என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    மாதவிடாய் காலத்தில் ஈரத்தன்மையினால் தொடைப்பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் உள்ள தோல் உரிந்து அரிப்பு, சொறி ஆகியவை ஏற்படலாம்.
    மாதவிடாய் காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதமும் வரக்கூடியது தான். இந்த பருவத்தில் தோன்றும் சொறி மற்றும் காயங்களை நாம் குணப்படுத்த முயற்சி எடுக்காவிட்டால் அந்த மாதம் முழுவதும் இவை நமக்கு அரிப்பை ஏற்படுத்தும். இத்தகைய சொறியை குணப்படுத்தவும், அவை மீண்டும் வராமல் தடுக்கவும் நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இந்த பகுதியில் பார்பபோம். 

    சுத்தமாக நமது பிறப்புறுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை நாம் பராமரித்தால் எந்த ஒரு சொறியும் அரிப்பும் அண்ட முடியாது. இதுவே முதல் குறிப்பாகும். அவ்வப்போது அந்த இடங்களை கழுவி சுத்தமாக வைக்க வேண்டியது அவசியமாகும். நிறைய தண்ணீரைப் பயன்படுத்துங்கள். இவை நுண் கிருமிகளிலிருந்து உங்களை பாதுகாக்கும். அந்த இடத்தை கழுவி மற்றும் சுத்தமாக துடைத்த பின், சானிட்டரி பேடை பயன்படுத்தினால் நீன்ட நேரம் உலர்வாக இருப்பதையும் சுகமாக இருப்பதையும் நீங்கள் உணர்வீர்கள். 



    சானிட்டரி பேட் அல்லது துணி என எதுவாக இருந்தாலும் அவ்வப்போது அதை மாற்றுவது சிறந்தது. ஒரே சானிட்டரி பேட் அல்லது துணியை 8-9 மணி நேரத்திற்குப் பயன்படுத்துவது சுகாதாரமற்றதாகும். இப்படி நாம் பயன்படுத்தும் போது தான் சொறி மற்றும் புண் ஆகியவை ஏற்படுகின்றன. ஆகையால் அவ்வப்போது அவற்றை மாற்ற மறந்து விடாதீர்கள். அதை மாற்றும் போதும், நன்கு கழுவி துடைத்த பின்னும் புதிய சானிட்டரி பேடை பயன்படுத்தினால் சிறந்த பலனைப் பெற முடியும். இந்த சானிட்டரி பேட் அல்லது நாப்கின்களை குறித்த காலத்தில் தவறாமல் மாற்றி அரிப்புகள் ஏற்படாத பீரியட்களை எதிர்கொள்ளுங்கள். 

    மாதவிடாய் காலத்தில் சில சிரமங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் பயன்படுத்தும் துணி மற்றம் சானிட்டரி பேட் ஆகியவை தோலில் உராய்ந்து வெடிப்புக்களை ஏற்படுத்துகின்றன. அதனால் தொடை மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் காயங்கள் உண்டாகின்றன. ஆகையால் சானிட்டரி பேட் தேர்ந்தெடுக்கும் போது மென்மையான மற்றும் சிறந்த தரம் கொண்ட பொருட்களை பயன்படுத்துவது நல்லதாகும். சானிட்டரி பேட் ஜெல் மற்றும் பருத்தியால் செய்யப்பட்டு வினியோகமாகி வருகின்றன. பருத்தியால் செய்யப்பட்டதை பயன்படுத்தும் போது அதை நீண்ட நேரத்திற்கு பயன்படுத்த முடியாது. ஆனால் அவை சிறந்ததாகும். நல்ல தரமான பேட்கள் உங்களுக்கு அரிப்புகள் இல்லாத பீரியட்களை கொடுக்கும். 
    உதிரப்போக்கின் நிறம், உதிரத்தின் அளவு பொதுவான வரைமுறையில் இருந்து இவை மாறுபடும்போது, அவை ஆரோக்கியக் குறைபாட்டின் அறிகுறியாகப் பார்க்கப்பட வேண்டும்.
    பெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாள்கள் அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய், சிலருக்கு ஏழு நாள்கள் வரை திட்டுத்திட்டான ரத்தப்போக்கு இவையெல்லாம் முறையான மாதவிடாயின் அறிகுறிகள். ஆனால் உதிரப்போக்கின் நிறம், உதிரத்தின் அளவு மற்றும் இரண்டு மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாள்கள் எனப் பொதுவான வரைமுறையில் இருந்து இவை மாறுபடும்போது, அவை ஆரோக்கியக் குறைபாட்டின் அறிகுறியாகப் பார்க்கப்பட வேண்டும்.

