என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    கர்ப்ப காலத்தில் தண்ணீர் சத்து இல்லாமல் உடல் வறட்சியாக இருந்தால் பிரசவம் சிரமமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
    கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். இதன்மூலம் பிரசவம் எளிதாக இருக்கும். அவ்வாறு இல்லாமல் உடல் வறட்சியாக இருந்தால் பிரசவம் சிரமமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், கர்ப்பமாக இருக்கும் போது தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடலில் ஒரு சில மாற்றங்களும் தெரியும் என்றும் சொல்கின்றனர்.

    மேலும், தண்ணீர் குடிக்க முடியவில்லை என்றாலும் தேவையான அளவு பழச்சாறு அருந்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் சாதாரணமாக இருக்கும் போது உடலில் இருக்கும் சக்தியானது, கர்ப்பமாக இருக்கும் போது இருக்காது. ஏனெனில் அப்போது உண்ணும் உணவு அனைத்துமே கருவில் இருக்கும் குழந்தைக்கு செல்லும். மேலும் சில காரணங்களாலும் உடலில் உள்ள சக்தி வெளியேறும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    தேவையான அளவு தண்ணீர் அருந்தவில்லை என்றால் பிரசவத்தின் போது உடலில் இருக்க வேண்டிய நீர்த்தன்மையை நீண்ட நேரம் தக்க வைக்க முடியாமல் போய்விடும். மேலும், கருவில் இருக்கும் குழந்தை கருப்பையில் இருக்க முடியாமல் விரைவில் வெளியே வந்துவிடும். இதைத்தான் குறைப்பிரசவம் என்கிறோம். இதுபோன்று பிறக்கும் குழந்தைகளுக்கு கை, கால் ஊனம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.



    சாதாரணமாக இருக்கும் போது உடலில் இருந்து வெளியேறும் வெப்பமானது, பிரசவத்தின் போது வெளியேறாது. உடலிலேயே தங்கிவிடும். இதற்கும் நீர்ச்சத்து இல்லாததே காரணமாகும். ஆகவே, உடலில் உள்ள வெப்பத்தை சரியாக வைத்துக்கொள்ள அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். வெப்பம் உடலிலேயே இருந்தால் காய்ச்சல் வரும். இதுபோன்ற சமயங்களில் குழந்தைக்கும் காய்ச்சல் பரவி, குழந்தையின் மூளையை பாதித்து மூளைக்குறைபாட்டை ஏற்படுத்தும்.

    உடல் வறட்சியானது மலச்சிக்கல் மற்றும் தாய்ப்பால் சுரப்பில் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தும். சிறுநீரகத்தில் பிரச்சினையை உண்டாக்கும். தாய்க்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் குழந்தையின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலும் பாதிக்கும். தாயின் உடலில் ரத்தக் குறைபாட்டை ஏற்படுத்தும்.

    கர்ப்ப காலத்தில் அதிகமாக தண்ணீரை குடித்து உடல் வறட்சி இல்லாமல் பார்த்துக்கொண்டால் தாய், சேய் ஆகிய இரு உயிருமே நலமாக ஆரோக்கியமாக இருக்கும். எனவே தண்ணீரை அதிகமாக குடிங்க… குழந்தையை ஆரோக்கியமா பெற்றெடுங்க!

    டீன் ஏஜ் பெண்கள் `12 முதல் 20 வயது வரை உடலையும் எண்ணங்களையும் சரியாகக் கவனித்தால்தான் அவர்களது வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்’ எனப் பெரியவர்கள் சொல்வதுண்டு.
    பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, குழந்தைப் பருவம் கடந்து  ‘டீன் ஏஜ்’ பருவத்தை அடையும்போது உடல் உறுப்புகளின் வளர்ச்சி, குரலில் மாற்றம், மாதவிடாய்க் கால தொடக்கம், உணர்ச்சிகள், எண்ணங்களில் மாற்றம் என இயல்பில் பல மாறுதல்கள் நிகழும்.

    இத்தகைய சூழலில், அவர்களது உணவு விஷயத்தில் அதிக அக்கறைசெலுத்த வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு. `12 முதல் 20 வயது வரை உடலையும் எண்ணங்களையும் சரியாகக் கவனித்தால்தான் அவர்களது வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்’ எனப் பெரியவர்கள் சொல்வதுண்டு. இது உண்மையும்கூட. `டீன் ஏஜ்’ பருவத்தில் உட்கொள்ளும்  உணவுகளைப் பொறுத்தே அவர்களது உடல் உறுப்புகள் வலிமையும் ஆரோக்கியமும் பெறும்.

    “டீன் ஏஜ் பருவத்தினர் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டிய இரண்டு முக்கியக் கேள்விகள் இருக்கின்றன. `சரியான உணவைச் சாப்பிடுகிறோமா, அதைச் சரியான நேரத்தில் சாப்பிடுகிறோமா?’ என்பதே அந்தக் கேள்விகள். `டீன் ஏஜ்’ பருவம் என்பது உணர்ச்சிகளால் நிறைந்தது. அதனால், அவர்கள் எதையும் மிக எளிதாக எடுத்துக்கொள்வார்கள். அதே உணர்வுடன் உணவில் கட்டுப்பாடின்றி இருப்பது தவறு” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம் வினோத்.

    “பெண் குழந்தைகளில் பலர், 12 வயதைத் தொடங்கும்போதே பருவம் எய்திவிடுகின்றனர். அதனாலேயே, ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளுக்கு உணவின் மீதான கவனிப்பு அதிகம் தேவைப்படுகிறது. `டீன் ஏஜ்’ பெண்களுக்கு என்னென்ன உணவுகள் தேவைப்படும் என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

    * கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் நிறைந்த உணவுகள் மற்றும் தானியங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். இவை, உடலின் ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கும் என்பதால் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்.

    *  உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது நல்லது. குறைந்தபட்சம் தினம் ஒரு பழமாவது சாப்பிட வேண்டும்.

    *  உடலின் இரும்புச் சத்து தேவைக்கு கேழ்வரகு, கீரை, எள், மீன், முட்டைச் சாப்பிடலாம். இது `டீன் ஏஜ்’ பெண்களுக்கு, மாதவிடாய்க்கால சிக்கல்களைத் தீர்க்க உதவும். இல்லையென்றால், ரத்தச் சோகை, உயரம் அதிகரித்தல், உடல் எடை அதிகரிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். சைவப் பிரியர்கள், உடலின் இரும்புச் சத்து தேவைக்கு பருப்பு வகைகள், நட்ஸ், விதைகளை உட்கொள்ளலாம்.

    *  `டீன் ஏஜ்’ பருவத்தினர் பலரும் பால் சார்ந்த பொருள்களை ஒதுக்கிவிடுகின்றனர். பால், சீஸ், தயிர் போன்றவற்றை அவசியம் உட்கொள்ள வேண்டும். இதன்மூலம் கிடைக்கும் சத்துகள் இதயத்தைப் பாதுகாக்கும்; தசைகளை வலிமையாக்கும்.

