என் மலர்
செங்கல்பட்டு
- மாண்டஸ்’ புயல் காரணமாக கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது.
- 6 அடி உயரத்துக்கு பலத்த கடல் அரிப்பும் ஏற்பட்டது.
மாமல்லபுரம் :
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி குப்பத்தில் 'மாண்டஸ்' புயல் காரணமாக நேற்று கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு சீறி எழும்பி வந்ததால் கரைப்பகுதியில் உள்ள வெங்கட்டம்மன் கோவிலின் முன்பக்க அலங்கார வளைவு பகுதியும், தரைதளமும், தூண்களும் இடிந்து விழுந்தது.
அந்த பகுதியில் 6 அடி உயரத்துக்கு பலத்த கடல் அரிப்பும் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் இடிந்து விழுந்து சேதமடைந்த அம்மன் கோவிலின் ஒரு பகுதியையும், படகுகள் நிறுத்துமிடத்தில் சேதமடைந்த சிமெண்டு சாலைகளையும் பார்வையிட சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் வந்தனர்.
அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசனை வழிமறித்து கடல் அரிப்பால் எங்கள் ஊர் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது என்றும், தூண்டில் வளைவு அமைக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், வீட்டுக்குள் இருந்தால் கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீர் வந்துவிடுமோ? என்ற ஒருவித உயிர் பயத்தில் இருந்து வருகிறோம். இதுவரை தூண்டில் வளைவு குறித்த எங்கள் கோரிக்கையை ஏன் அரசு நிறைவேற்றவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
மீனவ மக்களின் கோரிக்கையை கேட்டறிந்த அவர், அவர்களுக்கு ஆறுதல் கூறியபிறகு, இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து செல்வதாக உறுதியளித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
அமைச்சருடன் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. சஜ்ஜீவனா, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், நெம்மேலி ஒன்றிய கவுன்சிலர் தேசிங்கு, நெம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் ரமணிசீமான் உள்பட பலர் வந்திருந்தனர். புயல் கரையை கடக்கும்போது தங்கள் படகுகள் கடலில் அடித்து செல்லாமல் இருக்க பாதுகாப்பாக இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
- பொது நல நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தனி கவனம் செலுத்தி பணியாற்றுகின்றனர்.
- மாமல்லபுரம் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவு புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாமல்லபுரம்.
வங்க கடலில் உருவான 'மாண்டஸ்' தீவிர புயல் இன்று வலுவிழந்து புயலாக மாறி வந்து கொண்டிருக்கிறது.
இந்த புயலின் மைய பகுதி என்று அழைக்கப்படும் கண் பகுதி மாமல்லபுரம் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு அரசு பல்வேறு அறிவுரைகளையும், எச்சரிக்கையும் விடுத்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது.
புயல் இன்றிரவு கரையை கடக்கும் என்பதால் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக குறு - சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாமல்லபுரம் பகுதியில் முகாமிட்டுள்ளார்.
அவர் இன்று காலையில் நீலாங்கரை, கானாத்தூர், நெம்மேலி, கோவளம், மாமல்லபுரம் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். அவருடன் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், பருவ மழைக்கான சிறப்பு அதிகாரி முனைவர் பொ.சங்கர் ஐ.ஏ.எஸ். மற்றும் வருவாய் பேரிடர் துறை அதிகாரிகள், மீட்பு படை அதிகாரிகள் ஆகியோரும் உடன் சென்றனர்.
மாமல்லபுரம் மற்றும் அதையொட்டிய கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் புயல் மீட்பு மையங்களையும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பார்வையிட்டார்.
அப்போது கோவளத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் மாமல்லபுரம் உள்ளிட்ட செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கடற்கரை ஓரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உள்ளது.
குறிப்பாக மாவட்டம் முழுவதும் 206 இடங்களில் பாதுகாப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு தங்கும் மக்களுக்காக 3 வேளை உணவு வழங்க வேண்டிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ முகாமுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.
புயல் கரையை கடக்கும் போது மின் கம்பங்கள் சாய்ந்ததால் அதனை சரி செய்ய 600 மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. மின் வாரிய அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர்.
