என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பெற்றோர் குழந்தைகளை செல்லமாக, கஷ்டம் தெரியாமல் வளர்க்க முயல்கின்றனர். இது குழந்தைகளிடத்தில் பல தவறான பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விடுகிறது.
    பெற்றோர் தங்களுக்கு எத்தனை குழந்தை இருந்தாலும் அத்தனை பேரையும் அதிக செல்லமாக, கஷ்ட நஷ்டம் தெரியாமல் வளர்க்க முயல்கின்றனர். இது குழந்தைகளிடத்தில் பல தவறான பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தவறாக வளர்ந்திருப்பதை, மிகத்தாமதமாகவே உணர்வர். இந்த தவறை குழந்தைகளிடத்தில் கவனித்து, அவர்களை திருத்த முனையவும் பெற்றோரே! குழந்தை தவறாக வளர்ந்துள்ளதை, உங்கள் வளர்ப்பு தப்பானதை காட்டும் குழந்தையின் செயல்களை பார்க்கலாம்..!

    1. குழந்தைக்கு அடிக்கடி பரிசுகளை அளிப்பது, அவர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும். பின் அவர்கள் ஒரு பொருளை உங்களிடம் கேட்டு நீங்கள் வாங்க தாமதமானாலோ அல்லது மறுத்தாலோ குழந்தை வெறி பிடித்தவரை போல் கத்தி, உங்களை மிரட்டி, உங்களிடம் சண்டை கூட போட நேரிடலாம்..!

    2. குழந்தைகளுக்கு, அவர்கள் கேட்டதையெல்லாம் நீங்கள் வாங்கித்தந்து விடுவது, அவர்களுக்கு கஷ்டம் என்ற ஒன்று இருப்பதே தெரியாமல் போகச் செய்துவிடும். இதனால் குழந்தைகளால் சிறு துயரத்தையும், தோல்வியையும் தாங்க முடியாத நிலை ஏற்படும்..!



    3. குழந்தை சிறு சிறு வேலை செய்வதற்கு நீங்கள் பணம் அல்லது சாக்லேட் அளித்து பழக்கப்படுத்துவது, அதனிடம் லஞ்ச குணத்தை ஏற்படுத்திவிடும். இது குழந்தை எந்த செயல் செய்தாலும், தனக்கு ஏதேனும் ஒரு பிரதிபலன் கிடைக்கும் என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்திவிடும். படிப்பில் ஊக்கப்படுத்த பொருள் அளிப்பது வேறு; உதவி செய்ய அல்லது அவர்தம் கடமையை செய்ய பொருள் அளிப்பது தவறு.!

    4. கூடப்பிறந்தவர்களுடனோ அல்லது சக தோழர்களுடனோ தகுந்த காரணம் இல்லாது அடிக்கடி குழந்தை சண்டை பிடித்தால், அது உங்கள் தவறான வளர்ப்பை சுட்டிக்காட்டும் ஒரு சிறந்த அறிகுறி..! தான் பெரியவன் மற்றவர்கள் சிறியவர்கள் என்ற அகம்பாவ குணத்தை இந்த சண்டைகளின் வெற்றி, குழந்தையின் மனதில் ஏற்படுத்திவிடும். ஆகையால், குழந்தைகள் வீணாக சண்டையிடுவதை தடுத்து கண்டிக்க வேண்டும்.!

    5. குழந்தைகளை நன்கு வளர்க்கவில்லையெனில் அது அவர்களிடத்தில் மரியாதையின்மையை ஏற்படுத்திவிடும். இதனால், குழந்தைகள் மற்றவர்கள் பெற்றோர்கள் என யாரையும் மதிக்காது, வளர்ந்து வாழ நேரிடும்..!

    6. குழந்தைகள் கவனிக்கப்படாமல், கண்டிக்காமல் வளர்க்கப்பட்டால், அவர்கள் செய்யும் செயல்களின் விளைவுகள் நல்லதா கெட்டதா என அறிந்து கொள்ளும் திறன் அவர்களில் வளராமல் போய், குழந்தையின் எதிர்காலம் கெட்டுவிடும்.! ஆகையால் குழந்தைகளை கண்டித்து வளருங்கள்; கண்டிப்பதால் உங்களுக்கு குழந்தையின் மீது பாசம் இல்லை என்றாகிவிடாது. கண்டிப்பினை அடியினால் அல்லாமல், அன்பான முறையில் கூட வெளிப்பதாலாம்.
    மாணவர்கள் வெற்றிகரமாக தேர்வை எழுதி முடிப்பதில், பெற்றோரின் பங்கு முக்கியமானது. பெற்றோர் தங்களது வீட்டில் படித்துவரும் பிள்ளைகளுக்கு போதிய வசதிகள் செய்து தரவேண்டும்.
    தேர்வுகளை எதிர்கொள்ள மாணவ, மாணவிகள் ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களை ஆசிரியர்களும், பெற்றோரும் தயார்படுத்தி வருகிறார்கள். இதே போல பள்ளிக்கல்வித் துறையும், தேர்வுத்துறையும் இணைந்து தேர்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக செய்து வருகின்றன.

    மார்ச், ஏப்ரல் மாதம் என்றாலே மாணவ, மாணவிகளுக்கு ஒருவித தேர்வு பயம், தேர்வு காய்ச்சல் வருவதுண்டு. இந்த தேர்வு பயம், காய்ச்சல், அச்சம், மனக்குழப்பம், மனஉளைச்சலை போக்க மனநல வல்லுனர்கள், கல்வி ஆலோசகர்கள் அடங்கிய குழு மாவட்டந்தோறும் பள்ளிகளுக்கு சென்று பயத்தை போக்க தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மாணவர்கள் வெற்றிகரமாக தேர்வை எழுதி முடிப்பதில், பெற்றோரின் பங்கு முக்கியமானது. பெற்றோர் தங்களது வீட்டில் படித்துவரும் பிள்ளைகளுக்கு போதிய வசதிகள் செய்து தரவேண்டும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

    தொலைக்காட்சிகள் பார்ப்பதை யும், விருந்தினர் வந்துபோவதையும் தவிர்க்க வேண்டும். வெளியூர் பயணங்களுக்கு திட்டமிடக் கூடாது. காபி, டீ, உணவு தயாரிப்பதை குறித்த நேரத்தில் செய்து, தேர்வு எழுதப்போகும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். பிள்ளைகளை தேர்வு மையத்துக்கும், தேர்வு முடிந்ததும் வீட்டுக்கும் அழைத்து வர வேண்டும்.

