என் மலர்
சமையல்
- சேமியாவில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று சேமியா முட்டை பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சேமியா - 1 கப்
நெய் - 3 டீஸ்பூன்
பட்டை - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
முட்டை - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சேமியாவை நெய் விட்டு வறுத்து கொள்ள வேண்டும்.
அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி போட்டு குழைய வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி பின்பு முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும்.
இதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவேண்டும்.
கொதித்த பிறகு, வறுத்த சேமியாவை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.
சேமியா நன்கு வெந்தபிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான சேமியா முட்டை பிரியாணி தயார்.
- தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
- சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ.
முருங்கைக்காய் - 4.
வெங்காயம் - 200 கிராம்.
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4.
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்.
மிளகுத் தூள் - 4 டீ ஸ்பூன்.
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
மிளகாய் வற்றல் - 6.
கொத்தமல்லி இலை - 1 கப்.
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்.
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - 1 குழிக்கரண்டி.
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
முருங்கைக்காயையும் துண்டுகளாக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, முருங்கைக்காய், சிக்கன் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
சிக்கன், முருங்கைக்காய் நன்கு வெந்ததும், மிளகுத் தூளைச் சேர்த்துக் கிளறவும்.
கிரேவி திக்கான பதம் வந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இப்போது முருங்கைக்காய் பெப்பர் சிக்கன் கிரேவி ரெடி.
- டீ, காபியுடன் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இது.
- குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 5
கேரட் - 1
கோஸ் - 50 கிராம்
குடைமிளகாய் - 1
சீஸ் - 1 கப் துருவியது
பச்சை மிளகாய் - 2
பூண்டு விழுது - அரை ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
பிரெட் - 12 துண்டுகள்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ப.மிளகாய், கோஸ், குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கோஸ்,குடைமிளகாய் போட்டு அதனுடன் துருவிய சீஸ், பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, அதனை நீரில் நனைத்து, பிழிந்து விட்டு ஒரு தட்டில் வைத்து, அதன் நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து, பந்து போன்று உருட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, நன்றாக காய்ந்ததும், அதில் உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான சீஸ் வெஜிடபிள் போண்டா தயார்.
- குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இதை செய்யலாம்.
- குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தான ஸ்நாக்ஸ் இது.
தேவையான பொருட்கள் :
மாவு தயாரிக்க:
மைதா - 2 கப்
நெய் - 1/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
ஸ்டஃப் செய்ய:
டார்க் சாக்லேட் - 1 கப்
உலர்ந்த தேங்காய் - 1/4 கப்
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
பாதாம் - 1/2 கப்
வெல்லம் - 1 மேஜைக்கரண்டி
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு அதனுடன் நெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
டார்க் சாக்லேட்டை துருவிக் கொள்ளவும்.
ஒரு பௌலில் துருவிய டார்க் சாக்லேட், தேங்காய், பாதாம் மற்றும் வெல்லம் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டி போல் தேய்த்து கொள்ளவும்.
சாக்லேட் தேங்காய் கலவையை தேய்த்து வைத்துள்ள ரொட்டியில் நடுவில் வைத்து ஸ்டஃப் செய்யவும். அதன் ஓரங்களில் தண்ணீர் சேர்த்து நன்கு ஓட்டி வைக்கவும்.
அடுப்பில் அகலமான பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேய்த்து வைத்த குஜியாவை போட்டு பொன்னிறமாக வரும் வரை வைத்திருந்து எடுக்கவும்.
சூப்பரான சாக்லேட் குஜியா ரெடி.
- கேரளாவில் மிகவும் பிரபலம் சர்க்கரை உப்பேரி அல்லது சர்க்கரை வரட்டி.
- கேரளாவில் அனைத்து பண்டிகை, திருமணங்களுக்கும் இது அவசியம்.
தேவையான பொருட்கள் :
பெரிய வாழைக்காய் - 4
வெல்லம் / வெல்லத்தூள் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
சுக்குத்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
சீரகம் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை :
வாழைக்காயைத் தோல் சீவி ஒரு சென்டிமீட்டர் கனத்திற்கு அரை வட்டங்களாக நறுக்கி, தட்டில் பரப்பி 10 நிமிடங்கள் உலர விடவும்.
வாணலியில் எண்ணெய் காய விட்டு வாழைக்காய்த் துண்டுகளைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, சத்தம் அடங்கும் வரை பொறுமையாக பொரித்தெடுக்கவும். எண்ணெயை வடித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் சூடான வெந்நீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டவும்.
பிறகு, வெல்லக் கரைசலைக் கொதிக்க வைத்து ஒரு கம்பிப் பதத்திற்குப் பாகு காய்ச்சி இறக்கவும்.
அதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள், சீரகத்தூள் சேர்த்து கலக்கவும் .
பிறகு வாழைக்காய் சிப்ஸுடன் சேர்த்துக் கலக்கவும்.
ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, பொடித்த சர்க்கரைத் தூவலாம்.
இப்போது சர்க்கரை வரட்டி ரெடி.
- தேங்காய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களும் நல்ல கொழுப்பும் அதிகமாக இருக்கிறது.
- தேங்காய்ப்பாலில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள் :
தேங்காய் - 1 பெரியது
பச்சரிசி - 3 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
முந்தரி பருப்பு - 10 கிராம்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 2 ஸ்பூன்
நாட்டு சர்க்கரை - 1 கப்
செய்முறை :
பச்சரிசியை அரை மணிநேரம் ஊற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
தேங்காயை சிறிய துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு கெட்டியான தேங்காய் பாலை எடுக்கவும்.
ஒரு பத்தை தேங்காய் எடுத்து பொடியாக நறுக்கி தனியாக வைத்து கொள்ளவும்.
கடாயில் இரண்டு ஸ்பூன் நெய்யை ஊற்றி முந்தரி பருப்பை இரண்டாக உடைத்து லேசாக வறுக்கவும், பின்பு பொடியாக நறுக்கிய தேங்காய் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
கடாயில் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் போட்டு உருகியதும் ஒரு கப் திக்கான தேங்காய் பாலை எடுத்து ஊற்ற வேண்டும்.
தேங்காய் பால் நன்றாக கிளறி விட்டு அதில் அரைத்த பச்சரிசி மாவை ஊற்றவும். நன்றாக கலக்கிய பின் நாட்டு சர்க்கரையை போட்டு கிளற வேண்டும்.
அடுப்பை சிம்மில் வைத்தே செய்ய வேண்டும் தொடர்ந்து இடைவிடாமல் 15 நிமிடம் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் பிறகு ஏலக்காய் தூளை சேர்த்து மீண்டும் நல்ல கிளறி விடவும்.
கட்டியில்லாமல் விடாமல் நன்றாக கிளறி கொண்டே இருந்தால் அல்வா பதத்திற்கு நன்று சுருண்டு தேங்காய் பால் அல்வா வந்து விடும்.
கரண்டியால் கிளறும் போது நன்கு சுருண்டு வரும் நிலையில் வறுத்த தேங்காய் மற்றும் முந்தரி பருப்பை போட்டு இறக்கி விடவும்.
இப்போது சுவையான புதுமையான தேங்காய் பால் அல்வா ரெடி!
- குழந்தைகளுக்கு பர்ஃபி என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று பிஸ்தா பர்ஃபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிஸ்தா பருப்பு (உப்பில்லாதது) - 1 டம்ளர்
சர்க்கரை - 2 1/2 டம்ளர்
நெய் - 1/4 டம்ளர்
நீர் - 3/4 டம்ளர்
ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு வாணலியில் நெய்யை விட்டுப் பிஸ்தா பருப்புகளை ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கவும். ஆற வைத்துப் பிஸ்தாவை மிக்சியில் போட்டு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
சர்க்கரையைக் கொடுக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவைப் பயன்படுத்திப் பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
பாகில் அரைத்தப் பிஸ்தாக் கலவையைக் கொட்டிக் கிளறவும். அடிக்கடி சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.
ஒட்டாமல் கெட்டியான பதம் வந்ததும் ஏலக்காய்த்தூளைக் கலந்து நெய்யை விட்டுக் கிளறி வேறு நெய் தடவிய தட்டிற்கு மாற்றி ஆற விட்டு வில்லைகள் போடவும்.
சுவையான பிஸ்தா பர்ஃபி தயார்.
- குழந்தைகளுக்கு உணவுகளை வித்தியாசமான செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
- இன்று சிக்கன் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் கொத்துக்கறி - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிள்காய் தூள் - 2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 1
கரம்மசாலாத்தூள் - 1 சிட்டிகை
எண்ணெய், உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி - சிறிதளவு
முட்டை - 1
தோசை மாவு - 1 கப்
செய்முறை:
சிக்கன் கொத்துக்கறியை நன்றாக கழுவி வைக்கவும்.
சின்ன வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், சேர்த்து வதக்கவும் பின்பு கொத்துக்கறியை போட்டு வதக்கி உப்பு தண்ணீர் சேர்த்து வேகவிட்டு சுருண்டு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
தோசைக்கல்லை காயவைத்து மாவை கனமான தோசையாக வார்த்து அதன் மேல் கொத்துக்கறி கலவையை பரப்பி அதன் மேல் முட்டையை அடித்து ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
சுவையான சிக்கன் தோசை தயார்.
- குழந்தைகளுக்கு இட்லி பிடிக்காது.
