என் மலர்
அழகுக் குறிப்புகள்
- உச்சந்தலையில் வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படலாம்.
- ஆயுர்வேத வைத்தியம் மூலம் பொடுகை நீக்கலாம்.
குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவதால் உச்சந்தலையில் வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படலாம், இந்த தொந்தரவால் பொடுகு ஏற்படும். பொடுகு தொல்லையால் முடி கொட்டி விடும். எனவே ஆயுர்வேத வைத்தியம் மூலம் எப்படி பொடுகை நீக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சூடான எண்ணெய் மசாஜ்
தேயிலை மரம் அல்லது வேம்பு போன்ற அத்தியாவசிய எண்ணெய்களின் சில துளிகளுடன் சூடான தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய் அல்லது இரண்டையும் கலந்து மசாஜ் செய்யலாம். இது ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது.

வேம்பு மற்றும் நெல்லிக்காய் ஹேர் பேக்
வேம்பு மற்றும் நெல்லிக்காய் பொடுகை எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்றதாக அமைகின்றன. தூள் செய்யப்பட்ட வேம்பு மற்றும் நெல்லிக்காயை பயன்படுத்தி ஒரு பேஸ்ட்டை உருவாக்கவும். அதை தண்ணீர் அல்லது கற்றாழை ஜெல்லுடன் கலக்கவும். அதை உச்சந்தலையில் தடவி, 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவ வேண்டும்.

வெந்தயம்
வெந்தய விதைகள் ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம். வெந்தய விதைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, பேஸ்டாக அரைத்து, உங்கள் தலையில் தடவி சிறிதுநேரம் கழித்து குளிக்க வேண்டும்.

கற்றாழை
கற்றாழை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட இயற்கையான மருந்தாகும். கற்றாழை ஜெல்லை தலைமுடியின் வேர்கால்கள் வரை தடவி, 20-30 நிமிடங்கள் கழித்து தலையை அலச வேண்டும். இதன் குளிர்ச்சி மற்றும் ஈரப்பதமூட்டும் விளைவுகள் உச்சந்தலையில் உள்ள பொடுகை நீக்கும்.
- ஒருவரின் அழகை வெளியில் காட்டுவது சிரிப்பு.
- சிரிப்பு தான் முகத்திற்கு அழகை சேர்க்கிறது.
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதீத ஆசை இருக்கும். அதற்காக வீட்டில் இருந்துக்கொண்டே பல விஷயங்களை முயற்சி செய்து பார்ப்பதும் உண்டு.
சருமத்திற்கு தரும் அதே அக்கரையை உதட்டிற்கும் கொடுக்க வேண்டும். காரணம், ஒருவரின் அழகை வெளியில் காட்டுவது சிரிப்புதான். சிரிப்பு தான் முகத்திற்கு அழகை சேர்க்கிறது. அந்த சிரிப்பிற்கு முக்கியமாக இருப்பது உதடு. ஆகவே உதட்டை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும்.
சிலருக்கு உதடு வறண்டு போய் இருக்கும். உதடுகள் வறண்டு விடாமல் அவற்றை பளபளப்பாக வைத்திருக்க பல முயற்சிகளை செய்யலாம். அதில் ஒன்று தான் லிப் ஆயில். இதை எப்படி எளிதான முறையில் வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கோகோ எண்ணெய் - அரை ஸ்பூன்
வர்ஜின் தேங்காய் எண்ணெய் - அரை ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - ஒரு ஸ்பூன்
லாவண்டர் ஆயில் - 5 துளிகள்
ஆரஞ்சு எண்ணெய் - 5 துளிகள்
தேன் மெழுகு (பீஸ் வாக்ஸ்) - அரை தேக்கரண்டி
வைட்டமின் ஈ டேப்ளட்ஸ் - 5 லிப்
ஆயில் டியூப் - 3
ரோஸ் பவுடர் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், கோகோ எண்ணெய் மற்றும் தேன் மெழுகு எண்ணெய் சேர்க்க வேண்டும்.
டபுள் பாய்லிங் முறையில் அதாவது, அகலமான பாத்திரம் ஒன்றை எடுத்து தண்ணீர் ஊற்றி அதில் கண்ணாடி கிண்ணத்தை வைக்க வேண்டும். நீரில் மூழ்காதவாறு இருக்க வேண்டும். அதை சூடேற்ற வேண்டும். அப்போது கண்ணாடி கிண்ணத்தில் உள்ளவை உருகும்.
இவ்வாறு 10 முதல் 15 நிமிடங்கள் வரை சூடேற்றினால் போதும். அனைத்தும் உருகி விடும். அடுத்து வைட்டமின் ஈ மாத்திரைகளை சேர்க்க வேண்டும். அதன்பிறகு அடுப்பில் இருந்து இறக்கி, ரோஸ் பவுடர் சேர்த்துக் கலக்க வேண்டும்.
இறுதியாக லிப் ஆயில் டியூப்பில் ஊற்றி 30 நிமிடங்கள் வரை குளிர்ச்சிபடுத்த வேண்டும். இதை வறட்சியான உதட்டின் மேல் பூச வேண்டும். அதனால் உதட்டில் உள்ள வறட்சி நீங்கி அழகான மற்றும் மென்மையான உதடு கிடைக்கும்.

- உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
- உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது.
செம்பருத்தி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, அதிகப்படியாக சேர்வதை தடுக்கும். உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். காய்ந்த இதழ்களை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தேவையானபொருட்கள்:
செம்பருத்தி இதழ் (காய்ந்தது ) – 5 இதழ்,
தண்ணீர் 1 கப் – 150 மி.லி,
நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் – 1 ஸ்பூன்.
செய்முறை:
பாத்திரத்தில் 150 மி.லி தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் செம்பருத்தி இதழை போட்டு ௫ நிமிடங்கள் கொதித்தபின் வடிகட்டி நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து குடிக்கவும். ஒரு நாளைக்கு 2 – 3 தடவை குடிக்கலாம். காலை உணவுக்கு பின் குடிப்பது உடலுக்கு நல்லது.
மற்றொருமுறை:
ஒரு கப் தண்ணீரில் புதிதாக பூத்த 4 செம்பருத்தி பூக்களை சேர்த்து அதனுடன் நான்கு துளசி இலை, சுக்கு, ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். வடிகட்டி நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். காலை நேரத்தில் பருக உடலும் மணமும் பலப்படும்.
பலன்கள்
* மன அழுத்தம் மற்றும் வேலை பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படும். இதனால் உடலின் உள்ளுறுப்புகள் பாதிப்படையும். செம்பருத்தி டீ, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயம் சுருங்கி விரிவதற்கு வலிமையைத் தருகிறது.
சூடான செம்பருத்தி டீ, ஒரு கப் காலை உணவு உண்பதற்கு முன் வெறும் வயிற்றில் குடிப்பதால் நல்ல பலனைக் காணலாம்.
செம்பருத்தி டீயில் தேன் கலந்து பருகுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. பல்வேறு ஊட்டச்சத்துகள் இந்த டீயில் உள்ளது. இந்த டீ கருப்பை கட்டிகளைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது.
* தற்போது ப்ளாக் டீ, க்ரீன் டீ போன்றவை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் உள்ளதால் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. செம்பருத்தி செடியில் இருந்து செய்யப்படும் செம்பருத்தி டீ அந்த வரிசையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
செம்பருத்தி பூவிற்கு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத தன்மை உள்ளது. காய்ச்சலால் அவதிப்பட்டு அதிக சளி உள்ளவர்கள், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை செம்பருத்தி டீயைப் பருகலாம்.
* பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி போன்றவற்றைப் போக்க செம்பருத்தி டீயைப் பருகலாம். கர்ப்ப காலங்களில் செம்பருத்தி டீ பருகுவதால், ஹார்மோன்கள் சமச்சீராக இருக்க உதவுகின்றன.
* கர்ப்பப்பை கட்டிகள் இருக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த செம்பருத்தி டீயை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மிக விரைவாகவே நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
- உடலில் அதிகப்படியான பிரச்சினைகளுக்கு காரணம் ஹீமோகுளோபின்.
- ஹீமோகுளோபின் அளவை சரியாக பராமரித்து வருவது அவசியம்.
நமது உடலில் ஏற்படும் அதிகப்படியான பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பது ஹீமோகுளோபின் குறைவாக இருப்பது தான். பல்வேறு தொந்தரவுகள் ஏற்படாமல் தடுக்க ஹீமோகுளோபின் அளவை சரியாக நாம் உடலில் பராமரித்து வரும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கும். அப்படிப்பட்ட ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் கேரட் ஜூஸ் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
சீரகத்தூள் -1 ஸ்பூன்
பால் - ஒன்னரை டம்ளர்
நாட்டு சர்க்கரை சிறிதளவு (தேவைப்பட்டால் மட்டும்)
செய்முறை:
கேரட்டை எடுத்து சுத்தப்படுத்தி அதை சிறிது சிறிதாக வெட்டி மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைக்கும் போது சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும் அதன்பிறகு ஏற்கனவே காய்ச்சி வடிகட்டி வைத்துள்ள பாலில் இதை கலந்து கொள்ளவும். இதில் சீரகத் தூளை கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் இனிப்புக்கு நாட்டு சர்க்கரை கலந்து கொள்ளலாம்.
முடிந்த அளவு சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஜூசை அன்றாடம் குடித்து வருவது உடலுக்கு மிகவும் நல்லது. இதனால் உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். அத்துடன் உடல் நீர் ஏற்றத்துடன் இருப்பதால் மேனி மெருகூட்டப்படும். இந்த ஜூசை குடிக்க ஆரம்பித்த ஓரிரு நாட்களில் உங்கள் முகம் பொலிவடைவதை நீங்களே காணலாம்.

