என் மலர்
அரியலூர்
- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- சிவா, கபிலன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள புளியந்தோப்பில் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இடையார் காலனி தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் சிவா (வயது 22), அதே பகுதியில் வசிக்கும் கலியமூர்த்தி மகன் கபிலன் (21) ஆகியோர் அப்பகுதியில் உள்ள புளியந்தோப்பில் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் 01.11.2022 உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது
- சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் 01.11.2022 உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது.இதில் ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை சென்னையிலிருந்து பெறப்பட்ட கூட்டப் பொருட்கள் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் விவாதி க்கப்படும்.
இக்கிராம சபை கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து த்துறை அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
- கை.களத்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை 27-ந்தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
- பெருநிலா, பில்லங்குளம், வெள்ளுவாடி, காந்தி நகர் ஆகிய ஊர்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது.
அரியலூர் :
அரியலூர் கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :
கை.களத்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை 27-ந்தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
எனவே இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் கை.களத்தூர், சிறுநிலா, நெற்குணம், நுத்தப்பூர், அய்யனார்பாளையம், காரியானூர், பெருநிலா, பில்லங்குளம், வெள்ளுவாடி, காந்தி நகர் ஆகிய ஊர்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரியலூரில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாலமாக நேற்று தொடங்கியது
- 30-ந் தேதியன்று மாலை கோவிலின் வெளியே சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அரியலூர் :
அரியலூரில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாலமாக நேற்று தொடங்கியது. இதையொட்டி காலையில் முருகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் சூரிய கிரகணத்தை முன்னிட்டு மூலவர் சன்னதியின் நடை சாத்தப்பட்டது. பின்னர் மாலையில் மீண்டும் நடை திறக்கப்பட்டது.
இதில் பட்டாடை உடுத்தி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமான், ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருள திருவீதி உலா நடந்தது. பெரிய கடைத்தெரு, சின்ன கிடைத்தெரு, சத்திரம், தட்டார தெரு வழியாக சுவாமி வந்தபோது ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவில் இன்று(புதன்கிழமை) யானை வாகனம், நாளை(வியாழக்கிழமை) குதிரை வாகனம், 28-ந் தேதி ரிஷப வாகனம், 29-ந் தேதி வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.
30-ந் தேதியன்று மாலை கோவிலின் வெளியே சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்பு வாணவேடிக்கை நடைபெறும். 31-ந் தேதி திருக்கல்யாணமும், நவம்பர் 1-ந் தேதி விடையாற்றி விழாவும் நடைபெறுகிறது.
- மலர்விழி, கண்ணகி. ஆகியோர் காளான் பறிக்க சென்ற போது கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
- இந்த கொடூர கொலை சம்பவம் அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழக முழுதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மலர்விழி, கண்ணகி. இவர்கள் இரண்டு பேரும் அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் வழக்கமாக காளான் பறிக்க செல்வது வழக்கம்.
அதேபோன்று கடந்த 22 ஆம் தேதி அதிகாலையில் காளான் பறிக்க சென்ற போது இரண்டு பேரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர கொலை சம்பவம் அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழக முழுதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த பகுதியில் வேட்டையில் ஈடுபட்ட நபர் தான் கொலையாளி என்பதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் (வயது 39) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் இரண்டு பெண்களையும் தான் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அப்போது பால்ராஜ் தான் வழக்கமாக அதிகாலை நேரங்களில் காட்டுப்பன்றி வேட்டைக்கு செல்வதாகவும், அப்போது கடந்த சில நாட்களாக இந்த 2 பெண்களும் காளான் பறிக்க வருவதை நோட்டம் கண்டதாகவும், அவர்களின் நகைகளை பறிக்க திட்டமிட்டு இருந்ததாகவும் கூறியுள்ளார்.
சம்பவத்தன்று புதருக்குள் அசைவு கேட்டதால் தனது நாட்டு துப்பாக்கியால் அந்த பகுதியை நோக்கி சுட்டதாகவும், அப்போது கண்ணகியின் தொடையில் குண்டு பாய்ந்து அலறியுள்ளார். இந்த நிலையில் அருகே காளான் பறித்துக் கொண்டிருந்த மலர்விழி அங்கிருந்து ஓடி வந்து பால்ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த பால்ராஜ் துப்பாக்கியை பின்பக்கமாக திருப்பி கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இந்த நிலையில் கண்ணகி தனது செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பால்ராஜ், அவரிடம் இருந்த செல்போனை பிடுங்கி சுவிட்ச்ஆப் செய்து விட்டு அவரை தான் வைத்திருந்த சூரி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, மலர்விழி அணிந்து இருந்த 6½ பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு காரைக்கால் தப்பிச் சென்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவரிடம் இருந்து தாலிச் சங்கிலி, நாட்டுத் துப்பாக்கி மற்றும் சூரிக்கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் பால்ராஜை கைது செய்து செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திபடுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- கோவிந்தசாமி அயன் ஆத்தூர் கிராமத்தில் இருந்து கடுகூர் கிராமத்திற்கு தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.
