என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா நேற்று தொடங்கி, வருகிற 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு திருப்பலி நடந்தது. மாலை 6 மணிக்கு செபமாலை, இரவு 7 மணிக்கு கொடியேற்றம் போன்றவை நடைபெற்றது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார்.

    விழாவில், கோட்டார் மறைமாவட்ட அருட்பணியாளர் அலோசியஸ், பொருளாளர் பென்சிகர், வடக்குகோணம் பங்குதந்தை ரவி காட்சன் கென்னடி மற்றும் குருக்கள், மறவன்குடியிருப்பு ஆலய கட்டிடக்குழு உறுப்பினர்கள், பங்கு பேரவை உறுப்பினர்கள், கன்னியர்கள் மற்றும் திரளான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஆயர் நசரேன் சூசைக்கு, ஊர் தலைவர் மில்டன் ஆன்றனி தாமஸ், செயலாளர் ஜாஸ் லிகோரின், துணை செயலாளர் பெல்லா பியாட்றஸ், பொருளாளர் விஜயன், மறவன்குடியிருப்பு ஆலய கட்டிடக்குழு பொருளாளர் ஆன்டனி எட்வின், ஆலய பங்குதந்தை பெஞ்சமின், அன்பிய ஒருங்கிணைப்பு தலைவர் வினோத் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் காலையில் திருப்பலி, மாலையில் செபமாலை, ஆராதனை, நற்கருணை ஆசீர், மன்ற ஆண்டுவிழா, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    வருகிற 10-ந் தேதி மாலை 6 மணிக்கு செபமாலை, ஆராதனை, இரவு 9.30 மணிக்கு தேர் பவனி போன்றவை நடைபெறும். விழாவின் இறுதி நாளன்று காலை 7.30 மணிக்கு ஆடம்பர திருப்பலி, மதியம் 2 மணிக்கு அன்னையின் தேர்பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர்வாதம், கொடியிறக்கம், தொடர்ந்து பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
    தடிக்காரன்கோணம் புனித பனிமய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
    தடிக்காரன்கோணம் புனித பனிமய மாதா ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. விழா வருகிற 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நேற்று மாலை திருக்கொடி பவனி, கொடியேற்றம், ஆடம்பர திருப்பலி, மறையுரை, இரவு கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடந்தது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, இரவு திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

    வருகிற 10-ந் தேதி காலை 8 மணிக்கு ஆடம்பர திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெறும். தொடர்ந்து, இரவு 8.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

    திருவிழாவின் இறுதி நாளான 11-ந் தேதி காலை 10 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி, மதியம் 1 மணிக்கு அன்பின் விருந்து, இரவு நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர்கள், பங்குமக்கள் செய்துள்ளனர்.
    அற்புதங்கள் செய்கிறாரே, திருமுழுக்கு யோவானாக இருப்பாரோ?’ என சிலர் நினைத்தார்கள். ஆனால் அவரிடம் திருமுழுக்கு பெற்ற இவரே தங்களை மீட்பார் என்பதை அவர்கள் அறியவில்லை.
    இயேசு ஒரு தடவை தன்னுடைய சீடர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.

    “நான் யார் என மக்கள் நினைக்கிறார்கள்?”

    திருமுழுக்கு யோவானாக இருப்பாரோ, எலியா அல்லது பிற இறைவாக்கினர்களில் ஒருவராக இருப்பாரோ?... இப்படியெல்லாம் மக்கள் சொல்வதாக சீடர்கள் சொன்னார்கள்.

    எல்லா பதில்களும் இயேசுவின் கேள்விக்கு எதிர் கேள்விகளாகவே அமைந்தன.

    ‘அற்புதங்கள் செய்கிறாரே, திருமுழுக்கு யோவானாக இருப்பாரோ?’ என சிலர் நினைத்தார்கள். ஆனால் அவரிடம் திருமுழுக்கு பெற்ற இவரே தங்களை மீட்பார் என்பதை அவர்கள் அறியவில்லை.