- முடியை கருப்பாக மாற்றுவதற்கு இண்டிகோ பவுடர் பயன்படுத்துவோம்.
- ஹேர் டை அடிப்பதற்காக இந்த பொடியை நாம் பயன்படுத்துவோம்.
வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவதற்கு இண்டிகோ பவுடர் பயன்படுத்துவோம். இண்டிகோ பவுடரை, அவுரி இலை பொடின்னு சொல்லுவாங்க. ஹேர் டை அடிப்பதற்காக இந்த பொடியை நாம் பயன்படுத்துவோம். இந்த அவுரி இலை பொடியை வழக்கமாக ஹென்னா பொடியோடு சேர்த்து, கலந்து ஹேர்பேக் போடுவார்கள். அது கொஞ்சம் சிரமமான விஷயம். அதற்கு கொஞ்சம் நேரமும் எடுக்கும். ஆனால் சட்டுனு ஆயில் பாத் எடுக்கும் நேரத்தில் உங்களுடைய நரைமுடியை கருப்பாக மாற்ற இந்த ஹெர்பல் டை ஆயிலை வீட்டில் செய்து பயன்படுத்திப்பாருங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய்- 5
சின்ன வெங்காயம்- 5
அவுரி இலை- ஒரு கப்
மருதாணி இலை- அரை கப்
கரிசலாங்கன்னி- அரை கப்
வேப்பிலை- கால் கப்
செம்பருத்தி இலை- கால் கப்
கறிவேப்பிலை- கால் கப்
வெந்தயம்- ஒரு ஸ்பூன்
கருஞ்சீரகம்- ஒரு ஸ்பூன்
ஆவாரம்பூ- ஒரு ஸ்பூன்
ரோஜா இதழ்- ஒரு ஸ்பூன்
வெட்டிவேர்- ஒரு ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 3 லிட்டர்
செய்முறை:
முதலில் நெல்லிக்காய் மற்றும் வெங்காயத்தை அரைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். அந்த ஜூனை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய்யில் பாதி அளவில் ஊற்ற வேண்டும் எண்ணெய் காய்ந்ததும் அதில் இந்த சாறினை சேர்க்க வேண்டும். சலசலப்பு அடங்கியதும் அதில் அவுரி இலை, கரிசலாங்கன்னி இலை, வேப்பிலை, மருதாணி, செம்பருத்தி இலை ஆகியவற்றை அரைத்து கொதிக்கும் எண்ணெயில் சேர்க்க வேண்டும்.
அதனுடன் வெந்தயம், கருஞ்சீரகம், ஆவாரம்பூ, வெட்டிவேர், ரோஜா இதழ் போன்றவற்றையும் மிக்சியில் போட்டு பொடியாகி இதில் சேர்க்க வேண்டும். அதன்புறகு மீதம் இருக்கும் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ச்சி எடுத்தால் அவ்வளவு தான் ஹெர்பல் டை ஆயில் தயார்.

- உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவப்பு நிறமாக மாறிவிடும்.
- இயற்கையான முறையில் உதடுகளை சிவப்பாக்கலாம்.
உதடுகள் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
சிவப்பான உதடு பெறுவதற்காக கடைகளில் விற்கும் கிரீம்களை பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்தும் உதடுகளில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிவப்பான உதடுகளை பெறுவதற்கு இயற்கையான முறையில் உதடுகளை சிவப்பாக்கலாம். வாங்க எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

எலுமிச்சை பழம்:
முதலில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் சிறிய தட்டில் சீனி சீனியை தொட்டு கொள்ளுங்கள். சீனி வைத்துள்ள எலுமிச்சை பழத்தை உதட்டில் வைத்து மசாஜ் செய்யுங்கள். உதட்டில் மசாஜ் செய்யும் பொழுது ரொம்ப பொறுமையாக தேய்க்க வேண்டும். இந்த பேக்கை தினமும் இரு முறை செய்யலாம். இல்லையென்றால் இரண்டு மூன்று தடவை கூட செய்யலாம். விரைவில் உதட்டின் கருமை நிறம் மாறி சிவப்பு நிறத்தில் மாறிவிடும்.

தேங்காய் எண்ணெய்:
ஒரு சிறிய கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை உதட்டில் கையால் மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

பீட்ரூட்:
பீட்ரூட்டை நறுக்கி அதில் உள்ள சாற்றை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். இரவு தூங்குவதற்கு முன்பு பீட்ரூட் சாற்றை உதட்டில் அப்ளை செய்து கொள்ளுங்கள். தினமும் இந்த பேக்கை பயன்படுத்துங்கள் விரைவில் உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவப்பு நிறமாக மாறிவிடும்.

மாதுளை பழம்:
மாதுளை பழத்தை உரித்து அதில் உள்ள விதைகளிலுருந்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். மாதுளை பழம் சாற்றை இரவு தூங்குவதற்கு முன்பு தினமும் அப்ளை செய்யுங்கள். விரைவில் சிவப்பு நிறமாக மாறிவிடும்.

