என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே இரட்டைக்கொலை: வாக்குவாதம் செய்த பெண்களை கொடூரமாக கொன்ற வேட்டைக்காரன்
    X

    ஜெயங்கொண்டம் அருகே இரட்டைக்கொலை: வாக்குவாதம் செய்த பெண்களை கொடூரமாக கொன்ற வேட்டைக்காரன்

    • வேட்டையில் கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த வேட்டைக்காரன் பால்ராஜ் என்பவர் சிக்கினார்.
    • பால்ராஜிடம் நடத்திய விசாரணையில் இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் முயல் வேட்டை மற்றும் காட்டுப்பன்றி வேட்டையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியவளையம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் தண்டபாணி மனைவி கண்ணகி (வயது 50). அதே ஊர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கலைமணி மனைவி மலர்விழி (34).

    இவர்கள் இருவரும் கடந்த 22-ந்தேதி காலை ஊரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தைல மரக்காட்டில் தற்போது பெய்துள்ள மழையினால் முளைத்துள்ள காளான்களை பறிக்கச் சென்றனர்.

    மாலை வரை அவர்கள் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் இருவரையும் தேடிச்சென்றனர். அப்போது அங்கு இருவரும் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மேலும் அவர்கள் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையும் கொள்ளை போயிருந்தது.

    உடனடியாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் பார்வையிட்டனர்.

    மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஆனாலும் கொலைக்கான காரணம் குறித்து எதுவும் தெரியாமல் இருந்தது. 2 பெண்களை வெட்டி கொலை செய்த சம்பவம் அரியலூர் மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தையே உலுக்கியது.

    அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொலையாளியை பிடிக்க தீபாவளி நேரத்திலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இந்த வேட்டையில் கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த வேட்டைக்காரன் பால்ராஜ் என்பவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் முயல் வேட்டை மற்றும் காட்டுப்பன்றி வேட்டையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

    இதற்கிடையே கடந்த 22-ந்தேதி காளான் பறிக்க வந்த கண்ணகி, மலர்விழி ஆகியோர், தீபாவளிக்காக முயல் வேட்டையாட வந்த பால்ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கண்ணகியை கழுத்து அறுத்து கொன்றதாகவும், அதனை தடுக்க வந்த மலர்விழியை தலையில் அடித்து கொன்றுவிட்டு அவர்கள் அணிந்திருந்த நகைகளை பறித்து கொண்டு சென்றதாகவும் பால்ராஜ் கூறியுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் பால்ராஜை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×