    ‘இறைவாக்கு உரைக்கிறாரே, இறைவாக்கினர்களுள் ஒருவராய் இருப்பாரோ?’ என சிலர் நினைத்தார்கள். ஆனால் இறைவாக்கு மூலம் இறைஇல்லம் அழைத்துச் செல்பவர் இயேசு தான் என்பதையும் அவர்கள் அறியவில்லை.

    “சரி மக்கள் சொல்வது இருக்கட்டும், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?, நான் யார்?” என்று கேட்டார் இயேசு.

    ‘நீர் மெசியா, உன்னதக் கடவுளின் மகன்’, பட்டென பதில் சொன்னார் பேதுரு.

    பேதுரு கூறிய வார்த்தை உண்மை என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆனால் அதை பறைசாற்ற வேண்டாம் என இயேசு அவருக்கு கட்டளையிட்டார்.

    இயேசுவின் வருகைக்கு முன் தங்களை மீட்க வரும் தலைவர் வீரமிக்கவராக, பெரும்படையுடன் வந்து போரிட்டு மீட்டு செல்வார் என்று மக்கள் நினைத்திருந்தனர். ஆனால் உண்மையில் இயேசு ஏந்திய ஆயுதம் அன்பும், சீடருமே என்பதை அவர்கள் அறியவில்லை.

    எனவே இத்தகைய கனத்த இதயம் கொண்டோரை பாவத்திலிருந்து மீட்பது கடினம் என அறிந்திருந்த இயேசு நீதிமொழியின்படி, “பிறர் புகழுமாறு வாழ்” என்னும் வாக்குபடியே வாழ்ந்தார்.

    ஆனால் அவர் புகழை நாடிச்செல்லவில்லை. தனக்கு தானே அவர் பெயர் சூட்டவில்லை. தன் வாழ்க்கையின் மூலமாகவே தான் யார் என்பதை மக்களுக்கு காட்டினார்.

    மக்களின் வாழ்விற்கு ஏற்றார் போல தன்னையே தாழ்த்திக்கொண்டார். அவர் தன்னை உயர்ந்தவராக வெளிப்படுத்திக் கொண்டதே இல்லை.

    ஒரு மன்னரைப் போலவோ, ஒரு அதிகாரியைப் போலவோ இல்லாமல் ஒரு சாதாரண மனிதனாக, அதுவும் மக்களோடு மக்களாக வாழ்ந்த கடவுளை, மக்கள் எவ்வாறு புரிந்துவைத்துள்ளனர் என்பதை அறியவே “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்” என இயேசு வினவுகிறார்.

    காட்டின் அரசனான சிங்கம், “தானே அரசன்” என புகழ்ந்து பாடாது. அது தன் வலிமையான செயல்களாலேயே அரசன் என புரியவைக்கும். இயேசு அன்பினாலும் இறைவார்த்தையாலும் தான் அரசன் என்பதை மக்களுக்கு உணர்த்தினார். ஆனால் மக்கள் இதனை உணர்ந்துக்கொள்ள பல நாட்கள் ஆயின.

    இதனை ஓர் கதை மூலமாகவும் புரிந்து கொள்ளலாம். ஒரு ஊரில் உள்ள வணிகர் ஒருவர் மிகவும் நேர்மையோடும் உண்மையோடும் வணிகம் செய்து வந்தார். மக்கள் அனைவரும் அவரை மதித்தனர். ஒரு நாள் வெளியூரில் இருந்து வந்த வணிகர் ஒருவர் மிகவும் விலைகுறைந்த பொருட்களை அரிய பொருட்கள் எனக்கூறி அதிக விலைக்கு விற்பனை செய்ய, உள்ளூர் வணிகரின் வணிகம் பாதிப்படைந்தது.

    ஆனால் அவர் அதற்காக பொறாமையோ, வருத்தமோ அடையவில்லை. காலங்கள் சென்ற போது, உள்ளூரில் உள்ள மக்களில் சிலர் வெளியூர் வணிகரின் சூழ்ச்சியை அறிந்து அவரை அடித்து விரட்டினர். ஊர் மக்கள் அனைவரும் உள்ளூர் வணிகனின் நேர்மையை அறிந்து அவரிடமே மீண்டும் பொருட்கள் வாங்க தொடங்கினர்.