சீனி மற்றும் நெய்:
ஒரு கிண்ணத்தில் சீனி ஒரு தேக்கரண்டி சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை தினமும் ஒரு தடவை அப்ளை செய்யுங்கள் விரைவில் உதடு சிவப்பு நிறமாக மாறிவிடும்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்பில் எதாவது ஒன்றை மட்டும் தொடர்ந்து பயன்படுத்துங்கள். விரைவில் உதடு சிவப்பு நிறமாக மாறிவிடும்.
- முகத்தில் பருக்கள் வருவது இயற்கை தான்.
- பருக்கள் கரும்புள்ளிகளாக மாறி முக அழகையே கெடுத்து விடுகிறது.
பெரும்பாலும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே முகத்தில் பருக்கள் வருவது இயற்கை தான். ஆனால் அந்த பருக்கள் நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறி முக அழகையே கெடுத்து விடுகிறது. அதுபோல் பருக்கள் வருவதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம். அதாவது முக அழகை மேம்படுத்துவதற்காக கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துவது, சோப்புகளை மாற்றி மாற்றி பயன்படுத்துவது போன்ற செயல்களால் தான் சருமத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் வருகிறது.
உருளைக்கிழங்கு –1
அரிசிமாவு – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
முதலில் உங்கள் முகத்திற்கு தேவையான அளவு உருளைக்கிழங்கை எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து அதை வடிகட்டி சாறை மட்டும் தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கில் இருக்கும் சத்துக்கள் கரும்புள்ளிகளை மாயமாய் மறைய செய்ய உதவுகிறது. மேலும் முக கருமையை நீக்கி முகத்தை எப்பொழுதும் பொலிவுடன் வைத்து கொள்கிறது.
அடுத்து ஒரு கிண்ணத்தை எடுத்து அரிசிமாவு 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து அதில் நாம் வடிகட்டி எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சாறை ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் தேன் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஊற்றி பேஸ்ட் போல நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் கரும்புள்ளிகளை நீக்கும் ஃபேஸ் பேக் ரெடி.

முதலில் முகத்தை நன்றாக சுத்தம் செய்துவிட்டு இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். குறைந்தது 15 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும். பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளவும். இதுபோல வாரத்திற்கு 3 முறை அல்லது தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்தும் விடும்.

- முடி உதிர்வு பிரச்சனை தான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது.
- நாம் உண்ணும் உணவானது ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இல்லை.
பொதுவாக எல்லோருக்கும் முடி உதிர்வு பிரச்சனை தான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு என்ன தான் தீர்வு, என்ன தான் செய்வது என்று ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அதிகமாக புலம்புகிறார்கள். அதிலும் சிலர் முடி வளரவில்லை என்றாலும் கூட பரவாயில்லை ஆனால் முடி உதிர்வு மட்டும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.
ஒரு கட்டத்திற்கு மேல் நமக்கு முடி உதிர்வு பிரச்சினை அதிகமாக இருக்கும் போது கடைகளில் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்கி நாம் உபயோகப்படுத்துகின்றோம். ஆனால் இதுமாதிரி நாம் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அதிகமாக பயன்படுத்துவதன் மூலமாக முடி உதிர்வு பிரச்சினை அதிகரிக்குமே தவிர ஒரு போதும் குறையாது. அதனால் இன்று முடி பிரச்சினைக்கு நிரந்தரமாக ஒரு தீர்வினை அளிக்கக்கூடிய ஒரு ஹேர் பேக் பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
தினமும் நாம் உண்ணும் உணவானது ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இல்லை என்றால் அதன் விளைவாக முதலில் முடி உதிர்வு பிரச்சினை தான் ஏற்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் மன அழுத்தம், மரபணு பரிமாற்றம் மற்றும் ஒழுங்கற்ற தலை முடி பராமரிப்பு இதுபோன்ற காரணங்கள் தான் தலை முடி உதிர்வு பிரச்சினைக்கு வழிவகுக்கிறது.

தேவையான பொருட்கள்:
தேங்காய்- 1 மூடி
வெந்தயம்- 3 ஸ்பூன்
முட்டை- 1
காட்டன் துணி- சிறிதளவு
செய்முறை:
வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் முடிக்கு பலவிதமான பலன்களை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அதனால் 3 ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள். மறுநாள் காலையில் 1 மூடி தேங்காயினை துருவி அதை மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக தேங்காய் பால் பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது மிக்சி ஜாரில் ஊற வைத்துள்ள வெந்தயம் மற்றும் எடுத்துவைத்துள்ள தேங்காய் பால் இவை இரண்டையும் நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து விடுங்கள்.
அதன்பிறகு ஒரு காட்டன் துணியில் அரைத்துள்ள பேஸ்ட்டினை சேர்த்து சுத்தமாக வடிகட்டி பிழிந்து ஒரு பவுலில் வைத்துக்கொள்ளுங்கள்.
கடைசியாக பவுலில் உள்ள பேஸ்ட்டுடன் 1 முட்டையின் வெள்ளை கருவினை மட்டும் சேர்த்து 2 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள். இப்போது முடி உதிர்வு பிரச்சினைக்கு முற்று புள்ளி வைக்கக்கூடிய ஹேர் பேக் தயார்.

