என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுராந்தகம் அருகே ஆட்டோ மீது லாரிகள் மோதல்- சென்னை பக்தர்கள் 6 பேர் பலி
- மதுராந்தகம் அருகே லாரி மீது டாடா ஏஸ் வாகனம் மோதியது.
- இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மதுராந்தகம்:
சென்னை பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்திரசேகர் (வயது 70), சசிகுமார் (35), தாமோதரன் (28), ஏழுமலை (65), கோகுல் (33), சேகர் (55).
இவர்கள் உள்ளிட்ட மொத்தம் 12 பேர் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நேற்று திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்ய சென்றனர்.
அவர்கள் சரக்கு ஆட்டோவின் பின் பகுதியில் பிளாஸ்டிக் தார்பாய் கட்டி பயணம் செய்தனர். திருவண்ணாமலை சென்று தீப தரிசனம் முடிந்ததும் இன்று அதிகாலை அவர்கள் அதே ஆட்டோவில் சென்னை பல்லாவரம் நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
இன்று காலை 4.30 மணியளவில் மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் பகுதியில் சரக்கு ஆட்டோ வந்து கொண்டு இருந்தது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ திடீரென முன்னால் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்னால் மோதியது. அந்த நேரத்தில் பின்னால் வந்த மற்றொரு லாரி விபத்தில் சிக்கிய சரக்கு ஆட்டோவை லாரியுடன் சேர்த்து நசுக்கியது.
இதில் 2 லாரிகளுக்கு இடையே சிக்கிய சரக்கு ஆட்டோ முற்றிலும் நொறுங்கி முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியின் பின்பகுதியில் சொருகியது.
இந்த கோர விபத்தில் சரக்கு ஆட்டோவில் இருந்த சந்திரசேகர், சசிகுமார், தாமோதரன், ஏழுமலை, கோகுல், சேகர் ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை பற்றிய விபரம் வருமாறு:-
1. பாலமுருகன் (22) கண்ணம்மா பேட்டை, சென்னை
2. ராமமூர்த்தி (35) பேராவூரணி, தஞ்சாவூர்
3. சதீஷ் (27) பொழிச்சலூர்
4. சேகர் (37) பொழிச்சலூர்
5. அய்யனார் (35)பொழிச்சலூர்
6. ரவி (26) பொழிச்சலூர்
விபத்து பற்றி அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சரக்கு ஆட்டோ லாரியின் பின்னால் சிக்கியதால் இறந்தவர்களின் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து கிரேன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடந்தது. பலியான சந்திரசேகர் உள்ளிட்ட 6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
காயம் அடைந்த பாலமுருகன் உள்ளிட்ட 6 பேரும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடந்த இடத்தை டி.எஸ்.பி. மணிமேகலை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். முதல்கட்ட விசாரணையில் அதிகமானோர் விதிமுறை மீறி சரக்கு ஆட்டோவில் பயணம் செய்து இருப்பதும், அதிவேகத்தில வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியில் சிக்கி இருப்பதும் தெரிய வந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் 2 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து காரணமாக திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண சென்றவர்கள் ஒரே நேரத்தில் விபத்தில் பலியானது குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அலறிதுடித்தபடி உள்ளனர். இது காண்போரை கண்கலங்க வைத்தது.
விபத்தில் பலியான 6 பேரும் சாதாரண கூலித்தொழிலாளர்கள் ஆவர். இதில் விபத்தில் சிக்கிய சரக்கு ஆட்டோ பலியான சேகர் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
அனைவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் சேகரின் சரக்கு ஆட்டோவிலேயே பின்பகுதியில் தார்பாய் கட்டி அமர்ந்து சென்று உள்ளனர்.
நேற்று காலை 8.30 மணிக்கு அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை கோவிலுக்கு புறப்பட்டு சென்று இருக்கிறார்கள். பின்னர் திரும்பி வரும்போது விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகி விட்டனர்.
கோவிலில் கூட்டத்தில் அனைவரும் நிற்கும் புகைப்படத்தை செல்போனில் படம் எடுத்து நண்பர்களுக்கு சமூகவலைதளத்தில் பதிவு செய்து இருந்தனர். தீபத் திருவிழா முடிந்து வருவதற்குள் 6 பேரின் வாழ்க்கை முடிந்து போனதை நினைத்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தவிப்பில் உள்ளனர்.
இதுகுறித்து பொழிச்சலூரை சேர்ந்த பலியானவர்களின் உறவினர்கள் கூறும்போது, அனைவரும் நேற்று காலை 8.30 மணிக்கு தான் திருவண்ணாமலை கோவிலுக்கு தீபத்திருவிழாவை காண சென்றனர். இன்று காலை 6 பேர் பலியான செய்தி எங்களை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.
பலியான அனைவரும் கூலித்தொழிலாளர்கள். கொத்தனார், பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்கள். அவர்களது இழப்பால் குடும்பம் நிலைகுலைந்து உள்ளது. அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான நிதி உதவியை அரசு அளிக்க வேண்டும் என்றனர்.
விபத்தில் பொழிச்சலூரை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






