என் மலர்
அழகுக் குறிப்புகள்
- கண்களின் மேல் வெள்ளரி'யை வைத்துக்கொள்வது சிறந்தது.
- முக சுருக்கங்களை குறைக்க தக்காளி ஃபேஷியல் உதவுகிறது.
வசீகர முக அழகிற்கு இயற்கையாக விளையும் பொருட்கள் பயன்தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பப்பாளிப்பழம், செலவு இல்லா பேஷியலை தரும். பப்பாளிப் பழத்தை கூழ் ஆக்கி, முகத்தில் பூசி, 15 நிமிடத்துக்கு பிறகு வெந்நீரில் முகத்தைக் கழுவினால் முகத்தை பளிச்சிட வைக்கும். வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் பப்பாளி தோலின் அடிப்பகுதியை தொடர்ந்து பூசினால் சருமம் நீரோட்டம் பெற்றுப் பொலிவடையும்.
அதேபோல வெள்ளரி காய்களை நறுக்கி கண்களில் வைத்து கட்டினால், கண்கள் பிரகாசம் அடையும், கண் எரிச்சலும் குறையும். கருவளையம் மறையும்.
கணினி முன்னால் அதிக நேரம் குடியிருக்கும் அனைவரும் `கண்களின் மேல் வெள்ளரி'யை வைத்துக்கொள்வது சிறந்தது. விளக்கெண்ணெயையும் தடவலாம். நல்ல தூக்கமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் கருவளையத்தைப் போக்குவதற்கான சிறந்த ஆயுதங்கள்.
அடுத்ததாக, கற்றாழை கூழை முகத்தில் தொடர்ந்து தேய்த்து சிறிது நேரம் இருப்பதால் பருக்கள் வராமல் தடுக்கலாம். கிருமிநாசினியான கற்றாழை, தோல் சுருக்கங்களை தடுக்கிறது. முகத்தில் எண்ணெய் பசை சருமத்தை கொண்டவர்களுக்குக் கற்றாழை முகப்பூச்சு சிறந்த தேர்வு. இன்றும் கிராமத்து சிறுவர்களின் இயற்கை ஒப்பனை பொருள் குளுகுளு கற்றாழைதான்.
இதுதவிர, சந்தன சாந்தை நெற்றியில் தடவும் வழக்கம், சங்க கால மக்களிடம் இருந்துள்ளது. முகத்தை மெருகேற்ற நம் மரபோடு பயணித்த சந்தனத்தை, எந்த சிந்தடிக் கிரீம்களாலும் மிஞ்ச முடியாது.
முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கவும் தடுக்கவும் தக்காளி பேஷியல் உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் தோலுக்கு ஊட்டம் தருகிறது.
நிறைய தண்ணீர் அருந்துவது மேனியை அழகாக்கும் என்பது காலம்காலமாகத் தொடர்ந்துவரும் அழகு குறிப்பு. முகத்தை நிரந்தரமாக அழகுபடுத்த வெளிப்பூச்சோடு சேர்த்து பச்சை காய்கறிகள், கொய்யா, நெல்லி, மாதுளை, அத்தி, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழ வகைகளை உட்கொள்ள வேண்டும். அதிகரிக்கும் மன அழுத்தம் முகப் பொலிவைப் பெருமளவு பாதிக்கும். மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதும், அழகை மேம்படுத்துவதற்கான முக்கிய உத்தி.
- தலைமுடியை தினமும் பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
- ஹேர்பின்கள் தலைமுடியின் வெளிப்புற அடுக்கை சேதப்படுத்தும்.
சருமத்தைப் போலவே தலைமுடியையும் தினமும் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். அலங்காரத்துக்காக கிளிப்புகள், ஹேர்பின்கள் போன்றவற்றை பயன்படுத்தும்போது தலைமுடியும். அதன் வேர்க்கால்களும் சேதமடைய நேரிடலாம். இதனால் தலைப்பகுதியில் எரிச்சல், காயம், வலி உண்டாகக் கூடும். இதுமட்டுமல்லாமல் தலைமுடி உடைவது. உதிர்வது போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.
