என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் அருகே ஆசிரியை வீட்டில் கதவின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை- ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் தாய் தமிழ் பள்ளிக்கூட தெருவில் வசிப்பவர் கொளஞ்சியப்பன்(வயது 60). ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஹேமலதா. பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு சபரீஸ்வரன்(16) என்ற மகன் உள்ளார். இவர் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கொளஞ்சியப்பன், ஹேமலதா ஆகியோர் தஞ்சாவூருக்கு மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த சபரீஸ்வரன், வீட்டை பூட்டிவிட்டு வாரியங்காவலில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு சென்று இரவில் தங்கியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று காலை உறவினர் ஒருவர், கொளஞ்சியப்பனின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது முன்பக்க கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சபரீஸ்வரனுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு வந்த சபரீஸ்வரன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது 2 கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததும், 3 பீேராக்களின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததும், ஒரு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மற்றும் 25 பவுன் நகைகள் திருட்டு போயிருந்ததும் தெரியவந்தது.
    இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதில், நள்ளிரவில் யாரோ மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்து மற்றொரு அறை கதவின் தாழ்ப்பாளுக்கான கொண்டியை அறுத்து உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்குள்ள பீரோவை உடைத்து, அதில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் வளையல், மோதிரம், சங்கிலி, தோடு உள்ளிட்ட 25 பவுன் நகைகளையும் திருடிச்சென்றுள்ளனர், என்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு அரியலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் மலர் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அந்த நாய் வீட்டிற்கு அருகே உள்ள தறி கொட்டகையில் சென்று படுத்துக்கொண்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு, கைரேகைகள், தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடரும் திருட்டு சம்பவங்களால் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
    அரியலூர்:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் இளம்பிள்ளை வாத நோயை ஒழிக்க 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் சிறப்பு முகாம்கள் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. அரியலூர் பஸ் நிலையத்தில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் முகாமை தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி பேசினார். அவர் பேசுகையில், பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட சுமார் 68,570 குழந்தைகளுக்கு முகாமில் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. மொத்தம் 548 மையங்கள் மற்றும் ஆறு நடமாடும் மருத்துவக்குழு மூலமாக மொத்தம் 2,148 பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது என உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. எனவே, அனைத்து 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர், தங்களது குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், இந்த முகாமில் வந்து சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும், என்றார்.

    ஜெயங்கொண்டத்தில் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

    ஆண்டிமடம் வட்டாரத்தில் 73 மையங்களிலும் மற்றும் 4 நடமாடும் வாகன மையங்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஆண்டிமடத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முகாமை ஒன்றியக்குழு தலைவர் மருதமுத்து தொடங்கி வைத்தார். வட்டாரத்தில் உள்ளூர் குழந்தைகள் 9,303 பேர் மற்றும் வெளியூர் குழந்தைகள் உள்பட மொத்தம் 10 ஆயிரத்து 82 குழந்தைகளுக்கு ெசாட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளை வீடுகள்தோறும் சென்று கண்டறிந்து இன்றும்(திங்கட்கிழமை), நாளையும்(செவ்வாய்க்கிழமை) சொட்டு மருந்து வழங்கப்படுகிறது, என்று மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

    இதேபோல் பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.டி.ராமசந்திரன் (குன்னம்), இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்) ஆகியோர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை கொடுத்து முகாமை தொடங்கி வைத்தனர். மேலும் அவர்கள் கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசின் அம்மா பரிசு பெட்டகத்தை வழங்கினர். இதில் இணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் கீதாராணி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 387 மையங்களில் மொத்தம் 45 ஆயிரத்து 604 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. முகாமில் மொத்தம் ஆயிரத்து 548 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆலத்தூர் வட்டாரத்தில் ஏராளமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

    சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்பது குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.
    தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, அரியலூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரியலூர் நகராட்சி ஆணையர் மனோகரன் கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் பேசுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

    பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகள் மற்றும் உரிமைகளை வழங்கி வருகிறது. அவற்றை பெற்று பெண்களாகிய நீங்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மற்ற பெண்களுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும், என்றார். பின்னர் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் முத்து முகமது, மகிளா சக்தி கேந்திரா திட்டத்தின் மாவட்ட மகளிர் நல அலுவலர் வனத்தம்மாள், ஒருங்கிணைப்பாளர் இந்துமதி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
    அரியலூர் மாவட்டம் திருமானூரில் மன உளைச்சல் காரணமாக பெண் விஷம் தின்று தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பூண்டி கிராமத்தை சேர்ந்த சவுந்தரராஜனின் மனைவி மங்கையர்க்கரசி(வயது 50). இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். மேலும் அவரது மகனுக்கு பெண் பார்த்து வந்த நிலையில், வரன் ஏதும் சரியாக அமையாததால் கூடுதல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 26-ந் தேதி தற்கொலை செய்து கொள்ள எண்ணி வீட்டில் இருந்த எலி மருந்தை(விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் எடுத்து கூறப்பட்டது.

    குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், போலீஸ் நிலையத்திற்கு வந்த புகார்தாரர்கள், பொதுமக்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் வழங்கப்பட்டது.
    அரியலூரில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி, அணிவகுப்பை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    அரியலூர்:

    அரியலூரில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி, அணிவகுப்பை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அணிவகுப்பில் கூடுதல் சூப்பிரண்டுகள் சுந்தரமூர்த்தி, திருமேனி, அரியலூர் உட்கோட்ட துணை சூப்பிரண்டு மதன் மற்றும் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு பாரதிதாசன், இன்ஸ்பெக்டர்கள் அரியலூர் செந்தில்மாறன், கீழப்பழுவூர் வெங்கடேஸ்வரன், கயர்லாபாத் ராஜா, திருமானூர் இமானுவேல் ராயப்பன், அரியலூர் நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

    அரியலூர் காமராஜர் திடலில் தொடங்கிய கொடி அணிவகுப்பு சத்திரம், எம்.ஜி.ஆர். சிலை வழியாக அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. இந்த அணிவகுப்பில் வஜ்ரா மற்றும் வருண் ஆகிய வாகனங்களும் பங்கேற்றன.
    சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் நேரு(வயது 30). கூலித்தொழிலாளியான இவர், 17 வயது சிறுமி ஒருவருடன் அடிக்கடி பேசி பழகி, தனிமையில் சந்தித்து வந்தார். இந்நிலையில் கடந்த 22.10.2018-ந் ேததி நேரு, அந்த சிறுமியை திருப்பூருக்கு அழைத்து சென்று, அவரை திருமணம் செய்து கொள்ள அழைத்து வந்ததாக கூறியுள்ளார். பின்னர் திருச்சிக்கு அழைத்து சென்று விடுதியில் தங்கியுள்ளார்.

    இதற்கிடையே அந்த சிறுமியின் தந்தை, தனது மகளை காணவில்லை என்று அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து நேருவும், சிறுமியும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர். பின்னர் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தி, அந்த சிறுமியை அரியலூர் லிங்கத்தடிமேடு பள்ளியில் உள்ள காப்பகத்தில் தங்கவும், நேருவை போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.

    சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை தொடர்பான இந்த வழக்கின் விசாரணை அரியலூா் மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யதாரா, நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் நேருவுக்கு, 363 சட்டப்பிரிவின்படி பெண் கடத்தலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், 366ஏ போக்ேசா சட்டப்பிரிவின்படி 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தொகையை கட்டத்தவறினால் இருபிரிவுகளுக்கும் தலா 6 மாத சிறை தண்டனையும், தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும், உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.7 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து நேருவை, போலீசார் பாதுகாப்பாக கோர்ட்டில் இருந்து அழைத்து சென்று திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.
    மீன்சுருட்டி அருகே அரசு பஸ் மோதியதில் வேன் டிரைவர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குருவாலப்பர் கோவில் தெற்குத்தெருவை சேர்ந்தவர் அருளழகன் (வயது 32). இவர் சென்னையில் மினி வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனிஷா (24) என்ற மனைவியும், அபிஷா, வெண்பா என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். 

    அருளழகன் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையாக அவர் மீன்சுருட்டி சென்றதாக கூறப்படுகிறது. சம்போடை கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு டவுன் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் சம்பவ இடத்திலேயே அருளழகன் உயிரிழந்தார். இது குறித்து மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, அருளழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அரியலூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூரில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசுகையில், வாகனங்களில் செல்பவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து சாலைகளில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகைகளை கவனித்து வாகனங்களை ஓட்ட வேண்டும். 

    விபத்துகள் இல்லாத மாவட்டமாக அரியலூரை முதன்மைப்படுத்த வேண்டும், என்றார். உதவி கோட்ட பொறியாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். முன்னதாக இளநிலை பொறியாளர் எழிலரசன் வரவேற்றார். 

    மேலும் நகரில் உள்ள முக்கிய இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
    அரியலூர் நகரில் உள்ள முக்கிய இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
    அரியலூர்:

    அரியலூரில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசுகையில், வாகனங்களில் செல்பவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து சாலைகளில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகைகளை கவனித்து வாகனங்களை ஓட்ட வேண்டும். விபத்துகள் இல்லாத மாவட்டமாக அரியலூரை முதன்மைப்படுத்த வேண்டும், என்றார். 

    உதவி கோட்ட பொறியாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். முன்னதாக இளநிலை பொறியாளர் எழிலரசன் வரவேற்றார். மேலும் நகரில் உள்ள முக்கிய இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

    உடையார்பாளையம் அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையத்தை சேர்ந்த குமார்(வயது 47), பிலிச்சிக்குழி கிராமத்தை சேர்ந்த ரெங்கநாதன்(74), இடையாரை சேர்ந்த சங்கர்(42) ஆகிய 3 பேரும் சேர்ந்து மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    உடையார்பாளையம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த காங்கேயன்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணனின் மனைவி சசிகலா(வயது 20). கூலித்தொழிலாளியான இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கும், சசிகலாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த சசிகலா கடந்த 6-ந் தேதி வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். சசிகலாவின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள், அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து, அவரை மீட்டு 108 அம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×