    இதே போல ஆசிரியர்கள் ஏறக்குறைய பத்து மாதங்களாக மாணவ, மாணவிகளுக்கு பாடம் சொல்லி கொடுத்திருப்பீர்கள். எந்த கேள்விக்கு எப்படி பதில் எழுத வேண்டும்? விரிவாக எழுத வேண்டுமா? அல்லது சுருக்கமாக எழுதினால் போதுமா? என்பது போன்ற விவரங்களை மாணவர்களுக்கு சொல்லி கொடுத்து இருப்பீர்கள். 100 சதவீத தேர்ச்சிக்கு பாடுபட வேண்டும். மிகவும் பின் தங்கியவர்கள் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை பெற வழிகாட்ட வேண்டும்.

    மாணவ, மாணவிகளுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களை உத்வேகப்படுத்த வேண்டும். இறுதி நேரத்தில் தேர்வுக்கு எப்படி தயார் செய்ய வேண்டும்? தேர்வு அறையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பது பற்றி மாணவர்களுக்கு கனிவோடு சொல்லிக்கொடுக்க வேண்டும்.



    மாணவர்களும் தங்களின் பத்து மாத உழைப்புக்கு பலன் கிடைக்க தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும். தேர்வு சமயங்களில் மாணவர்கள் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளை சாப்பிடக்கூடாது. நோய், நொடி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    தேர்வுக்கு முந்தையை நாள் புதிதாக எதுவும் படிக்காமல் தாங்கள் படித்ததை மீண்டும் திருப்பி பார்க்க வேண்டும். தேர்வு மையத்துக்கு 15 நிமிடம் முன்னதாகவே சென்றுவிட வேண்டும். தேர்வு அறையில் கண்காணிப்பாளர் கூறும் அறிவுரைபடி நடந்துகொள்ள வேண்டும். எவ்வித ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடாமல், தாங்கள் படித்ததை வைத்து திறமையாக தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

    கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை மட்டும் எழுத வேண்டும். விடுபடாமல் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். அப்போதுதான் மதிப்பெண் குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும். தேவை இல்லாத வண்ண மை பேனாக்களை பயன்படுத்தக் கூடாது. குறித்த நேரத்தில் தேர்வு எழுத தொடங்கி, குறித்த நேரத்தில் தேர்வை எழுதி முடித்துவிட வேண்டும்.

    தேர்வு எழுதி முடித்தபிறகு தாங்கள் எழுதிய விடை சரியானதா? தவறானதா? என்ற ஆராய்ச்சிக்குள் செல்லவே கூடாது. மாறாக, அடுத்த தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்வதே சாலச்சிறந்தது.

    இதே போல தேர்வறை கண்காணிப்பாளர்கள் மாணவர்களுக்கு தேவையில்லாத அச்சத்தை, இடையூறை உண்டு பண்ணக்கூடாது. சந்தேகப்படும் மாணவர்களை மட்டும் தனியாக அழைத்து பேச வேண்டும். மாணவர்கள் அமைதியாக தேர்வு எழுதி முடிக்க வேண்டும். இது தேர்வறை கண்காணிப்பாளர்கள் கையில் தான் உள்ளது.

    எனவே, அரசு பொதுத்தேர்வு என்பது அரசு அதிகாரிகள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களின் கூட்டு முயற்சியில், பொறுப்பில் தான் அமைந்துள்ளது. தேர்வு சிறப்பாக அமைந்திட அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். மாணவர்கள் புத்துணர்ச்சியோடு பொதுத்தேர்வை எதிர்கொள்ளட்டும்.

    கல்வியாளர் ஆர்.லட்சுமிநாராயணன்
    வாரத்தில் 35 மணி நேரத்திற்கு அதிகமாக, டிவி பார்க்கும் குழந்தைகளின் மனதில் முரட்டுத்தனமும், உடலில் பருமனும் கூடும் என, ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
    வாரத்தில் 35 மணி நேரத்திற்கு அதிகமாக, டிவி பார்க்கும் குழந்தைகளின் மனதில் முரட்டுத்தனமும், உடலில் பருமனும் கூடும் என, ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. குழந்தைகள் அதிக நேரம், டிவி பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அசோசம் சமூக மேம்பாட்டு அமைப்பு ஆய்வு நடத்தியது. சென்னை, மும்பை, டெல்லி, பாட்னா, சண்டிகார் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த 6 முதல் 17 வயது வரையிலான 2,000 பிள்ளைகளிடமும், 3,000 பெற்றோரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வறிக்கை அம்சங்கள்:-

    குழந்தைகள் வாரத்திற்கு 35 மணி நேரத்திற்கு அதிகமாக, டிவி பார்ப்பதால், அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. குழந்தைகள் முரட்டுத்தனத்துடனும் அதிக உடல் பருமனுடனும் இருப்பர். அவர்களுக்கு படிப்பதிலும் கவனம் சிதறும். ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு அதிகமாக, டிவி பார்ப்பதால், இந்த விளைவுகள் ஏற்படுகின்றன.



    ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக டிவி பார்ப்பது தான் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பாதுகாப்பானது. பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகள், டிவியில் வரும் விளம்பரங்களைப் பார்த்து, சத்துக் குறைவான உருளைக்கிழங்கு சிப்ஸ், குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதாக புகார் தெரிவித்துள்ளனர். டிவி நிகழ்ச்சிகளில் மோசமான வார்த்தைகளும், நாகரிகமற்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுவதாக, 90 சதவீத பெற்றோர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

    12 முதல் 18 வயது வரையிலான 54 சதவீத பிள்ளைகள், தங்கள் பெற்றோருடன் அமர்ந்து, டிவி பார்ப்பதையே விரும்புகின்றனர். “ரியாலிட்டி” ஷோக்களை 76 சதவீதம் பேர் விரும்புகின்றனர். பெரும்பாலான, டிவி நிகழ்ச்சிகளில் வன்முறை, ஆபாசம் உள்ளிட்டவை தலை தூக்கியுள்ளதாகவும், அவற்றை கட்டுப்படுத்தவேண்டும் என்றும், 60 சதவீத பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் வன்முறை பாதைக்கு செல்வதற்கு, டிவி நிகழ்ச்சிகள் தூண்டுகின்றன என்று 10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