கரடுமுரடான ஹேர்பின்கள் தலைமுடியின் வெளிப்புற அடுக்கை சேதப்படுத்தும். கிளிப்புகள், கொண்டை ஊசிகள் அல்லது கொக்கிகளை தொடர்ச்சியாக பயன்படுத்தும்போது அவை தலைமுடியின் வேர்க்கால்களை வலுவிழக்கச் செய்யும். முனைப்பகுதியில் ரப்பர் பூச்சு கொண்ட ஹேர்பின்கள் மற்றும் கிளிப்புகளை பயன்படுத்துவதன் மூலம் முடியின் வேர்க்கால்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும்.
கிளிப்புகளை இறுக்கமாக அணிவதன் காரணமாக உச்சந்தலையில் ரத்த ஓட்டம் பாதிக்கும். இதன் மூலம் கூந்தல் சேதம் அடைவதோடு, அடிக்கடி தலைவலியும் உண்டாகும். தூங்கச் செல்வதற்கு முன்பு தலைமுடியில் அணிந்திருக்கும் ஹேர்பின்கள், கொண்டை ஊசிகள் ஆகியவற்றை அகற்றுவது முக்கியமானதாகும். இல்லாவிடில் அவற்றில் உள்ள கூர்மையான பாகங்கள் கூந்தலை சேதப்படுத்தும். தலைமுடியை தளர்வாக பின்னிக்கொண்டு தூங்குவது நல்லது.
தலைமுடியை சுருளச் செய்வதற்காக கிளிப்புகள் பயன்படுத்துபவர்கள், அவற்றை ஹேர் டிரையர் மூலம் அதிகமாக சூடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதன் அதிகப்படியான வெப்பம். தலைமுடியை சேதம் அடையச் செய்யும்.
எலாஸ்டிக் பேண்டுகள் பார்ப்பதற்கு மென்மையானவையாகத் தெரிந்தாலும், அவற்றை அணிவதன் மூலமாகவும் தலைமுடி பாதிப்படைய நேரிடலாம். எலாஸ்டிக் பேண்டுகள் அணியும்போது தலைமுடி இறுக்கமாக இழுக்கப்படும். இதன்மூலம் முடியின் வேர்க்கால்கள் சேதமடைவது, கூந்தல் உதிர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
நேரடியாக எலாஸ்டிக் பேண்டுகளை கூந்தலில் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இவற்றை கழற்றும்போது தலைமுடி இழைகளை அறுந்து சேதப்படுத்தும். இவற்றுக்கு பதிலாக துணியின் உள் பகுதியில் வைத்து தைக்கப்பட்ட எலாஸ்டிக் பேண்டுகளை உபயோகிக்கலாம்.
தலைமுடியை இறுக்கமாக இழுத்து சீவுவதையோ, பின்னுவதையோ தவிர்க்க வேண்டும். ஹேர் பேண்டுகளை தலைமுடியில் இறுக்கமாகக் கட்டுவது. முடியின் இழைகளை சிதைத்து, பலவீனம் அடையச் செய்யும்.
- தலைமுடியை தினமும் முறையாக சீவுவது அவசியம்.
- தலைமுடி வறட்சி அடைவதை தடுத்து ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.
தினமும் தவறாமல் பல் துலக்குவது போல தலைமுடியை தினமும் முறையாக சீவுவது அவசியம். இந்த எளிய விஷயம் நம் தலைமுடிக்கு பல நன்மைகளை அளிக்கிறது. எனவே ஆரோக்கியமான முடியை பெற நீங்கள் தினமும் பின்பற்ற வேண்டிய முக்கியமான ஒரு முடி பராமரிப்பு வழக்கம் தலை முடியை சீவுவது. வறண்ட முடி உள்ளவர்கள் அல்லது அதிகமானமுடி உதிர்தலை சந்திப்பவர்கள் கூடுதல் முடி இழப்பை தவிர்ப்பதற்காக சீப்பு பயன்படுத்த தயங்குவார்கள். ஆனால் தலை முடியை சீவ சீப்பு பயன்படுத்துவது ஒரு சுய பாதுகாப்பு நடைமுறை மட்டுமல்ல பல அறிவியல் நன்மைகளையும் கொண்டுள்ளது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.
காலை ஒருமுறை, இரவு தூங்கும் முன் ஒருமுறை என சராசரியாக நாளொன்றுக்கு 2 முறை தலைமுடியை முறையாக சீவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது நபருக்கு நபர் மாறுபடும். நீண்ட முடி கொண்டவர்கள் சிக்கு மற்றும் முடி உடைவதை தடுக்க ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறை தலை சீவ அறிவுறுத்தப்படுகிறது.
