிறது.

    பள்ளியின் அருகே காஞ்சிபுரம் சாலையில் மாவட்ட பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டு வருவதால் அலுவலக பணிக்காக வருபவர்கள் நடைபாதையில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.பள்ளியை விட்டு மாலை நேரத்தில் வீடு திரும்பும் மாணவ-மாணவிகள் நடை பாதையை பயன்படுத்த முடியாமல் வாகனங்கள் செல்லும் சாலையை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனாலும் விபத்துகள் ஏற்படுகிறது.

    காஞ்சிபுரம் சாலை இரு புறங்களிலும் உள்ள நடைபாதையில் தள்ளுவண்டி கடைகள் மற்றும் நிரந்தரமான பெட்டி கடைகள் முளைத்து வருகின்றன.இதனால் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    இவ்வழியாக காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி, பெங்களூர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இச்சாலையை கடந்து செல்கின்றன.பள்ளிகளுக்கு பிள்ளைகளை அழைத்து வந்து வீடு திரும்பும் பெற்றோர்கள் தினந்தோறும் உயிருக்கு பயந்து பள்ளி முடிந்து பிள்ளைகளை அழைத்து செல்வதாக கூறுகின்றனர்.

    நடைபாதையில் வாகனங்களை நிறுத்தாமலும் கடைகளை வைத்து நடைபாதை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை அகற்றினால் நடைபாதையை பயன்படுத்தி அச்சமில்லாமல் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வீடு திரும்புவார்கள்.

    எனவே மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் காஞ்சிபுரம் சாலை நடை பாதையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகள், பதிவுத்துறை மற்றும் கிளை சிறைச்சாலைக்கு வரும் வாகனங்கள் நடைபாதை ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் தாய் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி விஷ்ணுவை கைது செய்தார்.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த காவாதூரை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 25). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இவர் சூனாம்பேடு அடுத்த ஆரோவில் நகரை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் தாய் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி விஷ்ணுவை கைது செய்தார்.

    • பரந்தூர் குடியிருப்பு வாசிகள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • பரந்தூர் அருகே ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 50 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதுராந்தகம்:

    சென்னையில் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் என்ற இடத்தில் அமைப்பதற்கான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகின்றன. இந்த 2-வது விமான நிலையம் அமைக்க பரந்தூர் குடியிருப்பு வாசிகள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    பரந்தூர் அருகே ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 50 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகள், பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே பரந்தூரில் இன்று விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பாக மிகப்பெரிய எதிர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாநில விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன், செங்கல்பட்டு மாவட்ட எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடி வந்தார். அப்போது அச்சரப்பாக்கம் போலீசாரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் காஞ்சீபுரம் மாவட்ட போலீசாரிடம் ஒப்படைப்பதற்காக அவரை அழைத்து சென்றனர். 

    • வண்டலூர் உயிரியல் பூங்காவில் 40 காட்டு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
    • முதலைகள் 45 குஞ்சுகளை பொரித்துள்ளன.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு வார நாட்களில் சுமார் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கிறார்கள்.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் 40 காட்டு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் சீதா என்ற காட்டுமாடு சில வாரங்களுக்கு முன்பு ஆண் குட்டி ஒன்றை ஈன்றது. இதேபோல் 25 வயதான புனிதா என்ற காட்டுமாடு கடந்த மாதம் பெண் குட்டியை ஈன்றது. இந்த 2 குட்டிகளும் அதன் தாய்களுடன் விளையாடி திரிகிறது. இதை சுற்றுலா பயணிகள் மிகவும் ரசித்து செல்கிறார்கள்.

    மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் 69 சதுப்புநில முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த முதலைகள் 45 குஞ்சுகளை பொரித்துள்ளன. இந்த முதலை குஞ்சுகளை காகம், பறவைகள் தூக்கி செல்லாமல் தடுக்க பாதுகாக்கப்பட்ட கூண்டில் தனியாக வைத்து பராமரித்து வருகிறார்கள்.

    இந்த முதலை குஞ்சுகளுக்காக சுற்றி கம்பி வேலி பொருத்தப்பட்ட கூண்டு தயார் செய்யும் பணிகள் நடக்கிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும் அந்த கூண்டில் முதலை குஞ்சுகள் விடப்பட உள்ளது.

    • நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும்தான்.
    • தமிழகத்தில் கஞ்சாவை பிரபலப்படுத்தியதே தி.மு.க. ஆட்சிதான்.

    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொம்மை முதல்-அமைச்சராகத்தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். 15 மாத கால சர்வாதிகார ஆட்சியில் தமிழக மக்களுக்கு ஒரு துளி நன்மையும் கூட ஏற்படவில்லை.