    மாதவிடாயின் உதிரம் அடர்த்தி அதிகமாகவும் அதிகளவிலும் வெளியேறினால், கருப்பையின் எண்டோமெட்ரியாசிஸ் திசுக்கள் கரைந்து வெளியேறுகின்றன எனக் கொள்ளலாம். இதற்கு மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

    சீரற்ற மாதவிடாய்ச் சுழற்சி, மாதவிடாய் ஒரே நாளில் முடிந்துவிடுவது, தொடர்ச்சியான மாதவிடாய் நாள்கள் இவையெல்லாம் பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னையின் அறிகுறிகள். இளம் பெண்கள் முதல் மெனோபாஸை நெருங்கும் பெண்கள் வரை பாதிக்கக்கூடிய இப்பிரச்னைக்கு காலம் தாழ்த்தாத மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம்.



    சிலருக்கு அதிக வலியோடு மாதவிடாய் நிகழும். இதற்குக் கர்ப்பப்பையில் இருக்கும் ஃபைப்ராய்டு கட்டிகளும் காரணமாகலாம். இதனால் மாதவிடாய் ஒழுங்கற்று 20 நாள்களுக்கு ஒருமுறை ஏற்படலாம். இந்தக் கட்டிகள் பெரிதாகும்போது உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கட்டிகளை அகற்றச் சிகிச்சை பெற வேண்டும்.

    மாதவிடாய் ரத்தம் சிலருக்குத் துர்நாற்றத்துடன் வெளியேறலாம். அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கான காரணத்தை மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மூலம் அறிந்துகொள்ள வேண்டும். எண்டோமெட்ரியல் கேன்சர் இருப்பவர்களுக்கு இவ்வாறு ஏற்படலாம். இவர்களுக்கு மாதவிடாய் முறையற்று 15 முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை என ஏற்படும். இதனால் ரத்தச்சோகை ஏற்படலாம்.

    மெனோபாஸுக்குப் பின்னர், அதாவது மாதவிடாய் நின்ற பின்னரும் உதிரம் வெளியேறுவதாக உணர்ந்தால் அது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான (Cervical Cancer) அறிகுறியாக இருக்கலாம். அதை அசட்டை செய்யாமல் ஆரம்பத்திலேயே பரிசோதனையில் உறுதிப்படுத்திச் சிகிச்சையின் மூலம் குணம் பெறலாம்.
    30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் செய்ய வேண்டும். குறிப்பாக மாதவிலக்கு நிற்கும் நாட்களில் செய்வது சிறப்பானது. மார்பக புற்றுநோயில் வலி பெரும்பாலும் தோன்றுவதில்லை.

    இதனால் வலியில்லை என்று அலட்சியம் செய்யக்கூடாது. பெரும்பாலும் வலியில்லாமல் காணப்படும் கட்டிகள் தான் இதன் அறிகுறியாக உள்ளது. 

    கண்ணாடி முன் நின்று மார்பகங்களின் அளவு, நிறம், வடிவத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்று கவனிக்கவும்.

    மார்பகங்களை வலது மற்றும் இடது என இரு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, மார்பகத்தை தடவிப் பார்த்து ஏதேனும் கட்டி, வலி தெரிகிறதா என பரிசோதிக்க வேண்டும். இதனுடன் அக்குள் பகுதியையும் சேர்த்து பரிசோதிக்கலாம்.



    உட்கார்ந்த நிலையிலும் மல்லாந்து படுத்த நிலையிலும் ஆள்காட்டி விரல் மற்றும் மோதிர விரல்களால் மார்பகங்களை அழுத்தி கட்டிகள் இருக்கிறதா என பார்க்கலாம்.

    மார்பக காம்பை அழுத்தி பார்க்கும்போது, ஏதாவது திரவம் அல்லது ரத்தம் வருகிறதா என கவனிக்க வேண்டும்.

    குறிப்பு: மார்பகப்புற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பலர், ‘நான் சுயபரிசோதனை செய்தேன், ஆனாலும் எனக்கு எதுவும் தெரியாமல் போய்விட்டதே’ என்று வருந்துவார்கள். எனவே, 30 வயதைக் கடந்த பெண்கள், வருடத்துக்கு ஒருமுறை கட்டாயமாக மேமோகிராம் செய்து கொள்ள வேண்டும்.
    பெண்களுக்கு ஏன் மார்பக புற்றுநோய் வருகிறது, மார்பக புற்றுநோய் கட்டியா எனக் கண்டறிவது எப்படி? என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பெண்களை மிரட்டும் நோய்களில் உலகளவில் முதன்மையானது மார்பகப் புற்றுநோய். மார்பகப் புற்றுநோய் ஏன் ஏற்படுகின்றது என்பதற்கு தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. செல்களின் ஏற்படக்கூடிய இயல்புக்கு மீறிய, அபரிமிதமான வளர்ச்சியையே புற்றுநோய் என்கிறோம். 

