என் மலர்
அரியலூர்
- தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
அரியலூர்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் நுகர்பொருள் வாணிபக் கழகம் முன்பு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவுத் துறையினரை மண்டல மேலாளர்களாக நியமனம் செய்ததை திரும்ப பெற வேண்டும்.நவீன அரிசி ஆலைகளை தனியார்மயமாக்கக் கூடாது. ஒப்பந்த மூலம் சுமைத் தூக்குவோரை நியமிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சுமைதூக்குவோருக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மண்டல தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். மண்டல செயலர் அய்யாதுரை, பொருளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர்கள் சசிக்குமார், பாலன், முனியமுத்து, பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தினர்.
- திருமானூரில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- மின்உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் உள்ள சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான திருமானூர், ஏலாக்குறிச்சி, தூத்தூர், குருவாடி, மேலராமநல்லூர், திருமழபாடி, இலந்தை கூடம் அரண்மனைகுறிச்சி, சாத்தமங்களம் ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று திருமானூர் மின்உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
- பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டிகள் நடக்கிறது.
- நாளை மறுநாள் நடக்கிறது
அரியலூர்
மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. போட்டிகள் 13, 15, 17 வயதிக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெறும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்கள் சொந்த செலவில் சைக்கிள் கொண்டு வருதல் வேண்டும், போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு வர வேண்டும். வயது சான்றிதழ் பள்ளி தலைமையாசிரியரிடம் இருந்து பெற்று வருதல் வேண்டும். தங்களது ஆதார் அட்டை நகல் சமர்ப்பிக்க வேண்டும். போட்டிகளில் நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கோ தனிப்பட்ட பொது இழப்புகளுக்கோ பங்குபெறும் மாணவ-மாணவிகளே பொறுப்பு ஏற்கவேண்டும் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கான எழுத்து மூலமான ஒப்புதலை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமர்ப்பித்த பின்னரே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரம், மாணவிகளுக்கு 10 கி.மீ தூரம், 15, 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரம், மாணவிகளுக்கு 15 கி.மீ தூரம் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதமும், 4 முதல் 10 இடம் வரை பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வீதம் காசோலையாக வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703499 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது."
- செங்கமலையார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- நான்குகால பூஜைகளும் நடத்தப்பட்டது
அரியலூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள மகா கணபதி, போன்ற செங்கமலையார், ஆஞ்சநேயர் ஆகிய புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று விநாயகர் பூஜை, சூரிய பூஜை, கோ பூஜை, பிம்பசுத்தி உள்ளிட்ட நான்குகால பூஜைகளும் நடத்தப்பட்டு மகா கணபதி, செங்கமலையார், ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சன்னாவூர், கோவில்எசனை, இலங்தைகூடம் உள்ளிட்ட சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 4 மதுபான பெட்டிகள் வைத்து விற்பனையை தொடங்கினர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. கடைக்கு விற்பனைக்காக முதன் முதலாக 4 மதுபான பெட்டிகள் மட்டுமே வைத்து விற்பனையை நேற்று தொடங்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கடையின் முன்பு ஒன்றுகூடி கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடை தொடங்கப்பட்ட இடத்தின் அருகில் கல்லூரி, ஒழுங்குமுறை விற்பனை கூடம், மின்வாரிய அலுவலகம் உள்ளிட்டவை உள்ளது. இதுபோல் நகரை சுற்றி பள்ளி, கல்லூரிகள் உள்ளன.
ஏற்கனவே ஜெயங்கொண்டம் அருகே 5 கிலோ மீட்டர் தொலைவில் கல்லாத்தூர் கிராமத்திலும், வாரியங்காவல்- தேவனூர் செல்வம் சாலையிலும் டாஸ்மாக் கடைகள் உள்ளன. எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது. மேலும் கடையின் உள்ளே இருந்த 4 மது பாட்டில் பெட்டிகளையும் வெளியே எடுத்துச் செல்லக் கூறியும், இங்கு விற்பனை செய்யக்கூடாது எனவும் கூறினர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகள் உள்பட அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது கடையில் இருந்த தொழிலாளர்கள் உள்ளே இருந்த மதுபான பெட்டிகளை வெளியே கொண்டு வந்து வைத்தனர். கடையை மூடி செல்லக்கூறி பொதுமக்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடைபெற்றது
- 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
அரியலூர்
தமிழகம் முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சித்துறை கிராம ஊராட்சி மன்றங்களில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் நாளை (புதன்கிழமை) வரை 3 நாட்கள் ஊதியம் இல்லா விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் ஊராட்சி செயலாளர்களுக்கு அதிக பணிச்சுமை உள்ளதாகவும், அவற்றை குறைக்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் நேரடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நீண்ட நாட்களாக வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதுவரை அவர்களது இந்த கோரிக்கைகள் தமிழக அரசால் நிறைவேற்றப்படாததால் நேற்று முதல் நாளை வரை ஊதியம் இல்லாமல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூர், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய 6 ஒன்றியங்களை சேர்ந்த 178 ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- குறுவட்ட அளவிலான பூப்பந்து போட்டி நடந்தது
- மேலணிக்குழி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம்
அரியலூர்
ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவில் 19, 17, 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் வளையபந்து, பூப்பந்து, மேஜைப்பந்து போட்டிகள் மேலணிக்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டிகளை தலைமை ஆசிரியர் (பொறுப்பு) புகழேந்தி தொடங்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். இதில் பூப்பந்து போட்டியில் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் மேலணிக்குழி அரசு பள்ளி முதலிடமும், கங்கை கொண்ட சோழபுரம் பள்ளி இரண்டாம் இடமும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மேலணிக்குழி பள்ளி முதலிடமும், கங்கை கொண்ட சோழபுரம் பள்ளி 2-வது இடமும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மேலணிக்குழி பள்ளி முதலிடமும், வாணவநல்லூர் நடுநிலைப்பள்ளி 2-வது இடமும் பிடித்தன.