மரம் விழுந்ததால் அதை அப்புறப்படுத்த அதற்கான ஆட்கள் மரம் அறுக்கும் கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.
எனவே எந்த வகையிலும் எவ்வளவு பெரிய பாதிப்பு வந்தாலும் மக்களை பாதுகாக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை வழங்கி உள்ளார்.
அதனால் அனைத்து முக்கிய அதிகாரிகளும் இங்கு முகாமிட்டு பணியாற்றி வருகின்றனர். பொது நல நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தனி கவனம் செலுத்தி பணியாற்றுகின்றனர்.
ஏதாவது பாதிப்பு வந்தால் மீட்பு பணிக்காக பேரிடர் மீட்பு படையினர் 120 பேர் 3 குழுவாக தயாராக உள்ளனர்.
தேவையான முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதால் எந்த வகையிலும் பொது மக்கள் பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் பணியாற்றி வருகிறது.
இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
அப்போது கலெக்டர் ராகுல்நாத், சிறப்பு அதிகாரி முனைவர் பொ.சங்கர் உடன் இருந்தனர்.
- உள்நாட்டு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, பெருநகர் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
- கடற்கரை சுகாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட சமூகம் சார்ந்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
மாமல்லபுரம்:
ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா தன்னார்வ நிறுவனம், ஹேன்ட் இன் ஹேன்ட் ஸ்வீடன் இணைந்து மாமல்லபுரத்தில் "தூய்மை சமூகங்களால் தூய்மை கடல்" என்ற திட்டத்தின் தலைப்பில் மூன்று நாள் பயிலரங்கம் நடத்தியது. இதில் உள்நாட்டு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, பெருநகர் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு திட்டத்தின் இயக்குனர் நார்வே நாட்டை சேர்ந்த "சிக்வே அந்தேரா", கடற்கரை தூய்மை, பேரிடர் காலங்களில் கடல்வாழ் உயிரினங்களை காப்பது, பிளாஸ்டிக் தவிர்ப்பது, கடற்கரை சுகாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட சமூகம் சார்ந்த விழிப்புணர்வு பயிற்சி கொடுத்தார். மாமல்லபுரம்-கோவளம்-கல்பாக்கம் சுற்று வட்டார கடலோரப்பகுதி ஊராட்சி தலைவர்கள், செயலர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், தன்னார்வலர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் இந்த பயிலரங்கத்தில் பங்கேற்றனர்.
- கடலின் சீற்றத்தால் சில படகுகள் சேதமடைந்து கடலுக்குள் இழுத்து செல்லபட்டது.
- மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர்.
மாமல்லபுரம்:
வங்கக்கடலில் உருவாகி உள்ள "மாண்டஸ்" புயலால் இன்று காலை முதல் மாமல்லபுரம் பகுதியில் மழை பலத்த மழை பெய்து வருகிறது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
கடும் இரைச்சலுடன் அலைகள் சுமார் 40 அடி உயரத்துக்கு எழுகின்றன. கடற்கரை கோயில் தென் பகுதியில் உள்ள திறந்தவெளி கடைகள் வரை கடல்நீர் புகுந்து கடைகளை கடலுக்குள் இழுத்து சென்றது. கரையோரத்தில் நிறுத்தப்பட்ட படகுகளையும் கடலுக்குள் இழுத்து சென்றன. மீனவர்கள் தங்களது படகுகளை பத்திரமாக மீட்டு பாதுகாப்பாக மேடான பகுதியில் நிறுத்தி கட்டி வைத்து உள்ளனர்.
இருந்தும் கடலின் சீற்றத்தால் சில படகுகள் சேதமடைந்து கடலுக்குள் இழுத்து செல்லபட்டது. தொடர்ந்து கடல் அலை கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் புயல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. கடற்கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மீட்பு பணியில் அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
- படகு, வலை, மிஷின்களை பாதுகாப்பாக வைக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
- கடலோர பகுதிகளின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
மாமல்லபுரம்:
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக (மாண்டஸ்) வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்கவும், படகு, வலை, மிஷின்களை பாதுகாப்பாக வைக்கும்படியும் அறிவுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் இன்று காலை மாமல்லபுரம், தேவநேரி, கொக்கிலமேடு, வெண்புருஷம் உள்ளிட்ட கடலோர பகுதிகளின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சப்-கலெக்டர் சஜீவனா, தாசில்தார் பிரபாகரன், எஸ்வந்த்ராவ், மாமல்லபுரம் பேரூராட்சி துணை தலைவர் ராகவன், அப்பகுதி கவுன்சிலர்கள் சுகுமாரன், தேவி ராமன் உள்ளிட்ட பகுதி மக்கள் பலர் இருந்தனர்.
