என் மலர்
பொது மருத்துவம்

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாமா? உண்மையா?
உலகின் பலதரப்பட்ட மக்களும் ஆப்பிளை எடுத்துக்கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் கிட்டத்தட்ட 100 மில்லியன் டன் ஆப்பிள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. "An apple a day keeps the doctor away". அதாவது ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்லவே வேண்டாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நீண்டகாலமாக சொல்லப்பட்டு வரும் இந்த தொடர் உண்மையா? உண்மையில் தினசரி ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை சந்திக்க நேராதா? பார்ப்போம்.
இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
ஆப்பிளை தோலுடன் எடுத்துக்கொள்வதுதான் அதிக நன்மை பயக்கும். ஆப்பிள்கள் நார்ச்சத்து, பாலிபினால்கள் மற்றும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் பிற ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும். தினசரி ஒரு ஆப்பிள் எடுத்துக்கொள்வது இதயநோய் அபாயத்தை குறைப்பதோடு அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற ஆபத்து காரணிகளையும் குறைக்கிறது. மேலும் தினசரி ஆப்பிள் சாப்பிடுவது இதயநோயால் இறக்கும் அபாயத்தை 25% குறைக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.
செரிமானத்தை மேம்படுத்தும்
ஆப்பிள்கள் பெக்டினின் நல்ல மூலமாகும். இது கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும். இது செரிமானத்தை மேம்படுத்தும். பெக்டின் குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு ப்ரீபயாடிக்காவும் செயல்படுகிறது.
எடை இழப்பு
ஆப்பிள்களில் நீர் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருந்தாலும் கலோரிகள் குறைவாக உள்ளன. இதனால் தினசரி கலோரி உட்கொள்ளல் குறையும். நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்வது எடை இழப்புக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நீரிழிவு நோயை தடுக்கலாம்
ஆப்பிள், பேரிக்காய் எடுத்துக்கொள்வது வகை 2 நீரிழிவு நோய் ஆபத்தை 18% குறைக்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது. வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டாலும் நீரிழிவு நோய் அபாயத்தை 3% குறைக்கமுடியும் என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஆப்பிளில் உள்ள குர்செடின் உள்ளிட்ட ஃபிளாவனாய்டுகளின் செறிவு ஆகும். இது இரத்த சர்க்கரையை குறைக்கவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவும். ஆப்பிளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள் செரிமானமாவதையும், இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதையும் மெதுவாக்குவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுத்து, நீரிழிவு நோயைத் தடுக்க உதவும்.
தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுவது இதயநோயால் இறக்கும் அபாயத்தை 25% குறைக்கிறது
புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்
ஆப்பிள்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதன் மூலம் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கின்றன. கூடுதலாக, ஆப்பிளில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை மெதுவாக்கவும், அவை பெருகுவதைத் தடுக்கவும் உதவும் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிளில் காணப்படும் நார்ச்சத்து பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவும் .
மூளை ஆரோக்கியம்
பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் அறிவாற்றல் செயல்பாட்டிற்கு பயனளிக்கக்கூடும், குறிப்பாக வயதானவர்களுக்கு. ஆப்பிளில் உள்ள குர்செடின் மூளையில் உள்ள நியூரான்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கவும், அல்சைமர் நோயைத் தடுக்கவும் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அபாயங்கள்
ஆப்பிள்களை சரியான அளவு எடுத்துக்கொள்வது எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. ஆனால் சிலருக்கு ஆப்பிள் சாப்பிட்ட பிறகு வீக்கம், வாயு பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஏனெனில் ஆப்பிளில் செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய பிரக்டோஸ் மோனோசாக்கரைடும், சர்பிடால் பாலியோலும் உள்ளது. ஆப்பிள் சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவர்கள் தவிர்த்துகொள்ளலாம். இறுதியில், ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு பலன்களை கொடுக்கும். ஆனால் அது வெறும் ஆப்பிள் சாப்பிடுவதை மட்டும் குறிப்பதல்ல. நாம் எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்து உணவின் ஒரு பகுதியாக ஆப்பிள் இருக்கவேண்டும். ஒட்டுமொத்தமாக ஒரு ஆப்பிள் சாப்பிட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடினால் கிடைக்காது.






