search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட காட்சி.
    X
    குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட காட்சி.

    மாவட்டங்களில் 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

    அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
    அரியலூர்:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் இளம்பிள்ளை வாத நோயை ஒழிக்க 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் சிறப்பு முகாம்கள் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. அரியலூர் பஸ் நிலையத்தில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் முகாமை தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி பேசினார். அவர் பேசுகையில், பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட சுமார் 68,570 குழந்தைகளுக்கு முகாமில் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. மொத்தம் 548 மையங்கள் மற்றும் ஆறு நடமாடும் மருத்துவக்குழு மூலமாக மொத்தம் 2,148 பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது என உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. எனவே, அனைத்து 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர், தங்களது குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், இந்த முகாமில் வந்து சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும், என்றார்.

    ஜெயங்கொண்டத்தில் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

    ஆண்டிமடம் வட்டாரத்தில் 73 மையங்களிலும் மற்றும் 4 நடமாடும் வாகன மையங்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஆண்டிமடத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முகாமை ஒன்றியக்குழு தலைவர் மருதமுத்து தொடங்கி வைத்தார். வட்டாரத்தில் உள்ளூர் குழந்தைகள் 9,303 பேர் மற்றும் வெளியூர் குழந்தைகள் உள்பட மொத்தம் 10 ஆயிரத்து 82 குழந்தைகளுக்கு ெசாட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளை வீடுகள்தோறும் சென்று கண்டறிந்து இன்றும்(திங்கட்கிழமை), நாளையும்(செவ்வாய்க்கிழமை) சொட்டு மருந்து வழங்கப்படுகிறது, என்று மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

    இதேபோல் பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.டி.ராமசந்திரன் (குன்னம்), இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்) ஆகியோர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை கொடுத்து முகாமை தொடங்கி வைத்தனர். மேலும் அவர்கள் கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசின் அம்மா பரிசு பெட்டகத்தை வழங்கினர். இதில் இணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் கீதாராணி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 387 மையங்களில் மொத்தம் 45 ஆயிரத்து 604 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. முகாமில் மொத்தம் ஆயிரத்து 548 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆலத்தூர் வட்டாரத்தில் ஏராளமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

    Next Story
    ×