இப்போது தலையில்வழக்கமாக பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயினை அப்ளை செய்து விட்டு பின்னர் தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை தலை முடியின் உச்சி முதல் வேர் வரை அப்ளை செய்ய வேண்டும்.
அதன்பிறகு 20 நிமிடம் கழித்து வழக்கமாக பயன்படுத்தும் சீயக்காய் கொண்டு தலை முடியினை அலசி விட வேண்டும். இந்த ஹேர் பேக்கினை அப்ளை செய்வதன் மூலம் முடி உதிர்வு பிரச்சினை என்பது இருக்காது.
- முக அழகை மேம்படுத்திக் காட்டுவதில் முக்கியப் பங்கு புருவங்கள்.
- விளக்கெண்ணெய் புருவங்களின் மீது பூசி மசாஜ் செய்யலாம்.
பெண்களின் முக அழகை மேம்படுத்திக் காட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பவை புருவங்கள். பெண்களின் வில் போன்று வளைந்து இருக்கும் அவை, பார்ப்பவர்களை வசீகரிக்கக்கூடியவை. ஆனால், தற்போது பல பெண்களுக்கு புருவ முடிகளின் வளர்ச்சி குறைவாக உள்ளது. இதன் காரணமாக செயற்கையாக 'ஐ புரோ பென்சில்' கொண்டு புருவங்களைத் தீட்டிக்கொள்கிறார்கள்.
புருவ முடிகள் சீராக வளர்ச்சி அடைந்து, புருவங்கள் அடர்த்தியாக காட்சி அளிப்பதற்கு இயற்கையான வழிகளை கடைப்பிடிக்கலாம். அதுபற்றிய சில விஷயங்கள்:
முடி வளர்ச்சிக்கு:
ஒரு சில பெண்களுக்கு புருவத்தில் ஆங்காங்கே முடிகள் இல்லாமல் திட்டுத்திட்டாக இடைவெளி இருக்கும். இவர்கள் தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு சில துளிகள் விளக்கெண்ணெய்யை புருவங்களின் மீது பூசி மென்மையாக மசாஜ் செய்யலாம்.
விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்து ஒன்றாகக் கலந்தும் புருவத்தில் பூசி மசாஜ் செய்யலாம்.
எண்ணெய் பூசுவதற்கு முன்பு புருவப் பகுதியை லேசாக 2 அல்லது 3 முறை கிள்ளி விடவும். இவ்வாறு செய்வதால் அப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் புருவ முடிகள் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.
பொடுகு நீங்க:
புருவங்களை முறையாக பராமரிப்பது அவசிய மாகும். இல்லையென்றால், அவற் றில் பொடுகு பிரச்சினை ஏற்படும். இந்த பிரச்சினையால் சிரமப்படுபவர்கள், தினமும் புருவங்களில் ஆலிவ் எண்ணெய் பூசி மசாஜ் செய்து வரலாம். இவ்வாறு செய்வதால் பொடுகு நீங்குவதோடு புருவ முடிகள் மிருதுவாகவும், வசீகரமாகவும் மாறும்.
வேக்சிங்கை தவிர்க்கவும்:
சில பெண்கள் புருவங்களை ஒழுங்கு படுத்துவதற்கு, அந்த இடத்தில் வேக்சிங் செய்வது, பிளேடு கொண்டு புருவ முடிகளை நீக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இது சருமத்தையும், முடி வளர்ச்சியையும் பாதிக்கும். புருவத்தை சீர்படுத்த, திரெட்டிங் முறையை மட்டுமே கையாள வேண்டும். புருவத்தின் மேல்பகுதியிலுள்ள முடிகளை நீக்காமல், கீழ் பகுதியில் உள்ள முடிகளை மட்டும் நீக்கினால். அதன் வடிவம் அழகாக அமையும்.
முக வடிவத்துக்கு ஏற்ற புருவ அமைப்புகள்:
புருவங்களை ஒழுங்குபடுத்தும் போது. உங்கள் முக வடிவத்துக்கு ஏற்ற புருவ அமைப்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். வட்டமான முக வடிவம் கொண்டவர்கள், புருவ முடிகளை அடர்த்தியாகவும், நெருக்கமாகவும் இருக்கும் வகையில் அமைத்தால் அழகாக இருக்கும். திரெட்டிங் செய்யும் போது, புருவங்கள் உயர்ந்து வளையும் வகையில் அமைத்தால் முக அழகை மேம்படுத்திக் காட்டும்.
ஓவல் வடிவ முக அமைப்பு கொண்டவர்களுக்கு, கன்னத்தை விட நெற்றி சற்று அகலமாக இருக்கும். இவர்கள் மெல்லிய புருவ அமைப்பை தவிர்க்க வேண்டும். புருவங்கள் அடர்த்தியாகலாம். இருக்குமாறு அமைக்கலாம்.
இதய வடிவ முக அமைப்பு கொண்டவர்களுக்கு, கூர்மையான கன்னம், பரந்த நெற்றி இருக்கும். இவர்கள் அரைவட்ட வடிவ புருவ அமைப்பை தேர்வு செய்யலாம். இது முகத்தை மேலும் அழகாகக் காட்டும்.
செவ்வக வடிவ முக அமைப்பு கொண்டவர்கள். மெல்லிய வளைவு இருக்குமாறு, புருவத்தை சீரமைக்கலாம். புருவங்கள் ஆரம்பிக்கும் இடங்களில் நேராகவும், அவை முடியும் இடங்களில் மட்டும் லேசாக வளைந்து இருக்குமாறும் செய்யலாம்.
- அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விஷயங்களில் மணமகளின் அலங்காரமும் ஒன்று.
- மணப்பெண்களுக்கான சிகை அலங்காரங்கள் ஏராளமாக இருக்கின்றன.
திருமண நிகழ்வுக்கு வரும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விஷயங்களில் மணமகளின் அலங்காரமும் ஒன்று, பளபளக்கும் ஆடைகள், ஜொலிக்கும் ஒப்பனை என்பதைத் தாண்டி மணமகளின் சிகை அலங்காரம் பலரின் பார்வைகளில் பட்டுச்செல்லும், இந்திய மணப்பெண்களுக்கான சிகை அலங்காரங்கள் ஏராளமாக இருக்கின்றன. அதில் தற்போது டிரெண்டாகும் சில ஹேர் ஸ்டைல்கள்.