    இதில் உண்மையை பறைசாற்றும் இயேசு நேர்மையான வணிகராகவும், பொய்மையையும் நஞ்சையும் மக்கள் மனதில் விதைப்பவரான போலி இறைவாக்கினர் சூழ்ச்சி கொண்ட வெளியூர் வணிகராகவும் இருக்கின்றனர்.

    ஒருவரது செயலே ஒருவரை தீர்மானிக்கும். ஒரு சிறிய நகரில் பிறந்த இயேசுதான் ‘மெசியா’ என்பதை எத்தனை பேர் அறிவர்?

    அன்று மக்கள் அதை நம்பவில்லை. காரணம் மாளிகையில் தான் மீட்பர் வரவேண்டும் என்பது அவர்களது கனவாக இருந்தது. அவர்கள் தாவீதைப் போல ஒரு மன்னனை எதிர்பார்த்தார்கள். அதனால் தான் கடைசி வரை ஒரு மாட்டுத் தொழுவத்தில் வந்த மனிதரை, மெசியாவாக அவர்களால் ஏற்க முடியவில்லை.

    இயேசுதான் தம் உடலை நலமாகுபவர், தன் குடும்பத்தை காப்பவர் என்பதை எத்தனை பேர் அறிவர்?, வெகு சிலரே அறிவர். காரணம், விசுவாசமே நலமளிக்கும். விசுவாசமில்லாத வேண்டுதல்கள் பயனளிப்பதில்லை.

    நாமும் நமது வாழ்க்கையில் இயேசுவைப் போல வாழவேண்டுமெனில், நமது செயல்களைக் கொண்டு மக்கள் நம்மை அடையாளம் காண்பவர்களாக இருக்க வேண்டும்.

    நாமும் நமக்குள் ஒரு கேள்வியைக் கேட்போம், “என்னை யார் என மக்கள் நினைக்கிறார்கள்?”

    சகோ. ஆல்ஸ்டன் பெனிட்டோ வின்சென்ட், யூதா ததேயு ஆலயம், திருநெல்வேலி.
    நாகர்கோவில் மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 11-ந் தேதி வரை நடக்கிறது.
    நாகர்கோவில் மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 11-ந் தேதி வரை நடக்கிறது. நாளை மாலை 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடைபெறுகிறது. ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். முன்னதாக செபமாலை, பங்குத்தந்தைக்கு ஊர் மக்கள் வரவேற்பு, ஆயருக்கு வரவேற்பு நடைபெறுகிறது. 3-ந் தேதி மாலை 6 மணிக்கு ஆராதனை அருட்பணியாளர் பிறிம்மஸ் சிங் தலைமையில் நடக்கிறது. ஜெயச்சந்திர ரூபன் மறையுரையாற்றுகிறார். 4-ந் தேதி காலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு அருட்பணியாளர் இம்மானுவேல் தலைமை தாங்க, ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் பென்சிகர் தலைமையில் நற்கருணை ஆசீர் நடக்கிறது. அதைத்தொடர்ந்து மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா நடைபெறுகிறது.

    5-ந் தேதி மாலை 6 மணிக்கு அன்னையின் பெருவிழா திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் மரியதாஸ் தலைமை தாங்க, பிரபுதாஸ் மறையுரையாற்றுகிறார். இவர்களுடன் பிரான்சீஸ் எம்.போர்ஜியா இணைந்து ஜெபிக்கிறார்.

    6-ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு அருட்பணியாளர் ரவி காட்சன் கென்னடி தலைமை தாங்க, ஆரோக்கிய ரமேஷ் மறையுரையாற்றுகிறார். 7-ந் தேதி மாலை 6 மணி திருப்பலிக்கு அருட்பணியாளர் சாலமோன் தலைமை தாங்குகிறார். பஸ்காலிஸ் மறையுரையாற்றுகிறார்.

