என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் முன் பக்க அலங்கார வளைவு, தரைதளம் இடிந்து விழுந்துள்ள காட்சி
நெம்மேலிகுப்பத்தில் அம்மன் கோவில் முன்பக்க அலங்கார வளைவு இடிந்து விழுந்தது
- மாண்டஸ்’ புயல் காரணமாக கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது.
- 6 அடி உயரத்துக்கு பலத்த கடல் அரிப்பும் ஏற்பட்டது.
மாமல்லபுரம் :
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி குப்பத்தில் 'மாண்டஸ்' புயல் காரணமாக நேற்று கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு சீறி எழும்பி வந்ததால் கரைப்பகுதியில் உள்ள வெங்கட்டம்மன் கோவிலின் முன்பக்க அலங்கார வளைவு பகுதியும், தரைதளமும், தூண்களும் இடிந்து விழுந்தது.
அந்த பகுதியில் 6 அடி உயரத்துக்கு பலத்த கடல் அரிப்பும் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் இடிந்து விழுந்து சேதமடைந்த அம்மன் கோவிலின் ஒரு பகுதியையும், படகுகள் நிறுத்துமிடத்தில் சேதமடைந்த சிமெண்டு சாலைகளையும் பார்வையிட சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் வந்தனர்.
அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசனை வழிமறித்து கடல் அரிப்பால் எங்கள் ஊர் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது என்றும், தூண்டில் வளைவு அமைக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், வீட்டுக்குள் இருந்தால் கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீர் வந்துவிடுமோ? என்ற ஒருவித உயிர் பயத்தில் இருந்து வருகிறோம். இதுவரை தூண்டில் வளைவு குறித்த எங்கள் கோரிக்கையை ஏன் அரசு நிறைவேற்றவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
மீனவ மக்களின் கோரிக்கையை கேட்டறிந்த அவர், அவர்களுக்கு ஆறுதல் கூறியபிறகு, இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து செல்வதாக உறுதியளித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
அமைச்சருடன் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. சஜ்ஜீவனா, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், நெம்மேலி ஒன்றிய கவுன்சிலர் தேசிங்கு, நெம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் ரமணிசீமான் உள்பட பலர் வந்திருந்தனர். புயல் கரையை கடக்கும்போது தங்கள் படகுகள் கடலில் அடித்து செல்லாமல் இருக்க பாதுகாப்பாக இடங்களுக்கு கொண்டு சென்றனர்.






