என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
அனுமனுக்கு கொண்டாடப்படும் திருநாள் அனுமன் ஜெயந்தி. அன்றைய தினம் அவருக்கு வடை மாலை சூட்டி வழிபட்டால் தடைகள் அகலும்.
ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு விதத்தில் வலிமை இருக்கிறது. அவர்களை நாம் வழிபடுகின்ற பொழுது அந்த வலிமை நமக்குக் கிடைக்கின்றது. அந்த அடிப்படையில் உடல் வலிமை இல்லாமல் இருப்பவர்கள், ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பவர்கள், எண்ணற்ற தடைகளைச் சந்திப்பவர்கள், இனிய இல்லறம் அமைய வேண்டுமென்று நினைப்பவர்கள் கொண்டாட வேண்டிய தெய்வம் அனுமன்.
அனுமனுக்கு கொண்டாடப்படும் திருநாள் அனுமன் ஜெயந்தி. அந்த திருநாள் இந்த வருடம் மார்கழி மாதம் 28-ந் தேதி (12.1.2021) செவ்வாய் அன்று வருகின்றது. அன்றைய தினம் அவருக்கு வடை மாலை சூட்டி வழிபட்டால் தடைகள் அகலும். வண்ணமாலை சூட்டி வழிபட்டால் எண்ணங்கள் நிறைவேறும். அர்ச்சனைகள் செய்து வழிபட்டால் பிரச்சினைகள் தீரும். வாழைப்பழத்தில் விளக்கேற்றி வழிபட்டால் வாரிசுகள் உருவாகும் என்பது நம்பிக்கை.
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன் தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறு பேர் அழைத்தனவும் சீறியருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்
பொருள்: இடையர்குல மக்களாகிய நாங்கள் எல்லாம் கறவைப் பசுக்களின் பின்னாலேயே சென்று காட்டுக்குச் சென்று அங்கு உண்போம். கண்ணா, கள்ளம் கபடம் இல்லாத ஆயர்குலத்தில் வந்து பிறந்தாய் நீ. நீயே எங்களுக்குத் தலைவனாக வந்து சேர்நததை எண்ணி நாங்கள் புண்ணியமடைந்தோம். உனக்கும், எங்களுக்குமான உறவு பிரிக்க முடியாதது. உனது பெயரைச் சொல்லி அழைக்கிறோமேஎன்று சீறி எழாதே. நாங்கள் அறியாத சிறு பிள்ளைகள். அதற்காகக் கோபம் கொள்ளாமல், இறைவா உன் அருளை எங்களுக்குத் தந்தருள்வாயாக.
ஜனவரி மாதம் 12-ம் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 18-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
12-ம் தேதி செவ்வாய் கிழமை :
* அமாவாசை
* அனுமன் ஜெயந்தி
* சந்திராஷ்டமம் - ரோகிணி
13-ம் தேதி புதன் கிழமை :
* போகி பண்டிகை
* சந்திராஷ்டமம் - மிருகசீருஷம்
14-ம் தேதி வியாழக்கிழமை :
* தை பொங்கல்
* திருவோண விரதம்
* கரிநாள்
* சபரிமலையில் மகரஜோதி தரிசனம்
* சந்திராஷ்டமம்- திருவாதிரை
15-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* மாட்டுபொங்கல்
* கரிநாள்
* சந்திராஷ்டமம் - புனர்பூசம்
16-ம் தேதி சனிக்கிழமை :
* காணும் பொங்கல்
* சதுர்த்தி விரதம்
* குச்சனூர் சனி பகவானுக்கு சிறப்பு ஆராதனை
* கருட தரிசனம் நன்று
* சந்திராஷ்டமம் - பூசம்
17-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சித்தயோகம்
* சிறிய நகசு
* சந்திராஷ்டமம் - ஆயில்யம்
18-ம் தேதி திங்கள் கிழமை :
* பஞ்சமி திதி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - மகம்
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை வருகிற 14-ந்தேதி நடக்கிறது. அன்றையதினம் மாலை மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதற்கான பிரதான சடங்குகள் இன்று தொடங்கியது.
திருவனந்தபுரம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்தமாதம் (டிசம்பர்) 30-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. மறுநாள்(31-ந்தேதி) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
கொரோனா கட்டுப்பாடு களின்படி ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மகரவிளக்கு பூஜை வருகிற 14-ந்தேதி நடக்கிறது. அன்றையதினம் மாலை மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு உள்ளன.
மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் இன்று தொடங்கியது. பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங் காடு சங்கங்களின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. அதில் கொரோனா கட்டுப்பாடுகளின்படி 50பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல் மகரவிளக்கு பூஜை தினமான 14-ந்தேதி மாலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவா பரணங்கள் பந்தளம் அரண் மனையில் இருந்து இன்று புறப்பட்டது. திருவாபரண பெட்டி ஊர்வலம் 14-ந்தேதி மாலை 5:30 மணிக்கு சரங் குத்திக்கு வந்து சேரும்.
அங்கு திருவாபரண பெட்டியை தேவசம்போர்டு மந்திரி, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வரவேற் கிறார்கள். பின்பு அவை, ஐயப்ப சுவாமி கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு தந்திரி மற்றும் மேல்சாந்தியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதனை பெற்றுக்கொள்ளும் அவர்கள், ஐயப்பனுக்கு திருவாபரணங்களை அணி விக்கின்றனர். அதன்பிறகு ஐயப்பனுக்கு தீபாராதனை நடக்கிறது.
தீபாராதனை முடிந்ததும் பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தருவார். அய்யப் பனுக்கு வருகிற 18-ந்தேதி வரை நெய் அபிஷேகம் நடைபெறும். 19-ந்தேதியே பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜை முடிந்து 20-ந்தேதி காலை 6:30மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
ஜெயமாருதி சேவா டிரஸ்ட் சார்பில் பஞ்சவடி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நாளை நடக்கிறது.
திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் பஞ்சவடி கோவில் (சேத்திரம்) அமைந்துள்ளது. இங்கு பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி, விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதிகள் அமைந்துள்ளன. இந்த கோவிலில் 36 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு நாளை (செவ்வாய்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாட்டை ஜெயமாருதி சேவா டிரஸ்ட் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பஞ்சவடி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நாளை (12-ந் தேதி) நடக்கிறது. இதையொட்டி பூஜைகள் கடந்த 8-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு ராமச்சந்திர மூர்த்தி சன்னதியில் காராம்பசுவுக்கு விசேஷ பூஜை மற்றும் கோ பூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து தனூர் பூஜைகள் நடைபெறும். 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெறும்.
காலை 8.30 மணிக்கு ஆஞ்சநேய சுவாமிக்கு 2,500 லிட்டர் பாலுடன் சந்தனம், கான்பூரில் இருந்து வரவேற்கப்பட்ட சுத்தமான பன்னீர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். பால் அபிஷேகத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் டிரஸ்டின் அனுமதிபெற்று கோவிலில் இருந்து பால் பெற்று இறைவனுக்கான அபிஷேகத்தில் பங்கு பெறலாம். திருமஞ்சனம், விஷேச அலங்கார ஆராதனைக்கு பின்னர் பகல் 12 மணி அளவில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் ஆஞ்சநேயரை வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாலை 4 மணி அளவில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். பூஜைகளை பாப்பாகுடி வெங்கடேச பட்டாச்சாரியார், பஞ்சவடி கோவில் பட்டர் ரங்கராஜ பட்டாச்சாரியார், வேத விற்பன்னர்கள் நடத்தி வைக்க உள்ளனர். பக்தர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன், கூடுதல் தலைவர் ஆர்.யுவராஜன், செயலாளர் நரசிம்மன், பொருளாளர் கச்சபேஸ்வரர், அறங்காவலர்கள் பழனியப்பன், செல்வம், வெங்கட்ராமன், திருமலை நிர்வாக அதிகாரி பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும்.
மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. கடவுளர்களுக்கும் தேவர்களுக்கும் பகல் வேளை தொடங்கும் முன்பாக வரும் பிரம்ம முகூர்த்த காலம் என்று கருதப்படும் புண்ணிய மாதம். இதுபோல, திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூலநட்சத்திரம். சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன்.
அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.
அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோவிலுக்குச் சென்று, அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு சாத்தியும் வணங்கலாம். அனுமனுக்கு வாலில் தான் சக்தி அதிகம்.
அதனால்தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும்.
பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும். மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். இரவில் ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், சுலோகங்கள் கூறி வழிபட வேண்டும்.
ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் வருகிற 14-ந் தேதி மகரஜோதி விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு தினமும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதனால் ஆண்டுதோறும் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வேதனைக்குள்ளானார்கள்.