    8-ந் தேதி மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் ஆன்ட்ரூஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மரிய கிளாஸ்டன் மறையுரையாற்றுகிறார். 9-ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கும் திருப்பலிக்கு அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமை தாங்க, பிரான்சீஸ் சேவியர் நெல்சன் மறையுரையாற்றுகிறார்.

    10-ந் தேதி காலை 6 மணிக்கு முதல் திருவிருந்து நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் லியோன் கென்சன் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஹிலேரியூஸ் மறையுரையாற்றுகிறார். இவருடன் அஜின் ஜோஸ் இணைந்து ஜெபிக்கிறார்.

    10-ந் தேதி மாலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் மரிய வில்லியம் தலைமையில் ஆராதனை நடக்கிறது. ஆரோக்கிய ஆன்றோ மறையுரையாற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடைபெறுகிறது.

    11-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் ஆடம்பர திருப்பலிக்கு அருட்பணியாளர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்க, வில்சன் மறையுரையாற்றுகிறார். இவர்களுடன் சேவியர் ராஜ், பிரைட் இணைந்து ஜெபிக்கிறார்கள். பகல் 2 மணிக்கு அன்னையின் தேர் பவனி, நற்கருணை ஆசீர்வாதம், கொடியிறக்கம், ஆண்டுவிழா பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
    ‘ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு; தம் வழியில் வெற்றி காண்போரையும் சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே’ என்று சங்கீதம் 37:7-ல் சொல்லப்பட்டுள்ளது.
    ஒரு நாள் காலையில் படுக்கையை விட்டு எழுந்து சுவையான காபி ஒன்றை குடித்து தூக்கத்தை கலைத்தேன். சுவற்றில் உள்ள கடிகாரம் ஏழு மணி என்று ஒலித்தது. ஒரு நாளின் முழு பரபரப்பும், பிரச்சினைகளின் ஆரம்பமும் அந்த நேரத்திலிருந்து தான் தொடங்கும். ஆதலால் ஒவ்வொரு நாளும் அந்த காலை பரபரப்பு கடந்துவிட்டால் நன்றாக இருக்குமே என நினைப்பதுண்டு.

    பிள்ளைகள் காலை 7.15 மணியாகியும் படுக்கையில் உருண்டு புரண்டு கொண்டிருக்கிறார்கள். எட்டு மணிக்கு பள்ளிக்கு புறப்பட்டு விட்டால் தான் சரியாக இருக்கும். எனக்கு பொறுமை இழக்க ஆரம்பித்தது. மெதுவாக அது கோபமாக மாறி கடுமையாக வசையாக திசைமாறியது. வீட்டிலிருந்த‌ அமைதியும் நிம்மதியும் சட்டென காணாமல் போய்விட்டன.

    வீட்டிலிருந்த அனைவருக்கும் எரிச்ச‌ல், கோபம், பதற்றம், அவசரம், மறதி, ஏமாற்றம் என அனைத்து உணர்வுகளும் வந்து போயின. ஒரு வழியாக வீட்டை விட்டுக் கிளம்பி, வண்டியில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வேகமாக காரோட்டி பள்ளிக்கூடம் சென்று சேர்ந்த போது, பத்து நிமிடங்கள் தாமதமாகியிருந்தது.

    பெருமூச்சு விட்டுவிட்டு மறுபடியும் வண்டி எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே தடுப்புகள். வழியில் எழுந்த எரிச்ச‌லும் கோபமும் ஒருபுறம் இருக்க, நேரத்துக்கு செல்லவில்லையென்றால் சம்பளம் வேற பிடித்துவிடுவார்கள் எனும் சிந்தனை மனதில் இன்னொரு பக்கம் இருந்தது.

    நிம்மதி இழந்தவனாக அலுவலகத்தில் சேரும் போது எக்ஸ்பிரஸ் வண்டி போல கடிகார முள் பத்து தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த போது தான் காலை ஏழு மணிக்கு விட்ட மூச்சு மறுபடியும் கிடைத்தது.

    அருகில் இருப்பவர் சிரித்துக்கொண்டே சொன்னார், “ஏன் இவ்வளவு பதற்றம்?, பொறுமை கடலினும் பெரிது”.