    ஆகவே, குழந்தைகளை டிவி பார்க்க அனுமதியுங்கள், அளவோடு.
    மாணவர்கள் தேர்வு தரும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு தேர்வில் ஜெயிக்க வைக்கும் மந்திரமொழிகள் சிலவற்றை பார்க்கலாம்...
    தேர்வுகள் நம்மை தேர்ச்சி அடைய வைப்பதாக இருக்க வேண்டும். வாழ்வில் உயர்ச்சியைத் தரும் படிக்கல்லாக அமைய வேண்டும். மாறாக, தேம்பி நிற்கச் செய்யும், கவலையில் தோய்க்கும் ஒரு விரோதியாக தேர்வுகள் இருந்துவிடக்கூடாது. தேர்வுகள் நம்மை ஆட்டி வைக்காமல் இருக்க நாம் அதைக் கண்டு பயப்படாமல் இருப்பதே முதல் வழி. தேர்வை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற பயமே, மன அழுத்தமாக மாறி, பதற்றத்தைத் தந்து தோல்விக்கு வைத்துவிடுகிறது. தற்கொலைக்குள் தள்ளும் தைரியமற்ற தன்மையையும் வளர்த்துவிடுகிறது. தேர்வு தரும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு தேர்வில் ஜெயிக்க வைக்கும் மந்திரமொழிகள் சில...

    * தேர்வு என்பது உங்கள் கற்றல் திறனை சோதிக்கும் ஒரு பரீட்சை அவ்வளவுதான். தேர்வுடன் வாழ்வில் எதுவும் முடிந்துவிடுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எளிதில் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் எவ்வளவோ எளிய முறைகளை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். எளிமையான வினாக்கள், முக்கிய வினாக்கள், மனப்பாடப் பகுதிகள், அழகுபடுத்தும் உபாயம், படம் வரைதல் என பல்வேறு யுத்திகள் மூலம் எளிதில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையை மனதில் விதையுங்கள்.

    * தேர்வையும், எதிர்காலத்தையும் ஒப்பிட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். எதிர்காலம் எந்த வினாடியும் உங்கள் கைகளில்தான் இருக்கும். அதை எப்போது நினைத்தாலும் உங்கள் விருப்பப்படி மாற்றி அமைக்க முடியும், நீங்கள் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதிருந்தால் போதும். எனவே தேர்வு பயத்தை துரத்திவிட்டு நம்பிக்கையுடன் தேர்வை எழுதுங்கள். முந்தைய காலம்போல இல்லாமல், இப்போதெல்லாம் மறு தேர்வுகள் உடனே நடத்தப்படுகின்றன. அப்படியிருக்கும் போது எதற்கு அச்சப்பட வேண்டும்? ஏன் தவறான முடிவை எடுக்க வேண்டும். துணிவுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள், வெற்றி உங்களுக்கே.

    * விளையாட்டும், இசையும் மன அழுத்தத்தை மாயமாக்கும் மந்திர வழிகள். உங்களுக்குப் பிடித்த இசையைக் கேளுங்கள். நண்பர்களுடன் சிறிது நேரம் விளையாடி வாருங்கள். குடும்பத்தினருடன் கூடி இருந்து அரட்டையடியுங்கள். ஒரே அறையில் புத்தகங்களுடன் அடைந்து கிடக்க வேண்டாம்.



    * நண்பர்களை அழைத்து செல்போனில் புலம்பிக் கொண்டிருப்பது, ‘நான் பாஸாகி விடுவேனா?’ என்று நம்பிக்கையற்று இருப்பது, ‘பாஸாகாவிட்டால் அவ்வளவுதான்’ என்று எதிர்மறையாக நினைத்துக் கொண்டிருப்பது போன்றவற்றை கைவிடுங்கள். தியானம், யோகா செய்து மனதை அமைதிப்படுத்துங்கள். “நான் ஜெயிப்பேன்” என்ற நம்பிக்கையை மனதில் விதையுங்கள்.

    * தனிமையை தவிருங்கள். நண்பர்கள், குடும்பத்தினருடன் உரையாடுங்கள். இந்தத் தேர்வுதான் என் எதிர் காலத்தை தீர்மானிக்கும் என்ற எண்ணத்தை கைவிடுங் கள். “நான் தனிப்பட்டவன் அல்ல, எனக்காக குடும்பம் இருக்கிறது, உதவிக்கு நண்பர்கள் இருக்கிறார்கள், உறவுகள் இருக்கிறது. எனது சுக துக்கத்தில் அவர்கள் பங்கெடுப்பார்கள். அவர்களுக்காக நான் இருக்கிறேன்” என்ற சமூக மதிப்பை மனதில் வளர விடுங்கள். இது எதிர்மறை எண்ணங்களை விரட்டியடிக்கும்.

    * ‘எல்லாவற்றுக்கும் தீர்வு ஒன்று இருக்கிறது, மாற்று வழிகள் பல உண்டு’ என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். தீர்வு இல்லாத பிரச்சினை என்று எதுவுமில்லை. தேர்வில் ஜெயித்து, நான் அடைய வேண்டிய லட்சியம் அது ஒன்று மட்டும்தான் என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கட்டும். ஆனால் அது கைநழுவும் போது அதைவிட சிறந்த உயரத்தை எட்டும் நம்பிக்கையும் உங்கள் மனதில் இருக்கட்டும். மாறிக் கொண்டே இருக்கும் வாழ்க்கையில் மாற்று வாய்ப்புகள் பற்றியும் சிந்திப்பதே மகத்தான வெற்றிக்கு வழிவகுக்கும்.

    * எல்லாவற்றுக்கும் அடிப்படையாக உங்கள் மீது நீங்களே நம்பிக்கை கொண்டிருங்கள். உங்களை குறைத்து மதிப்பிடாமல் இருந்தாலே எதைப் பற்றிய அச்சமும் மனதில் எழுவதில்லை. உங்கள் பலவீனங்களை அறியுங்கள், ஆனால் அதில் மூழ்கிப்போகாமல் கடந்து வர முயற்சி செய்யுங்கள். அப்போது நீங்கள் வெற்றி சிகரத்தில் ஏறிக் கொண்டிருப்பீர்கள். பயம் அகலட்டும், வெற்றிகள் குவியட்டும். வாழ்த்துக்கள்!
    குழந்தைகளின் குறட்டைப்பழக்கத்திற்கு என்ன காரணம் என்பதை மருத்துவர்களிடம் காட்டி கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்.
    குழந்தைகளை எவ்வித குறையுமின்றி, நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுத்து, ஆரோக்கியமாக அவர்களை வளர்க்க வேண்டியது உங்கள் கடமையாகும். குழந்தைகளை சில பழக்கங்கள் பெரிதும் பாதிக்கின்றன. அவற்றை நீங்கள் அறிந்திருந்தும், அதனை சிலர் கண்டுகொள்வதில்லை. அவற்றை சரிசெய்ய பெரிதாய் அக்கறை காட்டுவதில்லை.