- இட்லியை கபாப் போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
மினி இட்லி - பத்து
வெங்காயம் - ஒன்று
தயிர் - இரண்டு டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
தனியா தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
சர்க்கரை - கால் டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
இடித்த பூண்டு - இரண்டு பல்
எண்ணெய் - தேவையான அளவு
குடை மிளகாய் - ஒன்று
கபாப் ஸ்டிக் - இரண்டு
செய்முறை
குடைமிளகாய், வெங்காயத்தை வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் தயிர், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, இடித்த பூண்டு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.பிறகு, அதில் இட்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின், தவாவில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் கபாப் ஸ்டிக் எடுத்து அதில் குடை மிளகாய் ஒரு துண்டு, இட்லி இரண்டு, வெங்காயம் ஒன்று, இட்லி இரண்டு, குடை மிளகாய் ஒன்று என்ற வரிசையில் ஒவ்வொன்றாக சொருவி தவாவில் வைத்து சிறு தீயில் வைத்து வேக விடவும்.
ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான இட்லி கபாப் ரெடி.
- சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- இன்று தினை அரிசியில் சர்க்கரை பொங்கல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
தினை - 1 டம்ளர்
பாசிப்பருப்பு - 1/4 டம்ளர்
தண்ணீர் - 4 1/2 டம்ளர்
வெல்லம் - 1 டம்ளர் (பொடித்தது)
ஏலக்காய் - 4
தேங்காய் துருவல் - 1/4 டம்ளர்
முந்திரி பருப்பு - 6-8
செய்முறை
தினை மற்றும் பாசிப்பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில், 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
பாசிப்பருப்பை கொதிக்கும் நீரில் போட்டு வேகவைக்கவும்.
பாசிப்பருப்பு பாதி வெந்த பின்னர், தினை அரிசியை போட்டு, மீதமுள்ள 3 1/2 குவளை தண்ணீரையும் ஊற்றவும். இடையிடையே அடிபிடிக்காமல் கிளறி விடவும்.
தூளாக்கிய வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு 1/4 குவளை நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு அதை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். சுத்தமான வெல்லமாக இருந்தால் அப்படியே பயன்படுத்தலாம்.
முந்திரி பருப்பை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
தினை அரிசியும், பாசிப்பருப்பும் நன்றாக வெந்து, குழைவான பதத்தை அடைந்ததும், அதில் பொடித்து வைத்துள்ள வெல்லம் அல்லது வெல்லக் கரைசலை சேர்த்து நன்றாக கிளறவும்.
ஒரு ஐந்து நிமிடம் வரை அடுப்பில் வைத்திருந்து பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.
அதில் ஏலக்காய் தூள் மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து கிளறவும்.
தேவைப்பட்டால், பொங்கல் சூடு சற்று குறைந்ததும், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி சாப்பிடவும்.
இப்போது சூப்பரான திணை சர்க்கரை பொங்கல் ரெடி.
- சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது உருளைக்கிழங்கு சிப்ஸ்.
- வீட்டிலேயே எளிய முறையில் இதை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 3 கிலோ,
எண்ணெய் - ஒரு கிலோ,
மிளகாய் பொடி - 5 தேக்கரண்டி,
பெருங்காயம் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
உருளைக்கிழங்கின் மேல் தோலை சுரண்டி அல்லது மேலாக சீவி கழுவி வைத்து கொள்ளவேண்டும்.
பின்னர் தோல் சீவிய கிழங்கை சிப்ஸ் சீவும் கட்டை மூலம் சீவி எடுத்து சுத்தமான ஒரு மென்மையான துணியில் ஈரம்போக ஒற்றி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பில் இரும்பு சட்டியில் பொரித்து எடுக்கும் அளவில் எண்ணெய் ஊற்றி காய விட வேண்டும்.
எண்ணெய் காய்ந்ததும் சீவிய கிழங்குகளை அதில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
மிளகாய் தூள், மஞ்சள்பொடி, உப்புத்தூள் ஆகியவற்றை பொரித்து வைத்துள்ள சிப்ஸ் மீது தூவி நன்றாக கலந்து விட்டு ஆற விடவேண்டும்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்ததும் பாலித்தீன் பைகளில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை சாப்பிடலாம்.
- வாழைப்பழத்தில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று வாழைப்பழத்தில் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 8
சர்க்கரை - ஒரு கப்
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
பாதாம் - 5
முந்திரி - 5
சோள மாவு - 5 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் வாழைப்பழத்தை மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு உருகியதும் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி வறுத்து தனியாக வைக்கவும்.
அதே வாணலியில் நெய்விட்டு உருகியதும், வாழைப்பழ விழுதை சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்..
வாழைப்பழம் பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் சர்க்கரை சேர்த்து நன்றாக கரைத்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
ஒரு கிண்ணத்தில் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து வாழைப்பழ கலவையுடன் சேர்த்து கிளறவும்.
இடை இடையே நெய் சேர்க்கவும்.
அல்வா பதத்திற்கு வந்ததும், வறுத்து வைத்து பாதாம், முந்திரியை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறலாம்.
சுவையான வாழைப்பழ அல்வா ரெடி..!.