கூந்தலைப் பின்னி ஜடை போடுவதன் மூலம் முடிகளில் சிக்கல் ஏற்படுவதைத் தடுக்க முடியும். கூந்தலைப் பின்னுவதன் மூலம் இயற்கையான எண்ணெய் பசையையும், ஈரப்பதத்தையும் தக்கவைத்து கூந்தல் வறட்சி அடைவதை தடுக்கலாம்.
தலைமுடியை விரித்த நிலையிலேயே வைத்திருப்பதால் சூரியஒளி, காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுகளால் முடிக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படும். கூந்தலைப் பின்னி ஜடை போடுவதன் மூலம் இத்தகைய பாதிப்புகளை குறைக்க முடியும். கூந்தலை அலைபாயவிடாமல் கட்டி வைப்பதன் மூலம், தலைமுடியின் முனையில் வெடிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
சுருள்முடி கொண்டவர்கள் கூந்தலை பின்னிக்கொள்வதால் தலைமுடி வறட்சி அடைவதைத் தடுத்து ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.
தினமும் தவறாமல் தலை சீவி வருவது பழைய முடி, இறந்த சரும செல்கள், ஹேர் ப்ராடக்டின் மிச்சங்கள், அழுக்கு, முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள மற்ற படிந்துள்ள தேவையற்றவற்றை சுத்தம் செய்ய உதவுகிறது.
உச்சந்தலையையும் கூந்தலையும் சுவாசிக்க அனுமதிக்கிறது மற்றும் பொடுகு நிறைந்த முடியை புதுப்பிக்கிறது. தலைமுடியை தினமும் சீவுவது முடியை பளபளப்பாக வைக்க, அடர்த்தியை அதிகரிக்க, ஆரோக்கியமாக மற்றும் புத்துணர்ச்சியுடனும் பராமரிக்க உதவுகிறது.
- பாதாம் எண்ணெய் சருமத்திற்கு பிரகாசம் சேர்க்கும்.
- தேன் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் பண்புகளை கொண்டது.
குளிர்காலத்தில் சூழ்ந்திருக்கும் பனியின் ஆதிக்கம் சருமத்தை எளிதில் வறண்டுபோகச் செய்துவிடும். சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை அபகரித்து சருமத்தை உலர்வாகவும், மந்தமாகவும் மாற்றிவிடும். ஒரு சில ஃபேஸ் மாஸ்க்குகளை உபயோகித்து சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மிளிரச் செய்யலாம். அத்தகைய ஃபேஸ் மாஸ்க்குகள் உங்கள் பார்வைக்கு...

வாழைப்பழம் - பாதாம் எண்ணெய்:
பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதனுடன் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து பிசைய வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர விட்டு பின்பு கழுவி விடலாம். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின்களும், ஈரப்பதமும் சருமத்திற்கு பாதுகாப்பு கவசமாக அமையும். பாதாம் எண்ணெய் சருமத்திற்கு பிரகாசம் சேர்க்கும். குளிர்காலத்தில் ஏற்படும் மந்த நிலையை போக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்ட இந்த மாஸ்க் சிறந்த தேர்வாக அமையும்.

தேன் - தயிர் மாஸ்க்:
தேன் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் பண்புகளைச் கொண்டது. தயிர் சருமத்தை மென்மையாக்கும். புத்துணர்ச்சியையும் அளிக்கும். இரண்டு டேபிள் ஸ்பூன் தயிருடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால் போதும். சருமம் பொலிவுடன் மிளிரத் தொடங்கும்.

ஓட்ஸ் - பால்:
இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்சை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு பால் கலந்து முகத்தில் வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் உலர விட வேண்டும். ஓட்ஸ் இறந்த சரும செல்களை நீக்கும். பால் சருமத்தை ஈரப்பதமாக்கும். நன்கு உலர்ந்ததும் சருமத்தை நீரில் கழுவி விடலாம். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தை மென்மையாக்குவதோடு பளபளப்பையும் கொடுக்கும்.

அவகேடா - ஆலிவ் எண்ணெய்:
அவகேடா பழத்தை பாதியாக வெட்டி, ஒரு துண்டை மட்டும் நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து சருமத்தை நீரில் கழுவி விடலாம். அவகேடா பழத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களும், வைட்டமின்களும், ஆலிவ் எண்ணெய்யும் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும். வறண்ட சருமத்தை மென்மையாக்க உதவும்.