    அப்படிப்பட்ட குழந்தைகளின் மோசமான பழக்கங்கள் சில உள்ளன. குறிப்பாக குழந்தைகள் குறட்டை விடுவது. குறட்டை என்பது சுற்றி இருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடியது என்று மட்டுமே நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் குறட்டையால் உடலின் ஆரோக்கியத்திற்கு கெடுதல் ஏற்படுகிறது என்பதை அறிவது கிடையாது. குழந்தைகள் குறட்டை விட்டால், முதலில் அவர்களின் கற்றல் திறன் பாதிப்படைகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    11 வயதுக்கு உட்பட்ட சுமார் 1,300 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அக்குழந்தைகள் அதிக அளவில் குறட்டை விடுகின்றனர் என்றும், தொடர்ச்சியாக குறட்டைவிடும் குழந்தைகள் பகலில் மிகவும் களைப்படைந்தவர்கள் போல் இருப்பதாகவும், படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பவர்களாகவும், கவனிக்கும் திறன் குறைந்தவர்களாகவும், மந்த வளர்ச்சி நிலை உடையவர்களாகவும் காணப்படுகின்றனர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, குழந்தைகளின் குறட்டைப்பழக்கத்திற்கு என்ன காரணம் என்பதை மருத்துவர்களிடம் காட்டி கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்.

    இன்றைய கால குழந்தைகள் சிப்ஸ், பாப்கார்ன், நொறுக்குத்தீனிகள் போன்ற உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளையே உண்ணுகிறார்கள். இது பெற்றோர்களுக்கு சர்வ சாதாரணமாகத் தோன்றினாலும், குழந்தைகள் வளர வளர உப்பு அதிகமுள்ள உணவுக்கு அடிமையாகி, இது ஒருபெரும் பிரச்சினையாக மாற வாய்ப்புள்ளது. அதிக உப்பு சேர்த்த உணவுகளை உண்பதால், குழந்தை பருவத்திலேயே உடல் பருமன், ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறுகள், இதய கோளாறுகள், வாதம் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படலாம்.

    இந்த நோய் பாதிப்புகளை தடுக்க, குழந்தைகள் பதப்படுத்தப்பட்ட, அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் இளம்வயதிலேயே, அதாவது குழந்தைப் பருவத்திலேயே ஆரோக்கியமான உணவுமுறை குறித்து கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும். காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளுமாறு குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். இன்றைய குழந்தைகள் தேவையை விட இருமடங்கு உப்பு உண்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்த மோசமான உண்மையை உணர்ந்து பெற்றோர்கள் ஆரோக்கியமான உணவு முறையை குழந்தைகளுக்கு பழக்க முயலவேண்டும்.
    தேர்வு பயம் மாணவர்கள் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். மாணவர்களின் பரீட்சை பயத்தை போக்குவது எப்படி என்று பார்க்கலாம்.
    தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். பதற்றம் ஏற்பட்ட உடன், அட்ரீனல், கார்டிசால் போன்ற ஹார்மோன்களால் பலவிதமான உடலியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதயம் வேகமாக துடிப்பது, உடல் சூடாகி விடுவது, உள்ளங்கை, உள்ளங்கால்களில் வியர்வை பெருகுவது, கண்மணிகள் விரிவதால் பார்வை சற்றே மங்கலாவது, பசி அறவே இல்லாமல் இருப்பது, நாக்கு வறண்டு விடுவது போன்ற அறிகுறிகள் தோன்றும்.

    இந்த பதற்றத்தினால் மனதின் அலைச்சுழலும் அதிகரித்து விடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும். நம்முடைய மூளை எந்தவொரு செயலை செய்யும் போதும் ஒரு குறிப்பிட்ட அலைச்சுழலில் தான் இயங்கிக் கொண்டிருக்கும். குறைந்த அலைச்சுழலில் இயங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் நாம் பார்க்கும், கேட்கும், அனுபவிக்கும் விஷயங்கள் எல்லாம் அதே அலைச் சுழலில்தான் நம் மூளையில் பதிவாகும்.மீண்டும் அதே அலைச்சுழல் ஏற்படும் போது, அப்போது அனுபவமான விஷயங்கள் நம் ஞாபகத்தில் வரும்.

    இப்படியிருக்க, ஒரு மாணவன் அமைதியான சூழலில் வீட்டிலோ, வகுப்பிலோ படிக்கும் கேட்கும் பாடங்கள் சற்று குறைவான மன அலைச்சுழலில் பதிவாகிவிடும். பரீட்சைக்கு முன்பு ஏற்படும் பயத்தினால் அவனுடைய மனஅலைச்சுழல் மிகவும் அதிகரித்துவிடும்.



    குறிப்பாக பரீட்சை ஹாலில் சென்று அமர்ந்ததும், குறைவான அலைச்சுழலில் பதிவான பாடங்கள், அதிகமான அலைச்சுழலில் மனம் இருந்தால் நினைவு மண்டலத்திற்கே வராது. இதனால் தான் படித்தது எல்லாம் மறந்தநிலை ஏற்படுகிறது. பரீட்சை பயத்தை போக்குவது எப்படி?

    திட்டம் தீட்டுவதே எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்வதற்காகத் தான். ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பாடப் பகுதிகளை நம் வசதிக்கேற்ப சிறுசிறு பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். இதற்கான திட்ட அட்டவணையை மாணவர் தன் விருப்பம், தேவை, தன்திறனிற்கு ஏற்ப தானே தயாரித்துக் கொள்ள வேண்டும்.

