என் மலர்tooltip icon

    இமாச்சல பிரதேசம்

    • பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் டெல்லி செல்லும் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன.
    • இமாச்சலப்பிரதேச மாநிலத்திலும் கடும் பனி நிலவி வருகிறது. ரோடுகளில் பனி மூடிக் கிடக்கிறது.

    சிம்லா:

    டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    பனி மூட்டமும் அதிகமாக இருப்பதால் டெல்லி செல்லும் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன. இமாச்சலப்பிரதேச மாநிலத்திலும் கடும் பனி நிலவி வருகிறது. ரோடுகளில் பனி மூடிக் கிடக்கிறது.

    இதையடுத்து அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 275 சாலைகள் மூடப்பட்டு உள்ளன. மின் வினியோகமும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    • கடந்த செப்டம்பர் 7-ந்தேதி பாதயாத்திரை தொடங்கினார்.
    • 30-ந்தேதி காஷ்மீரில் பாதயாத்திரை நிறைவடைகிறது.

    சிம்லா :

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். பல மாநிலங்களை கடந்து பஞ்சாப்பில் நடந்து வந்த இந்த யாத்திரை, நேற்று அங்கிருந்து புறப்பட்டது. காலையில் காடோடா கிராமம் அருகே இமாசல பிரதேசத்துக்குள் நுழைந்தது.

    கடும் பனியை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் நடந்தனர். வாழ்த்து கோஷங்கள் முழங்கின. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. குறிப்பிட்ட சிலர் மட்டும் பாதுகாப்பு வளையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், ராகுல்காந்தி சாலையோரத்தில் நின்றிருந்த இளைஞர்களுடன் உரையாடினார்.

    மான்சர் சுங்கச்சாவடி அருகே ராகுல்காந்திக்கும், தொண்டர்களுக்கும் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இமாசலபிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர்சிங் சுக்கு, துணை முதல்-மந்திரி முகேஷ் அக்னிஹோத்ரி, மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபாசிங் மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் திரண்டு நின்று வரவேற்றனர்.

    பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரிந்தர்சிங் ராஜா வார்ரிங், தேசிய கொடியை இமாசலபிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதிபாசிங்கிடம் ஒப்படைத்தார். வரவேற்பை ஏற்றுக்கொண்ட ராகுல்காந்தி, அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசினார். அவர் பேசியதாவது:-

    "பா.ஜனதாவின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கத்தில், கன்னியாகுமரியில் இந்த பாதயாத்திரையை தொடங்கினோம். இது நல்ல கற்றல் அனுபவமாக அமைந்தது. மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய முயன்றோம். வேலையின்மை, விலைவாசி உயர்வு ஆகியவைதான் நாட்டின் முக்கிய பிரச்சினைகள். ஆனால் இவற்றை பற்றி நாடாளுமன்றத்தில் பேச முடியவில்லை.

    நீதித்துறை, ஊடகங்கள் ஆகியவை மூலமும் எழுப்ப முடியவில்லை. ஏனென்றால், அவை மத்திய அரசின் நிர்பந்தத்தில் இயங்குகின்றன. எனவே, மக்களிடமே இப்பிரச்சினைகளை பேசுவதற்காக பாதயாத்திரையை தொடங்கினோம். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் உள்பட மத்திய அரசின் அனைத்து கொள்கைகளும் மூன்று, நான்கு பெரும் கோடீசுவரர்களுக்கு நன்மை செய்வதை நோக்கமாக கொண்டவை.

    விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலன்களை பா.ஜனதா அரசு கண்டு கொள்ளவில்லை. நாட்டில் வெறுப்பு, வன்முறை, அச்சம் ஆகியவற்றை பரப்பி வருகிறது. முதலில், பாதயாத்திரை பயணத்தில் இமாசலபிரதேசம் இல்லை. பின்னர், பயண வழியை மாற்றி, இமாசலபிரதேசத்தையும் சேர்த்துள்ளோம். இங்கு ஒரு நாள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும். 30-ந் தேதி, காஷ்மீரில் பாதயாத்திரை நிறைவடைகிறது."