    நீதிமொழிகள் 16:32 இவ்வாறு கூறுகிறது: “வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்; நகரை அடக்குகிறவரைவிடத் தன்னை அடக்குகிறவரே சிறந்தவர்”.

    கடவுளிடம் நாம் உலக பிரகாரமான ஆசீர்வாதங்களை பெறுவதற்கே ஜெபம் பண்ணுகிறோம். ஆனால் பொறுமை வேண்டும் என்று ஜெபம் செய்தது உண்டா?

    பொறுமை இழந்தால் கோபம் பிறக்கும். எல்லா கொடிய பாவங்களுக்கும் அந்த கோபம் காரணமாக இருக்கிறது. அப்படியானால் நாம் முதலாவதாக பொறுமை உள்ளவர் களாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் இல்லையா?

    வாழ்க்கையில் நாம் திட்டமிட்டபடி அல்லது மனதில் நினைத்தது போல எல்லாம் அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதில் சில குறுக்கீடுகள் வந்தால் பொறுமை இழக்கிறோம்.

    இயேசுவின் சீட‌ர்கள் குறுக்கீடுகளை விரும்பாததால் குழந்தைகளை இயேசுவிடம் செல்ல அனுமதிக்கவில்லை என்கிறது மத்தேயு 19:14. ஆனால் இயேசுவோ ‘சிறு பிள்ளைகளை என்னிடத்தில் வர‌ விடுங்கள், தடுக்காதீர்கள்’ என்று சொல்கிறார்.

    சிரமம் இல்லாத வாழ்க்கையும், நினைத்ததை உடனடியாக சாதித்து விட வேண்டும் என்ற எண்ணமும் எல்லோருக்கும் மேலோங்கி இருக்கிறது. பொறுமையுடன் காத்திருக்க யாரும் விரும்புவதில்லை.

    எரிச்சல் அடைவதற்கான காரணங்களைப் பட்டியலிட்டால், சாலை நெரிசல், சுவையில்லாத உணவு, வெயில் கொடூரம், தாமதமான வாகனம், இனிப்பு குறைந்த டீ, நண்பனின் கிண்டல், காத்திருப்பு என சொல்லி கொண்டே போகலாம்.

    கடவுள் கொடுத்த விவேகம் தான் நாம் பொறுமையுடன் இருக்க கற்றுக்கொடுக்கும். நான் வெறும் ஒரு மனிதன் தான், கடவுள் அல்ல என்றும், மற்றவர்களும் என்னைப் போல தவறு செய்பவர்கள் தான் என்றும் புரிந்து கொள்ளும் மனப்பான்மை இருக்க வேண்டும்.

    கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றும், அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்ற எண்ணமும் இருந்தால் நமக்குள் பொறுமை தானாகவே வந்து விடும்.

    ‘மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கின்றார்; அப்படியிருக்க தன் வழியை மனிதனால் எப்படி அறிய இயலும்?’ (நீதிமொழிகள் 20:24)

    ‘அன்பு பொறுமையுள்ளது’ என்று பைபிள் சொல்கிறது, அப்படியானால், ‘பொறுமை இல்லையேல் அன்பு இல்லை’ என்பதே பொருளாகும். ஆதலால் அன்பில் இன்னும் ஆழமாக வாழ கற்றுக் கொள்ளுதல் பொறுமையாய் வாழ வழி வகுக்கும்.

    ஒருவருக்கு ஒருவர் பொறுமையில் நிலைத்திருங்கள். ஏன் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றால், ‘நீங்கள் அன்பானவர்கள்’.

    வாழ்க்கையில் பொறுமை உள்ளவர்களாக இருக்க கடவுளைச் சார்ந்திருக்கும் ஒரு வாழ்க்கை வாழ வேண்டும். ‘ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு; தம் வழியில் வெற்றி காண்போரையும் சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே’ என்று சங்கீதம் 37:7-ல் சொல்லப்பட்டுள்ளது.

