என் மலர்tooltip icon

    அரியலூர்

    • பார்வைத்திறன்-செவித்தின் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன் வழங்கப்பட உள்ளது
    • தேர்வு முகாம் அரியலூரில் 25-ந்தேதி நடக்கிறது.

    அரியலூர்

    தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் பட்டய படிப்பு, இளநிலை கல்வி பயிலும், சுயத்தொழில் புரியும், தனியார்துறையில் பணிபுரியும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவர்கள் 18 வயதிற்கு மேல் 60 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பணி சான்று (கல்லூரி பயில்பவராயின் படிப்பு சான்று, சுயத்தொழில் புரிபவராயின் சுயத்தொழில் பதிவிற்கான சான்று), பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்-2 ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண்:17-ல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வருகிற 25-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் பயனாளிகள் தேர்வு முகாமில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04329-228840 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • செங்கல் சூளையில் பணி செய்து வந்தார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி புது காலனி தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 58), செங்கல் சூளை தொழிலாளி. இவர் அண்ணங்காரம்பேட்டை கிராமத்தை சேர்ந்த புகழேந்தி மனைவி சத்யா என்பவரிடம் அவரது செங்கல் சூளையில் கல் அறுக்கும் வேலைக்கு வருவதாக கூறி முன் பணமாக ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்தை கடந்த 2019-ம் ஆண்டு பெற்றதாக கூறப்படுகிறது.

    சத்யா செங்கல் சூளையில் வேலைக்கு வருமாறு பலமுறை அழைத்தும் அவர் வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. வேலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை முன்பணமாக பெற்ற தொகையை திரும்ப தந்து விடுங்கள் என்று பலமுறை கேட்டுள்ளார். ஆனால் ராமலிங்கம் வேலைக்கும் செல்லாமலும், முன்பணத்தையும் திரும்ப தராமலும் இருந்து வந்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசில் சத்யா புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த ராமலிங்கம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தா.பழூர் இன்ஸ்பெக்டர் கதிரவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அரியலூரில் ‘மெட்ராஸ் ஐ' வேகமாக பரவுவதால் சிகிச்சை அளிக்க அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது.
    • 7 நாட்கள் முதல் 21 நாட்கள் வரை நீடிக்கும்

    அரியலூர்

    அரியலூர் நகரில் கடந்த ஒரு வாரமாக 'மெட்ராஸ் ஐ' எனும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கண் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த நோய் கண்ணில் கன்சங்டிவா என்ற விழி வெண் படலத்தில் ஏற்படும் நோயாகும். இது அடினோ வைரஸ் என்ற கிருமியினால் வருகிறது. முதன்முதலில் சென்னை எழும்பூர் பிராந்திய கண் மருத்துவமனையில் இது கண்டறியப்பட்டதால், இதனை 'மெட்ராஸ் ஐ' என்று அழைக்கிறோம். இந்த நோய் பற்றி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு தலைமை டாக்டர் கொளஞ்சிநாதன் கூறியதாவது:-

    அரியலூர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே 'மெட்ராஸ் ஐ' என்ற வைரஸ் கிருமியால் பாதிக்கப்படும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் எரிச்சல், அரிப்பு, கூச்சம், அதிக வெளிச்சத்தை பார்க்க முடியாது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது

    இந்த நோய் 7 நாட்கள் முதல் 21 நாட்கள் வரை நீடிக்கும். இந்த நோய் உள்ளவர்கள் தானாக மருந்துகள் வாங்கி கண்களில் போடக்கூடாது. கண் மருத்துவரிடம் சென்று அவர்களிடம் சிகிச்சை பெற வேண்டும். இந்த நோய் வந்தவர்கள் பயம் கொள்ள வேண்டாம். எந்த பாதிப்பும் ஏற்படாது. கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது, பொது இடங்களுக்கு செல்லாமல் இருப்பது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு கண் நோய் பாதித்தால் பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மற்ற நோயாளிகளை பாதிக்காத வகையில் 'மெட்ராஸ் ஐ' நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்."

    • கூட்டுறவு வார விழாவில் ரூ.8.07 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் 69-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, தலைமையில், அரியலூர் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது,

    விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், சிறந்த சங்கங்களுக்கு கேடயங்கள், சிறுவர், சிறுமிகளுக்கு சிறுதுளி சேமிப்பு கணக்கு திட்டத்தின் கீழ் உண்டிப்பெட்டிகள் மற்றும் 1,097 பயனாளிகளுக்கு ரூ.8.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ேபசினார்.