வெள்ளரி - கற்றாழை:
ஒரு வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் உலர விட வேண்டும். வெள்ளரி சருமத்திற்கு நீரேற்றத்தை வழங்கும். கற்றாழை சருமத்திற்கு மிருது தன்மையை அளிக்கும். புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.
- சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கும்.
- சருமத் துளைகளில் ஏற்படும் நோய்த்தொற்றை தடுக்கின்றன.
முக அழகை மெருகேற்றவும், சருமத்தின் இளமை தன்மையை அதிகரிக்கவும் பல்வேறு அழகு பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துகிறோம். அவற்றில் இருக்கும் ரசாயன மூலக்கூறுகள், நாளடைவில் சருமத்துக்கு பாதிப்பை உண்டாக்குகின்றன. சரும பராமரிப்பை பொறுத்தவரை, இயற்கை நமக்கு ஏராளமான பொருட்களை வழங்கியுள்ளது. அந்த வகையில் எளிய முறையில் சருமத்தின் பொலிவை அதிகரித்து, முக அழகை மேம்படுத்த வாதுமை (வால்நட்) எண்ணெய் உதவுகிறது.
வாதுமையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் நிறைந்திருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் ஆக்சிஜனேற்ற மூலக்கூறுகள் சருமத்தை பிரகாசமாக்கும் தன்மை கொண்டவை. அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகள் நிறைந்த வாதுமை எண்ணெய் பல நூற்றாண்டுகளாகவே சரும பராமரிப்புக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படும்.
வாதுமை எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும். புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள முடியும்.

வயது முதிர்ச்சியின்போது ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தின் விளைவாக சருமத்தில் சுருக்கங்களும், கோடுகளும் உண்டாகின்றன. வாதுமை எண்ணெய்யில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்டுகள் பிரீராடிக்கில்களை நடுநிலைப்படுத்தி செல்கள் சேதமடைவதைத் தடுக்கின்றன. இதன்மூலம் சருமம் முதிர்ச்சி அடையும் செயல்பாடு தாமதமடையும்.
வாதுமை எண்ணெய்யில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், அதிக உணர்திறன் கொண்ட சருமத்தினருக்கு பல நன்மைகளை தருகின்றன. தோல் அழற்சி, அரிப்பு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் அந்த இடங்களில் வாதுமை எண்ணெய்யை மேற்பூச்சாக பூசி வரலாம்.
வாதுமை எண்ணெய்யின் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், சருமத் துளைகளில் ஏற்படும் நோய்த்தொற்றை தடுக்கின்றன, முகப்பருக்களை நீக்குகின்றன. இயற்கையான சரும நிறத்தை மேம்படுத்துகின்றன.
சருமத்தில் ஆழமாக ஊடுருவும் திறன் கொண்ட வாதுமை எண்ணெய் புதிய செல்களின் உற்பத்தியை தூண்டும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கும்.
- அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்புத் தன்மையையும் நீக்கும்.
- மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர முடிகள் வளர்வது தடைபடும்.
பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பதோடு சரும பொலிவையும் மெருகூட்டும். முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்புத் தன்மையையும் நீக்கும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி மென்மையையும், பொலிவையும் பெற்றுத் தரும்.
* முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவை கூட்டும்.
* பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும்.
* நன்கு பழுத்த பப்பாளி விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் நான்கு ஸ்பூன் தேன், சிறிது கிளிசரின் சேர்த்து கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள பகுதி தவிர மீதி இடங்களில் பற்றுப்போட்டு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிவர, முகம் பிரகாசிக்கும்.

* பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து, அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறிவிடும்.
* ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு, சிறிது சீனி கலந்து 30 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தேகம் மினுமினுக்க ஆரம்பித்துவிடும்.
* பப்பாளி பழத்தை மஞ்சள் தூளுடன் கலந்தும் பயன்படுத்தலாம். சில பெண்களுக்கு முகத்தில் முடி முளைத்துக்கொண்டிருக்கும். பப்பாளி பழத்தை கூழாக்கி அதனுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர வேண்டும். அந்த கலவை நன்றாக உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் நாளடைவில் முடிகள் வளர்வது தடைபடும்.
- கைகளில் உள்ள கருமையை படிப்படியாகப் போக்கலாம்.
- பப்பாளியில் சரும கருமையைப் போக்கும் பொருள் உள்ளது.
