என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • லாக்கரை திறக்க முயற்சி செய்தபோது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து உள்ளனர்.
    • கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே சேலையூர்- வேளச்சேரி சாலையில் உள்ள ப்ளூ ஸ்டோன் என்கிற பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

    நேற்று நள்ளிரவில் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் மாடியில் இருந்து லிப்ட் வழியாக கடைக்குள் புகுந்து கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில், கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளும் திருடப்பட்டுள்ளன. லாக்கரை திறக்க முயற்சி செய்தபோது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து உள்ளனர்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்து வருகின்றனர்.

    மேலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகளின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகுகிறது.

    • அகரம்தென் சந்திப்பு சாலை, பொன்மார் சாலை உள்ளிட்ட 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார்.
    • ஆயுதப்படை பயிற்சி மையத்திற்காக ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் இடத்தில் ஆக்கிரமிப்புகள் பெருகி வருகிறது.

    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த வேடமங்கலத்தில் புறகாவல் நிலையம் மற்றும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் கண்டிகை சாலை, அகரம்தென் சந்திப்பு சாலை, பொன்மார் சாலை உள்ளிட்ட 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார்.

    இதில் ஊராட்சி தலைவர் கல்யாணிரவி, திருப்போரூர் ஒன்றிய குழு தி.மு.க. தலைவர் இதயவர்மன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய முன்னாள் தலைவர் சம்பத்குமார், மாவட்ட கவுன்சிலர் கஜேந்திரன், போலீஸ் துணை கமிஷனர் ஜோஷ்தங்கையா, உதவி கமிஷனர் ரவிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் நெடுங்குன்றம் வனிதா ஸ்ரீசீனிவாசன், நல்லம்பாக்கம் லட்சுமணன், ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி, கீரப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணிரவி போலீஸ் கமிஷனரிடம் அளித்த கோரிக்கை மனுவில், புதிய புறக்காவல் நிலையத்தில் நிரந்தரமாக சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 2 போலீசாரை பணியமர்த்த வேண்டும், ஆயுதப்படை பயிற்சி மையத்திற்காக ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் இடத்தில் ஆக்கிரமிப்புகள் பெருகி வருகிறது. எனவே அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

    • இரும்பு கம்பியுடன் மின்வயரும் அறுந்ததால் தரைதளம் வரை செல்லாமல் முதல் மாடியிலேயே ‘லிப்ட்’ நின்றுவிட்டது.
    • அருகில் இருந்தவர்கள் ‘லிப்ட்’டின் கதவை உடைத்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3-வது தளத்தில் உள்ள 'லிப்ட்'டை நோயாளிகள், டாக்டர்கள், ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 4½ மணியளவில் 3-வது மாடியில் இருந்து ஒரு டாக்டர், ஒரு நர்ஸ் உள்ளிட்ட 12 பேர் 'லிப்ட்'டில் ஏறினர். அப்போது திடீரென 'லிப்ட்'டை தாங்கி செல்லும் இரும்பு கம்பி அறுந்து மளமளவென முதல் தளத்தில் இறங்கி நின்றது. மேலும் இரும்பு கம்பியுடன் மின்வயரும் அறுந்ததால் தரைதளம் வரை செல்லாமல் முதல் மாடியிலேயே 'லிப்ட்' நின்றுவிட்டது. இதனால் 'லிப்ட்'டில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அருகில் இருந்தவர்கள் 'லிப்ட்'டின் கதவை உடைத்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இதுபோன்ற சம்பவம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 4-வது முறையாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வண்டலூரில் கார் மோதிய விபத்தில் சிக்கி தாய், மகள் உயிரிழந்தனர்.
    • விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    சென்னை அடுத்த வண்டலூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி தாய் உமா மகேஸ்வரி, மகள் கிருத்திகா ஆகியோர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    விசாரணையில், வண்டலூர் மேம்பால இறக்கத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    இரு சக்கர வாகனம் மீது கார் மோதி தாய், மகள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
    • நிதியாண்டுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்படுத்தப்பட்டோா மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவ- மாணவிகளில் ஒருவருக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

    மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2022-23-ம் கல்வியாண்டில் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்கண்ட முகவரியிலுள்ள இயக்கத்தையோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகியோ அல்லது https://bcmbcma/tn.gov.in/welfschemes.htm#scholarship schemes என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும் மேற்படி நிதியாண்டுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், எழிலகம் கட்டிடம் 2-வது தளம் இ சேப்பாக்கம், சென்னை- 5 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்து

    விண்ணப்பங்களை 31.1.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    • தலைவலி காரணமாக தேவேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலை குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மறைமலைநகர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பேரமனூர் விவேகானந்தர் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 50), காவலாளியாக வேலை செய்து வந்தார். தலைவலி காரணமாக நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த தென்மேல் பாக்கம் கிராமம் மலைப்பகுதி மற்றும் ஏரியை ஒட்டி உள்ளது.
    • கடந்த 3 நாட்களாக அடுத்தடுத்து மூன்று கன்றுக்குட்டிகள் மர்மமாக இறந்து கிடந்தது.

    செங்கல்பட்டு:

    சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த தென்மேல் பாக்கம் கிராமம் மலைப்பகுதி மற்றும் ஏரியை ஒட்டி உள்ளது. மலைப் பகுதியில் இருந்து வரும் வன விலங்குகள் அடிக்கடி ஏரிப்பகுதிக்கு வந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அடுத்தடுத்து மூன்று கன்றுக்குட்டிகள் மர்மமாக இறந்து கிடந்தது. இதில் பிரகாஷ் என்பவரது வீட்டின் அருகே கட்டப்பட்டு இருந்த கன்று குட்டியின் வாய் பகுதி கடித்து குதறப்பட்டு இருந்தது.

    சிறுத்தைப்புலிகள் தான் இதுபோல் விலங்குகளை தாக்கும் என்பதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் போன்றும் பதிவாகி இருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரி கமலாசணன் மற்றும் வன ஊழியர்கள் தென்மேல் பாக்கம் கிராமத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அவர்கள் மர்ம விலங்கால் கடித்து குதறப்பட்ட கன்று குட்டியின் உடலை பார்வையிட்டனர்.

    மேலும் நேற்று இரவு 10-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் தென்மேல பாக்கம் கிராமத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் மர்ம விலங்குகள் எதுவும் சிக்கவில்லை.

    இதையடுத்து கன்று குட்டிகளை கொன்றது சிறுத்தைப்புலி தானா? என்பதை உறுதி செய்ய 2 கண்காணிப்பு கேமிராக்கள் உடனடியாக அப்பகுதியில் பொருத்தப்பட்டது.

    இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, 'சில ஆண்டுகளுக்கு முன்பு மீஞ்சூர், ஈச்சங்கரணை கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. தற்போது இங்கு சிறுத்தைப்புலியின் கால்தடம் உள்ளது.

    சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் உடனடியாக கண்காணித்து அதனை பிடித்து வேறு இடத்தில் விட வேண்டும். சிறுத்தையின் நடமாட்டத்தால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம்' என்றனர்.

    'தென்மேல் பாக்கம் கிராமத்தில் 3 கன்றுக்குட்டிகளை மர்ம விலங்கு கடித்து கொன்று உள்ளது. இதுவரை அதனை கொன்றது சிறுத்தைப்புலி தான் என்பது உறுதி ஆகவில்லை.

    சிறுத்தைப்புலியின் கால்தடம் போன்று வந்ததால் அந்த விலங்கை கண்காணிக்க 2 கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. எனவே கிராம மக்கள் தங்களது கால்நடைகளான ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்குள் அனுப்ப வேண்டாம்.