பாலேரினா பன்:
பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக இருந்த இந்த சிகை அலங்காரம், பழங்கால நினைவை தூண்டக்கூடியது. இந்த சிகை அலங்காரத்தை பொறுத்தவரை, அவரவர் கற்பனைத்திறனுக்கு ஏற்ப எந்த வகையான கொண்டையாகவும் போடலாம். அதை இயற்கையான மற்றும் செயற்கையான மலர்கள், சிறிய நகைகள் கொண்டு அலங்கரிக்கலாம். புடவை முதல் மாடர்ன் உடைகள் வரை எந்த வகையான ஆடைகளுக்கும் இந்த சிகை அலங்காரம் பொருந்தும். நீள்வட்ட முக வடிவம். பெரிய கன்னம் உள்ளவர்களுக்கு இவ்வகை அலங்காரம் பொருத்தமாக இருக்கும். இதற்கு கண்களை அழகாய் எடுத்துக் காட்டும் வகையில் மேக்கப் போடலாம்.

சிக்னான்:
இது 90-களில் பிரபலமாக இருந்த ஹேர் ஸ்டைல். எந்த வகையான கூந்தல் உள்ளவர்களுக்கும் பொருந்தக்கூடியது. அடிப்படையில் கொண்டை போன்று இருந்தாலும், பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருக்கும். தளர்வாக இருப்பதால், நவீன தோற்றத்தை விரும்பும் பெண்களுக்கு இது ஏற்றது.
ஆப் பைரட்ஸ்:
குறைவான நீளமுள்ள கூந்தல் உள்ளவர்களுக்கும் பொருந்தும் வகையிலான சிகை அலங்காரம் இது. முடியின் ஆரம்பத்தில் இருந்து பாதிவரை சில பின்னல்களை போட்டு மிதமுள்ள முடியை அப்படியே விட்டுவிடலாம். இதில் மீதமுள்ள முடியை சுருள் சுருளாக மாற்றினாலும் பார்க்க அழகாக இருக்கும். ரோஜா இதழ்கள், செயற்கையான பூ மொட்டுகள், பூச்சரம் கொண்டு அலங்கரிக்கலாம். இது கூந்தலை அடர்த்தியாக காட்டும்.

லூஸ் ஹேர்:
மணமகள் மட்டுமின்றி அனைவரின் தேர்வாகவும் இருப்பது இந்த ஹேர் ஸ்டைல். திறந்தவெளி, கடலோர பகுதிகளில் திருமணம் நடத்த திட்டமிட்டால் கவுன் போன்ற மாடர்ன் உடைகள் அணியும்போது இந்த ஹேர்ஸ்டைலை தேர்ந்தெடுக்கலாம். இதில் கூந்தல் அலை அலையாக கர்லிங் ஹேர் ஸ்டைலை தேர்வு செய்யலாம். நீண்ட மற்றும் அடர்த்தியான முடி உள்ளவர்களுக்கு இந்த சிகை அலங்காரம் மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த சிகை அலங்காரத்தை மேலும் அழகாய் காட்ட ஃபினிஷிங் ஸ்பிரேயை பயன்படுத்தலாம். கிளிப் பூக்கள், ஹெட் பேண்டுகள் அணிந்தால், வித்தியாசமான தோற்றம் தரும்.