    வரி உயர்வை மக்கள் தலையில் சுமத்தியதுதான் திராவிட மாடல். சொத்து வரி உயர்வுதான் வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த முதல் போனஸ். திராவிட மாடல் என கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    ரூ.1000 வீட்டு வரி செலுத்தியவர்கள் இன்று ரூ. 2 ஆயிரம் செலுத்த வேண்டிய அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கூரை வீட்டுக்கு கூட வரி போட்டு மக்களை துன்புறுத்தும் அரசுதான் தி.மு.க. அரசு.

    32 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களும், நன்மைகளும் செய்யப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டு மாவட்டத்தை உருவாக்கியது அ.தி.மு.க.தான்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் கொண்டு வந்தது அ.தி.மு.க. தான். ஏரியில் இருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்து அவர்களுக்கு உதவியது அ.தி.மு.க.

    ஈசூர், வள்ளிபுரம், வாயலூர் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழைய சீவரத்தில் தடுப்பணை கட்டி உள்ளோம்.

    அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர் பாசனம் அமைத்து கொடுத்து உள்ளோம்.

    தமிழகத்தில் 52 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பாடாய்படுத்துகிறது தி.மு.க. அரசு. மாதம் ஒரு முறை மின்சார கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தி.மு.க.வின் வாக்குறுதி என்ன ஆனது? 500 யூனிட் பயன்படுத்துவோர் 55 சதவீதம் கூடுதலாக மின்சார கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    கொரோனாவில் இருந்து மீண்டு வந்த மக்களை மின் கட்டணம், சொத்து வரி உயர்வின் மூலம் கொடுமைப்படுத்துகிறார்கள்.

    தமிழகத்தின் நிதிச்சுமையை ஏழை, எளிய மக்களின் தலையில் கட்டி துன்புறுத்துகிறார். மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். மின்சார கட்டண உயர்வால் மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

    ஏழை, எளிய மக்களுக்காக கொண்டு வரப்பட்ட அம்மா கிளினிக்குகளை மூடியவர்தான் ஸ்டாலின். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள் கொண்டு வரப்படும்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்படி இருந்தது என்று அதை வாங்கிய மக்களுக்கு தெரியும். ஒழுகிய வெல்லமும், இலவம் பஞ்சு கொட்டையும்தான் பொங்கல் தொகுப்பில் இருந்தது. நீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்லி மக்களையும், மாணவர்களையும் தி.மு.க. ஏமாற்றியது.

    நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும்தான். இன்றைக்கும் நீட் தேர்வை உண்மையாக எதிர்க்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியது அ.தி.மு.க.தான். 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் இந்த ஆண்டு 569 மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறி உள்ளது.

    தமிழகத்தில் கஞ்சாவை பிரபலப்படுத்தியதே தி.மு.க. ஆட்சிதான். போதைப் பொருள் புழக்கத்தையும், போதைப் பொருள் கடத்தலையும் தி.மு.க. அரசு தடுக்க தவறி உள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறிதான் நடக்கிறது. போதைப் பொருளை தடுக்காமல் தமிழக காவல் துறை தூங்குகிறதா? போதைப் பொருளை விற்பனை செய்வதே தி.மு.க.வினர் என்பதால் தான் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லையா?

    ஆன்லைன் ரம்மியை சட்ட ரீதியாக தடை செய்தது அ.தி.மு.க. அரசுதான். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய 15 மாதங்களாக குழு மட்டுமே போட்டுக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்.

    ஆன்லைன் ரம்மியை தடை செய்ய யாராவது மக்களிடம் கருத்து கேட்பார்களா? தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை அேமாகமாக நடக்கிறது.

    தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு முதியோர் உதவித்தொகை கொடுத்து உதவியது அ.தி.மு.க. ஆனால் முதியோர் உதவித்தொகையை தடுத்து அவர்களை திமு.க. வஞ்சித்து வருகிறது. 25 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தும் தமிழகத்தில் குறைக்காதது ஏன்?