    *  எண்ணெய் நிறைந்த உணவுப் பொருள்களை உட்கொள்வது, பருமனை ஏற்படுத்தும். டீன் ஏஜ் பருவத்தில் பெண்களுக்கு ஏற்படும் பருமனே நீர்க்கட்டி, கர்ப்பப்பை தொடர்பான பல பிரச்னைகளுக்கு அடித்தளமாக அமையலாம். முடிந்தவரை எண்ணெய், நெய் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

    *  தண்ணீர் அதிக அளவில் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.



    நேரத்துக்கு உணவு…

    *  காலை உணவைத் தவிர்க்கவோ, நேரம் தவறிச் சாப்பிடவோ கூடாது. இத்தகைய பழக்கங்கள் ஆற்றல் உற்பத்தியைக் குறைக்கும் என்பதால், படிப்பில் கவனச் சிதறல் ஏற்படக்கூடும். அத்துடன் ஹார்மோன் பிரச்னைகளும் ஏற்படலாம்.  உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்து,  எடையை அதிகரிக்கவும் செய்யலாம்.

    *  மதிய உணவைப் பொறுத்தவரை, பள்ளிக் குழந்தைகளிடையே நேர ஒழுக்கம் சரியாக இருக்கும். ஆனால், கல்லூரி மாணவர்கள் நேரம் தவறிச் சாப்பிடுகிறார்கள் அல்லது மிகவும் குறைந்த அளவே உணவு எடுத்துக்கொள்கிறார்கள். பெரும்பாலானவர்கள், காலை உணவை 11 மணிக்கும் மதிய உணவை 4 மணிக்கும் சாப்பிடுகிறார்கள். இத்தகைய பழக்கங்கள், உடல் உறுப்புகளின் வளர்ச்சியைப் பாதிக்கும். வளர்சிதை மாற்றங்களையும், அது தொடர்பான வேறு சில பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

    *  ஒரு நாளைக்கான உணவை சிறிது சிறிதாக ஆறு முறை சாப்பிடுவது, சீரான அளவு மூன்று வேளை சாப்பிடுவது என இரண்டுமே சரியான உணவுப்பழக்கம்தான். ‘மூன்று வேளை உணவு’ என்ற கணக்கு, ஆறு என அதிகரிக்கலாமே தவிர குறையக் கூடாது. ஒருவேளை சாப்பிடவில்லை என்றாலும் வைட்டமின், கார்போஹைட்ரேட், தாதுச்சத்துகள் போன்ற உடலுக்குத் தேவைப்படும் ஆற்றல் கிடைக்காமல் போகக்கூடும்.

    * ஸ்நாக்ஸ் பிரியர்கள் சிப்ஸ், பஜ்ஜி, வடை போன்ற எண்ணெய்ப் பலகாரங்களைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக நட்ஸ், பழங்கள், உலர் பழங்கள், சிறுதானிய லட்டு போன்றவற்றை உட்கொள்ளலாம்.

    * பெரும்பாலான கல்லூரி மாணவிகள், பஃப்ஸ் மற்றும் டீ, காபி வகைகளைப் பசி எடுக்கும்போது உட்கொள்வதுண்டு. இதில் டீ, காபிக்கு அடிமையாகவும் வாய்ப்புள்ளது. ஒருநாளில் இரண்டுமுறைக்கு மேல் டீ, காபி குடித்தால் ரத்த அழுத்தம் ஏற்படலாம் என்பதால், அதைத் தவிர்க்க வேண்டும்.

    * பசி எடுத்தால், அலட்சியப் படுத்தாமல் கண்டிப்பாகச் சாப்பிட்டுவிட வேண்டும். சரியான நேரத்தில் பசி எடுக்கவில்லை என்பதற்காக சாப்பிடாமல் இருக்கக் கூடாது. பசியின்மைக்கான காரணத்தை அறிந்து தீர்வு காண வேண்டும்.

    * உணவைப் போலவே உடற்பயிற்சியும் அவசியம். உடற்பயிற்சி செய்வதால் ரத்தம் சுத்திகரிப்படுவதுடன் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும்; மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும்  உதவும். குறிப்பாக காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.

    * எடை அதிகரிக்கும்போது, பி.எம்.ஐ அளவுபடி உயரமும் எடையும் சீராக இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்வது நல்லது.
     
    முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால் அது கர்ப்பப் பையில் மட்டும் தான் இருக்கும். அதுவே புற்றுநோயாக மாறினால் நுரையீரல், கல்லீரல், மூளை என எங்கே வேண்டுமானாலும் பரவி பாதிக்கலாம்.
    எல்லா கர்ப்பத்தையும் உறுதி செய்கிற முதல் அறிகுறியான மாதவிலக்கு தள்ளிப் போவதுதான் முத்துப்பிள்ளை கர்ப்பத்திலும் இருக்கும். அதைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருக்கும். முத்துப்பிள்ளை கர்ப்பமாக இருந்தால் இந்த வாந்தியும், மயக்கமும் அதிகமாவதுடன், 90 முதல் 95 சதவிகிதப் பெண்களுக்கு ரத்தப் போக்கும் ஏற்படும். அதனால் பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்படுவார்கள்.

    சில பெண்களுக்கு ரத்தப்போக்குடன் திராட்சை மாதிரியான குட்டித் திசுக்களும் வெளியேறும். அரிதாக சில பெண்களுக்கு ரத்த அழுத்தம் அதிமாகும். சிறுநீரில் புரதத்தின் அளவு கூடும். ஹைப்பர் தைராய்டு ஏற்பட்டு, அதன் அறிகுறிகளான அதிக களைப்பு, அதிக வியர்வை போன்றவையும் இருக்கலாம். முத்துப்பிள்ளை கர்ப்பம் உள்ள பெண்களின் கர்ப்பப்பை, சாதாரண கர்ப்பம் தரித்ததை விட அளவில் மிகப் பெரியதாக இருக்கும்.

    அதாவது மாதவிலக்கு தள்ளிப் போனதில் இருந்து கணக்கிட்டால் கர்ப்பப் பை இருக்க வேண்டிய அளவைவிட, அதிகப் பெரிதாக இருப்பதை மருத்துவர் கண்டுபிடிப்பார். ரத்தப் பரிசோதனையின் மூலம் கர்ப்பம் தரித்த பின் வருகிற ஹெச்.சி.ஜி ஹார்மோன் அதிகரித்திருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அடுத்து ஸ்கேன் செய்து அதை உறுதிப்படுத்தலாம். சினைப்பையின் இரண்டு பக்கங்களிலும் கட்டிகள் இருக்கலாம்.

    தீர்வுகள்...