நீண்ட பின்னல்:
பாரம்பரிய முறையில் கூந்தலை நீண்ட ஜடைபோல பின்னிக்கொள்ளும் சிகை அலங்காரம் இது, திருமண நாளன்று அழகாக தோற்றமளிக்க இந்த சிகை அலங்காரம் ஏற்றதாக இருக்கும். இதிலும் பிரெஞ்சு முதல் கிளாசிக் திரீ ஸ்ட்ராண்ட் புல் த்ரூ ஜடை டச்சு என பலவகை பின்னல்கள் உள்ளன. இவற்றை மலர்களைக் கொண்டு அலங்கரித்தால், இந்த வகை சிகை அலங்காரம் பலரது கவனத்தையும் ஈர்க்கும்.
- குளிர்காலம் தொடர்பான சரும பிரச்சினைகள் கவலைக்கு காரணமாக இருக்கும்.
- சருமத்தில் க்ரீம் பூசுவதால் ஈரப்பதமான சருமமாக மாறாது.
குளிர்காலம் நெருங்க நெருங்க, சரும பராமரிப்பு குறித்த கவலைகள் பெண்களை ஆட்கொள்ளும். வறண்ட சருமம், மெல்லிய தோல், உதடு வெடிப்பு உள்பட குளிர்காலம் தொடர்பான பல்வேறு சரும பிரச்சினைகள் அந்த கவலைக்கு காரணமாக இருக்கும். இதற்கிடையே குளிர்கால சரும பராமரிப்பு பற்றி பல கட்டுக்கதைகளும் உலவுகின்றன. அத்தகைய கட்டுக்கதைகள் குறித்தும், உண்மை நிலவரம் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
சருமத்தில் அதிக கிரீம் தடவினால் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்
உண்மை: உதடோ, சருமமோ எந்த அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவதாக இருந்தாலும் குறைவாகவே பூச வேண்டும். அதிகம் பூசுவதால் ஈரப்பதமான சருமமாக மாறாது. மாறாக தோல் சுவாசிக்க முடியாமல், இறுதியில் சருமம் சேதமடையக்கூடும். குறிப்பாக குளிர்காலத்தில் சருமங்களை பராமரிப்பதற்கு இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அடர் தன்மை கொண்ட கிரீம்களை பயன்படுத்துவதை விட லோஷன்களை பயன்படுத்துவது ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும்.

குளிர்காலத்தில் சருமத்திற்கு ஈரப்பதத்தை தக்க வைக்க எண்ணெய் உதவும், மாய்ஸ்சுரைசர் தேவையில்லை
உண்மை: வறண்ட மற்றும் எண்ணெய் பசை கொண்ட சருமங்களுக்கு இடையே ஒருசில மாறுபாடுகள்தான் இருக்கிறது. வறண்ட சருமத்தை ஒப்பிடும்போது எண்ணெய் பசை கொண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை தக்கவைக்க மென்மையான தன்மை கொண்ட லோஷன் தேவைப்படும். ஒவ்வொரு சரும வகையும் வானிலை மாற்றங்களால் பாதிக்கப்படும். குளிர்ந்த காற்று சருமத்தை வறண்டு போகச் செய்துவிடும். இதற்கு எண்ணெய் சருமமும் விதிவிலக்கல்ல.
அதனால் குளிர்காலத்தில் எண்ணெய் பசை கொண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை தக்க வைக்க எதுவும் பயன்படுத்த வேண்டியதில்லை என்பது தவறானது. சருமத்தின் தன்மைக்கு ஏற்ப சம நிலையை பராமரிக்கும் தன்மை கொண்ட மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவது நல்லது. அவை ஈரப்பதத்தை பராமரிப்பதற்கும், புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்கும் உதவும்.

