search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூல் என்ற தி.மு.க.வின் வாக்குறுதி என்ன ஆனது?- எடப்பாடி பழனிசாமி பேச்சு
    X

    மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூல் என்ற தி.மு.க.வின் வாக்குறுதி என்ன ஆனது?- எடப்பாடி பழனிசாமி பேச்சு

    • நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும்தான்.
    • தமிழகத்தில் கஞ்சாவை பிரபலப்படுத்தியதே தி.மு.க. ஆட்சிதான்.

    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொம்மை முதல்-அமைச்சராகத்தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். 15 மாத கால சர்வாதிகார ஆட்சியில் தமிழக மக்களுக்கு ஒரு துளி நன்மையும் கூட ஏற்படவில்லை.

    வரி உயர்வை மக்கள் தலையில் சுமத்தியதுதான் திராவிட மாடல். சொத்து வரி உயர்வுதான் வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த முதல் போனஸ். திராவிட மாடல் என கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    ரூ.1000 வீட்டு வரி செலுத்தியவர்கள் இன்று ரூ. 2 ஆயிரம் செலுத்த வேண்டிய அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கூரை வீட்டுக்கு கூட வரி போட்டு மக்களை துன்புறுத்தும் அரசுதான் தி.மு.க. அரசு.

    32 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களும், நன்மைகளும் செய்யப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டு மாவட்டத்தை உருவாக்கியது அ.தி.மு.க.தான்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் கொண்டு வந்தது அ.தி.மு.க. தான். ஏரியில் இருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்து அவர்களுக்கு உதவியது அ.தி.மு.க.

    ஈசூர், வள்ளிபுரம், வாயலூர் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழைய சீவரத்தில் தடுப்பணை கட்டி உள்ளோம்.

    அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர் பாசனம் அமைத்து கொடுத்து உள்ளோம்.

    தமிழகத்தில் 52 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பாடாய்படுத்துகிறது தி.மு.க. அரசு. மாதம் ஒரு முறை மின்சார கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தி.மு.க.வின் வாக்குறுதி என்ன ஆனது? 500 யூனிட் பயன்படுத்துவோர் 55 சதவீதம் கூடுதலாக மின்சார கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    கொரோனாவில் இருந்து மீண்டு வந்த மக்களை மின் கட்டணம், சொத்து வரி உயர்வின் மூலம் கொடுமைப்படுத்துகிறார்கள்.

    தமிழகத்தின் நிதிச்சுமையை ஏழை, எளிய மக்களின் தலையில் கட்டி துன்புறுத்துகிறார். மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். மின்சார கட்டண உயர்வால் மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

    ஏழை, எளிய மக்களுக்காக கொண்டு வரப்பட்ட அம்மா கிளினிக்குகளை மூடியவர்தான் ஸ்டாலின். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள் கொண்டு வரப்படும்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்படி இருந்தது என்று அதை வாங்கிய மக்களுக்கு தெரியும். ஒழுகிய வெல்லமும், இலவம் பஞ்சு கொட்டையும்தான் பொங்கல் தொகுப்பில் இருந்தது. நீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்லி மக்களையும், மாணவர்களையும் தி.மு.க. ஏமாற்றியது.

    நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும்தான். இன்றைக்கும் நீட் தேர்வை உண்மையாக எதிர்க்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியது அ.தி.மு.க.தான். 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் இந்த ஆண்டு 569 மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறி உள்ளது.

    தமிழகத்தில் கஞ்சாவை பிரபலப்படுத்தியதே தி.மு.க. ஆட்சிதான். போதைப் பொருள் புழக்கத்தையும், போதைப் பொருள் கடத்தலையும் தி.மு.க. அரசு தடுக்க தவறி உள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறிதான் நடக்கிறது. போதைப் பொருளை தடுக்காமல் தமிழக காவல் துறை தூங்குகிறதா? போதைப் பொருளை விற்பனை செய்வதே தி.மு.க.வினர் என்பதால் தான் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லையா?

    ஆன்லைன் ரம்மியை சட்ட ரீதியாக தடை செய்தது அ.தி.மு.க. அரசுதான். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய 15 மாதங்களாக குழு மட்டுமே போட்டுக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்.

    ஆன்லைன் ரம்மியை தடை செய்ய யாராவது மக்களிடம் கருத்து கேட்பார்களா? தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை அேமாகமாக நடக்கிறது.

    தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு முதியோர் உதவித்தொகை கொடுத்து உதவியது அ.தி.மு.க. ஆனால் முதியோர் உதவித்தொகையை தடுத்து அவர்களை திமு.க. வஞ்சித்து வருகிறது. 25 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தும் தமிழகத்தில் குறைக்காதது ஏன்?

    அ.தி.மு.க. நன்றாக இருக்கிறது. யாரும் அறிவுரை கூற தேவை இல்லை. தொண்டனாக இருந்து தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சாதாரண விவசாயி நான். 4 ஆண்டு 2 மாதம் ஆட்சி, கட்சியை அம்மா வழியில் கட்டுக்கோப்பாக நடத்தியதால் தொண்டர்களின் ஆதரவோடு தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    Next Story
    ×