    பொறுமையை வீடுகளில் ஆரம்பியுங்கள். வீதிகளில் அதை விரிவுபடுத்துங்கள். வாழ்க்கை அழகானது மனமாற ரசியுங்கள். வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது பொறுமையின்மையால் அதை அழித்து விட வேண்டாம்.

    துலீப் தாமஸ், சென்னை.
    ஒபதியா என்பதற்கு “யாவே இறைவனை வழிபடுபவர்” என்பது பொருள். பழைய ஏற்பாட்டு நூலிலேயே மிகவும் சிறிய நூல் இது தான்.
    ஒபதியா என்பதற்கு “யாவே இறைவனை வழிபடுபவர்” என்பது பொருள்.

    பழைய ஏற்பாட்டு நூலிலேயே மிகவும் சிறிய நூல் இது தான். இந்த நூலில் ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே உண்டு. 21 வசனங்களும், 670 வார்த்தைகளும் கொண்ட மிகவும் சுருக்கமான நூல் இது.

    ஒபதியா தென் நாடான யூதாவில் வாழ்ந்தவர். எருசலேம் நகர் வீழ்ச்சியடைந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட நூல் இது.

    எருசலேமின் வீழ்ச்சி அருகில் உள்ள நாடுகளுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அதில் ஒரு நாடு ஏதோம். இந்த ஏதோம் நாடு யூதாவில் புகுந்து யூதாவின் நகர்களைச் சூறையாடியது.

    இந்த ஏதோமியர் வேறு யாருமல்ல ஆபிரகாமின் மகனான ஈசாக்கின் புதல்வர்களில் ஒருவரான ஏசாவின் வழிமரபினர். அவர்கள் போராடுவது ஏசாவின் இன்னொரு சகோதரனான யாக்கோபின் வழிமரபினரோடு.

    கருவிலேயே சண்டையிட்ட இரட்டையர்கள் ஏசாவும், யாக்கோபும்.

    யாக்கோபு இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்டவர். ஆனாலும் வாழ்க்கையில் பல குறுக்கு புத்திகளைக் காண்பித்து கடைசியில் இறைவனிடம் சரணடைந்தவர்.

    ஏசா வேட்டைக்காரன். சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு தனது தலைமகன் உரிமையைக் கூட யாக்கோபுக்கு விற்றவன். இருவருக்கும் வாழும் போதே பகை. அந்தப் பகை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் பரவி தீரா நிரந்தரப் பகையாய் உருவாகி விட்டது.

    யாரெல்லாம் இஸ்ரேல் மீதும், எருசலேம் மீதும் போர் தொடுக்கிறார்களோ அவர்களோடு இணைந்து கொண்டு இஸ்ரேலுக்கும், யூதாவுக்கும் குடைச்சல் கொடுப்பதை ஏதோம் வழக்கமாகிக் கொண்டிருந்தது.

    ஒபதியா, ஏதோம் நாட்டுக்கு எதிராக இறைவாக்கு உரைத்தார். ஏதோம் நாடு தண்டிக்கப்படும் என்பதை அவர் தீர்க்கதரிசனமாய் கூறினார். அவருடைய தீர்க்கதரிசனம் ஒரு காட்சிப்படுத்தல் போல அமைந்திருக்கிறது.

    ஏதோம் நாடு சாக்கடலுக்கு தென் கிழக்காய் அமைந்துள்ள நகரம். இது வாக்களிக்கப்பட்ட தேசத்தின் பகுதி தான். ஆனால் இந்த நிலத்தை இஸ்ரயேலர்கள் கையகப்படுத்தவில்லை.

    ஏதோமில் இரண்டு நகர்கள் உண்டு. அதில் ஒன்று சேலா. அதை சிவப்பு பாறைகளால் நிரம்பியிருக்கும் இடம். அதில் அழகிய வேலைப்பாடுகளுடன் பல ஆலயங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன. சுமார் இரண்டாயிரம் அடி உயரமாய் அமைந்துள்ள இந்த நகரத்தைத் தான் ஒபதியா தனது இறைவாக்கில் குறிப்பிடுகிறார்.