சிலர் யாத்திரை தடைபடக் கூடாது என்ற எண்ணத்தில் மாலை அணிந்து இருமுடி கட்டி 18 படிகள் இருக்கும் ஐயப்பன் கோவில்களில் தரிசனம் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் சென்னை யில் மடிப்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்களுக்கு செல்கிறார்கள்.
ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் வருகிற 14-ந் தேதி மகரஜோதி விழா நடைபெறுகிறது.
அதுவரை தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை பதினெட்டாம் படி வழியாக சென்று ஐயப்ப பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
புலியூர்குறிச்சி முட்டிடிச்சான் பாறை மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தல பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
புலியூர்குறிச்சி முட்டிடிச்சான் பாறை மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தல பெருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 14-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
நாளை மாலை 5.30 மணிக்கு கொடிபவனி, செபமாலை, புகழ்மாலை நடக்கிறது. 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இதற்கு முளகுமூடு பங்குத்தந்தை டோமினிக் கடாட்சதாஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைக்கிறார். திருத்தல அதிபர் ராஜேந்திரன் முன்னிலை வகிக்கிறார். மயிலோடு பங்குத்தந்தை ரோமரிக்ததேயு அருளுரையாற்றுகிறார். திருவிழா நாட்களில் காலை, மாலை திருப்பலி, ஜெபமாலை நடக்கிறது.
நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு மணலிக்கரை பங்குத்தந்தை மரிய டேவிட் தலைமை தாங்குகிறார். தக்கலை பங்குதந்தை வின்சென்ட் மறையுரையாற்றுகிறார்.
14-ந்தேதி காலை 9 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு குழித்துறை மறைமாவட்டம் நிதி பரி பாலகர் அகஸ்டின் தலைமை தாங்குகிறார். வட்டம் பங்குத்தந்தை சகாயதாஸ் மறையுரையாற்றுகிறார்.
திருப்பலி முடிந்தவுடன் உதயகிரி கோட்டையில் உள்ள டச்சு தளபதி டிலனாய் குடும்ப கல்லறை தோட்டத்தை அருட்பணியாளர்கள் அர்ச்சிக்கிறார்கள்.
விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் வட்டார முதன்மை பணியாளர் மரிய ராஜேந்திரன், இணை பங்குத்தந்தைகள் மரியதாஸ், மரியதாசன் வின்சென்ட் ராஜ், பங்கு பேரவை உதவித் தலைவர் ஆல்பர்ட், செயலாளர் ஜெனி, உதவிச் செயலாளர் கிறிஸ்டிபாய், பொருளாளர் பாபு மற்றும் பங்கு மக்கள், பங்கு பேரவையினர், பக்த சபையினர் இணைந்து செய்து வருகிறார்கள்.
கொட்டாரம் ராமர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த விழா 2 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
கொட்டாரம் நந்தவனத்தில் ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 29-வது ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
இதையொட்டி நாளை அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து மகா கணபதி ஹோமம், 7 மணிக்கு அபிஷேகம், 7.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, 8 மணி முதல் மாலை 5 மணி வரை அகண்ட ராமநாம ஜெபம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது.
சட்ட ஆலோசகர் அசோகன் தலைமை தாங்குகிறார். செயற்குழு உறுப்பினர்கள் மணி, ராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். உப தலைவர் ராஜகோபாலாச்சாரி வரவேற்று பேசுகிறார். அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ரேணுகா ராமச்சந்திரன் சிறப்புரையாற்றுகிறார். முடிவில் செயற்குழு உறுப்பினர் ஆனந்த விஜயன் நன்றி கூறுகிறார்.
இரவு 8.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 2-வது நாளான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை, தொடர்ந்து கலச பூஜை, பஜனை நடக்கிறது. பஜனையை கொட்டாரம் ஸ்ரீராமர் திருக்கோவில் பக்தர்கள் சங்க தலைவர் ராமச்சந்திரன் தொடங்கி வைக்கிறார்.
9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11.15 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, 11.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இந்த அன்னதானத்தை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன், கன்னியாகுமரி ஸ்ரீ மணியா இன்டர்நேஷனல் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி தாளாளர் கோபாலகிருஷ்ணன், தொழில்அதிபர் தேசிக சங்கர், விவேகானந்த கேந்திர செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்த ராவ், டாக்டர் கந்தசாமி ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.பின்னர் மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனமும், 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8 மணிக்கு புஷ்பாபிஷேகம், தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கொட்டாரம் நந்தவனம் ஸ்ரீ ராமர் திருக்கோவில் பக்தர்கள் சங்கத்தினர் செய்து வருகிறார்கள்.