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காஷ்மீரில் பாதயாத்திரையின் நடந்து செல்லும் தூரம் குறைக்கப்பட்டுள்ளது.
    • பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றது காங்கிரஸ்.

    சிம்லா:

    ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரை லக்கன்பூர் வழியாக காஷ்மீரில் நுழைகிறது. இம்மாதம் 30-ம் தேதி அங்கு தேசிய கொடி ஏற்றுவதுடன் பாதயாத்திரை நிறைவடைகிறது. அதே சமயம், காஷ்மீரில், நடந்து செல்லும் தூரம் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

    காஷ்மீரில் மக்களுக்கு இடையூறு இல்லாதவகையில் சில இடங்களில் வாகனங்கள் மூலமாகவும், வேறு சில இடங்களில் நடைபயணமாகவும் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படும் என காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி. தில்பக்சிங் ஏற்கனவே கூறியுள்ளார்

    இந்நிலையில், பாதயாத்திரையை ஒருங்கிணைத்து வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சிம்லாவில் நிருபர்களிடம் கூறியதாவது:

    ராகுல் காந்தி காஷ்மீரில் பாதயாத்திரை செல்வது உறுதி. அதே சமயத்தில், பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.

    பாதுகாப்பு தொடர்பாக மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அங்கு நடந்து செல்லும் தூரம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

    • இமாசல பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இது 3.2 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

    சிம்லா:

    இமாசல பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவின் கிழக்கே 22 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 5.17 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் 3.2 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    கடந்த சில தினங்களுக்கு முன் அரியானாவில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் டெல்லியில் உணரப்பட்டது.

    வட மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • சிம்லாவில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடந்தது.
    • கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

    மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜனதாவுக்கு 25 இடங்கள் கிடைத்தன.

    இமாச்சல முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுகு கடந்த மாதம் 11ம் தேதி பதவியேற்றார். அவருடன் முகேஷ் அக்னி கோத்ரி துணை முதலமைச்சராக பதவியேற்றார்.

    இந்தநிலையில் இமாச்சல பிரதேச அமைச்சரவை இன்று விஸ்தரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.

    அதன்படி சிம்லாவில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடந்தது. 7 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    3 முறை எம்.எல்.ஏ.வான தானிராம் சண்டில், ஹர்ஷ்வர்தன் சவுகான், முன்னாள் துணை சபாநாயகர் ஜகத்சிங் நெகி ரோகித் தாகூர், விக்ரமாதித்யசிங் 3 முறை எம்.எல்.ஏ.வான அணிருதா சிங் சந்தர் குமார் ஆகிய 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    இதில் விக்ரமாத்திய சிங் முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ரசிங்கின் மகன் ஆவார். இதன் மூலம் இமாச்சலபிரதேச அமைச்சரவை எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

    முதலமைச்சருடன் சேர்த்து 12 பேர் அமைச்சராகலாம். இதனால் 3 பேர் இன்னும் அமைச்சரவையில் இடம் பெறலாம்.

    • கரேரி, டிரையண்ட், ஆதிஹிமானி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அதிகாரிகள் தடை விதித்தனர்.
    • மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள சிறிய மலைகளிலும் பயணிகள் யாரும் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

    சிம்லா:

    இந்தியாவில் அழகிய மலைகளும், ஏராளமான சுற்றுலா தலங்களும் அடங்கிய மாநிலம் இமாச்சல பிரதேசம்.

    இந்த மாநிலத்தில் டிசம்பர் மாதம் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். அதன்படி இங்குள்ள குப்ரி, மணாலி, நர்காண்டா பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. கீலாங், ஹன்சா பகுதிகளில் 2 சென்டி மீட்டர் அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது.

    சிம்லாவின் புறநகர் பகுதியில் ஒரு சென்டி மீட்டர் அளவுக்கு பனி பெய்தது. அடுத்து வரும் நாட்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி காங்கரா மாவட்டத்தில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் பனி படர்ந்து காணப்பட்டது. சாலைகளிலும் பனி உறைந்து இருந்தது.

    பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை காணப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

    இம்மாவட்டத்தின் கரேரி, டிரையண்ட், ஆதிஹிமானி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அதிகாரிகள் தடை விதித்தனர்.

    இதற்கிடையே இம்மாவட்டத்தில் பெய்த பனிப்பொழிவு காரணமாக பல சுரங்க பாதைகளில் சுற்றுலா வாகனங்கள் சிக்கி கொண்டன. சுமார் 400 -க்கும் மேற்பட்ட வாகனங்கள் சுரங்கங்களில் சிக்கி கொண்டன. இது பற்றிய தகவல் அறிந்த மீட்பு படையினர் அப்பகுதிக்கு சென்று வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுபோல மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள சிறிய மலைகளிலும் பயணிகள் யாரும் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

    மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெறாமல் யாரும் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

    • இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிம்லாவில் இன்று பா.ஜ.க. எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
    • இதில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை தழுவியது. இதையடுத்து முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதற்கிடையே இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிம்லாவில் இன்று பா.ஜ.க. எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜெய்ராம் தாக்கூர் எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    கூட்டத்தைத் தொடர்ந்து ஜெய்ராம் தாக்கூர், தனது கட்சி உறுப்பினர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    இந்நிலையில், ஜெய்ராம் தாக்கூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க. குடும்பத்தின் ஒவ்வொரு பொறுப்பையும் நிறைவேற்றுவது எங்களின் முதன்மைப் பொறுப்பு. சட்டசபை கட்சித் தலைவர் பொறுப்பை எனக்கு வழங்கிய அனைத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடியை சந்திக்கும் திட்டத்தை தள்ளி வைத்தார்.
    • கடந்த 16ந் தேதி ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் அவர் பங்கேற்றிருந்தார்.

    சிம்லா:

    இமாச்சலப் பிரதேசத்தில் புதிய முதலமைச்சராக கடந்த 11ந் தேதி பதவியேற்ற சுக்விந்தர் சிங் சுகுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் இதை தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்திக்க சுக்விந்தர் சிங் திட்டமிட்டிருந்தார்.

    இதையொட்டி அவருக்கு வழக்கமான கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் கொரோனாவால் பாதிக்கப் பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பிரதமரை சந்திக்கும் திட்டத்தை தள்ளி வைத்த அவர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

    முன்னதாக கடந்த 16 ஆம் தேதி ராஜஸ்தானில் நடைபெற்ற ராகுல்காந்தியின் பாத யாத்திரையில் துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபாசிங் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 38 எம்எல்ஏக்களுடன் சுக்விந்தர் சிங்கும் பங்கேற்றிருந்தார்.

    மேலும் கடந்த சில நாட்களாக அவரை, இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா மற்றும் அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுக்விந்தர் சிங் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் ஆகியோரும் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை டெல்லியில் சந்தித்து பேசினர்.
    • முதலமைச்சர் சுக்விந்தர் சிங்கின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

    இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி மொத்தம் 40 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.

    இதையடுத்து, இமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். மேலும், சட்டசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி, துணை முதல்வராக பதவியேற்றார்.

    பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, எம்பி ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற முதலமைச்சர் சுக்விந்தர் சிங்கின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

    இந்நிலையில், சுக்விந்தர் சிங் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் ஆகியோரும் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை டெல்லியில் சந்தித்து பேசினர்.

    பின்னர் பேசிய சுக்விந்தர் சிங், "இமாச்சலப் பிரதேசத்தில் புதிய அரசை அமைப்பதில் எந்த சவாலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    புதிய அரசு அமைப்பதில் எந்த சவாலும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு அமைச்சரவை அமைக்கப்படுகிறது. முதல்வர் எம்.எல்.ஏ.க்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனவே, எந்த சவாலும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாங்கள் வெளிப்படையான மற்றும் நேர்மையான ஆட்சியை வழங்குவோம்.
    • 10 உத்தரவாதங்களை வழங்கியுள்ளோம், அவற்றை நாங்கள் செயல்படுத்துவோம்.