    பெண்கள் மார்பகத்தில் கட்டி அல்லது மாற்றங்கள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

    மார்பகத்தில் கட்டி உள்ளதா என்பதை மாதத்துக்கு ஒரு முறையாவது சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.



    அறிகுறிகள் :

    மார்பகத்தில் தொடர்ந்து வலி, அசௌகரிய உணர்வு ஏற்படுதல்.

    மார்பகத்தின் அளவு, வடிவத்தில் திடீர் மாற்றம் ஏற்படுதல்.

    மார்புக்காம்பு அல்லது வெளிச்சதை பகுதி சிவந்து போகுதல். உட்பக்கமாக இழுத்துக் கொள்ளுதல் அல்லது வீக்கமடைதல்.

    சிலருக்கு மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டாலும் வலி மட்டும் இருக்காது. வலி இல்லையென்று அலட்சியமாக இருக்காமல், அறிகுறிகளில் ஒன்றிரண்டு தென்பட்டாலும் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். மருத்துவர் மேமோகிராம், பயாப்ஸி உள்ளிட்ட சில பரிசோதனைகளை செய்து அது புற்றுநோய்தானா என்பதை உறுதி செய்வார்.

    இன்றைய காலகட்டத்தில் மார்பக புற்றுநோய் அதிகளவில் பெண்களை பாதிக்கிறது. இந்த நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளை இன்று பார்க்கலாம்.
    30 வயதுக்கு பிறகு ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

    தாய்மார்கள் குழந்தைகளுக்கு குறைந்தது ஓராண்டு வரை கட்டாயம் பாலூட்ட வேண்டும்.

    உயரத்துக்கு ஏற்ற எடை என்பதற்கு கவனம் கொடுக்க வேண்டும்.

    மாதவிலக்குக்கு இடைப்பட்ட நாட்கள், கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் ஆகிய காலங்களில் ஏற்படும் இயல்பான மாற்றங்களைத் தெரிந்துவைத்துக் கொண்டால்தான், இயல்புக்கு மாறான மாற்றங்கள் தோன்றினால் அதை உடனே உணர முடியும்.

    தக்காளி, கேரட், கருப்பு திராட்சை, மாதுளை, குடமிளகாய், முட்டைக்கோஸ் பப்பாளி, புரொகோலி, பூண்டு ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த புற்றுநோய்க்கு எதிரான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தினமும் உணவில் குறைந்தது மூன்று வகையான, ரசாயனக் கலப்பில்லாத காய்கறி, பழங்கள் அவசியம் இடம் பெற வேண்டும்.

    பெண் குழந்தைகளுக்கு பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் உணவுகள், துரித உணவுகளைத் தவிர்த்தாலே, அவர்கள் அதிவிரைவாகப் பூப்பெய்துவதை தவிர்க்க முடியும்.

    மிளகாய்த் தூள், மசாலா வகைகளில் சிவப்பு நிறத்தை கூட்டசூடான் ரெட் டை கலக்கப்படுகிறது. இது  புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது. எனவே, வீட்டிலேயே மசாலாப் பொருட்களைத் தயாரித்து பயன்படுத்துவது நல்லது.

    ஒருமுறை சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது.

    தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனுடன் யோகா, தியானம் செய்வது உடலை ஃபிட்டாகவும், ஹார்மோன்களை சீராக சுரக்கவும் வைக்கும்.
    பெண்களுக்கு ஏன் மார்பக புற்றுநோய் வருகிறது, யாருக்கெல்லாம் வர அதிக வாய்ப்புள்ளது? என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    பெண்களை மிரட்டும் நோய்களில் உலகளவில் முதன்மையானது மார்பகப் புற்றுநோய். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80,000 பெண்களுக்கு மேல் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 50 சதவிகிதம் பேர் மரணத்தைத் தழுவுகின்றனர் என்கின்றன புள்ளிவிவரங்கள். ‘இது நமக்கெல்லாம் வராது’ என்று நினைக்கும் பெண்களின் அறியாமையே, இறப்பு விகிதம் அதிகரிக்க முக்கியக் காரணம்.