    மொத்த பாடத்தையும் சேர்த்து பார்த்தால் பயம் ஏற்படுவது இயற்கை. அதையே சிறுசிறு பகுதியாக பிரித்து படிக்கும்போது சுலபமாக இருக்கும். பாடம் படிக்கும் போது ஆழ்ந்த மனதுடன், வசதியான உடையணிந்து தன் விருப்பத்திற்கேற்ப அமர்ந்து கொண்டு படிக்க வேண்டும். பிடித்த நொறுக்குத் தீனியை (அது சத்துள்ளதாக இருப்பது முக்கியம்) கொறித்துக்கொண்டும் கூட படிக்கலாம். அப்போது தான் படிக்கும் செயல் இனிமையாக இருக்கும்.
    விவாகரத்து பெற்றுவிட்டு தனியாக வாழும் பெண்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதென்பது ஒரு சவாலான விஷயமாகத்தான் இருக்கிறது.
    விவாகரத்து பெற்றுவிட்டு தனியாக வாழும் பெண்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதென்பது ஒரு சவாலான விஷயமாகத்தான் இருக்கிறது. அதிலும் அவள் கணவரிடம் போராடி, நீதிமன்றத்துக்கு அலைந்து விவாகரத்து பெற்றிருந்தால், தனியாகப் பிரிந்து புதிய வாழ்க்கையை தொடங்கும்போது மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பலவீனப்பட்டிருப்பார். சமூகம் அவளை பார்க்கும் பார்வையும் வித்தியாசமாக இருக்கும். இதனால் அத்தகைய பெண்கள் ஓரளவு மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.

    இருவருமாக சேர்ந்து வளர்த்த குழந்தைகளை தாய் மட்டும் வளர்த்து, பராமரிக்கும்போதும் தடுமாற்றங்கள் ஏற்படத்தான் செய்யும். வாழ்நாள் முழுவதும் துணையாக வருவார் என்று கருதிய துணை இடையில் காணாமல் போகும்போது ஏற்படும் மன உளைச்சலால் சிந்தனைகளும் சிதறிப்போகும். ‘இனி குழந்தை களுக்காக மட்டுமே வாழவேண்டும்’ என்று நினைத்துவிட்டால் நீண்ட தனிமை ஒன்று கண்முன்னே வந்து நிற்கும். எப்படி அதை கடந்து செல்லப்போகிறோமோ என்ற மலைப்பு தோன்றும். இனி வேறு எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் ஒருவித சோர்வு வந்து மனதை பலவீனப்படுத்தும்.

    இது பற்றி மனநல நிபுணர் மாதவி கூறுகையில், ‘‘காலத்தின் கட்டாயத்தில் கணவரை பிரிந்து வாழும் பெண்கள், பிள்ளைகளை வளர்க்க தனிமையில் பெரும்பாடுபடுகிறார்கள். இவர் களுக்கு இந்த சமூகம் நன்மைகள் எதுவும் செய்வதில்லை. அதனால் ஆறுதலாகவாவது இருக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு தாயின் வாழ்க்கைச் சுமை தரும் வலி பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் மற்ற குழந்தைகளைப் போல வாழ விரும்புவார்கள். அதற்கு ஏதாவது தடை ஏற்பட்டால் மனதளவில் தளர்ந்துவிடுவார்கள். அது அவர்கள் உடல்நிலையையும் பாதிக்கும். அதனால் தனிமைத் துயர் வாட்டாது அவர்களை, மற்ற குழந்தைகள்போல் வளர்க்க முன்வரவேண்டும்.



    தாய் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், நிலைமையை புரிந்துகொள்ளும் அளவுக்கு பக்குவப்படாத குழந்தைகளிடமிருந்து எந்த அனுசரணையும் தாய்க்கு கிடைக்கப்போவதில்லை. குழந்தைகள் குழந்தைகள் தான். எந்த நிலையிலும் அவர்களை குழந்தைகளாகத்தான் தாய் பாவித்து வளர்க்க வேண்டும்..’’ என்கிறார்.

    தனியாக குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்கள் கருத்தில் கொள்ளவேண்டியவை:

    அப்பாவின் அன்பையும், அதுபோல் தேவைப்படும் கண்டிப்பையும் ஒரு சேர தாய் வழங்கவேண்டும்.

    மற்றவர்களின் கேலிப் பேச்சுகள் அவர்களை புண்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

    எப்போதும் நம்பிக்கையாக பேசி, அவர்கள் மனந்தளர்ந்துவிடாத அளவுக்கு நடந்துகொள்வது அவசியம்.

    அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் நம்பிக்கையோடு பதிலளிக்கவேண்டும்.

    அவர்கள் மனதில் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றிய பயம் வந்துவிடக்கூடாது.

    தன்னால் அவர்களை சிறந்த முறையில் உருவாக்க முடியும் என்ற மனோபலம் தாய்க்கு மிக அவசியம்.

    அப்பா இல்லை என்றவுடன் 50 சதவீத சுதந்திரம் அவர்களுக்கு கிடைத்துவிடும். மனம்போன போக்கில் வாழ நினைப்பார்கள். அவர்களை அன்போடு கண்காணிக்கவேண்டும்.

    தனியாக வாழும் பெண்கள் சமூகத்தின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அது அவளை மனதளவில் நம்பிக்கை இழக்கச் செய்யும். அந்த விரக்தி மனோபாவம் கோபமாய், எரிச்சலாய் குழந்தைகள் மீது விழலாம். அது தவிர்க்க முடியாதது. ஆனால் எல்லாம் அளவோடு இருக்கவேண்டும்.

    பிரிந்து வாழும் பெண்கள், திருமணத்தின் தோல்வியைப் பற்றி அடிக்கடி மற்றவர்களிடம் பேசிப் பேசி மனதை தேற்றிக் கொள்ள நினைப்பார்கள். அதற்கு வாய்ப்பில்லாத நேரத்தில் அழுகையும், சஞ்சலமும், சிடுசிடுப்பும் எப்போதும் அவர்களை ஆக்கிரமித்திருக்கும். இதையெல்லாம் பார்த்து வளரும் குழந்தைகள் மனதில் எதிர்காலத்தைப் பற்றிய பயமும் திருமணத்தைப் பற்றிய அவநம்பிக்கையும் உண்டாகும். அப்படி ஒரு அவநம்பிக்கை உருவாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.



    வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை குழந்தைகளிடம் சொல்லி அவர்கள் மனதில் வெறுப்பை உருவாக்கக்கூடாது.

    பராமரிப்பு செலவுகள் அதிகரித்து பயமுறுத்தும். தான் மட்டுமே சம்பாதிக்க வேண்டிய நிலை உருவாகும். இந்த போராட்டம் மிகவும் சவாலானது. தைரியமாக அதனை எதிர்கொள்ளவேண்டும்.

    வாழ்க்கை என்பது நாம் எதிர்பார்ப்பது போன்று அமைவதில்லை. ஆனால் வாழ்க்கை முழுவதும் ஏமாற்றமாக இருக்காது. எதிர் காலம் எப்போதுமே நன்மைகளை உருவாக்கித்தரும்.