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை 14-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி திருவாபரண ஊர்வலம் பந்தளத்தில் இருந்து நாளை புறப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இதையொட்டி தந்திரி கண்டரு ராஜீவரு தலைமையில் படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக குறைந்த அளவிலான பக்தர்களே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மகர விளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளத்தில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) ஊர்வலமாக புறப்படுகிறது. இதையொட்டி நாளை பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோவிலில் சிறப்பு நடைபெறும். பின்னர் மதியம் 12 மணிக்கு திருவாபரணங்கள் அலங்கரிக்கப்பட்ட பேழையில் வைத்து தலைச்சுமையாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு ஊர்வலமாக புறப்படும்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு திருவாபரண ஊர்வலத்தில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
திருவாபரணங்கள் 14-ந் தேதி மாலை 6.20 மணிக்கு சபரிமலை சன்னிதானம் வந்து சேரும். அங்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். தொடர்ந்து, 6.30 மணிக்கு திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். அப்போது, பொன்னம்பலமேட்டில் சாமி ஐயப்பன் 3 முறை தீப ஒளியாக பக்தர்களுக்கு காட்சி தருவார்.
முன்னதாக அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு உஷபூஜைக்கு பின்பு 8.14 மணிக்கு பிரசித்திப் பெற்ற மகர சங்கிரம பூஜை நடைபெறும். மகரவிளக்கின் முன்னோடியாக நாளை மாலையில் பிரசாத சுத்தி கிரியை, 13-ந் தேதி பிம்ப சுத்தி கிரியை நடைபெறும். 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை நடைபெறும். 19-ந் தேதி மாளிகப்புரத்தம்மன் கோவிலில் குருசி சிறப்பு பூஜை சன்னிதானத்தில் நடைபெறும்.
20-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பின் கோவில் நடை காலை 6.30 மணிக்கு அடைக்கப்படும். அன்றைய தினம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. அத்துடன் மண்டல மகர விளக்கு பூஜை திருவிழா நிறைவு பெறும்.
அழகியபாண்டியபுரம் அருகே எட்டாமடை தூய திருக்குடும்ப ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 17-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
அழகியபாண்டியபுரம் அருகே எட்டாமடை தூய திருக்குடும்ப ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 17-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
விழாவின் முதல் நாளில் ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி ஆகியவையும், நேற்று காலையில் திருப்பலி, முதல் திருவிருந்து வழங்குதல் போன்றவையும் நடந்தது. தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை ேபான்றவை நடைபெறும். 16-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
விழாவின் இறுதி நாளான 17-ந் ேததி திருவிழா திருப்பலியும், தேர்ப்பவனியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஐதீகம். திருமணத்தடை அகல அனுமனைப் பிரார்த்தித்து அவரது வாலில் பொட்டு வைத்து வழிபடுவது நன்மை தரும்.
ராம அவதாரம் நிகழ்ந்த போது தேவர்களும் அதில் பங்கேற்க பூமியில் வானரங்களாகப் பிறந்தனர்.சிவனும் ராமசேவை செய்ய வேண்டும் என்பதற்காக அனுமனாக அவதரித்தார். இதற்கென பார்வதியிடம் அனுமதி பெற்றார் சிவன். கணவரைப் பிரிந்திருக்க முடியாது என்பதால், அனுமனின் வாலாக பார்வதியும் உடன் வந்தாள். மேலும் அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஐதீகம். திருமணத்தடை அகல அனுமனைப் பிரார்த்தித்து அவரது வாலில் பொட்டு வைத்து வழிபடுவது நன்மை தரும்.
வாலில் நுனியில் இருந்து, இந்த 'பொட்டு வைக்கும் பிரார்த்தனையை' தொடங்க வேண்டும். சந்தனப் பொட்டு வைத்து, அதன் மீது குங்குமம் வைக்க வேண்டும். இரண்டாவது நாள் அடுத்த பொட்டு வைக்க வேண்டும். இப்படித் தினமும் ஒரு பொட்டாக வைத்து, ஒரு மண்டலத்திற்குள் (48 நாள்) பூர்த்தி செய்ய வேண்டும். இந்த வழிபாடு முடிவதற்குள் விருப்பம் நிறைவேறும். அவல், தேன், பானகம், கடலை, இளநீர் படைத்து வழிபடலாம்.