    மார்பகப் புற்றுநோய் ஏன் ஏற்படுகின்றது என்பதற்கு தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. செல்களின் ஏற்படக்கூடிய இயல்புக்கு மீறிய, அபரிமிதமான வளர்ச்சியையே புற்றுநோய் என்கிறோம். ஆரம்பத்தில் மார்பக செல்லில் தோன்றிய மாற்றம், நிணநீர் முடிச்சு வழியாக உடலில் எங்குவேண்டுமானாலும் பரவலாம்.  பொதுவாக மார்பகப் புற்றுநோய் ஆரம்பத்தில் பால் சுரப்பிகளில் ஏற்படுகிறது. மற்ற செல்களிலும் ஏற்படலாம்.



    பொதுவாக எல்லா வகை புற்றுநோய்களிலுமே, வயது அதிகமாக அதிகமாகத்தான் அதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். அந்த வகையில் மார்பக புற்றுநோய், 40 வயதைக் கடந்த பெண்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம்.

    பாலூட்டாத பெண்கள் மார்பகப் புற்றுக்கு இலக்காகலாம். காரணம், பாலூட்டுவதால் புற்றுநோய்க்குக் காரணமாகும் சில ஹார்மோன்களின் அளவு உடலில் கட்டுக்குள் வைக்கப்படும். பாலூட்டும் காலம் முடியும்போது, டி.என்.ஏ சிதைவுக்கு உட்பட்ட மார்பகச் செல்கள் தாய் உடலில் இருந்து விடுபட்டிருக்கும். அவை எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

    அதிவிரைவில் பூப்படைவது, புகை மற்றும் மது பழக்கம், உடல் பருமன், மரபியல் போன்றவை மார்பகப் புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கலாம். பொதுவாக 10 முதல் 15 சதவிகித மார்பகப் புற்றுநோய் மரபியல் காரணமாக வருகிறது.
    மாதவிலக்கைத் தள்ளிப்போடும் மாத்திரையைப் பொறுத்தவரை பாதுகாப்பான முறை என்று எதுவுமே கிடையாது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    மாதவிடாயைத் தள்ளிப்போடப் பயன்படுத்தும் மாத்திரைகளில் உள்ள உட்பொருட்கள், ‘புரோஜெஸ்ட்ரான்’ (Progesterone) எனும் ஹார்மோனை தற்காலிகமாக நிறுத்தி மாதவிலக்கை தாமதப்படுத்த செயல்படுகிறது. அதாவது இயற்கையான ஒரு நிகழ்வை தடுத்து நிறுத்தும் வேலையை செய்வதுதான் இந்த மாத்திரைகளின் வேலை. இந்த மாத்திரையைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், புரோஜெஸ்ட்ரான் சுரப்பில் பாதிப்பும் ஏற்படலாம்.

    தலைவலி, உடலில் நீர் கோத்தல் போன்ற பிரச்னை, மார்பகங்களில் வலி,  ஹார்மோன் கோளாறுகள், வலியுடன் கூடிய மாதவிலக்கு, பக்கவாதம், ரத்த உறைவுப் பிரச்னை ஆகியவற்றுடன் சிலருக்கு மாதவிடாய் சுழற்சி சீரற்ற முறையில் நடக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது.

    உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்பு உள்ளவர்கள், 40 வயதைக் கடந்த பெண்கள் ஆகியோர் மாத்திரையை தவிர்ப்பது நல்லது.



    பொதுவாக, மாதவிலக்கு வந்த நாளில் இருந்து 14ம் நாளில், சினைப்பையில் இருந்து முட்டை வெளிப்படுதல் (Ovulation) நிகழும். இந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால், முட்டை வெளிப்படுதல் தாமதமாகலாம். இதனால், திருமணம் ஆனவர்கள், குழந்தைப்பேறை தற்காலிமாகத் தள்ளிப்போட அல்லது தவிர்க்க கர்ப்பத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ளும்போது, ஓவலேஷன் ஆகும் தினத்தை கணிக்க முடியாமையால் கர்ப்பம் தரிக்கவும் வாய்ப்புகள் உண்டு. அந்தக் கருவின் (Fetus) வளர்ச்சியும் ஆரோக்கியமானதாக, இயல்பானதாக இல்லாமல் இருக்கும். எனவே, பீீரியட்ஸை தாமதமாக்கும் மாத்திரைகளை தவிர்ப்பதுதான் நல்லது.

    மாதவிலக்கைத் தள்ளிப்போடும் மாத்திரையைப் பொறுத்தவரை பாதுகாப்பான முறை என்று எதுவுமே கிடையாது. மருந்து கடைகளில் வாங்கி சுயமாக சாப்பிட்டால், பக்க விளைவுகள் வரும்.