    அப்போது அவர் கூறும் போது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். பெண்கள் முன்னேற்றத்திற்கு சுயஉதவிக்குழுக்களை முதலில் அறிமுகப்படுத்தி திட்டங்களை செயல்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆவார். மேலும், அவர் வழியில் கடந்த 2006-ஆம் ஆண்டு தற்போதைய முதலமைச்சர் துணை முதலமைச்சராக இருந்தபொழுது தமிழகம் முழுவதும் சென்று மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கினார். அதேபோன்று அரியலூர் மாவட்டத்திற்கும் வருகை தந்து மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கியுள்ளார்கள். தற்பொழுது மகளிர் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு புதிய கடன் உதவிகளும் வழங்கப்படுகிறது.

    தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை அனைத்து பயனாளிகளும் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும்,

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சந்திரசேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தேசிய நூலக வார விழா நிறைவடைந்தது
    • போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள்

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் ஒரு வாரமாக நடைபெற்று வந்த தேசிய நூலக வார விழா நிறைவுப் பெற்றது.

    இந்த நிறைவு நாள் விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் சண்முகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் கிருஷ்ணலீலா, ரோட்டரி கிளப் தலைவர் அழகுதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில், அரியலூர் நகர் மன்ற தலைவர் சாந்தி, வாசகர் வட்டத் தலைவர் மங்கையர்க்கரசி, அரியலூர் அரசு கலைக் கல்லூரி தமிழாய்வுத் துறை தலைவர் தமிழ்மாறன், அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை தமிழாசிரியர் தமிழனி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்கலையும் வழங்கினர்.

    அப்போது அவர்கள் பேசுகையில், கல்வி என்ற பெரும் கடலை தனக்குள் தேக்கி வைத்துள்ள நூலகங்கள் தன்னை தேடி வரும் வாசகர்களின் அறிவு பசியினை போக்கி அவர்களை பூரணமான மனிதர்களாக சமூகத்துக்கு தருகின்றன. எனவே நல்ல பயனுள்ள நூல்களை படித்து சமுதாயத்துக்கு தொண்டு ஆற்ற வேண்டும் என்றனர்.

    முன்னதாக முதல்நிலை நூலகர் ஸன்பாஷா வரவேற்றார். முடிவில் நூலக அலுவலக உதவியாளர் மலர்மன்னன் நன்றி தெரிவித்தார்.

    • பழூர், உடையார்பாளையத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி நிறைவடையும் வரை

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் துணை மின் நிலையம், தழுதாழைமேடு துணை மின் நிலையம் மற்றும் நடுவலூர் துணைமின் நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான தா.பழூர், சிந்தாமணி, கோடங்குடி, அணைக்குடம், வாழைக்குறிச்சி, காரைக்குறிச்சி, மதனத்தூர், தென்கச்சி பெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், இருகையூர், கோடாலிகருப்பூர், சோழமாதேவி, இடங்கண்ணி, அருள்மொழி, திரிபுரந்தான், உதயநத்தம், தழுதாழைமேடு, குழவடையான், வீரசோழபுரம், வளவனேரி, வானதிரையன்குப்பம், வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைகட்டு, உட்கோட்டை, வடக்கு/ தெற்கு-ஆயுதகளம், மெய்க்காவல்புத்தூர், கங்கைகொண்டசோழபுரம்.

    இளையபெருமாள்நல்லூர், ஜெயங்கொண்டம், குறுக்கு ரோடு, கோட்டியால், சுத்தமல்லி, உல்லியகுடி, கொலையனுார், கார்குடி, பருக்கல், அணிக்குறிச்சி, நத்தவெளி, புளியங்குழி, காசாங்கோட்டை, முட்டுவாஞ்சேரி மற்றும் துணைமின் நிலையத்திற்கு அருகே உள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மாதாந்திர பணி முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் உடையார்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் உடையார்பாளையம், குமிழியம், பரணம், இரும்புலிகுறிச்சி, கழுமங்கலம், சோழங்குறிச்சி, இடையார், ஏந்தல், சூசையப்பர்பட்டினம், த.மேலூர், த.பொட்டக்கொல்லை, அழிசுகுடி, தத்தனூர், மணகெதி பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