- காதல் ஜோடி அவ்வழியே சென்ற ரெயில் மோதியதில் இறந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
- ரெயில் மோதி காதல் ஜோடி பலியான சம்பவம் அவர்களது நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வண்டலூர்:
கடலூரை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது24). கபடி வீரரான இவர் மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் சிங்க பெருமாள் கோவிலை அடுத்த பேர்ணாம்பூர் பகுதியில் நண்பர்களுடன் தங்கி பணிக்கு சென்றார்.
இவருக்கும் உடன் வேலைபார்த்த தூத்துக்குடியை சேர்ந்த ஷெர்லினுக்கும்(20) பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. இருவரும் வேலை முடிந்து செல்லும்போது இரவு நேரத்தில் சிங்கபெருமாள்கோவில் ரெயில்வே பாதை அருகே நின்று பேசுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை காதல் ஜோடியான அலெக்ஸ் மற்றும் ஷெர்லின் ஆகியோர் சிங்கபெருமாள் கோவில் ரெயில்வே பாதை அருகே உடல் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் தாம்பரம் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காதல் ஜோடி அவ்வழியே சென்ற ரெயில் மோதியதில் இறந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
அவர்கள் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தனரா? அல்லது தண்டவாளம் அருகே நின்று பேசிக்கொண்டு இருந்தபோது அவ்வழியே சென்ற ரெயில் மோதியில் இறந்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக அவர்கள் பயன்படுத்திய செல்போன்களை போலீசார் ஆய்வு செய்து அவர்களது நண்பர்களிடமும் விசாரித்து வருகின்றனர். ரெயில் மோதி காதல் ஜோடி பலியான சம்பவம் அவர்களது நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நாளை முதல் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 6 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை :
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதால், தமிழகம் முழுவதும் நாளை (9-ந் தேதி) முதல் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் மீட்பு படையினரை தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சை போன்ற 6 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதோடு காவல்துறையைச்சேர்ந்த நீச்சல் வீரர்கள், கடலோர பாதுகாப்பு குழும வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களும் படகுகளுடன் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை டி.ஜி.பி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
+2
- ஆர்ப்பாட்டத்தில் நாகை எம்.எல்.ஏ நவாஸ், கோவை அக்பர் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகில் செங்கை தெற்கு மாவட்ட, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று, வழிபாட்டுரிமைப் பாதுகாப்பிற்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாகை எம்.எல்.ஏ நவாஸ், கோவை அக்பர்அலி, அகமதுபாஷா, முகமது அசாருதின், மகமது ஷெரீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெறும் மேடை அருகே உள்ள வேதகிரீஸ்வரர் கோயில் மலையில் தான் கார்த்திகை தீபமும் ஏற்றப்பட இருந்தது. தீப விழாவிற்கு இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் என இந்து சமுதாய மக்களும் வருவதால், அங்கு மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உத்தரவின் பெயரில், திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஒரே நாளில் பாபர் மசூதி இடிப்பு தினமும், கார்த்திகை மெகா தீபம் நாளும் வந்ததால் பாதுகாப்பு சிக்கல் எழுந்துவிடக்கூடாது என்பதில் போலீசார் கவனமாக இருந்தனர். எந்தவித சர்ச்சைகளுக்கும் இடமளிக்காமல ஆர்ப்பாட்டமும், மெகாதீபமும் அமைதியாக நடந்து முடிந்ததால் அங்கு காவல் பணியில் ஈடுபட்ட போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
- தூய்மை சமூகம், தூய்மை கடல் என்ற பெயரில் மாமல்லபுரத்தில் பயிலரங்கம் நடைபெற்றது.
- மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் மற்றும் "நீலக்கொடி" அந்தஸ்த்தை பெற்ற கோவளம் கடற் கரையை தூய்மையாக வைப்பது தொடர்பாக "தூய்மை சமூகம், தூய்மை கடல்" என்ற பெயரில் மாமல்லபுரத்தில் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாளை வரை இந்த பயிலரங்கம் நடை பெறுகிறது.
- மதுராந்தகம் அருகே லாரி மீது டாடா ஏஸ் வாகனம் மோதியது.
- இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மதுராந்தகம்:
சென்னை பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்திரசேகர் (வயது 70), சசிகுமார் (35), தாமோதரன் (28), ஏழுமலை (65), கோகுல் (33), சேகர் (55).
இவர்கள் உள்ளிட்ட மொத்தம் 12 பேர் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நேற்று திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்ய சென்றனர்.
அவர்கள் சரக்கு ஆட்டோவின் பின் பகுதியில் பிளாஸ்டிக் தார்பாய் கட்டி பயணம் செய்தனர். திருவண்ணாமலை சென்று தீப தரிசனம் முடிந்ததும் இன்று அதிகாலை அவர்கள் அதே ஆட்டோவில் சென்னை பல்லாவரம் நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
இன்று காலை 4.30 மணியளவில் மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் பகுதியில் சரக்கு ஆட்டோ வந்து கொண்டு இருந்தது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ திடீரென முன்னால் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்னால் மோதியது. அந்த நேரத்தில் பின்னால் வந்த மற்றொரு லாரி விபத்தில் சிக்கிய சரக்கு ஆட்டோவை லாரியுடன் சேர்த்து நசுக்கியது.
இதில் 2 லாரிகளுக்கு இடையே சிக்கிய சரக்கு ஆட்டோ முற்றிலும் நொறுங்கி முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியின் பின்பகுதியில் சொருகியது.
இந்த கோர விபத்தில் சரக்கு ஆட்டோவில் இருந்த சந்திரசேகர், சசிகுமார், தாமோதரன், ஏழுமலை, கோகுல், சேகர் ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை பற்றிய விபரம் வருமாறு:-
1. பாலமுருகன் (22) கண்ணம்மா பேட்டை, சென்னை
2. ராமமூர்த்தி (35) பேராவூரணி, தஞ்சாவூர்
3. சதீஷ் (27) பொழிச்சலூர்
4. சேகர் (37) பொழிச்சலூர்
5. அய்யனார் (35)பொழிச்சலூர்
6. ரவி (26) பொழிச்சலூர்
விபத்து பற்றி அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சரக்கு ஆட்டோ லாரியின் பின்னால் சிக்கியதால் இறந்தவர்களின் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து கிரேன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடந்தது. பலியான சந்திரசேகர் உள்ளிட்ட 6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
காயம் அடைந்த பாலமுருகன் உள்ளிட்ட 6 பேரும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடந்த இடத்தை டி.எஸ்.பி. மணிமேகலை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். முதல்கட்ட விசாரணையில் அதிகமானோர் விதிமுறை மீறி சரக்கு ஆட்டோவில் பயணம் செய்து இருப்பதும், அதிவேகத்தில வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியில் சிக்கி இருப்பதும் தெரிய வந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் 2 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து காரணமாக திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண சென்றவர்கள் ஒரே நேரத்தில் விபத்தில் பலியானது குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அலறிதுடித்தபடி உள்ளனர். இது காண்போரை கண்கலங்க வைத்தது.
விபத்தில் பலியான 6 பேரும் சாதாரண கூலித்தொழிலாளர்கள் ஆவர். இதில் விபத்தில் சிக்கிய சரக்கு ஆட்டோ பலியான சேகர் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
அனைவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் சேகரின் சரக்கு ஆட்டோவிலேயே பின்பகுதியில் தார்பாய் கட்டி அமர்ந்து சென்று உள்ளனர்.
நேற்று காலை 8.30 மணிக்கு அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை கோவிலுக்கு புறப்பட்டு சென்று இருக்கிறார்கள். பின்னர் திரும்பி வரும்போது விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகி விட்டனர்.