    தவிர்க்கவே முடியாது என்றால், மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின்படி, எப்போதாவது ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அடிக்கடி இது தொடரும்போது, அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தவிர்க்க முடியாது. 
    40 வயதைக் கடந்த பெண்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார்கள், சோர்ந்து காணப்படுகிறார்கள் என்றால், அது மெனோபாஸுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
    40 வயதைக் கடந்த பெண்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார்கள் அல்லது அடிக்கடி சோர்ந்து காணப்படுகிறார்கள் என்றால், அது மெனோபாஸுக்கான அறிகுறியாகக்கூட இருக்கலாம் என்கிற புரிதல் அவசியம். பெண்களுக்கு மெனோபாஸ் ஏன் ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொண்டோம் என்றால், மெனோபாஸுக்குப் பிறகான சிக்கல்களைத் தவிர்க்க முடியும். 

    ஒவ்வொரு பெண்ணுக்கும் பிறக்கும்போதே அவர்கள் சினைப்பையில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் கருமுட்டைகள் இருக்கும். இந்தச் சினைப்பையில்தான் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்டிரான் உற்பத்தியாகின்றன. இதன் விளைவால், ஒரு பெண் பூப்பெய்துதலில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு கருமுட்டை முதிர்வடைந்து வெளியிடப்படுவதும் மாதவிடாய் சுழற்சியும் நடக்கும். பெண்களுக்கு  குறிப்பிட்ட வயதுக்கு மேல் சினைப்பை கருமுட்டை வெளியிடுவதை நிறுத்தும்போது, மாதவிடாய் நின்றுவிடும். தொடர்ந்து ஓராண்டுக்கு மாதவிலக்கு இல்லை என்ற நிலையை மெனோபாஸ் என்கிறோம். 

    பெண்களின் உடல்நிலை, மரபு ஆகியவற்றைப் பொறுத்து, மெனோபாஸ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயதில் நிகழலாம். பொதுவாக, 49 முதல் 52 வயது வரையிலான பெண்களுக்கு, ஒரு வருடத்துக்கும் மேலாக மாதவிடாய் சுழற்சி நிகழாமல் இருந்தால், அதை மெனோபாஸ் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். சிலருக்குச் சீரற்ற சுழற்சி காரணமாகவும் மாதவிடாய் தள்ளிப்போகலாம் என்பதால், ஆறு மாதங்கள் வரை மாதவிடாய் நிகழாமல் இருந்தால், அதை மெனோபாஸாகப் பொருட்படுத்தத் தேவையில்லை.



    சீரற்ற மாதவிடாய், அதிகப்படியான உதிரப்போக்கு அல்லது குறைவான உதிரப்போக்கு, 15 நாள்களுக்குள் மாதவிடாய் சுழற்சி, பிறப்புறுப்பில் வறட்சி, உடலுறவில் நாட்டமின்மை, எரிச்சல், கோபம், சரும வறட்சி, அதிகப்படியாக வியர்த்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல்… இவை யாவும் இதன் அறிகுறிகள். 
    மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு இயல்பாகவே ‘மூட் ஸ்விங்’ ஏற்படலாம். இதனால் சோர்ந்துபோவது, பயம், பதற்றம், தூக்கமின்மை, ஞாபகமறதி இவையெல்லாம் அளவுக்கு அதிகமாக நிகழலாம். 

    கால்சியம் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் எலும்புத் தேய்மானமும், மூட்டுவலியும் உண்டாகலாம். ஆதலால் இந்தக் காலகட்டத்தில் எலும்புகளுக்குப் பலம் சேர்க்கும்விதமாகக் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்துக்கொள்ளலாம். 

    சிலருக்கு 30 வயதைத் தாண்டியதுமே மெனோபாஸ் அறிகுறிகள் தென்பட வாய்ப்புண்டு. அதனால் அப்போதிருந்தே ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதுடன் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வைத் தரக்கூடிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம்.
    மெனோபாஸ் சமயத்தில் நிகழும் மனநலப் பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து இன்று விரிவாக பார்க்கலாம்.
    “மெனோபாஸுக்கு முன்பு பல வருடங்களாகவே பெண் உடல் அதற்குத் தயாராகும். 52 வயதில் நிகழவிருக்கும் மெனோபாஸுக்கான உடல் ஏற்பாடு, 45 வயதில் இருந்தே தொடங்கிவிடலாம். அந்தக் காலகட்டத்தில் (Perimenopause) அவர்கள் மனநலம் சார்ந்த பிரச்சனைகளை அதிகம் எதிர்கொள்ள நேரிடும். 

    திருப்தியான வாழ்க்கை அமையாதவர்கள், கணவன் மற்றும் குழந்தைகளிடம் உள்ள பந்தத்தில் குழப்பம் உள்ளவர்கள், உடல்ரீதியாக, மனரீதியாக, வயதின் காரணமாக, பணம் மற்றும் நோய் காரணமாக தங்கள் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள், குழந்தைகளிடமிருந்து விலகியிருப்பவர்கள் போன்றோருக்கு மனநலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். 