    திருமண வாழ்க்கை பாதியில் முடிந்துவிட்ட நிலையில் இன்னொரு திருமணம் செய்துகொள்ள இன்றைய சமூகத்தில் வழி இருக்கிறது. ஆனாலும் குழந்தைகள் புதிதாக ஒருவரை அப்பாவாக ஏற்றுக்கொள்ள தயங்கும்போது அம்மாவின் மீது காரணமற்ற வெறுப்பு வரும்.

    எல்லோருக்குமே தனிமை பாதுகாப்பற்ற மனநிலையை உருவாக்கும். அது பயமாகமாறும். சுற்றி இருப்பவர்களை சந்தேகக்கண்ணோடு காணச்செய்யும். எல்லோரையும் சந்தேகக்கண்ணோடு பார்த்தால், வாழ்க்கையே சுமையாகிவிடும்.

    தனியாக வசிக்கும் பெண்களுக்கு எப்போதும் மனதில் எதிர்மறை எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கும். தனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்னவாகும்? இந்த வருமானமும் நின்றுவிட்டால் என்ன செய்வது? என்பது போன்ற எதிர்மறையான கேள்விகள் உருவாகிக்கொண்டே இருக்கும். அதை தவிர்க்க வேண்டும். எந்த நிலையிலும் என்னால் வாழமுடியும் என்ற எண்ணம் தோன்றினால் மனம் உறுதியடையும். வாழ்க்கையும் சிறப்படையும்.
    சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி எளிய வழிமுறைகளை பின்பற்றி எப்படி சுலபமாக சாப்பிட வைக்கலாம் என்று பார்க்கலாம்.
    சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி எளிய வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக சாப்பிட வைக்கலாம் என்று பார்க்கலாம்.

    * குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காதீர்கள். குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள். குழந்தைக்கு திகட்டாமல் இருக்கும்.

    * குழந்தை சாப்பிடக்கூடிய அளவுக்கு மேல் ஒருபோதும் வைத்துத் திணிக்காதீர்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குழந்தைகளை அவசரப்படுத்தவே கூடாது. உணவு உண்ணும் நேரம் அவர்களுக்குச் சந்தோஷமான நேரமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

    * தான் ஊட்டினால்தான் தன் குழந்தை சாப்பிடும் என்று சில தாய்மார்கள் பெருமை பொங்க சொல்வார்கள். ஆனால், அது பெருமைப்பட வேண்டிய விஷயம் இல்லை. இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டவே கூடாது. மற்றவர்களோடு அமர்ந்து, அவர்களாகவே சாப்பிட விடவேண்டும். சாப்பாட்டை மேலே, கீழே இறைத்தாலும், குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிடுவார்கள்.

    * பழங்கள், காய்கறிகள், முழு பயறு வகைகள், பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் இவை தடுக்கும்.



    * ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீராவது குழந்தைகளை அருந்த வையுங்கள். வெறும் தண்ணீராகக் குடிக்க அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், பழச்சாறாகவோ, பானகமாகவோ, மோராகவோ, மில்க் ஷேக்குகளாகவோ, இளநீராகவோ கொடுக்கலாம்.

    * காய்கறிகளை சாப்பிடவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு காய்களை அப்படியே கொடுக்காமல், சாண்ட்விச்சுகளாகவோ, காய் நூடுல்ஸாகவோ, ஃப்ரைட் ரைஸாகவோ கொடுங்கள். பட்டாணியை வேக வைத்து மசித்தோ, கேரட், பீட்ருட் போன்றவற்றைத் துருவி தூவியோ, உங்கள் அயிட்டங்களை கலர்ஃபுல்லாக பரிமாறுங்கள். அப்புறம் பாருங்கள். சந்தோஷமாகச் சாப்பிடுவார்கள்.

    * ஒரே பழத்தை முழுதாகக் கொடுப்பதைவிட, பல பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பால், தேன் கலந்து சாலட்டாகவோ, மில்க் ஷேக்குகளாகவோ கொடுத்தால் வைட்டமின், மினரல், நார்ச்சத்து எல்லாம் ஒரே உணவில் அவர்களுக்குக் கிடைக்கும்.

    * காபி, டீ, குளிர்பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்த்து விடுங்களேன்!

    * தோசை, சப்பாத்தி, பூரி, இட்லி போன்ற டிபன்களின் வடிவங்களையும் உங்கள் கற்பனைக்கேற்ப, குழந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றலாமே! பிறை நிலா வடிவில் தோசை, பூ டிசைனில் சப்பாத்தி, சதுரக் கேக்குகளாக இட்லி என்று வேளைக்கு ஒன்றாக அசத்தினால், எந்தக் குழந்தை சாப்பிட அடம்பிடிக்கும். அதே போல் தோசைகளில் காய்கறிகளை கலந்து விரும்பிய வடிவில் சுட்டு கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள்.
    குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து அவர்களின் மன வருத்தங்களை போக்குவது பெற்றோரின் கையில்தான் இருக்கிறது.
    மன அழுத்தம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. ஆனால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாவதை பெரும்பாலான பெற்றோர்கள் கவனத்தில் கொள்வதில்லை. ‘ஏதோ கோபத்தில் இருக்கிறான்’ என்று சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்.

    குழந்தைகளின் மன நலனில் அக்கறை கொள்ளாவிட்டால் அது தேவையில்லாத பல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். ஒவ்வொரு குழந்தைகளிடமும் மன அழுத்த பாதிப்புக்குரிய அறிகுறிகள் ஒவ்வொரு விதமாக வெளிப்படும். சில குழந்தைகள் எப்போதும் கவலை தோய்ந்த முகத்தோடு காட்சியளிப்பார்கள். சிலர் யாரிடமும் பேசாமல் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருப்பார்கள். சில குழந்தைகளின் பேச்சில் ஆதங்கமும், கோபமும் வெளிப்படும். குழந்தைகள் மன அழுத்த பாதிப்புக்குள்ளாவதற்கு வீட்டுச்சூழலே பெரும்பாலும் காரணமாக அமைந்துவிடுகிறது.

    குடும்பத்தில் தொடர்ந்து நடக்கும் குழப்பங்களும் குழந்தைகளின் நிம்மதியை கெடுத்துவிடும். பெற்றோர்கள் மன அழுத்த பாதிப்புக்குள்ளாகும்போது அது குழந்தைகளையும் பாதிக்கும். மிக நெருக்கமானவர்களின் பிரிவு, உறவினர்களுடன் பெற்றோருக்கு ஏற்படும் மனஸ்தாபம், செல்ல பிராணிகளின் இறப்பு, தாங்க முடியாத இழப்பு, அடிக்கடி ஏற்படும் உடல் நலக்குறைபாடு போன்றவையும் குழந்தைகளை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிவிடும்.



    குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து அவர்களின் மன வருத்தங்களை போக்குவது பெற்றோரின் கையில்தான் இருக்கிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு ஆர்வம் காட்டமாட்டார்கள். அவர்களை அப்படியே விட்டுவிடாமல் ஆறுதலாக பேசி அவர்களின் மன வருத்தங்களை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.

    குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்திக்கொள்வது பிரச்சினையின் வீரியத்தை குறைக்க வழிகோலும். அவர்களுடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலமாகவே மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிந்துவிட முடியும். அவர்கள் பேசுவதை பொறுமையாக கேட்க வேண்டும்.

    தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவது இயல்பு என்பதை குழந்தைகளுக்கு புரியும்படி எடுத்துரையுங்கள். அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை தெரியப்படுத்துங்கள். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் செயல்களை செய்வதற்கு அனுமதியுங்கள். அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யும்போது ஊக்கப்படுத்துக்கள்.
    குழந்தை பருவம் மற்றும் இளமை பருவத்திற்கு இடைப்பட்ட வளர் இளம் பருவத்தில் பிள்ளைகளின் நெருங்கிய தோழனாக, தோழியாக பெற்றோரின் செயல்பாடு அமைய வேண்டும்.
    குழந்தை பருவம் மற்றும் இளமை பருவத்திற்கு இடைப்பட்ட வளர் இளம் பருவத்தில் பிள்ளைகள், பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக செயல்படும் சூழல் உருவாகும். அவர்களை அரவணைத்து செல்ல வேண்டியது பெற்றோரின் கடமை. கண்டிப்பும், கடுமையும் காட்டினால் இருவருக்கும் இடையே இடைவெளி உருவாகிவிடும்.

    அந்த பருவத்தில் பிள்ளைகளின் நெருங்கிய தோழனாக, தோழியாக பெற்றோரின் செயல்பாடு அமைய வேண்டும். பெரும்பாலான பெற்றோர் அவ்வாறு தோழமையுடன் இருப்பதில்லை. 10 வயது தொடங்கியது முதல் 20 வயது வரையிலாவது தோழமை மனப்பான்மையுடன் பழக வேண்டும். இல்லாவிட்டால் தாய், தகப்பன் ஸ்தானத்தை மட்டுமே பெற முடியும். நண்பன் என்னும் ஸ்தானம் கிடைக்காமலேயே போய்விடும்.

    சிறுவயது முதல் குழந்தைகள் பெற்றோரை சார்ந்தே வளர்ந்திருப்பார்கள். 10 வயதுக்கு பிறகு அவர்களுடைய போக்கில் மாற்றம் ஏற்படும். சுயமாக சிந்தித்து அதன்படி செயல்பட விரும்புவார்கள். அதற்கு பெற்றோர் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பும்போது அவர்கள் சொல்வதை கேட்க மறுப்பார்கள். பெற்றோருடன் அடிக்கடி வாக்குவாதம், சண்டையில் ஈடுபடுவார்கள். அவர்களுடைய உணர்வுகளை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளின் விருப்பங்கள், தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முட்டுக்கட்டை போடக் கூடாது.



    கண்டித்தே தீரவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்போதுதான் பெற்றோரின் தலையீடு இருக்க வேண்டும். அதுவும் நண்பன் ஸ்தானத்தில் இருந்து மென்மையான அணுகுமுறையை கடைப் பிடிக்க வேண்டும். நண்பர்கள், படிப்பு, வேலை ஆகிய மூன்றையும் தேர்வு செய்யக்கூடிய உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். தங்கள் கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது. அவர்களுடைய தனித்திறமைகளையும், தனித்தன்மையையும் வெளிப்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும். பிரச்சினைக்குரிய செயல்பாடுகளில் ஈடுபடும்போது பெற்றோர் தலையிட்டு சரியான பாதையை காட்ட வேண்டும்.

    பெற்றோர் சிறந்த நண்பராக இருந்தால்தான் பிள்ளைகள் மனம் திறந்து பேசுவார்கள். தங்கள், மகன், மகள்கள் ஒருபோதும் தவறு செய்யமாட்டார்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையை பெற்றோர் கொண்டிருக்க வேண்டும். அதை உணர்த்தும் விதமாகவும் பிள்ளைகளிடம் பழக வேண்டும். சரியோ, தவறோ எது செய்தாலும் பிள்ளைகள் மறைக்காமல் கூறும் விதத்தில் அன்போடு பழக வேண்டும். அப்படி செய்தால் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காகவே தவறான வழிகளில் செல்ல மாட்டார்கள். ஒருவேளை அவர்களுடைய நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டால், ‘இது உன் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம். உன் இஷ்டப்படி முடிவெடு’ என்று அன்பாக பிரச்சினையின் மறுபக்கத்தை புரிய வையுங்கள்.

    பிள்ளைகளிடம் பாலியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். வளர் இளம் பருவத்தினரிடத்தில் ஸ்மார்ட்போன்கள் தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு அம்சமாக மாறிக்கொண்டிருக்கிறது. அவைகளை பயன்படுத்தவே கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பது பெற்றோருக்கே பாதகமாக மாறிவிடும். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பயன்படுத்த அனுமதிக்கலாம். சமூக வலைத்தளங்களில் அவர்கள் செலவிடும் நேரத்தை மேற்பார்வையிடலாம். அது அவர்கள் மனதை நோகச்செய்யாத அளவிற்கு நாட்டு நடப்புகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
    நொறுக்குத்தீனிகளில் அதிக சர்க்கரை இருப்பதால், தொடர்ந்து அவற்றை உட்கொண்டுவரும் குழந்தைகள் சோர்வாகவும், தெம்பின்றியும் காணப்படலாம்.
    பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனேகமானவர்கள் நொறுக்குத் தீனி பிரியர்களாக உள்ளனர். நொறுக்குத் தீனி தனது சுவையால் அவர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

    ஆனால் நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கம், நாளடைவில் ஆரோக்கியத்தையே உருக்குலைக்கும். எனவே, பெரியவர்கள் நொறுக்குத் தீனி சாப்பிடாமல் தவிர்ப்பதுடன், குழந்தைகளுக்கும் அப்பழக்கத்தை ஊக்குவிக்காமல் இருப்பது நலம்.

    குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பற்றி எடுத்துக்கூறி, அதை பழக்கப்படுத்துவது பெற்றோரின் பொறுப்பு.

    நொறுக்குத்தீனிகள் சத்துகள் இல்லாமல் வெறும் சர்க்கரையையும் உப்பையும் கொண்ட வெற்று கலோரிகளை உடலுக்கு அளிக்கின்றன. மாறாக, சரிவிகித உணவுகள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை சரியான அளவில் அளிக்கும்.

    நொறுக்குத்தீனிகளில் அதிக சர்க்கரை இருப்பதால், தொடர்ந்து அவற்றை உட்கொண்டுவரும் குழந்தைகள் சோர்வாகவும், தெம்பின்றியும் காணப்படலாம். இதனால், அவர்கள் படிப்பிலும், பிற தினசரி செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். நொறுக்குத்தீனியில் உள்ள அதிக கொழுப்பால், உடலில் கொலஸ்டிராலும் டிரைகிளிசரைடும் அதிகரித்து, குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படலாம்.



    நொறுக்குத்தீனிகள் குழந்தைகளைக் கவர ஒரு முக்கியக் காரணம், அவை கவர்ச்சிகரமான தோற்றத்தில், பளபளக்கும் ‘பேக்கிங்’கில் வருவது. பெற்றோர், ஆரோக்கியமான உணவுகளையும் குழந்தைகளை ஈர்க்கும்படி சமைத்துக் கொடுக்கலாம்.

    அவை வண்ணமயமாகவும், புதுமைத் தோற்றத்துடனும் இருக்க வேண்டும். உதாரணமாக, காய்கறிகளையும் பழங்களையும் கொண்டு அலங்காரமான ‘சாலட்’ தயாரிக்கலாம். குழந்தைகளுக்கான உணவில், மாவுச்சத்து, கொழுப்பு, புரதம், கால்சியம் போன்ற எல்லா சத்துகளும் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

    ‘ஜங்க் புட்’ எனப்படும் துரித உணவுகள், நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு, அவற்றின் தீமைகளை குழந்தைகளுக்கு தெளிவாக விளக்கிக்கூற வேண்டும். பெற்றோர்களே குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக மாறி, நொறுக்குத்தீனிகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

    ஆசைக்காக எப்போதாவது கொஞ்சம் நொறுக்குத் தீனியைக் கொறிப்பதில் தவறில்லை. ஆனால் அதை அன்றாட வழக்கமாக்கிக்கொண்டால், குறிப்பாக டி.வி., சினிமா பார்க்கும்போது நம்மையும் அறியாமல் அதிக நொறுக்குத்தீனி சாப்பிட்டால், துன்பத்தை நாமே அழைப்பிதழ் கொடுத்து அழைக்கிறோம் என்றுதான் பொருள்.

    தொடர்ச்சியான நொறுக்குத்தீனி பழக்கம், நாளடைவில் ஆரோக்கியத்தை நொறுக்கிவிடும் என்பதை நாம் உணர்ந்து, குழந்தைகளுக்கும் உணர்த்தி வழிநடத்த வேண்டும்.
    பெற்றோரின் பழக்க வழக்கத்தில் இருந்தே குழந்தைகள் பெரும்பாலான விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளை ஸ்மார்ட்போன்களிடம் இருந்து விடுவிப்பது பெற்றோர் கையில்தான் உள்ளது.
    சில வீடுகளில் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை பயன்படுத்த கொடுக்கிறார்கள். இதனால் அவர்களின் சுபாவம், நடத்தை எல்லாம் பெருமளவில் மாற்றம் அடையும். போனில் வீடியோகேம்ஸ் விளையாடிப் பழகி, அதற்கு அடிமையாகி விடுவார்கள். ஒரே இடத்தில் உட்கார்ந்து கேம்ஸ் விளையாடுவார்கள்.

    இயற்கையான விளையாட்டுகளின் மீது உள்ள மோகம் குறைந்துவிடும். பருமன் பிரச்னையும் ஏற்படும். அதனால் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை கொடுக்கும் போது Flight modeல் கொடுக்க வேண்டும். அப்போது கேம்ஸ் போன்ற சில ஆப்ஷன்களை பயன்படுத்த முடியாது.

    குழந்தைகளை ஸ்மார்ட்போன் பழக்கத்திற்கு அடிமையாக பெற்றோர் எந்த வழிகளில் காரணமாக இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

    * குழந்தைகள் ஸ்டைலாக செல்போன் பிடித்துப் பேசுகிறார்கள் என்பதற்காக பிஞ்சுப் பருவத்திலேயே அவர்களிடம் போனைக் கொடுப்பதுதான் தவறின் அடிப்படை.

    * தூரத்தில் இருக்கும் தந்தையுடனும், உறவுகளுடனும் பேசுகிறார்கள் என்று போனை கொடுத்துப் பேசப் பழக்குவது பெற்றோர் செய்யும் பெரும் தவறு. இவையே தவறான பழக்கத்திற்கு அடிகோலுகிறது.



    * அழும் குழந்தைகளை சமாதானப்படுத்துவதாகவும், வேடிக்கை காட்டி உணவு ஊட்டுவதற்காகவும் ஸ்மார்ட்போன்களை அவர்களின் கைகளில் கொடுப்பதும் குழந்தைகள் ஸ்மார்ட்போன் அடிமைகளாகக் காரணம். ரைம்ஸ் கற்கிறார்கள் என்று போனைக் குழந்தைகளிடம் கொடுப்பதும் இந்த வகைத் தவறுதான்.

    * செயல்பாடு இல்லாத குழந்தைகள்தான் சேட்டை செய்யும். குழந்தைகளின் சேட்டைகளை குறைப்பதற்காக அவர்களின் கைகளில் செல்போன்களைக் கொடுத்து அவர்களை சேற்றில் மூழ்க வைத்துவிடாதீர்கள்.

    * குழந்தைகளின் கண்முன்னே பெற்றோர் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்தால் அவர்களும் அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவார்கள் என்பதுதான் நிபுணர்கள் தரும் முதலும், முடிவுமான அறிவுரை. பெற்றோரின் பழக்க வழக்கத்தில் இருந்தே குழந்தைகள் பெரும்பாலான விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். எனவே உங்கள் குழந்தைகளை ஸ்மார்ட்போன்களிடம் இருந்து விடுவிப்பது பெற்றோரான உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
    ×