சிலரது முகம் பார்ப்பதற்கு பளிச்சென்று வெள்ளை நிறமாக இருக்கும். ஆனால், கை கால்கள் மற்றும் கழுத்து போன்றவை அதற்கு எதிர்மாறாக இருக்கும். காரணம், நாம் வெயிலில் அதிகமாக செல்லும்போது, நாம் ஆடை அணிந்திருக்கும் பகுதிகள் தவிர மற்ற இடங்களில் வெயில் படுவதால் கருப்பாக தெரிகிறது.
ஆனால், முகத்துக்கு கிரீம், பேஷியல் என அப்ளை செய்து கொஞ்சம் வெள்ளையாக்கி விடுகிறோம். அதே, கவனத்தை கொஞ்சம் கைகளிலும் செலுத்தினால் கருப்பாக இருக்கும் கைகளை வெள்ளையாக்கி விடலாம். என்ன செய்யலாம்?

1. தயிருடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து, அவற்றை மாலை வேளைகளில் கைகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமையை படிப்படியாகப் போக்கலாம்.
2. தக்காளியை வெட்டி, அதனை கருமையாக உள்ள கைகளில் தேய்த்து 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் அதில் உள்ள அமிலம் கைகளில் உள்ள கருமையை மறைக்கும்.
3. பாதாமை இரவில் படுக்கும்போது சிறிது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பால் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இச்செயலை தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, கைகளும் மென்மையாக இருக்கும்.
4. பப்பாளியில் சரும கருமையைப் போக்கும் பொருள் உள்ளது. எனவே, பப்பாளியை அரைத்து அந்த பேஸ்ட்டை கைகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர, கைகள் வெள்ளையாகும்.

5. மஞ்சள் தூளில் சரிசம அளவில் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து கழுவினால், வெயிலால் கருமையடைந்த கைகளை வெள்ளையாக்கலாம்.
6. கற்றாழை ஜெல்லை தினமும் கைகளில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், கருமையைப் போக்கி கைகளின் நிறத்தை அதிகரிக்கலாம்.
- பெண்கள் தங்களது முகத்தை அழகாக காட்டுவதற்கு முயல்வார்கள்.
- தேன் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஸ் பேக்.
முக அழகை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. எப்போதும் பிரகாசமாக வைத்துக்கொள்வதற்காக அழகு நிலையங்களுக்குச் செல்வது என்பது தற்போது அனைத்து தரப்பட்ட பெண்களிடம் மிகவும் பிரபலமாகி உள்ளது. அதோடு மட்டுமின்றி வீட்டிலேயே சில ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்தியும் பெண்கள் தங்களது முகத்தை அழகாக காட்டுவதற்கு முயல்வார்கள். இதுபோன்ற மேற்கொள்பவர்களாக நீங்கள்? இனி எந்த சிரமமும் வேண்டாம் வீட்டில் உள்ள தேன் உள்ளிட்ட சில பொருள்களைப் பயன்படுத்தி சருமத்தை மிருதுவாக்க முடியும் தெரியுமா?
ஆம் தேனில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், நியாசின், வைட்டமின் பி 6, வைட்டமின் சி, பிரக்டோஸ், தாதுக்கள், அமிலங்கள் என முக்கிய ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தோடு சருமத்தையும் பாதுகாப்பதற்கு உதவியாக உள்ளது. தேனைப் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஸ் பேக் என்பது குறித்து அறிந்துக் கொள்வோம்…
தேவையான பொருட்கள்
மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்
காபி தூள்- ஒரு ஸ்பூன்
தேன் ஒரு ஸ்பூன்
கடலை மாவு- ஒரு ஸ்பூன்
பால்- 2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள்தூள், காபி தூள், கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் பால் மற்றும் தேன் கலந்து ஒரு பேஸ்ட் போல செய்துகொள்ள வேண்டும்.
இந்த ஃபேஸ் பேக்கை முகத்தை சுத்தம் செய்துவிட்டு பின்னர் முகத்தில் 10-ல் இருந்து 15 நிமிடம் வைத்திருந்து பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவருவதன் மூலம் முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் இருப்பதை நீங்களே உணருவீர்கள்.
- பலவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
- வீட்டிலேயே ஹேர் கன்டிஷர் செய்யலாம்.