    மெனோபாஸ் சமயத்தில் பல பெண்களுக்கு, திடீரென உடல் கதகதப்பாவது அல்லது சூடாவது (Hot Flushes), இனம்புரியாத மன அழுத்தம், விரைவில் எரிச்சலடைவது, சலிப்பு, தன்னைப் பற்றிய தாழ்வான எண்ணங்கள், நம்பிக்கைக் குறைவு, அழுகை போன்ற உணர்வுகள் ஏற்படலாம். இதை மெனோபாஸ் சிண்ட்ரோம் (menopause syndrome) என்போம்.



    தீர்வுகள் :

    முதலில், இது எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 
     
    ஒரே வயதுள்ள பெண்களோடு கலந்துபேசி, அனைவரும் எதிர்கொள்ள நேரிடும் அறிகுறிகள், பிரச்சனைகளைப் பகிர்ந்துகொண்டால் தேவையற்ற பதற்றத்தைக் குறைக்கலாம். 

    உடற்பயிற்சி, ஊட்டச்சத்துள்ள உணவுகள் என வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். 
     
    பெண்களுக்கு எலும்புத் தேய்மானம், புற்றுநோய், பெண் உறுப்பில் ஈரப்பதம் குறைதல் ஆகியவை ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படலாம் என்பதால், ஹார்மோன் சிகிச்சை (Hormone Replacement Treatment) ஒரு சிலருக்குத் தேவைப்படலாம். 

    பதற்றம், மன அழுத்தத்துக்கு மனநல ஆலோசகர், மனநல மருத்துவரிடம் கவுன்சலிங் மற்றும் சிகிச்சை பெறலாம். 

    தன்னைப் பற்றிய, தன் உடலமைப்பு குறித்த எண்ணங்களை ஆக்கபூர்வமாக, நேர்மறையாக மாற்றுவது முக்கியம்.
     
    உடல்நிலை, மனநிலை குறித்த அச்சம் தவிர்த்து, தனக்குப் பிடித்த செயல்களில் மனதைச் செலுத்துவது நல்லது. 
    கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் அனைத்தும் உங்கள் பாலுணர்ச்சியை அழித்து, பாலியல் வாழ்க்கைக்கு உலை வைக்கக்கூடியவை.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் அனைத்தும் உங்கள் பாலுணர்ச்சியை அழித்து, பாலியல் வாழ்க்கைக்கு உலை வைக்கக்கூடியவை. உங்கள் பாலியல் வாழ்க்கை சிறக்க வேண்டுமானால், இனிமேல் அந்த உணவுகளில் இருந்து விலகி இருங்கள்.

    * உடலுறவில் ஈடுபடும் முன் மது அருந்தினால், துணையை குதூகலப்படுத்தலாம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்காக சிலர் உறவில் ஈடுபடும் முன் ஒரு பெக் மதுவை அருந்துவார்கள். மதுவை அளவாக அருந்தினால் பரவாயில்லை. ஆனால் அது அதிகமாகும் போது, மன அழுத்தம் அதிகரித்து, மனநிலை பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி, உறவில் ஈடுபட முடியாமல் போய்விடும். மேலும் ஆண்கள் தினமும் மதுவை அருந்தினால், அது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை குறைத்துவிடும். பின் துணையை திருப்திப்படுத்த முடியாமல் போய், பாலியல் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகும். எனவே மதுவிற்கு குட்-பை சொல்லுங்கள்.

    * பலரும் வாய் துர்நாற்றமின்றி புத்துணர்ச்சியுடன் இருக்க, புதினா சூயிங் கம்மை உறவில் ஈடுபடும் முன் சாப்பிடுவார்கள். ஆனால் புதினா பாலியல் வாழ்க்கையை பாதிக்கும் என தெரியுமா? ஆம், அதில் உள்ள மென்தால் என்னும் உட்பொருள் ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்து, படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியாமல் செய்யும். வாய் துர்நாற்றத்தைத் தடுக்க வேண்டுமானால், ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லுங்கள்.



    * சோடா பாலியல் குறைபாட்டை ஏற்படுத்தும் மோசமான உணவுகளுள் ஒன்று. எனவே எக்காரணம் கொண்டும் உறவில் ஈடுபடும் முன் சோடா பானங்களை அருந்தாதீர்கள். ஏனெனில் இது உடல் வறட்சி, உடல் பருமன், சொத்தைப் பல் போன்றவற்றை உண்டாக்கும்.