    மேலும் 2 காமிராக்கள் பொருத்த முடிவு செய்து உள்ளோம். சிறுத்தைப்புலி என்பது உறுதி ஆனால் அதனை பிடிக்க உடனடியாக கூண்டு வைக்கப்படும். சிறுத்தைப் புலி நடமாட்டம் அச்சம் உள்ளதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்' என்றனர்.

    • சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட விஞ்சியம் பாக்கம், ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது வீடு புதியதாக அமைக்கப்பட்ட 3-வது ரெயில்வே தண்டவாளத்தின் அருகிலேயே அமைந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல இவர் வெளியே செல்ல தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நாகர்கோவில் இருந்து-தாம்பரம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் இவர் மீது மோதியது. இதில் சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கிராமப்புற பெண்களுக்கு இலவசமாக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
    • ஆராய்ச்சி மையத்தின் ஆலோசகர் சேஷாத்ரி, அலுவலர் ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடியில் உள்ள முருகப்பா செட்டியார் வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் சார்பில், சென்னை அப்பல்லோ மருத்துவமனை புற்றுநோய் சிறப்பு மருத்துவர் நவீன் தலைமையில் கிராமப்புற பெண்களுக்கு இலவசமாக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    இதில் கடம்பாடி, வடகடம்பாடி, பெருமாளேரி, காரணை, மணமை, குன்னத்தூர், வளவந்தாங்கல், சதுரங்க பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.

    மார்பகம், வாய், தோல், கர்பப்பை, போன்ற பகுதிகளில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் அறிகுறிகளை அறிதல், வரும்முன் தடுத்துதல், ஆரம்பத்திலேயே மருத்துவம் பார்த்து சிகிச்சை செய்து குணமடைதல் மற்றும் விழிப்புணர்வு ஆலோசனையும் வழங்கப்பட்டது. ஆராய்ச்சி மையத்தின் ஆலோசகர் சேஷாத்ரி, அலுவலர் ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தீ விபத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது.
    • சமையல் செய்த போது எண்ணெய் கடாயில் இருந்து பற்றிய தீ அருகில் இருந்த பொருட்கள் மீது பரவியதே விபத்துக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தாம்பரம்:

    தாம்பரம் முடிச்சூர் சாலையில் முகமது நசீர் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்தது. சற்று நேரத்தில் தீ மளமளவென ஓட்டல் முழுவதும் பரவத்தொடங்கியது,

    ஊழியர்கள் மற்றும் சாப்பிட வந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியேறினர். தாம்பரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்,

    ஆனால் அதற்குள் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது. சமையல் செய்த போது எண்ணெய் கடாயில் இருந்து பற்றிய தீ அருகில் இருந்த பொருட்கள் மீது பரவியதே விபத்துக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • ஐந்துரதம் போன்ற முக்கிய வீதிகளில் எந்த நேரமும் மாடுகள் உலாவுகின்றது.
    • மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மாடு வளர்ப்போரை அழைத்து எச்சரித்தது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பூஞ்சேரி, தேவநேரி கிழக்கு கடற்கரை சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, பொதுப்பணித்துறை சாலை, தலசயன பெருமாள் கோயில், ஐந்துரதம் போன்ற முக்கிய வீதிகளில் எந்த நேரமும் மாடுகள் உலாவுகின்றது.

    காலை வேளையில் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மாடுகளால் சிரமம் அடைகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு பைக்கில் அழைத்து செல்லும் தாய்மார்கள் பயத்துடனே வாகனத்தை ஓட்டுகிறார்கள், சிலர் விபத்துக்களில் சிக்கியும் காயமடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகளும் அச்சம் அடைகிறார்கள்.

    இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பலமுறை நவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதையடுத்து மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மாடு வளர்ப்போரை அழைத்து எச்சரித்தது. இருப்பினும் தொடர்ந்து மாடுகள் சுற்றி திரியும் நிலை மாமல்லபுரத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் வீதியில் சுற்றும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×