    ஹெச்.சி.ஜி ஹார் மோன் அளவுகளை சரி பார்த்ததும், ரத்தசோகை இருக்கிறதா எனப் பார்க்க சிபிசி (complete blood count test) சோதனையும், நெஞ்சுப் பகுதிக்கு ஒரு எக்ஸ் ரேவும் எடுக்க வேண்டியிருக்கும். முத்துப் பிள்ளை கர்ப்பத் திசுக்கள் அங்கே பரவியிருக்கிறதா என்பதை அறியவே இந்தச் சோதனை. அந்தத் திசுக்கள் நுரையீரல் உள்பட உடலில் எங்கு வேண்டுமானாலும் பரவலாம். அடுத்து வாக்குவம் ஆஸ்பிரேஷன் என்கிற முறையில் அந்தக் கருவை வெளியே எடுப்பதுதான் தீர்வு. இந்த அறுவை சிகிச்சையின் போது ரத்த இழப்பு அதிகமிருக்கும் என்பதால் தேவையான ரத்தத்தைத் தயாராக வைத்துக்கொண்டே செய்யப்படும். கர்ப்பப் பை சுருங்கவும் மருந்துகள் கொடுக்கப்படும்.

    கர்ப்பம் அசாதாரணமாக வளர்ந்துவிட்டது.... கர்ப்பிணியின் வயதும் அதிகம் என்கிற நிலையில், எதிர்காலத்தில் கருத்தரிக்கிற எண்ணம் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, கர்ப்பப் பையையும் சேர்த்தே அகற்ற வேண்டி வரும் முத்துப்பிள்ளை கர்ப்பத்தை அறுவையின் மூலம் அகற்றி விடுவதோடு முடிந்து போகிற பிரச்னை அல்ல இது. அதன் பிறகான தொடர் கண்காணிப்பு மிக முக்கியம். முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால் அது கர்ப்பப் பையில் மட்டும் தான் இருக்கும். அதுவே புற்றுநோயாக மாறினால் நுரையீரல், கல்லீரல், மூளை என எங்கே வேண்டுமானாலும் பரவி பாதிக்கலாம்.

    ஆனால் அதைப் பற்றியும் பயப்படத் தேவையில்லை. கீமோதெரபி சிகிச்சையின் மூலம் இந்தப் புற்றுநோயை 100 சதவிகிதம் குணப்படுத்திவிட முடியும். முத்துப்பிள்ளை கர்ப்பக் கட்டியானது புற்று நோயாக மாறுமா என்பதை தொடர் கண்காணிப்பு மூலம் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். புற்றுநோயாக மாறுகிற வாய்ப்பானது முழுமையான முத்துப்பிள்ளை 15 முதல் 20 சதவிகிதமும், பகுதி முத்துப்பிள்ளைக் கர்ப்பத்தில் 5 சதவிகிதமும் இருக்கிறது. அறுவைசிகிச்சை முடிந்தாலும் 2 வாரங்கள் கழித்து மறுபடி ஹெச்.சி.ஜி சோதனை செய்து அதன் அளவைப் பார்க்க வேண்டும். பிறகு வாராவாரம் அதை சரி பார்க்க வேண்டும். ஹெச்.சி.ஜி அளவானது 100க்கும் கீழே வரும்.

    அதையடுத்து 2 வாரங்களுக்கு ஒருமுறை அந்தச் சோதனையை அது 5க்கும் கீழே வரும் வரை செய்ய வேண்டும். 5க்கும் கீழே வந்துவிட்டால் பிறகு மாதம் ஒரு முறை சோதனை செய்தால் போதுமானது. 8 முதல் 10 வாரங்களில் ஹெச்.சி.ஜி அளவானது சகஜ நிலைக்கு வந்து விடும். 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை இந்தத் தொடர் கண்காணிப்பு அவசியம்.

    ஹெச்.சி.ஜியின் அளவானது குறையாமல் அப்படியே இருந்தாலோ அல்லது திடீரென அதிகரித்தாலோ எச்சரிக்கையாக வேண்டும். அந்தக் குறிப்பிட்ட அளவை எட்டும்வரை சம்பந்தப்பட்ட பெண் கருத்தரிக்கக் கூடாது. அப்படிக் கருத்தரித்தால் ஹெச்.சி.ஜி அளவானது அதிகரித்து, அனாவசியக் குழப்பத்தைத் தரும். எல்லாம் குணமாகி, ஹெச்.சி.ஜி மற்றும் ஸ்கேன் மூலம் மருத்துவர் அதை உறுதி செய்த பிறகே கர்ப்பம் தரிக்கலாம். 
    மாதவிடாய் என்பதே ஒரு பெண் தன் வாழ்க்கையில் உடல் ரீதியாக சந்திக்கும் மிகப்பெரிய மாற்றமாகும். மாதவிலக்குக்கு முன் ஏற்படும் சில அறிகுறிகளை பற்றி இப்போது பார்க்கலாம்.
    மாதவிடாய் என்பதே ஒரு பெண் தன் வாழ்க்கையில் உடல் ரீதியாக சந்திக்கும் மிகப்பெரிய மாற்றமாகும். மாதவிடாய், உங்கள் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். இக்காலத்தில் பெண்களுக்கு முகத்தில் பருக்கள் வருவது இயல்பு தான். மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்பாடு மாற்றங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பருக்கள் ஒரு வார காலம் அல்லது அதற்கு குறைவான காலத்திலேயே மறைந்து விடும். ஆனால் அனைத்து பெண்களுக்கும் இது ஏற்படுவதில்லை.

    மாதவிலக்குக்கு முன் ஏற்படும் அறிகுறிகள் (PMS – ப்ரீ மென்ஸ்சுரல் சிம்ப்டம்ஸ்) என்பது அநேகமாக அனைத்து பெண்களுக்கும் அனுபவிக்கும் ஒன்றாகும். மாதவிலக்கு என்பது ஹார்மோன் சம்பந்தமாக ஏற்படும் மாற்றங்கள். அதனால் மாதவிலக்கின் போது ஏற்படும் மாற்றங்களும் அதிகம்.

    மாதவிலக்குக்கு முன் ஏற்படும் சில அறிகுறிகளை பற்றி இப்போது பார்க்கலாம்:

    * மார்பகங்கள் மென்மையாகுதல் அல்லது மார்பகங்களில் வலி
    * எரிச்சல் அல்லது காரணமில்லாத கோபம்
    * ஒரு வித சோகம்
    * மன அழுத்தம் / பதற்றம்
    * உணவுகளின் மீது தீவிர நாட்டம்

    மேற்கூறிய மாறுதல்களை நீங்கள் அனுபவிக்க கூடும். சில பெண்களுக்கு மாதந்திர மாதவிடாயின் போது குமட்டல் மற்றும் வாந்தியும் கூட ஏற்படும். இத்தகைய மாற்றங்கள் பல நேரம் சந்தோஷங்களை அளிக்காது. இக்காலம் பெண்களுக்கு கடுமையானதாக இருக்கும்.

    நீங்கள் வீட்டையும் வேலையையும் சேர்ந்து கவனிக்க வேண்டுமென்றால், உங்கள் நிலைமை இன்னும் கஷ்டம் தான். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் போதுமான விழிப்புணர்வு இருந்தால், மாதவிடாயின் போது ஏற்பாடு மாற்றங்களை சுலபமாக சமாளிக்கலாம்.

    இக்காலத்தில், பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகள் மற்றும் கால்சியம், புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ள உணவுகளை உட்கொண்டால், பல பிரச்சனைகள் தீரும்.

