என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிங்கபெருமாள் கோவில் அருகே 3 கன்று குட்டிகளை கொன்ற சிறுத்தைப்புலி-  மக்கள் உஷாராக இருக்க  அறிவுறுத்தல்
    X

    சிங்கபெருமாள் கோவில் அருகே 3 கன்று குட்டிகளை கொன்ற சிறுத்தைப்புலி- மக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தல்

    • சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த தென்மேல் பாக்கம் கிராமம் மலைப்பகுதி மற்றும் ஏரியை ஒட்டி உள்ளது.
    • கடந்த 3 நாட்களாக அடுத்தடுத்து மூன்று கன்றுக்குட்டிகள் மர்மமாக இறந்து கிடந்தது.

    செங்கல்பட்டு:

    சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த தென்மேல் பாக்கம் கிராமம் மலைப்பகுதி மற்றும் ஏரியை ஒட்டி உள்ளது. மலைப் பகுதியில் இருந்து வரும் வன விலங்குகள் அடிக்கடி ஏரிப்பகுதிக்கு வந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அடுத்தடுத்து மூன்று கன்றுக்குட்டிகள் மர்மமாக இறந்து கிடந்தது. இதில் பிரகாஷ் என்பவரது வீட்டின் அருகே கட்டப்பட்டு இருந்த கன்று குட்டியின் வாய் பகுதி கடித்து குதறப்பட்டு இருந்தது.

    சிறுத்தைப்புலிகள் தான் இதுபோல் விலங்குகளை தாக்கும் என்பதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் போன்றும் பதிவாகி இருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரி கமலாசணன் மற்றும் வன ஊழியர்கள் தென்மேல் பாக்கம் கிராமத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அவர்கள் மர்ம விலங்கால் கடித்து குதறப்பட்ட கன்று குட்டியின் உடலை பார்வையிட்டனர்.

    மேலும் நேற்று இரவு 10-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் தென்மேல பாக்கம் கிராமத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் மர்ம விலங்குகள் எதுவும் சிக்கவில்லை.

    இதையடுத்து கன்று குட்டிகளை கொன்றது சிறுத்தைப்புலி தானா? என்பதை உறுதி செய்ய 2 கண்காணிப்பு கேமிராக்கள் உடனடியாக அப்பகுதியில் பொருத்தப்பட்டது.

    இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, 'சில ஆண்டுகளுக்கு முன்பு மீஞ்சூர், ஈச்சங்கரணை கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. தற்போது இங்கு சிறுத்தைப்புலியின் கால்தடம் உள்ளது.

    சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் உடனடியாக கண்காணித்து அதனை பிடித்து வேறு இடத்தில் விட வேண்டும். சிறுத்தையின் நடமாட்டத்தால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம்' என்றனர்.

    'தென்மேல் பாக்கம் கிராமத்தில் 3 கன்றுக்குட்டிகளை மர்ம விலங்கு கடித்து கொன்று உள்ளது. இதுவரை அதனை கொன்றது சிறுத்தைப்புலி தான் என்பது உறுதி ஆகவில்லை.

    சிறுத்தைப்புலியின் கால்தடம் போன்று வந்ததால் அந்த விலங்கை கண்காணிக்க 2 கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. எனவே கிராம மக்கள் தங்களது கால்நடைகளான ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்குள் அனுப்ப வேண்டாம்.

    மேலும் 2 காமிராக்கள் பொருத்த முடிவு செய்து உள்ளோம். சிறுத்தைப்புலி என்பது உறுதி ஆனால் அதனை பிடிக்க உடனடியாக கூண்டு வைக்கப்படும். சிறுத்தைப் புலி நடமாட்டம் அச்சம் உள்ளதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்' என்றனர்.

    Next Story
    ×