- அப்போது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக கோவிந்தசாமி ஓட்டிவந்த மொபட் மீது மோதியது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் கடுகூர் கீழத்தெருவை சேர்ந்த ராமசாமியின் மகன் கோவிந்தசாமி(வயது 60). இவர் சம்பவதன்று அயன் ஆத்தூர் கிராமத்தில் இருந்து கடுகூர் கிராமத்திற்கு தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக கோவிந்தசாமி ஓட்டிவந்த மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கோவிந்தசாமியை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி இறந்தார். இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தா.பழூரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா தொடங்கியது
- வருகிற 30-ந் தேதி முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
அரியலூர்
தா.பழூரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், வள்ளி தேவசேனா சமேத வில்லேந்திய வேலவர், உற்சவ மூர்த்தியாகிய வள்ளி தேவசேனா சமேத கல்யாணசுப்பிரமணியர் ஆகிய தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி உள்ளிட்ட பல்வேறு பதிகங்கள் பாடப்பட்டன. முருகப்பெருமானுக்கு சோடச உபச்சாரங்கள் நடைபெற்றன.
மங்கல இசை முழங்க பிரகார உற்சவம், மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வருகிற 30-ந் தேதி முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
இதையொட்டி காலையில் அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சக்திவேல் வாங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நவம்பர் மாதம் 1-ந் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவடைகிறது.
- வேட்டையில் கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த வேட்டைக்காரன் பால்ராஜ் என்பவர் சிக்கினார்.
- பால்ராஜிடம் நடத்திய விசாரணையில் இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் முயல் வேட்டை மற்றும் காட்டுப்பன்றி வேட்டையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியவளையம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் தண்டபாணி மனைவி கண்ணகி (வயது 50). அதே ஊர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கலைமணி மனைவி மலர்விழி (34).
இவர்கள் இருவரும் கடந்த 22-ந்தேதி காலை ஊரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தைல மரக்காட்டில் தற்போது பெய்துள்ள மழையினால் முளைத்துள்ள காளான்களை பறிக்கச் சென்றனர்.
மாலை வரை அவர்கள் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் இருவரையும் தேடிச்சென்றனர். அப்போது அங்கு இருவரும் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மேலும் அவர்கள் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையும் கொள்ளை போயிருந்தது.
உடனடியாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் பார்வையிட்டனர்.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஆனாலும் கொலைக்கான காரணம் குறித்து எதுவும் தெரியாமல் இருந்தது. 2 பெண்களை வெட்டி கொலை செய்த சம்பவம் அரியலூர் மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தையே உலுக்கியது.
அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொலையாளியை பிடிக்க தீபாவளி நேரத்திலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்த வேட்டையில் கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த வேட்டைக்காரன் பால்ராஜ் என்பவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் முயல் வேட்டை மற்றும் காட்டுப்பன்றி வேட்டையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
இதற்கிடையே கடந்த 22-ந்தேதி காளான் பறிக்க வந்த கண்ணகி, மலர்விழி ஆகியோர், தீபாவளிக்காக முயல் வேட்டையாட வந்த பால்ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கண்ணகியை கழுத்து அறுத்து கொன்றதாகவும், அதனை தடுக்க வந்த மலர்விழியை தலையில் அடித்து கொன்றுவிட்டு அவர்கள் அணிந்திருந்த நகைகளை பறித்து கொண்டு சென்றதாகவும் பால்ராஜ் கூறியுள்ளார்.
அதன்பேரில் போலீசார் பால்ராஜை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கண்காணிப்பு குழுவில் சேர விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடுப்பதற்காக
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடுப்பதற்காக கண்காணிப்புக் குழுவில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அரியலூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் தொழில் புரிவோர்கள் தடுப்பு மற்றும் மறுவாழ்வுக்கான சட்டம் 2013-ன் படி மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட உள்ளது. குழுவில் உறுப்பினர்களாக சேர விரும்பும் அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள், தங்களின் முழு விபரத்துடன் நவ.10- தேதிக்குள் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- 31-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்
தமிழ்நாட்டில் இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் இந்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ம் கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் தகுதியான மாணவ-மாணவிகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 31-ந்தேதிக்குள் மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது."
- வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்
- சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
அரியலூர்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காலனி தெருவை சேர்ந்தவர் தீபன்ராஜ்(வயது 19). இவர், 13 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் தீபன்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.
- வாய்க்காலில் மூழ்கி விவசாயி உயிரிழந்தார்.
- ஆடு, மாடுகளை வயலுக்கு மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுண்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 43). விவசாயியான இவர் தனது ஆடு, மாடுகளை அதே கிராமத்தின் வடக்கே உள்ள அவரது வயலுக்கு மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அவரைத் தேடி ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது சுண்டக்குடி மருதையாறு தடுப்பணை அருகே அவர் நீரில் மூழ்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவக்குமார் வாய்க்காலில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கினாரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