அனைவருமே கூந்தலை பராமரிக்க பல வழிகளை மேற்கொண்டு வருகிறோம். கூந்தல் மென்மையாகவும் நீளமாகவும் இருப்பதற்கு கடைகளில் கிடைக்கும் பலவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இவை அனைத்தும் நம் தலைமுடிக்கு நிரந்தரமானவை அல்ல என்பது நம்மில் பலபேருக்கு தெரிவதில்லை. எனவே எந்தவொரு பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு அளிப்பது இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்கள் மட்டுமே. எனவே, அந்த வகையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே ஹேர் கன்டிஷர் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
ஆலிவ் எண்ணெய்- 2 ஸ்பூன்
கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் முடியின் அளவிற்கு ஏற்ற அளவில் கற்றாழை ஜெல் மற்றும் ஆலிவ் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இவற்றை நன்றாக கலந்து கொண்டு, முடியின் வேர்க்கால்களில் இருந்து முடியின் நுனிபகுதி வரை நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.
அதன்பிறகு, ஒரு துண்டினை மிதமான வெந்நீரில் நனைத்து தலைமுடியில் 30 நிமிடங்கள் வரை கட்டிவிட வேண்டும். பின்னர் இறுதியாக, தலைமுடியை எப்போதும் போல் ஷாம்பு போட்டு சுத்தம் செய்து விட வேண்டும்.
முக்கிய குறிப்புகள்:
* எண்ணெய் பசையுள்ள தலைமுடியில் இந்த ஹேர் கண்டிஷரை பயன்படுத்த கூடாது.
* உலர்ந்த தலைமுடியில் பயன்படுத்தக் கூடாது. ஈரமாக உள்ள தலைமுடியில் மட்டுமே அப்ளை செய்ய வேண்டும்.
* கண்டிஷரை தயாரித்தவுடனே பயன்படுத்த வேண்டும். நீண்ட நேரம் வைத்து விட்டு பிறகு பயன்படுத்த கூடாது.
- மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள்.
- ஈரப்பதமூட்டும் பாடி லோஷனையும் பயன்படுத்துங்கள்.
குளிர்காலங்களில் வறண்ட வானிலை இருக்கும் போது சருமத்தை இளமையாகக் காண்பிக்க உங்கள் சிறந்த நண்பராக மாய்ஸ்சரைசர் இருக்கும். அதேநேரம் இயற்கையான சருமத்திற்கு ஏற்ற எண்ணெய்களை பயன்படுத்தவும். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் உங்கள் முக அலங்காரத்திற்கு மட்டுமல்லாமல் தோல் பராமரிப்பு ஒழுங்குமுறையின் ஒரு கருவியாக மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள்.
கூடுதலாக ஹைட்ரேட்டிங் நைட் க்ரீம் மற்றும் கண்களுக்குக் கீழ் சீரம் பயன்படுத்துவது மென்மையான சருமத்தை ஈரப்பதம் இழப்பில் இருந்து திறம்பட பாதுகாக்கும்.
சூடான குளியல் தவிர்க்கவும்
ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க அதிகபட்சமாக ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஷவர் பயன்படுத்தாதீர்கள். சருமத்தை நீண்ட நேரம் அழகாக வைத்திருக்கக்கூடிய ஈரப்பதமூட்டும் பாடி வாஷைத் தேர்வு செய்யவும். குளித்த பிறகு சருமத்தை தேய்ப்பதை விட உலர வைக்கவும். ஈரப்பதமூட்டும் பாடி லோஷனையும் பயன்படுத்துங்கள்.
இரவில் ஃபேஸ் மாஸ்க் அல்லது க்ரீமை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளவும். குளிர்காலத்தில் தோல் வெடிப்பு கவலை தரும்போது உங்கள் முகம், கழுத்து மற்றும் மார்பிற்கு மேல் ஈரப்பதமூட்டும் நைட் கிரீம் தடவுங்கள்.

சன்ஸ்கிரீன் பயன்பாடு
குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால் பலர் சன்ஸ்கிரீனின் முக்கியத்துவத்தை உணர்வதில்லை. எனினும் கூட உங்கள் சருமத்தை சேதத்தில் இருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீனின் தேவை மாறவில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

கற்றாழை பயன்பாடு
கற்றாழை இனிமையான பண்புகளைக் கொண்டுள்ளது. இது எரிச்சலூட்டும் சருமத்தை நிவர்த்தி செய்வதற்கான சரியான தேர்வாக அமைகிறது. உங்கள் சருமத்திற்கு கூடுதல் ஈரப்பதத்தை வழங்கச் சில துளி தேங்காய் அல்லது வைட்டமின் ஈ எண்ணெயைச் சேர்ப்பதன் மூலம் அதன் நன்மைகளை அதிகரிக்க செய்யும். இந்தக் கலவையானது உங்கள் சருமத்தை மென்மையாக்குவது மட்டுமல்லாமல் நச்சுகளை அகற்றவும் உதவுகிறது.