    வைட்டமின் ஈ மாத்திரைகளை உட்கொண்டால், மாதவிலக்குக்கு முன் ஏற்படும் அறிகுறிகளின் தாக்கங்கள் குறையும். மாதவிடாயின் போது ஏற்படும் மாற்றங்களை சந்திக்க முன் கூட்டியே தயாராக இருங்கள்.
    பிரசவித்த பெண்கள் ஒரு மாதத்திற்கு வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்கிற நம்பிக்கை காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    பிரசவித்த பெண்கள் ஒரு மாதத்திற்கு வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்கிற நம்பிக்கை காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய பெண்களுக்கு அது சாத்தியமில்லை என்றாலும், இந்த ஒரு மாதத்திற்கு நாள் நம்பிக்கையில் ஏதேனும் உண்மைகள் உண்டா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    ‘‘கர்ப்பத்தின் 9 - 10 மாதங்கள் வரை பெண்ணின் உடல் ஏகப்பட்ட ஹார்மோன் மாறுதல்களைச் சந்திக்கிறது. அவளது தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு உறுப்பிலும் மாற்றத்தை உணர்ந்திருப்பாள். பிரசவமானதும் இயற்கையாக அவளது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாகக் குறைந்துவிடும். எளிதில் தொற்றுகளுக்கு உள்ளாகக்கூடும் என்பதால்தான் அவளை பாதுகாப்பான சூழலில் ஆரோக்கியமாக வைத்திருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

    இதுதவிர தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கும் ஆரோக்கிய பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதிலும் அவள் கவனமாக இருக்க வேண்டும். வீட்டை விட்டே வெளியே போகக்கூடாது என்பதும், சமையலறை பக்கம் போகக்கூடாது என்பதும் அவளது ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட தகவல்களே தவிர, அப்படி செல்வதால் தவறு ஒன்றும் இல்லை. களைப்பாக இருப்பாள் என்கிற ஒரே காரணம்தான் இவை எல்லாவற்றின் பின்னணியும்.

    இப்போதெல்லாம் சிசேரியன் செய்யப்படுகிற பெண்களையே மருத்துவமனையில் இரண்டாவது, மூன்றாவது நாளே எழுந்து நடக்கச் செய்கிறோம்.அப்போதுதான் அவளுக்கு தன் உடல் பற்றிய பயமும், பதற்றமும் மாறும். காயங்களும் சீக்கிரம் ஆறும்.வீட்டை விட்டு வெளியே செல்கிறபோது உணவு விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    பிரசவித்த பெண்களுக்கு செரிமானக் கோளாறுகள் வரலாம் என்பதால் வெளி உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதும் அவர்களை வெளியே அனுமதிக்காததற்கு ஒரு காரணம். மற்றபடி தாய் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்திலும், ஊட்டம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறதும், தன்னையும் குழந்தையையும் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கிற பட்சத்திலும் வெளியே சென்று வருவதில் பிரச்னை இல்லை.

    சுகப்பிரசவமோ, சிசேரியனோ... எதுவானாலும் பிரசவித்த பெண் உடலளவிலும் மனதளவிலும் மிகுதியான களைப்பை சந்தித்திருப்பாள். பிரசவம் பற்றிய பயமும் பதற்றமும் நீங்கி, அவள் சகஜமான உடல் மற்றும் மனநிலைக்குத் திரும்ப சில நாட்கள் ஆகும். பிரசவமான பெண்ணுக்கு முழு ஓய்வு மட்டுமே அதை சாத்தியப்படுத்தும்.

    அந்த ஓய்வு அம்மாவுக்கும் குழந்தைக்குமான பிணைப்பைக் கூட்டவும் காரணமாக அமையும். இத்துடன் பிரசவித்த முதல் சில நாட்களுக்கு குழந்தைக்கும் தாயின் அருகாமை மிக அவசியம். தாயின் வாசனையும் ஸ்பரிசமும் குழந்தைக்கு அதிகமாகத் தேவைப்படும். பசியால் அழும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க தாய் அருகில் இருக்க வேண்டும். இவற்றையும் கருத்தில் கொண்டுதான் 40 நாள் ஓய்வு வலியுறுத்தப்படுகிறது.

    தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் பிரசவித்த பெண்ணுக்கு வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்படும்போது, குழந்தையை மிக மிகப் பாதுகாப்பான சூழலில் நம்பிக்கையான நபர்களிடம் விட்டுச் செல்ல வேண்டியது முக்கியம். சுகாதாரமான சூழல் வலியுறுத்தப்பட வேண்டும். குழந்தை இருக்கும் சூழலில் புகைப்பிடிப்பவர்களோ, மது அருந்துபவர்களோ இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.’’
    வளர் இளம் பருவத்தில் நல்ல உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு கிடைப்பது மிகவும் முக்கியம். வளர் இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் பற்றி இங்கு காண்போம்.
    வளர் இளம் பருவம் என்பது 10 முதல் 19 வயதுக்குட்பட்ட பருவம் ஆகும். இந்த பருவத்தினர் குழந்தையும் அல்ல, வளர்ந்த பெண்களும் அல்ல. இரண்டிற்கும் இடைப்பட்ட பருவம். இப்பருவத்தில் நல்ல ஒழுக்கத்தையும், நல்ல சிந்தனையையும், நல்ல உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கல்வி கிடைப்பது மிகவும் முக்கியம். அதில் பள்ளிகளும், பெற்றோர்களும் சமுதாயமும் பெரும் பங்கு வகிக்கிறது. வளர் இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் பற்றி இங்கு காண்போம்.

    1. சீரியசான சிறு நீரகத் தொற்று:- பெண்ணாக பிறந்த எல்லோரும் வாழ்நாளில் ஏதோ ஒரு தருணத்தில் நிச்சயம் இந்த அவதியை அனுபவித்திருப்பார்கள். சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை எல்லோரையும் தாக்கக் கூடிய அந்த நோய் யூரினரி இன்பெக்ஷன் எனப்படுகிற சிறு நீராகப் பாதைத் தொற்று. ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டாலும், அடிக்கடி தொடர்ந்தாலும் இந்த பிரச்சனை எப்படியெல்லாம் பாதிப்பைக் கொடுக்கிறது என்பதை பார்ப்போம்.

    ஆண்களின் சிறுநீர் பைக்கும், அது வெளியேறுகிற துவாரத்துக்குமான இடைவெளி 15 செ.மீ, என்றால், பெண்களுக்கு அது வெறும் 3 செ.மீ.மட்டுமே. அதனால் மிகச் சுலபமாக கிருமிகள் பெண்களின் சிறுநீர் பையைத் தாக்குகின்றன. பெண்களுடைய உடல்வாகு மட்டுமின்றி ஒவ்வொரு வயதிலும் அவர்கள் சந்திக்கின்ற சில விஷயங்களும் இந்தத் தொற்றுக்கு மிக முக்கியமான காரணமாகிறது.