    அ.தி.மு.க. நன்றாக இருக்கிறது. யாரும் அறிவுரை கூற தேவை இல்லை. தொண்டனாக இருந்து தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சாதாரண விவசாயி நான். 4 ஆண்டு 2 மாதம் ஆட்சி, கட்சியை அம்மா வழியில் கட்டுக்கோப்பாக நடத்தியதால் தொண்டர்களின் ஆதரவோடு தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • மாமல்லபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பன்றிகளை பிடிக்க மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு அதிகாரிகள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
    • பன்றி வளர்ப்போர் எதிர்ப்பு தெரிவித்து பன்றி பிடிக்க வந்த வாகனத்தை சிறைபிடித்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பன்றிகளை பிடிக்க மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு அதிகாரிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். இதற்காக பன்றிகளை பிடிக்க வெளியூரில் இருந்து ஆட்களை வரவழைத்து பிடித்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பன்றி வளர்ப்போர் எதிர்ப்பு தெரிவித்து பன்றி பிடிக்க வந்த வாகனத்தை சிறைபிடித்தனர்.

    மேலும் அந்த வாகனத்தின் சாவியை பறித்து பேரூராட்சியில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது பிடிக்கப்படும் பன்றியை தொலைதூரத்தில் விடாமல் விற்றுவிடுவதாக குற்றம்சாட்டினர்.

    • விடுதியில் தங்கி இருந்த சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து கற்பழித்தார்.
    • ஒரு வருடத்திற்கு பிறகு நேற்று கோயம்பேடு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டு கொண்டிருந்த சார்லசை போலீசார் கைது செய்தனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 58) இவர் ஆதரவற்றோர் விடுதி நடத்தி வந்தார்.

    அப்போது அங்கு விடுதியில் தங்கி இருந்த சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து, கற்பழித்தார். இதில் கர்ப்பமான அந்த சிறுமிக்கு கடந்த 2021ல் குழந்தை பிறந்தது.

    சிறுமியையும் குழந்தையையும் சென்னை ராஜமங்கலத்தில் உள்ள பெண் ஒருவரிடம் அடைக்கலமாக விட்டுவிட்டு சார்லஸ் தப்பி சென்றுவிட்டார். பின்னர் எந்த தொடர்பும் இல்லாததால் சிறுமி மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சார்லஸ் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். கடந்த ஒரு ஆண்டாக அவர் சிக்காமல் இருந்தார்.

    இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு நேற்று கோயம்பேடு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டு கொண்டிருந்த சார்லசை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவரை மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சார்லஸ் மீது போக்சோ, கற்பழிப்பு, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இன்று சிறையில் அடைத்தனர்.

    • ஆனந்தன் கண் பார்வை குறைபாடால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவரது மனைவி கங்காதேவி முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
    • வீட்டிற்கு திரும்பி வந்த மருமகள் ஆஷாதேவி மாமனார், மாமியார் இருவரும் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த சேலையூர், ராஜா அய்யர் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 73). இவரது மனைவி கங்காதேவி (63). இந்த தம்பதியினருக்கு ஜெயக்குமரன் என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி ஆஷாதேவி என்ற மனைவி உள்ளார். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றாக வீட்டில் வசித்து வந்தனர்.

    இதில் முதியவர் ஆனந்தன் கண் பார்வை குறைபாடால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவரது மனைவி கங்காதேவி முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வயது முதிர்ந்த நிலையில், உடல்நிலை குறைபாடு காரணமாக தம்பதிகள் இருவரும் உறவினர்களை பார்க்க முடியாமலும், வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமலும் இருந்ததால் தொடர்ந்து மன உளச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, இவர்களது மகன் ஜெயக்குமரன் வழக்கம்போல நேற்று வேலைக்கு சென்று விட்ட நிலையில், மாலை அவர்களது மருமகள் ஆஷாதேவி குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வர சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஆனந்தன் மற்றும் கங்காதேவி இருவரும் வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த மருமகள் ஆஷாதேவி மாமனார், மாமியார் இருவரும் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இணையதளத்தில் விளம்பரத்தை பார்த்த லோகேஷ்பிரபு வீட்டுக்கு ரூ.6 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • தமிழ்செல்வியின் கணவர் தணிகாச்சலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

    படப்பை:

    செங்கல்பட்டு மாவட்டம் பீர்க்கன்காரணை அம்பேத்கர் தெரு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 44). குத்தகைக்கு வீடு இருப்பதாக இவர் இணையதளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார்.

    விளம்பரத்தை பார்த்த காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஜபுரம் ஆதனூர் சாலை பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் லோகேஷ்பிரபு (வயது 36) ரூ.6 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    வீட்டை குத்தகைக்கு விடாமல் தமிழ்ச்செல்வி மற்றொருவரது வீட்டை காண்பித்து குடும்பத்துடன் நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றி விட்டதாக லோகேஷ்பிரபு மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வி அவரது மகன் சதீஷ்குமார்(20) ஆகியோரை கைது செய்தனர்.

    தமிழ்செல்வியின் கணவர் தணிகாச்சலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×