- நரம்பியல் மண்டலத்தைத் தூண்டக்கூடிய சக்தி கொண்டது குங்குமப்பூ.
- உடல் முழுமையாக கிரகித்துக்கொள்ள குங்குமப்பூ உதவும்.
குழந்தை அழகாக, சிவப்பாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக, கர்ப்ப காலத்தில் மட்டுமே நினைவில் வைத்துக் கொள்ளப்படுகிற குங்குமப்பூவுக்கு வேறு சில பலன்களும் உள்ளன.

மிக முக்கியமாக நரம்பியல் மண்டலத்தைத் தூண்டக்கூடிய சக்தி கொண்டது குங்குமப்பூ. வலிப்புநோய் மாதிரியான தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு கூட இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சிறிதளவு குங்குமப்பூவை பாலில் சேர்த்துக் கொதிக்க வைத்து குடிக்கலாம். வெற்றிலை போடும் பழக்கமுள்ளவர்கள், வெற்றிலையோடு சிறிது குங்குமப்பூ, ஏலக்காய் சேர்த்துச் சாப்பிட்டால் பசி உணர்வு தூண்டப்படும். சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில மாத்திரைகளையும் வெற்றிலையோடு சேர்த்துச் சாப்பிடலாம்.
நுண்ணூட்டச்சத்துகளை உடல் முழுமையாக கிரகித்துக்கொள்ள குங்குமப்பூ உதவும். வளர்சிதை மாற்ற இயக்கத்தைச் சீராக வைக்கும். சுவாசப்பாதை கோளாறுகள் உள்ளவர்கள், வீசிங் பிரச்சினை உள்ளவர்கள் வெற்றிலையோடு குங்குமப்பூவும் மிளகும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். நீர்க்கோவை மாத்திரை போல குங்குமப்பூவை அரைத்து பற்றுப்போட தலைவலி குணமாகும்.
சிலர் எப்போதும் அதீத சிந்தனையில் இருப்பார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு சரியான தூக்கம் இருக்காது. ஸ்ட்ரெஸ்சும் இருக்கும். எந்த காரணத்துக்காக தூக்கம் இல்லாவிட்டாலும் குங்குமப்பூ உதவும் என அர்த்தமில்லை. நரம்பு தொடர்பான பிரச்சினைகளால் தூக்கமின்றி தவிப்போருக்கு, குங்குமப்பூ நல்ல ஆழ்ந்த உறக்கத்தையும் அமைதியையும் தரும்.

சருமப் பளபளப்புக்கான தன்மைகள் கொண்டது குங்குமப்பூ. வைட்டமின் ஈ, குளுட்டோதயாமின் போன்ற சரும அழகுக்கான தன்மைகள் உள்ளதால், சருமத்தை மென்மை யாக்கும். சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் குங்குமாதி லேபம் என்பது மிகவும் பிரபலம்.
குங்குமப்பூவில் இருந்து தயாரிக்கப்படும் அந்த தைலத்தை வெளிப்பூச்சாக பூசிக்கொள்ளும்போது சருமம் பளபளப்பாக மாறும். கர்ப்பிணிகள் குங்குமப்பூவை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இரண்டு, மூன்று இதழ்களில் தொடங்கி, 15 இதழ்கள் வரை எடுத்துக்கொள்ளலாம்.
பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்கவும் ப்ளீடிங் அதிகரிக்காமல் இருக்கவும் குங்குமப்பூ உதவும். இத்தனை நல்ல தன்மைகள் இருந்தாலும் குங்குமப்பூவில் நிறைய கலப்படங்கள் வருகின்றன. தேங்காய்ப்பூவை சாயமேற்றி குங்குமப்பூ என்ற பெயரில் விற்கிறார்கள். தரமான குங்குமப்பூவை, அளவோடு உபயோகிக்கும்போது அது அருமருந்தாக வேலை செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
- போதிய வலுவில்லாமல் நகங்கள் அடிக்கடி உடைந்து போகும்.