- அரசு பள்ளியில் பாரதியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
- மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் சிறுவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியார் நினைவு தினம் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் அனுசரிக்கப்பட்டது. மகாகவி பாரதியாரின் படத்திற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது பள்ளி தலைமையாசிரியர் பேசுகையில், பாரதியார் பாடல்கள், கவிதைகள் மக்களிடையே விடுதலை உணர்வையும், சுதந்திர வேட்கையையும் தூண்டியது. பாரதியார் மறைந்தாலும் அவரின் கவிதைகள், பாடல்கள், கட்டுரைகள் உலகம் உள்ளவரை உயிரோட்டமாக இருக்கும் என்றார்."
- அண்ணா, பெரியார் பிறந்த நாளன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடைபெறுகின்றன.
- போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசு
அரியலூர்:
தமிழக அரசின் உத்தரவின் படி வருகிற 15-ந்தேதி முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டும், 17-ந்தேதி பெரியார் பிறந்த நாளை முன்னிட்டும் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் நடைபெறவுள்ளது.
அதன்படி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்த நாள் பேச்சு போட்டிகளும், 17-ந்தேதி பெரியார் பிறந்த நாள் பேச்சு போட்டிகளும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே நடத்தப்படவுள்ளது.
போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படவுள்ளது. இவை அல்லாமல் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படும் பேச்சு போட்டிகளில் பங்கேற்பவர்களில் அரசு பள்ளியை சேர்ந்த 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படவுள்ளது.
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மதியம் 1.30 மணிக்கும் போட்டிகள் தொடங்கப்படும். எனவே அரியலூர் மாவட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்லூரி கல்வி இயக்குனர் வாயிலாக அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று மேற்கண்ட பேச்சு போட்டிகளில் பங்கேற்கலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- கீழப்பழுவூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்
அரியலூர்
கீழப்பழுவூர் துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் உயர்அழுத்த மின் பாதையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கல்லக்குடி, அருங்கால், பொய்யூர் மற்றும் கீழவண்ணம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என திருமானூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார்
- தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்
- 10-ம் வகுப்பு மாணவிக்கு காதல் வலை
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பள்ள மாணவியை காதலிக்க வற்புறுத்திய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஜெயங்கொண்டத்தை அடுத்த சுந்தரேசபுரம் கிராமத்தில் தனியார் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பள்ளி உரிமையாளரின் உறவினரான தினேஷ் (வயது 37) கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், ஆசிரியர் தினேைஷ போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
- அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலும் வளர்இளம்பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
- 13 வயது கடந்த மாணவிகள் பருவ மாற்றம் ஏற்படும் இந்த வயதில் மாணவர்கள் தாங்கள் எவ்வாறு உடலை பார்த்து கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வு வகுப்பு நடத்தினர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூரில் அரசு முதன்மை சுகாதார நிலையத்தில் திருமானூர் ஒன்றிய பகுதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வளர்இளம் பருவத்தினர் நலவாழ்வு மையம் சார்பாக விழிப்புணர்வு நகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் செல்வமணி தலைமை தாங்கினார். சமூக சுகாதார அலுவலர்கள் ஜோதி மற்றும் உஷா ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
குறிப்பாக 13 வயது கடந்த மாணவிகள் பருவ மாற்றம் ஏற்படும் இந்த வயதில் மாணவர்கள் தாங்கள் எவ்வாறு உடலை பார்த்து கொள்ள வேண்டும், பாலியல் தொந்தரவில் இருந்து தாங்களை காத்துகொள்ளவேண்டும் போன்ற விழிப்புணர்வு வகுப்பு நடத்தினர்.
செவிலியர்கள் ஜெயந்தி, தமயந்தி ஆகியோர் நிகழ்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மருந்தாளுனர் வசந்தகுமார் நன்றி கூறினார். இதில் கீளக்கொளத்தூர், கள்ளூர், திருப்பெயர், கண்டிராதித்தம், திருமழபாடி, கீழகாவட்டாண்குறிச்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொன்டனர்.
மாணவர்களுக்கு தேனீர், பிஸ்கட், பேக், தொப்பி, சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.அனைத்து பள்ளி மாணவர்களையும் கீழகொளத்தூர் அரசுமேல்நிலைப்பள்ளி ஆசிரியை தஞ்சைஅரசி வழிநடத்தினார்.