    * கடைகளில் விற்கப்படும் கார்ன் ப்ளேக்ஸ், ஆண் மற்றும் பெண்களின் பாலுணர்ச்சியைக் குறைக்கும் என்பது தெரியுமா? இதில் உள்ள சர்க்கரை, சர்க்கரையின் அளவை அதிகரித்து, டெஸ்டோஸ்டிரோன் அளவைப் பெரிதும் பாதித்து, உறவில் ஈடுபட முடியாமல் செய்துவிடும். எனவே இரவு நேரத்தில் இம்மாதிரியான உணவை உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.



    * கேன் உணவுகளில் அதிகளவில் சோடியம் இருக்கும். இந்த சோடியம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தம் பாய்வதைக் குறைக்கும். சோடியம் நிறைந்த கேன் உணவுகளை அதிகளவில் உட்கொள்ளும் போது, உடலினுள் உள்ள பொட்டாசியத்தின் அளவும் குறைவதுடன், அந்தரங்க உறுப்புகளுக்கு செல்லும் இரத்தத்தின் அளவும் குறையும். இதன் விளைவாக பாலியல் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

    * படுக்கையில் சிறப்பாக செயல்பட வேண்டுமானால், காபி குடிக்கும் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 5-6 கப் காபி குடித்தால், அது அட்ரீனல் சுரப்பியை பாதித்துவிடும். அட்ரீனல் சுரப்பியின் செயல்பாடு குறைந்தால், மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கும். மன அழுத்தம் அதிகரித்தால், பாலுணர்ச்சியில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். வேண்டுமானால், ஒரு நாளைக்கு 1-கப் காபி போதுமானது.
    ஹார்மோன் மாறுதல்களும் கர்ப்பகால முதுகுவலியை அதிகரிக்கலாம். இந்த வலியை சின்னச்சின்ன விஷயங்களின் மூலமே குறைத்துக் கொள்ளலாம்.
    கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சி அதிகரிப்பதால் வயிற்றின் அழுத்தம் தாங்காமல், கர்ப்பிணிகளுக்கு உட்கார்வது, நிற்பது, நடப்பது என எல்லாமே சிரமமாகும். மல்லாந்தோ ஒருக்களித்தோ படுக்க வேண்டியிருப்பதால் முதுகுப் பகுதிக்கும் கூடுதல் அழுத்தம் உண்டாகி வலி ஏற்படும். தவிர ஹார்மோன் மாறுதல்களும் கர்ப்பகால முதுகுவலியை அதிகரிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைச்சுமக்கும் பெண்களுக்கு இந்த வலி சற்றே அதிகமாக இருக்கும்.

    சகித்துக் கொள்ளும்படியான வலி என்றால் பயப்படத் தேவையில்லை. சின்னச்சின்ன விஷயங்களின் மூலமே வலியைக் குறைத்துக் கொள்ளலாம். அப்படிச் சில வழிகள் இங்கே…

    * இரவில் வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டுத் தூங்கச்செல்வது வலியிலிருந்து ஓரளவு நிவாரணம் தரும். தவிர ஆப்பு வடிவிலான தலையணையை வயிற்றுப் பகுதிக்கு இதமாக வைத்தபடி ஒருக்களித்துப் படுக்கலாம்.

    * கர்ப்பமாக இருக்கும்போது நீங்கள் தூக்குகிற பொருள்களில் கவனம் இருக்கட்டும்.  அதிக கனமான பொருள்களைத் தூக்க முயற்சி செய்ய வேண்டாம். கீழே உள்ள பொருள்களைத் தூக்க வேண்டியிருந்தால், அப்படியே முதுகை வளைத்துக் குனிந்து எடுக்காமல், மண்டியிட்டு உட்கார்ந்து, அந்தப் பொருளை மார்போடு அணைத்துத் தூக்குவது முதுகுவலியைத் தவிர்க்கும்.



    * அடிமுதுகுப் பகுதிக்கு அதிக அழுத்தமில்லாத மிதமான மசாஜ் செய்வது வலியின் தீவிரம் குறைக்கும். மசாஜ் செய்கிறபோது சூடான எண்ணெய் மற்றும் அரோமா ஆயில்களை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

    * நீண்ட நேரம் நின்றபடிச் செய்கிற வேலைகளைத் தவிர்க்கவும். அதைத் தவிர்க்க முடியாதபோது, ஒருகாலை சற்று உயர்த்தி ஸ்டூல் அல்லது உயரம் குறைவான பலகையின்மேல் வைத்துக் கொள்ளவும். உட்காரும்போதும் உங்கள் இருக்கையில் முதுகு முழுவதுமாகச் சாய்ந்திருக்கும்படிப் பார்த்துக்கொள்ளவும். முதுகுப் பகுதிக்குத் தலையணை வைத்தபடியும் உட்காரலாம்.

    * மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொண்டு, எளிமையான யோகா பயிற்சிகளைச் செய்யலாம். கர்ப்பிணியின் தனிப்பட்ட உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கேற்ற சரியான பயிற்சிகளை மருத்துவரால் மட்டுமே பரிந்துரைக்க முடியும்.

    * வயிறு பெரிதாகும் போது உடலின் பேலன்ஸ் மாறும். ஹை ஹீல்ஸ் காலணிகள் அந்த பேலன்ஸை மேலும் மாற்றி, முதுகுவலிக்குக் காரணமாகும். தடுக்கி விழவும் கால்கள் இடறவும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

    கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
    சர்க்கரை நோய் இந்தியாவை மிரட்டிக்கொண்டிருக்கிறது. ‘இன்டர்நேஷனல் டயாபெட்டிக் பெடரேஷன்’, ‘ 2007-ம் ஆண்டு இந்தியாவில் 4 கோடியே 65 லட்சம் சர்க்கரை நோயாளிகள் இருந்ததாகவும், 2025-ம் ஆண்டு இது 8 கோடியே 30 லட்சமாக அதிகரிக்கும்’ என்றும் குறிப்பிடுகிறது. உலகம் முழுவதும் 2007-ம் ஆண்டு 24 கோடியே 60 லட்சம் சர்க்கரை நோயாளிகள் இருந்ததாகவும், 2025-ல் அந்த எண்ணிக்கை 38 கோடியாக உயரும் என்றும் கூறியுள்ளது.

    சர்வதேச கணக்கைவிட, இங்கே மிக அதிகமாக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்தான் இந்தியாவை ‘சர்க்கரை நோயாளிகளின் தலைநகரம்’ என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் சர்வதேச சர்க்கரை நோயாளி கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்போது ஆண்டு முழுவதற்குமான திட்ட வாசகம் ஒன்றை வெளியிட்டு அதை நோக்கி விழிப்புணர்வு செயல்பாடுகளை அமைத்துக்கொள்வார்கள். இந்த ஆண்டு ‘பெண்களும் சர்க்கரை நோயும்’ என்பது கொள்கை அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

    இது மிகவும் கவனிக்கத்தகுந்தது. ஏன்என்றால் பெண்கள் தங்கள் உடல்நிலையை பெரும்பாலும் கருத்தில்கொள்வதில்லை. குடும்பத்தினர் அனைவரையும் கவனித்துக்கொள்ளும் அவர்கள் தங்களை கவனித்துக்கொள்ள மறந்துவிடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சர்க்கரை நோயை தாமதமாகத்தான் கண்டுபிடிக்க முடிகிறது. அதனால் அம்மா, சகோதரி, மனைவி, பாட்டி, தோழிகள் போன்ற அனைவரின் ஆரோக்கியத்திலும் ஆண்கள் அக்கறை கொள்ளவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.



    பெண்கள் பொதுவாக உணவில் சரியான அக்கறை செலுத்துவதில்லை. அவர்களுக்கு உணவை வீணாக்குவது பிடிக்காது என்பதால் உணவை அதிகம் சாப்பிட்டுவிடுகிறார்கள். உடற்பயிற்சி செய்யவும் அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. அதனால் ஆண்களைவிட பெண்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். சர்க்கரையின் அளவு திடீரென்று குறைந்து பாதிப்பிற்குள்ளாகும் அவஸ்தையும் பெண்களுக்கு அதிகம்.

    கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் ஏற்படுகிறவர்களில் 50 சதவீதம் பேருக்கு அடுத்த பத்து வருடங்களுக்குள் நிரந்தரமாக சர்க்கரை நோய் ஏற்படலாம். மீதமுள்ளவர்களுக்கு 20 வருடங்களுக்குள் ஏற்படலாம். அதனால் கர்ப்பிணியாக இருந்தபோது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் பின்பு உணவில் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். உடற்பயிற்சியும் மேற்கொள்ளவேண்டும்.

    முறையற்ற உணவுகள், தவறான உணவுப்பழக்கங்கள், உடற் பயிற்சியின்மை, பாரம்பரியம், மனஅழுத்தம், தூக்கமின்மை, வாழ்வியல் முறை சிக்கல்கள் போன்றவை சர்க்கரை நோய் ஏற்பட முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. சர்க்கரைநோய் ஏற்படும்போது தலை முதல் பாதம் வரை பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. பாதிக்கப்படும் உறுப்புகளில் இதயம், நரம்பு மண்டலம், சிறுநீரகம், கண்கள் ஆகியவைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
    ×