- அக்ரிலிக் நகங்கள்' எனப்படும் செயற்கை நகங்கள்.
விரல்களின் மகுடமாக இருப்பவை நகங்கள். பெண்கள் முக்கியத்துவம் கொடுப்பது நகங்களுக்குத்தான். பலருக்கும் நகங்களை நீளமாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், போதிய வலுவில்லாமல் நகங்கள் அடிக்கடி உடைந்து போகும். இதற்கு தீர்வாக வந்திருப்பது தான் 'அக்ரிலிக் நகங்கள்' எனப்படும் செயற்கை நகங்கள்.
பண்டிகைகள், விசேஷங்கள், விருந்து போன்ற முக்கிய தருணங்களில் பெண்கள் தங்கள் கைகளை அழகுபடுத்த இந்த நகங்களை உபயோகிக்கலாம்.
அக்ரிலிக் நகங்கள் என்பது பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட நகங்களைப் போலவே இருக்கும். மோனோமர் திரவம் மற்றும் பாலிமர் தூள், இவை இரண்டையும் சேர்த்து கலந்தால் ஜெல் வடிவ கலவை கிடைக்கும். அதை விரல்களில் உள்ள இயற்கையான நகங்களின் மீது பிரஷ் கொண்டு சீராக பூச வேண்டும். அது சற்று உலர்ந்த பின்பு, அதை உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வடிவமைத்துக் கொள்ளலாம்.
இந்த ஜெல் நகத்தில் அழுத்தமாக ஒட்டிக்கொள்ளும். எனவே அக்ரிலிக் நகங்கள் பிரிந்து வந்துவிடுமோ என்று கவலைப்பட தேவையில்லை.
இயற்கையான நகங்களின் ஓரங்களை சீர்ப்படுத்தி, மெனிக்யூர் செய்த பின்பு அகரிலிக் கலவையைப் பூசி. விரும்பிய வடிவத்துக்கு கொண்டு வரலாம். அது நன்றாக உலர்ந்தவுடன், அதில் விரும்பிய டிசைன்களை வரையலாம். மணிகளை ஒட்ட வைத்தும் அலங்கரிக்கலாம்.
முதல்முறையாக அக்ரிலிக் நகங்களை அணிந்துகொள்ள விரும்புபவர்கள், மெல்லிய அடுக்காக நகங்களை வடிவமைக்கலாம். இது இலகுவாக இருப்பதோடு இயற்கையான நகங்கள் போன்ற தோற்றத்தையும் அளிக்கும். இந்த வகை நகங்களை பராமரிப்பதும் எளிதாகும்.

அக்ரிலிக் நகங்களை ஓட்டுவதற்கு முன்பு, இயற்கையான நகங்களை சீராக வெட்டி சுத்தப்படுத்த வேண்டும். அவற்றை அதிகமாக டிரிம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் இயற்கையான நகத்துக்கும். அக்ரிலிக் நகத்துக்கும் உள்ள இடைவெளி நன்றாகத் தெரியும்.
அக்ரிலிக் நகங்களை நீளமாக வடிவமைப்பதைத் தவிர்க்க வேண்டும். நீளமான செயற்கை நகங்களை நீண்ட நாட்களுக்கு பராமரிக்க முடியாது. தினசரி வேலைகளில் ஈடுபடும் போது, நீளமான நகங்கள் அசவுகரியத்தை ஏற்படுத்தும். எளிதாக உடையும். எனவே. முடிந்தவரை நீளம் குறைவாக இருக்கும் வகையில் அக்ரிலிக் நகங்களை அமைத்துக் கொள்ளலாம். ஓவல் வடிய நகங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
வழக்கமான வீட்டு வேலைகள் செய்யும்போது, கைகளில் கையுறை அணிவது அவசியமாகும். இது நகங்களை சேதமடையாமலும், நகத்துக்குள் தொற்று ஏற்படாமலும் பாதுகாக்கும். அக்ரிலிக் நகங்களை வாயில் வைத்து கடிக்கக்கூடாது. நகத்தை பயன்படுத்தி சுவிட்சுகளை இயக்குவது. கடினமான பொருட்களை திறப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
அக்ரிலிக் நகங்களை வடிவமைக்க ரசாயன ஜெல்லை பயன்படுத்துவதால் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதை உபயோகிக்க வேண்டும். கர்ப்பிணிகள் அக்ரிலிக் நகங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.






