என் மலர்
அரியலூர்
- சுண்ணாம்புக்கல் ஏற்றிச்சென்ற லாரிகள் சிறைபிடிக்கப்பட்டது.
- முறையாக தார்ப்பாய் போடாததால்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட பகுதியில் தனியார் சிமெண்டு ஆலைகளுக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் இருந்து தினமும் ஏராளமான டிப்பர் லாரிகள் மூலம் 24 மணி நேரமும் ரெட்டிபாளையம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்பு கற்கள் ஏற்றிச்செல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஒரு சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் இருந்து நாயக்கர்பாளையம் வழியாக சுண்ணாம்புக்கற்களை ஏற்றிய டிப்பர் லாரிகள் அதிக பாரம் ஏற்றியிருந்ததுடன், முறையாக தார்ப்பாய் போடாததால் சாலையில் சுண்ணாம்பு கற்கள் சிதறியுள்ளது. இதனால் சாலை சேதமடைந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று கூறி அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் அந்த வழியாக வந்த 20-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை மறித்து, சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, லாரிகளில் முறையாக தார்ப்பாய் கட்டியும், அளவுக்கேற்ப பாரம் ஏற்றியும் லாரிகள் மெதுவாக இயக்கப்படும் என்று கூறியதை அடுத்து, பொதுமக்கள் லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- பொதுமக்களிடம் கோரிக்கை மனு வாங்கும் நிகழ்ச்சி நடந்தது
- எம்.எல்.ஏ.க்கள் ெபற்றுக்கொண்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர், திருமானூர், தாபழுர், ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை எம்.எல்.ஏ வக்கீல் கு.சின்னப்பாவும், ஜெங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியங்களில் கோரிக்கை மனுக்களை எம்.எல்.ஏ. க.சொ.க. கண்ணனும் ெபற்றுக் கொண்டனர்.
தற்பொழுது தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சி, எதிர் கட்சி என எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைத்து சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கும் முதல்வர் எழுதிய கடிதத்தில், தங்களது தொகுதியில் நீண்ட நாள்களாக தீர்க்கப்படாமல் உள்ள முக்கிய 10 கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனால் தொகுதியின் முக்கிய பிரச்சனைகள் தமிழக அரசால் தீர்க்கப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை வழங்கி, பயன்பெற வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்து கொண்டனர்.
இதேபோல் ஆண்டிமடத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், தா.பழூரில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றன.
- கடையில் சேலை திருடிய 2 பெண்களை கைது செய்தனர்.
- சிசிடிவி கேமரா பதிவை வைத்து நடவடிக்கை
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவ மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் இவரது நண்பரும் சேர்ந்து ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருகின்றனர். கடையை இவரது மனைவி மேனகா மற்றும் பணியாளர்கள் சிலரும் ஜவுளி விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் 5 பேர் சேர்ந்து கடைக்கு வந்தனர். அவர்கள் அதிகமான சேலையை பார்த்து, கடைசியில் ஒரு சேலை மட்டும் வாங்கிச் சென்றனர். பின்னர் கடை பணியாளர்கள் சேலைகளை எடுத்து அடுக்கும் போது சில சேலைகள் காணவில்லை. இது குறித்து கடை உரிமையாளரிடம், விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக உரிமையாளர், சிசிடிவி கேமரா பதிவை பார்த்து அதில் சிலர் சேர்ந்து துணிகளை எடுத்து மறைத்து செல்வது அறிந்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து கல்லாத்தூர் தண்டலை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி அஞ்சம்மாள் (வயது 35), ரமேஷ் மனைவி கல்பனா (40) ஆகியோரை கைது செய்தும் மற்றவர்களை தேடியும் விசாரணை செய்து வருகின்றனர்.காணாமல் போன துணிகளின் மதிப்பு ரூ. 6 ஆயிரம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் புது தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் தினேஷ் (வயது 27). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் எள்ளேரி கிராமத்தில் உள்ள உறவினர் சச்சிதானந்தத்தின் மகள் வைஷ்ணவியை (24) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
தினேஷ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தினேசுக்கும், வைஷ்ணவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வைஷ்ணவி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வைஷ்ணவியின் பெற்றோர் தங்களது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறினர். மேலும் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வைஷ்ணவியை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டதாக உடையார்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைஷ்ணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் இளம்பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன், உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, ஆர்.டி.ஓ. பரிமளம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது."
- பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
- தன்னார்வலர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வடக்கு நடுநிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. மேலாண்மை குழு தலைவர் கவிதா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிசுந்தர்ராஜ் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி கூறி அனைவருக்கும் கையேடுகளை வழங்கினார். ஜெயங்கொண்டம் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் குறிஞ்சி தேவி பேசுகையில், மாணவர்களின் தொடர்ச்சியான வருகையை கவனித்தல். இடைநிற்றலை தவிர்த்தல், பள்ளியின் வளர்ச்சியில் பங்கு பெறுவது, சுற்றுப்புற சுகாதாரம், போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் கவனித்தல், இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விளக்கி கூறினார். பின்னர் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முடிவில் பள்ளியின் உதவி ஆசிரியர் வானதி நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் கார்த்திகேயன், ஆறுமுகம், மலர்க்கொடி ஆகியோர் செய்து இருந்தனர்.
- மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
- 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராஜாமணி. இவர்களுடைய மகன் கார்த்தி (வயது 24). இவர் திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 20-ந் தேதி இரவு திருவள்ளூரில் இருந்து வந்தவாசி நோக்கி தனது நண்பர் செந்தில் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கார்த்திக் மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து, அவரது பெற்றோர் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அவரது இதயம், கண்கள், நுரையீரல் உள்ளிட்ட 9 உறுப்புகள் மியாட் மருத்துவமனை மூலம் தானமாக வழங்கப்பட்டது. பின்னர் அரசு மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை முடித்து பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
மகனை விபத்தில் இழந்து தவித்தாலும் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் தொடர்ந்து கார்த்தி உயிரோடு இருப்பதாகவே தாங்கள் கருதுவதாக கூறி கதறி அழுதது காண்பவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
- மணல் கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கீழ கோவிந்தபுத்தூர் கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து சிலர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சென்ற 6 மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில், அரசு அனுமதியின்றி மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த மேல கோவிந்தபுத்தூர் பகுதிகளை சேர்ந்த அசோக் ராஜ் (வயது 46), முருகேசன் (41), வாசு (29), அறிவழகன் (27), பாக்யராஜ் (38), குமார் (44) ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டு
- சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் 3 நாட்களுக்கு பிறகு நீர் நிலைகளில் கரைக்கப்படும். இந்தநிலையில், அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின் படி, மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
அரியலூர் பகுதி விநாயகர் சிலைகள் மருதையாற்றிலும், திருமானூர் பகுதி விநாயகர் சிலைகள் கொள்ளிடம் ஆற்றிலும், ஜெயங்கொண்டம் பகுதி விநாயகர் சிலைகள் அணைக்கரையில் உள்ள கொள்ளிடம் ஆற்றிலும் கரைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- புதியரசன் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
- புதியரசன் கடந்த 23-ந் தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி நடுத்தெருவை சேர்ந்தவர் சகுந்தலா (வயது 43). இவரது இளைய மகன் புதியரசன் (17). இவர் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக புதியரசன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பள்ளிக்கு செல்லுமாறு அவரது தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த புதியரசன் கடந்த 23-ந் தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.
இதனை கண்ட உறவினர்கள் புதியரசனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி புதியரசன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கான இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெறுகிறது.
- கொரோனா காலமாக இருப்பதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் போது முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
அரியலூர் :
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கான இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம்.
மேலும், கொரோனா காலமாக இருப்பதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் போது முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே முதல் முறையாக விளையாட்டுப் போட்டிகள், தொடங்கியது.
- கோகோ, வாலிபால், கூடைப்பந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றிப் பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு விழாவின் போது, பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது
அரியலூர்,
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே முதல் முறையாக விளையாட்டுப் போட்டிகள், தொடங்கியது.
கல்லூரி முதன்மையர் முத்துகிருஷ்ணன், துணை முதன்மையர் சித்ரா ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, மாவட்ட விளையாட்டு மைதானத்தில், நடைபெற்ற இந்த போட்டியை தலைமை விடுதிகாப்பாளரும், அரசு மருத்துவருமான கொளஞ்சிநாதன் தொடக்கி வைத்தார்.
கோகோ, வாலிபால், கூடைப்பந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றிப் பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு விழாவின் போது, பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை மருத்துவக் கல்லூரி விளையாட்டு பிரிவு மருத்துவர் ராஜேஷ்கண்ணா செய்திருந்தார்.
- நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வாழ்த்துரை வழங்கி 126 பயனாளிகளுக்கு ரூ.25லட்சத்து84 ஆயிரத்து 847 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
- முகாமில் 126 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 24 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம், இளையபெருமாள்நல்லூர் கிராமத்தில், முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க வருவாய் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமை வகித்தார். உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் வரவேற்றார். நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வாழ்த்துரை வழங்கி 126 பயனாளிகளுக்கு ரூ.25லட்சத்து84 ஆயிரத்து 847 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர், அட்மா வேளாண் குழு தலைவர் மணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசின் வேளாண்மை துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, தோட்டக்கலை துறை, சமூக பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும், கலந்துகொண்டு திட்ட விளக்க உரை நிகழ்த்தினர்.
முகாமில் முதியோர் ஓய்வூதியம், விதவை உதவித் தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, பட்டா மாற்றம், தோட்டக்கலைத் துறை வேளாண்மை துறை, வேளாண்மை பொறியியல் துறை ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 177 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 126 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 24 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 27 மனுக்கள் விசாரணையில் உள்ளன. சுய உதவி குழுக்களால் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் இயற்கை வளம் மிகுந்த காய்கறி, பழங்கள், கீரை வகைகள், சத்தான உணவு வகைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. இவற்றை மாவட்ட வருவாய் அலுவலர், எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டனர்.
இம்முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் ஜானகிராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், வேளாண்மை துறை அதிகாரிகள் தோட்டக்கலை துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். முடிவில் வட்டாட்சியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.