    பள்ளிக்கூடம் செல்லுகிற வயதுப் பெண் குழந்தைகள், பள்ளியில் உள்ள கழிவறையின் சுகாதாரம் சரியில்லாத காரணத்தினால் சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பார்கள். தண்ணீர் குடிக்கமாட்டார்கள். இதனால் அவர்களுக்கு இந்தத் தொற்று அடிக்கடி வரும். அதன் விளைவாக வயிற்றுவலி சோர்வு, பசியின்மை. படிப்பில் கவனம் சிதறல் போன்றவை வரலாம். அடுத்து மாதவிலக்கு நாட்களில் சுத்தமாக இல்லாத பெண்களுக்கும், தரமான நாப்கின்களை உபயோகிக்காத பெண்களுக்கும் இந்த தொற்று அடிக்கடி வரும்.

    அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கிறபோது எரிச்சல், முழுமையாக கழிக்காத உணர்வு, சில நேரங்களில் காய்ச்சல் போன்றவை யூரினரி இன்பெக்ஷனுக்கான அறிகுறிகள். எப்போதோ ஒரு முறை வந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து, மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு இது அடிக்கடி வரும். அவர்கள் சிறுநீ்ர் பரிசோதனை செய்யவேண்டும். சாதாரண சோதனை மட்டும் போதாது என்கிற நிலையில் யூரின் கல்ச்சர் சோதனையும் செய்து காரணத்தைத் துல்லியமாக கண்டுபிடித்து சிகிச்சை பெற வேண்டும்.

    காரணங்கள்:- போதுமான தண்ணீர் குடிக்காதினால், பள்ளி நேரங்களில் சிறுநீர் கழிக்கமால் அடக்கி வைப்பது, பிறப்புறுப்பை சுத்தமின்றி வைத்துக்கொள்ளுதல், காபி, சாக்லேட் போன்றவற்றை அதிகம் சாப்பிடுதல்.

    தடுப்பு முறைகள்:- வருமுன்காப்பது இந்த விஷயத்தில் மிகவும் முக்கியம். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது, அந்தரங்க உறுப்புக்களை சுத்தமாக வைத்துக்கொள்வது, மாதவிலக்கு நாட்களில் சுகாதாரத்தை கடைப்பிடிப்பது, தரமான, சுத்தமான, உள்ளாடைகளை உபயோகிப்பது போன்றவற்றின் மூலம் இதை தவிர்க்கலாம். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். கொக்கோ கோலா, காபி, சாக்லேட் அருந்தக்கூடாது.

    2. வெள்ளைப்படுதல்:- வளர் இளம் பெண்கள் வெள்ளப்படுவதை ஒரு பெரும் வியாதியாக நினைத்து பயப்படுகிறார்கள். இதைப்பற்றிய விழிப்புணர்வு வளர் இளம் பெண்களிடம் ஏற்படுத்தவேண்டியது அவசியம். வெள்ளைப்படுவது என்பது வாயில் உழிழ்நீர் சுரப்பது போன்ற பிறப்பு உறுப்பில் இருந்து வெளியேறும் தண்ணீர் போன்ற திரவம் ஆகும். நாம் எவ்வாறு உமிழ்நீர் சுரப்பை ஒரு வியாதியாக கருதவில்லையோ அதேபோல் பிறப்பு உறுப்பிலிருந்து வரும் திரவத்தையும் (வெள்ளைப்படுதல்) ஒரு நோயாக கருதக்கூடாது. எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும் என்றால்;

    a. பிறப்பு உறுப்பிலிருந்து வெளியேறும் திரவமானது துர்நாற்றம் அடித்தாலோ,

    b. பிறப்பு உறுப்பில் ஊரல் எடுத்தாலோ,

    c. பிறப்பு உறுப்பிலிருந்து வரும் திரவமானது நிறம்மாறி வந்தாலோ (பச்சை, மஞ்சள்)

    d. நாப்கின் வைக்கும் அளவுக்கு அதிகமாக சுரந்தாலோ.

    3. obesity& pcod மற்றும் முன்மாதவிடாய் சிக்கல்கள் - இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம்

    1. மாறுபட்ட நாகரீக வாழ்கை முறை

    2. துரித உணவுகள் உட்கொள்ளுதல்

    3. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு

    மாறுபட்ட நாகரீக வாழ்க்கை முறை:- தற்பொழுது உடல் உழைப்பு, விளையாட்டு ஏதுமின்றி வளர் இளம் பெண்கள் டிவி, கம்யூட்டர், செல்போன், செல்பி என்றுதான் இருக்கிறார்கள். பூப்பெய்திய பருவத்தில் கிடைக்கும் உளுந்தங்களி, வெந்தயக்களி, போன்ற உணவுகள் எல்லாம் தற்காலக இளம்பெண்கள் சாப்பிடுவதில்லை. இவையெல்லாம் சினை உறுப்பு வளர்ச்சி, கருப்பை மற்றும இடுப்பெலும்பு விரிவடைய உதவும்.

    இவ்வாறின்றி தற்போதைய நவநாகரீக வாழ்க்கை முறையால் உடல் அதிக எடை அடைதல், சினை உறுப்பு வளர்ச்சியின்றி அவற்றில் நீர் கோர்த்து கருமுட்டை வளராது, வெடிக்காது, pcod உண்டாதல். இதனால் ஒழுக்கமற்ற மாதவிடாய் மற்றும் குழந்தையின்மை உண்டாகிறது.
    இரத்தசோகை ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? இரத்த சோகையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பது விரிவாக பார்க்கலாம்.
    இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட அதாவது 51 சதவிகிதம் பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 வயதில் இருந்து 49 வயது வரை (மாதவிடாய் தொடங்கும் பருவகாலத்தில் இருந்து மெனோபாஸ் கால கட்டம் வரை) இந்தப்பிரச்னை பெண்களை அதிகமாக பாதிக்கிறது.

    சில பெண்களுக்கு முகம், நகம் எல்லாம் வெளுத்துப்போயிருக்கும். சிலர் எப்போது பார்த்தாலும் சோர்வாக இருப்பாங்க. காரணம் இரத்தசோகை. இந்த இரத்தசோகை ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? இரத்த சோகையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பது விரிவாக பார்க்கலாம்.

    இரத்த சோகைக்கான அறிகுறிகள்

    சோர்வு, தோல் வெளுத்துப்போதல், மூச்சு வாங்குதல், இதய படபடப்பு, மயக்கம், தலைவலி, நெஞ்சு வலி, குளிர்ந்த கைகள் மற்றும் பாதங்கள்.இரும்புச்சத்து குறைவாக உள்ள குழந்தைகள் சுண்ணாம்பு, சாக்பீஸ் போன்றவற்றை சாப்பிடுவார்கள். இரத்த சோகையின் ஆரம்ப அறிகுறிகளை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இந்த அறிகுறிகள் அதிகமாகும் போது இரத்த சோகைப் பிரச்னையும் அதிகமாகி விடுகிறது.