    சிம்லா:

    இயற்கை எழில் கொஞ்சும் இமாசலபிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் 12-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இங்கு 1985-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

    இந்த முறையும் அந்த சரித்திரம் தொடருமா அல்லது மாறுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8-ந் தேதி எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பெரும்பாலான தொகுதிகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களே முன்னிலை பெறத் தொடங்கினர்.

    இறுதியில் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனையடுத்து இமாசலபிரதேச மாநிலத்தின் 15-வது முதல்-மந்திரியாக சுக்விந்தர்சிங் சுக்கு பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கர் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். துணை முதல்-மந்திரியாக முகேஷ் அக்னிகோத்ரி பதவியேற்றுக்கொண்டார். மந்திரிகள் அடுத்த சில நாட்களில் பதவி ஏற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில், முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று சுக்விந்தா் சிங் சுக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, நாங்கள் 10 உத்தரவாதங்களை வழங்கியுள்ளோம், அவற்றை நாங்கள் செயல்படுத்துவோம். நாங்கள் வெளிப்படையான மற்றும் நேர்மையான ஆட்சியை வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • இமாச்சலப் பிரதேசத்தின் மேம்பாட்டிற்கு மத்திய அரசின் அனைத்து ஒத்துழைப்பை வழங்க நான் உறுதியளிக்கிறேன்.
    • புதிய முதல் மந்திரியாக பொறுப்பேற்ற சுக்விந்தர் சிங் சுக்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    சிம்லா:

    இமாசலபிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை சென்ற 8-ந் தேதி நடைபெற்றது.

    மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து, சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக (முதல்-மந்திரியாக) சுக்விந்தர் சிங் சுக்குவும் (வயது 58), துணை முதல்-மந்திரியாக முகேஷ் அக்னிகோத்ரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இமாசலபிரதேச மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக சுக்விந்தர்சிங் சுக்கு இன்று பதவி ஏற்றார்.

    இந்நிலையில், புதிய முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள சுக்விந்தர் சிங் சுக்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இமாச்சல பிரதேச முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ சுக்விந்தர்சிங் சுகுவுக்கு வாழ்த்துக்கள். இமாச்சலப் பிரதேசத்தின் மேம்பாட்டிற்கு மத்திய அரசின் அனைத்து ஒத்துழைப்பை வழங்க நான் உறுதியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • துணை முதலமைச்சராக முகேஷ் அக்னி ஹோத்ரி பதவி ஏற்றார்.
    • இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்த அவர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் ஆவார்.

    இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    இதையடுத்து அங்கு முதலமைச்சராக பதவியை பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் வீரபத்ர சிங்கின் மனைவியும் மாநில காங்கிரஸ் தலைவருமான பிரஷிபாசிங், கட்சியின் மூத்த தலைவர்கள் சுக் விந்தர் சிங், முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோர் முதல்வராக பதவியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வராக காங்கிரஸ் மேலிடம் தேர்ந்தெடுக்க ஒப்புதல் வழங்கி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து நேற்று மாலை சிம்லாவில் மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களாக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா, சத்தீஷ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் பிரதீபா சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்துக்கு பின்னர் பூபேஷ் பாகல் நிருபர்களிடம் கூறுகையில், "இமாச்சல பிரதேச புதிய முதல்வராகவும், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராகவும் சுக்விந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வராக முகேஷ் அக்னி ஹோத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த முடிவை காங்கிரஸ் மேலிடம் எடுத்துள்ளது" என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் இமாச்சல பிரதேச முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு இன்று பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக முகேஷ் அக்னி ஹோத்ரி பதவி ஏற்றார்.

    முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள சுக்விந்தர் சிங் பஸ் டிரைவரின் மகன் ஆவார். இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்த அவர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் ஆவார்.

    இமாச்சல பிரதேசம் நாதஷன் தொகுதியில் வெற்றி பெற்று 4வது முறையாக எம்.எல்.ஏ.வாகியுள்ளார். 2013-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார்.

    ×