குளிர்காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்க்கலாம்
உண்மை: பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த சீரான உணவை உண்பது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. குளிர்காலத்திலும், இந்த உணவுகள் சருமத்தை பாதுகாக்கக்கூடிய அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகளை வழங்குகின்றன. எனவே அவற்றை தவிர்க்கக்கூடாது.
குளிர்காலத்தில் லிப் பாம்களை அதிகமாகப் பயன்படுத்துவது உதடு வெடிப்பு பிரச்சினையை சரி செய்யும். உண்மை: உதட்டுக்கு லிப் பாம்களை அதிகமாக போடுவது பிரச்சினைக்குத்தான் வித்திடும். உதடுகள் வறண்டு போயிருந்தால் அதன் மீது படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்றாமல் லிம் பாம் உபயோகிப்பது பயனற்றது. எப்போதும் லிப் பாமை ஒரு அடுக்கு மட்டுமே போடுவது போதுமானது. முதலில் இறந்த செல்களை நீக்க உதவும் 'லிப் ஸ்கிரப்'களை பயன்படுத்திவிட்டு அதன் பிறகு லிப் பாமை தடவ வேண்டும்.
பெரும்பாலான லிப் பாம்களில் சருமத்திற்கு தீங்கையும், நீரிழப்பையும் ஏற்படுத்தும் வண்ணங்கள் அல்லது வாசனை திரவியங்கள் கலந்திருக்கக்கூடும். குளிர்கால உதடு பராமரிப்புக்கு, இயற்கை எண்ணெய் கொண்டு தயார் செய்யப்பட்ட நெய் பயன்படுத்துவது நல்லது. தரமான லிப் பாமும் பயன்படுத்தலாம்.
குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதற்கு சிறந்த வழி
உண்மை: குளிர் சமயத்தில் சுடு நீர் குளியல் உடலுக்கு ஆறுதல் அளிக்கும். ஆனால் சருமத்தில் படர்ந்துள்ள இயற்கை எண்ணெய் பசைகளை அகற்றி சருமத்தை உலர்வடைய செய்துவிடும். சருமத்திற்கு எரிச்சல் உணர்வையும் உண்டுபண்ணும். அதிக சூட்டை உணரவைக்காத வெதுவெதுப்பான நீரில் குளிப்பது அதிகப்படியான ஈரப்பத இழப்பை தடுக்கும். இருப்பினும் சுடு நீர் குளியல் போடுவதாக இருந்தால் அதிக நேரம் குளிக்கக்கூடாது.
குளிர்காலத்தில் இறந்த செல்களை அகற்றும் செயல்முறையை தவிர்க்க வேண்டும்
உண்மை: கோடைகாலம் சரும பராமரிப்புக்கு சிறந்த நடவடிக்கையாக கருதப்படுகிறது. குளிர்காலத்திற்கும் முக்கியமானது. இருப்பினும் அடிக்கடி எக்ஸ்போலியேட் செய்வது சருமத்திற்கு வறட்சி மற்றும் எரிச்சலை உண்டாக்கும். சருமத்தின் இயற்கையான எண்ணெய்களை அகற்றாமல் இறந்த சரும செல்களை அகற்றும் தன்மை கொண்ட மென்மையான எக்ஸ்போலியண்ட்களை தேர்வு செய்யவும்.
குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் அவசியம் இல்லை
உண்மை: சன்ஸ்கிரீன் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து சருமத்தை பாதுகாக்கும். இந்த கதிர்கள் சருமத்தின் தோலை நேரடியாக பாதிக்கும். குளிர்காலத்தில் கருமேகங்கள் உலவும் என்றாலும் புற ஊதாக்கதிர்கள் வெளிப்படாமல் இருக்காது. அது மேகங்கள் வழியாக ஊடுருவி சருமத்தை பாதிக்கவே செய்யும். எனவே குளிர்கால சரும பராமரிப்பு வழக்கத்திலும் சன்ஸ்கிரீன் இடம் பெறுவதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
அடர் தன்மை கொண்ட மாய்ஸ்சுரைசர்கள் எப்போதும் சிறந்தவை
உண்மை: குளிர்காலத்தில் ஈரப்பதத்தை பராமரிப்பதற்கு உதவும் மாய்ஸ்சுரைசர் அடர் தன்மை கொண்டிருந்தால் சிறந்தது என்பது சரியானது அல்ல. அத்தகைய மாய்ஸ்சுரைசர்கள் சில சமயங்களில் சரும துளைகளை அடைத்துவிடும். வேறு சில சரும பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, உங்கள் சரும வகைக்கு ஏற்ற ஈரப்பதமூட்டும் மாய்ஸ்சுரைசரை தேர்ந்தெடுப்பது சரியானது. ஹைலூரோனிக் அமிலம், கிளிசரின் அல்லது செராமைடுகள் போன்ற சேர்மங்கள் கொண்ட மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தலாம்.
- வீட்டிலேயே கிரீம் பயன்படுத்தி அழகுபடுத்தி கொள்வார்கள்.
- தேன் முகத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் ஆசைப்படுகிறார்கள். ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக முகம் பளபளப்பாக இருப்பதற்காக ட்ரை செய்கின்றனர். இதற்காக பார்லருக்கு சென்று முகத்தை அழகுபடுத்திக் கொள்கின்றனர். சிலநபர்கள் வீட்டிலேயே கிரீம் பயன்படுத்தி அழகுபடுத்தி கொள்வார்கள். ஆனால் நீங்கள் இப்படி காசு கொடுத்து செலவு செய்து முகத்தை அழகுபடுத்தினாலும் சிறிது நேரத்திற்கு மட்டுமே முகத்தை அழகாக வைத்துக்கொள்ள முடியும். எனவே இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வோம் வாங்க...
கற்றாழை-எலுமிச்சை
கற்றாழை மற்றும் எலுமிச்சையில் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றி முகத்தை பளபளப்பாக மாற்றுகிறது. ஒரு பவுலில் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி விடவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டுமுறை பயன்படுத்த வேண்டும்.

கற்றாழை-தேன்
கற்றாழை மற்றும் தேன் கலந்து முகத்தில் தேய்க்கும் போது அது முகத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் தேன் கலந்து இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின்னர் முகத்தை கழுவிவிடவும்.

கற்றாழை-சர்க்கரை
சர்க்கரை எக்ஸ்போலியேட்டாக பயன்படுகிறது. ஒரு பவுலில் கற்றாலை ஜெல் ஒரு ஸ்பூன், சர்க்கரை சிறிதளவு சேர்த்து கலக்கி இந்த பேக்கை முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் வைத்திருந்து பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதாவது ஒன்றை தினமும் செய்து வாருங்கள் உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகத்தை பளபளப்பாக இருப்பதை நீங்களே பார்க்கலாம்.