    இரும்புச்சத்து குறைபாடினால் ஏற்படும் இரத்தசோகை- தேவையான அளவு இரும்புச்சத்துள்ள உணவை உட்கொள்ளாமல் இரும்புச்சத்துக் குறைபாடினால் ஏற்படும் இரத்தசோகை தான் உலகத்தில் அதிகபட்ச இரத்த சோகைக்கான காரணமாக இருக்கிறது. தேவையான அளவு இரும்புச்சத்து இல்லையென்றால் இரத்த சிவப்பணுக்களுக்கான ஹீமோகுளோபினை எலும்பு மஜ்ஜையால் உருவாக்க முடியாது.ஊட்டச்சத்துக் குறைபாடினால் ஏற்படும் இரத்தசோகை- ஆரோக்கியமான ஹீமோகுளோபின்கள் உருவாக இரும்புச்சத்தை தவிர ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை தேவை. இந்த சத்துக்கள் உணவில் குறையும் போது ஹீமோகுளோபின் உற்பத்தியும் குறைகிறது. குடல் பிரச்னைகள்- இரத்த அணுக்கள் உருவாக தேவையான சத்துக்களை உறிஞ்சும் சக்தியினை தடை செய்யும் குடல் பிரச்னைகள்.

    மாதவிடாய் - இரத்த போக்கை ஏற்படுத் தும் மாதவிடாயானது பெண்களுக்கு ஆண்களை விட இரத்த சோகை அதிகம் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது. கர்ப்ப காலம்- கர்ப்ப காலங்களில் இரு உயிருக்கு தேவையான அளவு ஹீமோகுளோபின் கர்ப்பிணி பெண்களுக்கு வேண்டும். அதற்கேற்ற அளவு இரும்புச்சத்துள்ள உணவை உட்கொள்ளாத போது கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் தட்டுப்பாடு ஏற்படுவதால் இரத்தசோகை ஏற்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் போலிக் அமில மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாத போது இரத்தசோகைக்கான ரிஸ்க் அதிகரிக்கிறது. நாட்பட்ட நோய்களினால் ஏற்படும் இரத்தசோகை- கேன்சர், சிறுநீரகக்கோளாறு, கல்லீரல் கோளாறு போன்ற நாட்பட்ட நோய்களின் காரணமாக இரத்தசோகை ஏற்படுகிறது.

    நாட்பட்ட நோய்கள் மற்றும் வலி நிவாரண மருந்துகளால் ஹீமோகுளோபின் உருவாவது தடைபடுவதால் இரத்த சோகை ஏற்படுகிறது.எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள்- லுகோமியா மற்றும் மைலோஃபைப்ரோஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களின் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம் குறையும். தேவையான அளவு இரத்த சிவப்பணுக்கள் உருவாகாதது.இரத்த சிவப்பணுக்கள் விரைவில் அழிந்து போதல் - இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி வேகத்தை விட அதன் அழிவு விகிதம் அதிகமாக இருக்கும் போது இரத்த சோகை பிரச்னை ஏற்படும். இதனை ஹீமோலிடிக் அனீமியா என்பார்கள். மரபு வழியாக ஏற்படும் சில இரத்த நோய்களினால் இந்தப் பிரச்னை ஏற்படும்.
    கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பெண்மைத்தன்மை குறைவது மட்டுமே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. இன்னும் பல உடல் நலப்பிரச்னைகளும் அதில் இருக்கின்றன.
    ஆண்மையும் பெண்மையும் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் பல உண்டு. அதன் முதல் அறிகுறியே குழந்தையின்மை தான். கர்ப்பத்தடை சாதனங்கள் ஏதும் பயன்படுத்தாமல் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரையிலும் உடலுறவு கொண்டும் குழந்தை பிறக்கவில்லை என்றால் நிச்சயம் மருத்துவரை சந்திப்பது நல்லது. பெண்கள் இதுபோன்று தடையேதுமின்றி உறவு கொள்ளும்போதும் கர்ப்பமடையாமல் இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

    ஆனால் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பெண்மைத்தன்மை குறைவது மட்டுமே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. இன்னும் பல உடல் நலப்பிரச்னைகளும் அதில் இருக்கின்றன.

    பெண்மைத்தன்மை குறைவதற்கான அறிகுறிகள்

    பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் இருந்து தான் இந்த பிரச்னை தொடங்கும்.  எப்போதும் போல் மாதவிலக்கு இருக்காது. ரத்தப் போக்கு வழக்கத்தைவிட அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்.

    முறையற்ற மாதவிலக்கு சுழற்சி உண்டாகும்.

    சில சமயங்களில் பல மாதங்களுக்கு மாதவிலக்கு ஏற்படாது. திடீரென நின்றுவிடும்.

    முதுகுவலியும் தாங்கமுடியாத வயிற்று வலியும் உண்டாகும்.

    ஹார்மோன் மாற்றங்கள் நிகழும் என்பதால் கருமுட்டை வளர்ச்சி குறைவாகவோ அல்லது வயிற்றில் கருமுட்டை தங்காமலோ இருக்கும்.
    ஹார்மோன் சூழ்நிலை மாறுவதால் கருப்பை கட்டிகள் போன்ற பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. ஆயுர்வேதத்தில் இதற்கான தீர்வை அறிந்து கொள்ளலாம்.


    மகளிர் தம்மைக் கவனித்துக் கொள்ளாமல், நேரம் தவறி உணவு எடுத்துக் கொள்வதால், பாதிப்புகள் அதிகம் வருகின்றன. உணவைச் செரிக்கும் ஹார்மோன் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் அதன் வேலையைச் செய்யும். உணவைக் குறிப்பிட்ட பொருளாக (குளுக்கோஸ்) மாற்றி திசுக்களுக்கு அனுப்பும். நேரந்தவறும் போது உணவு உடைந்து மாறும் பொருள் வேறு வடிவமைப்பில் வேறு பொருளாக மாறுகிறது.

    அதனை திசுக்கள் ஏற்காது. அவை கழிவாக திரும்ப ரத்தத்தில் எடுத்துச்செல்லப்படும். இந்த நிகழ்வு தான் நடக்குமே தவிர திசுக்களுக்குத் தேவையான சக்தி கிடைக்காது. அதனால் உடல் சோர்வு அடையும், போஷாக்கு குறைபாடு நேரும். நோய் வரும். ஹார்மோன் சூழ்நிலை மாறுவதால் கருப்பை கட்டிகள் போன்ற பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.

    மூளையின் முக்கிய அங்கம் ஹைப்போதாலமஸ் என்பது, அங்கு உருவாகும் ஹார்மோன்கள் உடலின் எல்லா ஹார்மோன்களையும் கட்டுப்படுத்தும். ஹைப்மோதாலமஸ் ஹார்மோன் எதிர்மறை எண்ணங்களில் பாதிக்கப்பட்டால் பிட்யூட்ரி சுரப்பு பாதிக்கப்படும். அதனால் கருப்பை ஹார்மோன்கள் பாதிக்கப்படும். அதனால் சீக்கிரம் மெனோபாஸ் வரலாம். கருப்பைக்குள்ளேயே கருக்கள் தங்கிவிடும் நிலை ஏற்படும். கரு உருவாகும் கருமுட்டை விரையில் அதிகம் உற்பத்தியாகி உருவாதல் நின்றுபோய் சீக்கிரம் மெனோபாஸ் வரும்.