கோவிலில் கூட்டத்தில் அனைவரும் நிற்கும் புகைப்படத்தை செல்போனில் படம் எடுத்து நண்பர்களுக்கு சமூகவலைதளத்தில் பதிவு செய்து இருந்தனர். தீபத் திருவிழா முடிந்து வருவதற்குள் 6 பேரின் வாழ்க்கை முடிந்து போனதை நினைத்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தவிப்பில் உள்ளனர்.
இதுகுறித்து பொழிச்சலூரை சேர்ந்த பலியானவர்களின் உறவினர்கள் கூறும்போது, அனைவரும் நேற்று காலை 8.30 மணிக்கு தான் திருவண்ணாமலை கோவிலுக்கு தீபத்திருவிழாவை காண சென்றனர். இன்று காலை 6 பேர் பலியான செய்தி எங்களை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.
பலியான அனைவரும் கூலித்தொழிலாளர்கள். கொத்தனார், பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்கள். அவர்களது இழப்பால் குடும்பம் நிலைகுலைந்து உள்ளது. அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான நிதி உதவியை அரசு அளிக்க வேண்டும் என்றனர்.
விபத்தில் பொழிச்சலூரை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்போனை பறிகொடுத்தவர் அதே எண்ணில் தொடர்பு கொண்டபோது, அவரிடம் போலீசார் விவரங்களை தெரிவித்து போலீஸ் நிலையம் வரவழைத்தனர்.
- தாம்பரம் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீசாரும் காளீஸ்வரியை சால்வை அணித்து பாராட்டினர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த தாம்பரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாக பணியாற்றி வருபவர் காளீஸ்வரி. இவர், தாம்பரம் பஸ் நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கூடுவாஞ்சேரி செல்லும் அரசு பஸ்சில் ஏறிய வடமாநில வாலிபர், சிறிது நேரத்தில் கீழே இறங்கினார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த பெண் போலீஸ் காளீஸ்வரி, அந்த வாலிபரிடம் விசாரிக்க முயன்றார். ஆனால் அந்த வாலிபர், தப்பி ஓடினார். உடனே காளீஸ்வரி விரட்டிச்சென்று அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து சோதனை செய்தார். அதில் அந்த வாலிபரின் சட்டை பையில் விலை உயர்ந்த செல்போன் இருந்தது.
அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று நடத்திய விசாரணையில் அவர், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சோட்டோ (வயது 19) என்பதும், கூடுவாஞ்சேரி அரசு பஸ்சில் இருந்த பயணி ஒருவரின் விலை உயர்ந்த செல்போனை திருடியதும் தெரிந்தது.
இதற்கிடையில் செல்போனை பறிகொடுத்தவர் அதே எண்ணில் தொடர்பு கொண்டபோது, அவரிடம் போலீசார் விவரங்களை தெரிவித்து போலீஸ் நிலையம் வரவழைத்தனர். விசாரணையில் அவர் ஆண்டிமடத்தை சேர்ந்த மாயவேல் (30) என தெரியவந்தது. அவர் அளித்த புகாரின்பேரில் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போனை திருடிய சோட்டோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். துரிதமாக செயல்பட்டு செல்போன் திருடனை விரட்டிப்பிடித்த பெண் போலீஸ் காளீஸ்வரிக்கு பொதுமக்கள் பலரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. தாம்பரம் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீசாரும் காளீஸ்வரியை சால்வை அணித்து பாராட்டினர்.
- உரிமையாளர்களிடம் மீண்டும் இதுபோல் மாடுகளை சரிவர பராமரிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- சாலைகளில் சரிவர பராமரிக்காத மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுவதாக மாநகராட்சி ஆணையருக்கு புகார் வந்தது.
தாம்பரம்:
தாம்பரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் சரிவர பராமரிக்காத மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுவதாக மாநகராட்சி ஆணையருக்கு புகார் வந்தது. இதையடுத்து சாலைகளில் சுற்றித்திரிந்த 16 மாடுகளை பிடித்து ஒரு இடத்தில் அடைத்து வைத்து அதன் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உரிமையாளர்களிடம் மீண்டும் இதுபோல் மாடுகளை சரிவர பராமரிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து ஒரு மாட்டிற்கு 500 ரூபாய் வீதம் அபராதம் வீதம் விதிக்கப்பட்டு மொத்தம் ரூ. 8 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.