    • சிமெண்டு லாரி மோதி தந்தை-மகன் பலியாகினர்
    • இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்தனர்

    அரியலூர்

    அரியலூர் தெற்கு சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் சந்திரகாசன் (வயது 52), விவசாயி. இவரது மகன் திருமாறன் (13). இவர் அரியலூரில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை சந்திரகாசன் தனது மகனை பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    கல்லங்குறிச்சி காட்டுக்கொட்டாய் அருகே சென்றபோது அந்த வழியாக சிமெண்டு மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த திருமாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த சந்திரகாசனை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சந்திரகாசன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிமெண்டு ஏற்றி சென்ற லாரி மோதி தந்தை-மகன் பலியான சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் பலியான சந்திரகாசன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாடகை செலுத்தாத 2 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
    • நேரில் சென்று தகவல் தெரிவித்தும், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் செய்து வந்தனர்

    அரியலூர்

    அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதை ஏலம் எடுத்தவர்கள் பலர் வாடகை செலுத்தாமல் நிலவை வைத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கமிஷனர் சித்ரா சோனியா பலமுறை அவர்களுக்கு கடிதம் அனுப்பியும், நேரில் சென்று தகவல் தெரிவித்தும், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் செய்து வந்தனர். இதையொட்டி ஒரு சிலர் தங்களது வாடகை நிலுவை தொகையை செலுத்தினர். இருப்பினும் 10-க்கும் மேற்பட்டோர் வாடகையை செலுத்தாமல் இருந்தனர்.

    இதையடுத்து, அரியலூர் பஸ் நிலையத்தில் உள்ள 2 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர். அப்போது கடை உரிமையாளர்கள் சிலர் நகராட்சி சார்பில் ஏலம் விட்ட கடைகளை விட இரு மடங்கு கடைகள் பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் எங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டு வாடகை தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஏலம் எடுத்து கடை நடத்துபவர்களை தவிர மற்ற கடைகளை முழுவதுமாக அகற்றி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதற்கான பணிகளை உடனே செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும் வாடகை செலுத்தாத கடைகள் அனைத்தும் பூட்டி 'சீல்' வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்."

    • கள்ளத்தொடர்பு பிரச்சினையில் சுங்கச்சாவடி காவலாளியை கொலை செய்து இருப்பார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடியில் இருந்து கீழராயம்புரம் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சாலையோரம் வாலிபர் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடித்து கொலை செய்யப்பட்டு சட்டை எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடலை ஆய்வு செய்தபோது கை, கால், தலை பகுதிகளில் கடுமையாக தாக்கப்பட்ட ரத்த காயங்கள் இருந்தன.

    அதனால் அந்த வாலிபரை வேறு எங்கோ கொலை செய்து தடயங்களை மறைக்க உடலை இங்கே கொண்டு வந்து போட்டு எரிக்க முயன்றது தெரியவந்தது. கரும்பு சக்கை மற்றும் கருவேலம் முட்களை போட்டு எரித்ததால் உடல் முழுவதும் எரியாமல் சட்டையின் ஒரு பகுதி மட்டுமே எரிந்து இருந்தது.

    பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அவை ஆனந்தவாடி சாலையில் 1 கி.மீ. தூரம் வரை ஓடி நின்றது. யாரையும் பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் வல்லரசு (எ) சுரேஷ்குமார் (வயது 23) என்று தெரிந்தது. இவர் கடந்த 10 நாட்களாக திருச்சி சிதம்பரம் சாலையின் மணகதி சுங்கச்சாவடியில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    அதனைத் தொடர்ந்து கொளையாளிகள் யார், எதற்காக கொலை செய்தார்கள் என்று அவரது வீடு மற்றும் சுங்க சாவடியிலும், அவரது செல்போனை வைத்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் மணகதி சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த திருமண ஆன ஒரு பெண்ணிற்கும் வல்லரசுவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் இந்த கொலை நடந்ததா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
    • பிரசவம் பார்த்த ஊழியருக்கு குவியும் பாராட்டு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கு.வல்லம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சஙகீதா (வயது 25). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று இரவு வீட்டில் இருக்கும் பொழுதே பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் துடித்தார்.

    இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு உடனடியாக அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அப்குதியில் இருந்த ஆண்டிமடம் ஆம்புலன்ஸ் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது அரியலூர் அருகே அல்லிநகரம் நெடுஞ்சாலை பகுதிக்கு வந்த போது பிரசவ வலி அதிகரித்து பிரசவிக்கும் நிலை உருவானது.

    உடனே ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் மணிகண்டன் பிரசவம் பார்த்தார். இதில் சங்கீதாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு பைலட் ராமானுஜம் உதவி புரிந்தார். பின்னர் தாயும், சேயும் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.

    அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் பணியாளர்களை உடன் வந்த உறவினர்கள் பாராட்டினார்கள்.

    • ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது
    • சுற்றறிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது.

    அரியலூர் :

    அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், உறுப்பின ர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவி செந்தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சரஸ்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், மேலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிராமப் பகுதிகளில் சாலை , குடிநீர் , கழிவறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்கள் தங்களது பகுதி மக்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

    மேலும் இக்கூட்டத்தில், ஊராட்சிகளில் எந்தவொரு நிதியிலிருந்தும் உயர்கோபுரம் மின் விளக்குகள், சிறுமின்கோபுர விளக்குகள், ஒன்றுக்கு மேற்பட்ட விளக்குகள் கொண்ட கம்பங்களுடன் கூடிய தெருவிளக்குகள் அமைத்திட மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்படுகிறது என்றும், சோலார், எல்.இ.டி விளக்குகள், கம்பங்களுடன் கொள்முதல் செய்தல் உடனடியாக தடைசெய்யப்படுவதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககம், இயக்குநர் பிரவீன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது.

    • பாதாள சாக்கடை சுத்தம் செய்ய ரோபோட் எந்திரம் வழங்கப்பட்டது
    • ஓ.என்.ஜி.சி சார்பில் அரியலூர் நகராட்சிக்கு வழங்கப்பட்டது

    அரியலூர்:

    சென்னை ஓஎன்ஜிசி சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பிலான ரோபோட் இயந்திரம் அரியலூர் நகராட்சிக்கு வழங்கப்பட்டது.

    அரியலூர் நகராட்சியில், பாதாள சாக்கடையை சுத்தம் செய்யத் தேவையான ரோபோட் இயந்திரத்தினை, சென்னை ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் திருவனந்தபுரம் ஜெனரோபோடிக்ஸ் என்ற நிறுவனம் ரோபோட் இயந்திரத்திரம் வடிவமைக்கப்பட்டது.

    இந்த இயந்திரத்தினை வழங்கும் நிகழ்ச்சி, அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஓஎன்ஜிசி அறக்கட்டளை முதன்மை செயல் அலுவலர் கிரன் கலந்து கொண்டு, ரோபோட் இயந்திரத்தினை கலெக்டர் பெ.ரமணசரஸ்வதியிடம் வழங்கினார்.

    இதுகுறித்து ஓஎன்ஜிசி அறக்கட்டளை முதன்மை செயல் அலுவலர் கிரன் தெரிவிக்கையில், இந்த ரோபோட் இயந்திரம் தேவையான அதிகபட்ச ஆழத்திற்கு ஏற்ப தனி திறமையுடன் செயல் பட கூடியது மட்டுமின்றி நீண்ட காலத்திற்கு திறம்பட செயல்பட உதவுகிறது. பாதாள குழிகளில் சுத்தம் செய்யும் நேரம் மற்றும் திறன் ஆகியவை மனிதர்களை விட அதிக திறமையாக சுத்தம் செய்யக் கூடியது.

    மேலும், ஆள் இறங்கும் குழிகளிலிருந்து வெளிவரும் நச்சு வாயுவின் அளவையும் சரிபார்த்து அதற்கு ஏற்ப செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளிப்பதுடன் விபத்துகளை தடுக்கும் வகையிலும் இந்த ரோபோட் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி, துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகராட்சி ஆணையர் சித்ராசோனியா, ஓ.என்.ஜி.சி அறக்கட்டளை பொது மேலாளர்கள் ஆறுமுகம், சுந்தரன், வெங்கட்ராமன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்,அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×