    மாதவிலக்கு வராத நிலையில்

    எள் 1 தேக்கரண்டி கொள்ளுப்பொடி 1 தேக்கரண்டியை 1 தேக்கரண்டி வெல்லம் கலந்து, 11/2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து 3/4 டம்ளர் ஆகக் குறைந்ததும் பருகலாம்.

    மாதவிலக்கின் போது உதிரப்போக்கு பல நாட்களுக்கு தொடர்ந்து வந்தால்

    4 டம்ளர் தண்ணீருடன் 1 டம்ளர் பால் கலந்து அத்துடன் தென்னம்பூ 1 பிடியை சேர்த்துக்கு கொதிக்கவைத்து 1 டம்ளராக குறைந்ததும் பருகலாம்.

    மாதவிலக்கின்போது கடுமையான வலி இருப்பின் அதை தவிர்க்க


    ப்தஸாரம் கஷாயம்
    தில குலாதாதி கஷாயம்
    ஹிங்குவசாதி சூரணம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

    மூன்று மாதங்களுக்கு மேல் மாதவிலக்கு வராதநிலையில்

    கல்யாணகம் கஷாயம்
    தில குலாதாதி கஷாயம்
    ஸ்ப்தஸாரம் கஷாயம்
    ராஜப்ரவர்த்தினி குளிகா ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

    மாதவிலக்கு பிரச்சனை உள்ள மகளிர் பிரச்சனைகளுடன் சேர்ந்து மெலிந்த உடல்வாகுடன் இருந்தால்


    அமிர்தப்ரஷாக்ருதம்
    தாத்ரயாதி க்ருதம்
    ஸதா வரயாதி க்ருதம் ஆகியனவும்
    பருமனான உடல்வாகுடன் இருந்தால்
    வாரணாதி கஷாயம்
    காஞ்சரண குளிகா

    கனஸ தாவடி கஷாயம் ஆகியனவும் பயன்படுத்தலாம்.

    அதிகமான உதிரப்போக்கு தொடர்ந்தால்
    முசலி கடிரடி கஷாயம்
    திராசாஷாதி கஷாயம்
    அசோகா அரிஷ்டம்
    அசோகா க்ருதம்
    புஷ்ய நுக சூரணம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

    கருமுட்டை கட்டிகள் தவிர ஏற்கனவே உடலில் வேறு நோய்கள் இருப்பின் மருந்து எடுக்கும் போது அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் செயல்படுத்தல் வேண்டும்.

    மருந்துகள் தவிர முறையாக உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி சரியான உணவு முறை, நேரந்தவறாமை, போன்றவற்றையும் சேர்த்துக் கைப்பிடித்தல் ஆரோக்கியம் மேம்படும்

    நோய் வந்தபின் இவற்றையேல்லாம் யோசிக்காமல் குழந்தை பருவத்திலிருந்தே இவற்றை அனுசரிக்கும் பழக்கத்தை கொண்டு வருவது பெற்றோரது கடமையாகும்.

    குழந்தைக்கு கல்வி செல்வம் ஆகியனவைப் பெற்றுத்தர அவையில் முந்தி இருக்க செய்யும் அளவு உடல் ஆரோக்கியம் பேணப்படுவது பற்றிய அறிவு விழிப்புணர்வு மிகவும் குறைவு. ஆகவே அதை ஒரு சமூக கடமையாக எடுத்துக்கொள்ளப்படுவது எதிர்கால இந்தியாவின் ஆரோக்கியத்துக்குத் தேவை!

    -டாக்டர். ஜெ. விஜயாபிரியா
    (போன் 0422-2367200, 2313188, 2313194)
    கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
    20% பெண்களுக்கு உண்டாகும் நீர்க்கட்டிகள் தானாக மறைவதில்லை. இவற்றைப் போக்க அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது., அல்லது புற்று நோய்க்கான அறிகுறிகளாக இவை மாறுகிறது. அல்லது உடல் நலத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது. சில நேரங்களில் இந்த நீர்க்கட்டிகள், கருப்பை பைப்ராய்டு, அல்லது மாதவிடாய்க்கு முந்தைய பாதிப்பு(வயிறு மந்தம் மற்றும் இடுப்பு வலி) ஆகியவற்றுடன் இணைந்து கொண்டு பாதிப்பைத் தருகிறது.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள 6 அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    இடுப்பு பகுதிக்கு கீழே, வலது அல்லது இடது புறத்தில் வலி இருப்பது கருப்பை நீர்க்கட்டி இருப்பதற்கான பொதுவான அறிகுறியாகும். இந்த பகுதியில் அல்லது வேறு இடத்தில் திடீரென்று பாரமாக இருப்பது போல் நீங்கள் உணரலாம். உடற்பயிற்சியின் போது அல்லது பாலியல் தொடர்பின் போது இந்த கனத்தை உங்களால் உணர முடியும்.

    கனமாக இருக்கும் அந்த பகுதியில் ஒருவித வலி தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும். மாதவிடாய் முடிந்த பின்னும் அந்த வலி நீடித்து இருக்கும். இந்த வலி மிகவும் அதிகமாகும்போது நீங்கள் கருப்பை முறுக்கத்தால் பாதிக்கப்படுவீர்கள். இந்த கட்டி வளர்ச்சியுற்று பெரிதாகும் போது தானாக முறுக்கி, இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இதனால் வலி இன்னும் தீவிரமடைகிறது.

    வயிறு வீக்கமடைவது என்பது ஒரு தெளிவற்ற அறிகுறி. அதன் அளவைச் சார்ந்து கருப்பை நீர்க்கட்டியுடன் இதனை தொடர்புபடுத்தலாம். பெரும்பாலான பெண்கள் 10செமீ க்கு குறைவான அளவு நீர்க்கட்டிகளைப் பெற்றிருக்கிறார்கள். அடிவயிற்று வலி மற்றும் வீக்கம் என்பது வயிறில் வேறு எதோ ஒன்று உருவாவதன் காரணமாக இருக்கலாம். வயிற்று பகுதியில் மட்டும் எடை அதிகரித்து காணப்பட்டால் அல்லது உங்கள் எடை அதிகரிப்பிற்கு காரணம் தெரியாமல் இருந்தால் அது எச்சரிக்கை மணி அடிப்பது போன்றதாகும்.



    கருப்பை பைப்ராய்டு கட்டியைப் போல் கருப்பை நீர்க்கட்டியும் வயிறு கனமான உணர்வைத் தரும். “ஒரு நீர்க்கட்டி வயிற்றின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து ஒரு அழுத்தத்தை தரும் உணர்வாகும். இது மலச்சிக்கல் போன்ற உணர்வைத் தரும். இரண்டு கருப்பையிலும் கட்டிகள் உள்ளவரை, இடுப்பின் ஒரு பக்கம் மட்டுமே இத்தகைய உணர்வு தோன்றும்.

    சிறுநீர் கழிப்பதில் அல்லது மற்ற செயல்பாடுகளில் வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல், ஆனால் வயிறு கனத்த உணர்வு மட்டும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடித்தால் கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது என்று டாக்டர்.சாப்மன் டேவிஸ் கூறுகிறார்.

    தொற்று (ஆனால் சிறுநீர் வெளியேறாது). கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை வெளிப்படுத்தும் மற்றொரு அறிகுறி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுவதாகும். உங்கள் சிறுநீர்ப்பையை ஒட்டி கட்டி தோன்றியிருந்தால், உங்களுக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும் என்று அவர் கூறுகிறார். சில பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தாலும், ஒவ்வொரு முறை சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் இருக்கும். நீர்க்கட்டி சிறுநீர் பாதையை தடுப்பதால் இந்த பாதிப்பு உண்டாகும். சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் தோன்றும்போது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

    கருப்பையில் நீர்க்கட்டிகள் பெரிதாக வளரும்போது, கருப்பைக்கு பின், சரியாக கருப்பை வாய் அருகே வளர்ந்து இருந்தால் உறவின் போது வலி தோன்றலாம். ஆகவே உடனடியாக பெண் மருத்துவரை அணுகி, உங்கள் பிரச்னைக்கு தீர்வு பெறலாம்.

    உங்கள் இடுப்பு பகுதியில் அதிக இடமில்லாத காரணத்தால், கட்டி வளர்ந்து பெரிதாகும்போது, இடுப்பில் கட்டி இருக்கும் இடத்தைப் பொறுத்து முதுகு அல்லது கால் வலி உண்டாகலாம். அதாவது, இந்த கட்டிகள், இடுப்பின் பின்புறம் ஓடும் நரம்பை சுருக்கி விடுவதாக அவர் கூறுகிறார். உங்கள் இடுப்பு வலிக்கான காரணத்தை மருத்துவரால் அறிய முடியாவிட்டால், அது நீர்கட்டியின் ஆதாரமாக இருப்பதற்கான வாய்ப்புகளாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். 
    பப்பாளி நன்றாக பழுத்த பின்னர் தினமும் 20 கிராம் அளவில் கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளலாம். இதனால் கருவுக்கோ, தாய்க்கோ எந்தப் பிரச்சனையும் வருவதில்லை.
    பப்பாளி நம் ஊரில் எளிதில் கிடைக்கும் சத்துமிக்கப் பழம். இதில் உள்ள ஏ.பி. வைட்டமின்கள், மினரல்கள், பொட்டாசியம், பீட்டா கரோட்டின், போலிக் ஆசிட் போன்ற ரிச்சான சத்துகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் உதவுகிறது. இயல்பிலேயே இந்தப் பழம் நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாகிறது.

    கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஜீரண பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கலுக்கும் பப்பாளி பழம் சாப்பிடுவது கைகொடுக்கும். பப்பாளிக் காயில் உள்ள பெப்சின் லாக்டெக்ஸ் போன்ற பொருட்கள் கருவுற்ற பெண்கள் சாப்பிடுவது பாதுகாப்பற்றது என்பதை வெளிநாட்டில் செய்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

    கிராமப்புறங்களில் வறுமையான நிலையில் கருவுறும் பல பெண்கள் போதிய சத்துணவு எடுத்துக் கொள்ள வாய்ப்பின்றி உள்ளனர். இவர்களுக்கு பப்பாளிப் பழம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லாம். நம் ஊரில் இந்தப் பழத்தை சாப்பிடாமல் தவிர்ப்பது அறிவுப்பூர்வமானது அல்ல.

    நன்றாக பழுத்த பின்னர் தினமும் 20 கிராம் அளவில் கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளலாம். இதனால் கருவுக்கோ, தாய்க்கோ எந்தப் பிரச்னையும் வருவதில்லை. ஒரு சிலருக்கு ஏதாவது ஒரு காய் அல்லது பழம் சாப்பிடுவதில் ஒவ்வாமை இருக்கலாம். ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள் பப்பாளியைக் காயாக எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள பால் ஒவ்வாமையாக மாற வாய்ப்புள்ளது.

    ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்களும் காயாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். காயாக சாப்பிடத்தான் யோசிக்க வேண்டும். பழமாக சாப்பிட யோசிக்க வேண்டியதே இல்லை. எளிதாக கிடைக்கும் சத்து மிக்க பப்பாளிப்பழத்தை தவறான நம்பிக்கைகளுக்காக தவிர்க்க வேண்டாம். 
    கர்ப்பகாலத்தில் உங்கள் உடலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படும். இங்கு பிரசவத்திற்கு பின்னான மாதவிடாய் சுழற்சி எப்போது துவங்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
    கர்ப்பகாலத்தில் உங்கள் உடலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படும். பிரசவத்தின் பின் சரியாகி விடும் என்று நினைத்தால், பிரசவத்தின் பின்னும் கூட சில மாற்றங்கள் ஏற்படும். கர்ப்பகாலம் என்பது மாதவிடாய்க்கு விடுமுறை காலம் போன்றது. கர்ப்பகாலம் முழுவதும் மாதவிடாய் ஏற்படாது. ஆனால் பிரசவத்தின் பின் ஏற்பட தொடங்கி விடும். இங்கு பிரசவத்திற்கு பின்னான மாதவிடாய் சுழற்சி எப்போது துவங்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

    மாதவிடாய் என்பது கர்ப்பப்பையில் குழந்தை இல்லை என்பதற்கான அறிகுறியாகும். அதனால் கர்ப்பப்பையில் உள்ள திசுக்கள் உதிர்ந்து ரத்தமாக வெளியேறுகிறது. ஆனால் நீங்கள் கர்ப்பமான பின் மாதவிடாய் நின்று விடும். சில நேரங்களில் லேசான ரத்த போக்கு இருக்கும். ஆனால் இந்த நிலை தொடந்தாலோ அல்லது அதிக ரத்த போக்கு இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

    தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பின் ஐந்து முதல் ஆறு வாரங்களில் மாதவிடாய் ஏற்படும். முழுக்க முழுக்க தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு மாதவிடாய் ஏற்படும். எனினும் இது ஒவ்வொரு பெண்ணிற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபடும் என்பதால், இது தான் சரி என்று இதில் வரையறுக்க முடியாது.

    பிரசவத்திற்கு பின் உங்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது அது பழைய மாதிரி இருக்காது. இரத்த போக்கு லேசாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும். மாதவிடாய் சுழற்சி பழைய நிலைக்கு திரும்ப சிறிது காலம் எடுக்கும். ஆனால் நீண்ட நாட்களுக்கு லேசான அல்லது அதிகமான ரத்த போக்கு நீடித்தால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

    உங்கள் கருப்பையில் இருந்து முட்டை வெளியான பிறகு உடனே மாதவிடாய் சுழற்சி ஏற்படாது. அதுவும் குறிப்பாக பிரசவத்திற்கு பிறகு. இதனால் உடல் உறவு கொள்ளும் போது கவனமாக இருங்கள்.

    உங்களையும் உங்கள் சுற்றத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் மாதவிடாய் நேரத்தில் சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துங்கள். மேலும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
    ×