    மலைக்குகைகளில் வாழ்ந்த ஏதோமியர்களுக்கு இந்த கலைவேலைப்பாடுகள் அடங்கிய மலை ஒரு அந்தஸ்தின் அடையாளம். அதன் உச்சியிலிருந்து பார்த்தால் செங்கடலும், சாக்கடலும் அழகாய்த் தெரியும்.

    எத்தனை அழகு இருந்தால் என்ன? ஏதோமியர்கள் உண்மை தெய்வத்தை வழிபடும் வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கவில்லை.

    இந்த நூலின் முதல் பதினான்கு அதிகாரங்களும் ஏதோமுக்கு எதிராக இறைவன் உரைக்கின்ற வார்த்தைகள்.

    இரண்டாவது பகுதியான பதினைந்தாம் அதிகாரம் முதல் இருபத்து ஒன்றாம் அதிகாரம் வரை பிற தேசங்களுக்கு வர இருக்கின்ற தண்டனைத் தீர்ப்பைக் குறிக்கும் வார்த்தைகள்.

    ஏதோமைக் குறித்து பேசும்போது ‘அவர்களுடைய கர்வம் தேசத்தை அழிக்கும்’ என்கிறார்.

    இறைவனுக்குப் பிடிக்காத ஒரு விஷயம் கர்வம். அப்படிப்பட்ட கர்வம் கொண்டவர்களை இறைவன் அடித்து வீழ்த்துவார் எனும் உண்மையை ஒபதியா எடுத்துரைக்கிறார்.

    ‘சகோதரன் யாக்கோபின் வழிமரபினர் மீது நீ வன்மம் காட்டாமல் இருந்திருக்க வேண்டும்’ என இறைவன் கடுமையாய் ஏதோமை எச்சரிக்கிறார்.

    ஏதோமுக்கு எதிராக இறைவாக்கு உரைத்தவர் ஒபதியா மட்டுமல்ல. ஏசாயா, எசேக்கியேல், எரேமியா ஆகிய பிரபல இறைவாக்கினர்கள் மூலமாகவும் இறைவன் ஏதோமியரை எச்சரித்திருக்கிறார்.

    எல்லா எச்சரிக்கைகளையும் ஏதோமியர் புறக்கணித்ததால் தான் இறைவனின் தீர்ப்பு அந்த நாட்டின் மீது விழுந்தது.

    ஏதோமியருக்கும், யூதர்களுக்கும் இருந்த பகை தொடர்ந்து கொண்டே இருந்தது.

    இயேசுவின் மழலைக்காலத்தில் ஏரோது மன்னன் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எல்லாம் கொன்றதும் ஏதோமிய வன்முறையே. அவனுடைய மகன் திருமுழுக்கு யோவானை படுகொலை செய்தான். அவனுடைய மகன் தான் யாக்கோபுவைப் படுகொலை செய்தவன் (தி.ப12).அவனுடைய மகன் அகரிப்பா கி.பி. 100 -களில் வாரிசு இன்றி இறந்தான். அப்படி படிப்படியாக ஏதோமியர்கள் அழிந்தனர்.

    இன்று உலகில் ஏதோமியரின் வழிமரபு இல்லை. ஒபதியாவின் இறைவாக்கு அட்சர சுத்தமாய் நிறைவேறிவிட்டது.

    இதை இறைவன் சுமார் 600 ஆண்டு கால இடைவெளியில் செயல்படுத்தினார். இறைவன் தனது வார்த்தையை நிறைவேற்றுவார் என்பதையும், அதற்கான கால அளவை அவரே நிர்ணயிப்பார் என்பதையும் இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

    இறைவன் பிற தேசங்களுக்கும் ஒபதியா மூலம் எச்சரிக்கையை அளித்தார். தனது மக்களை இன்னலுக்குள்ளாக்கும் மக்களை இறைவன் தொடர்ந்து தண்டித்து வருகிறார்.

    ஒபதியா நூல் அளவில் சிறியதாக இருந்தாலும் இறைவன் தனது மக்கள் மேல் வைத்திருக்கும் அன்பையும், அவரது மக்களை எதிர்ப்போர் மீது கொள்ளும் சினத்தையும் தெளிவாய் பதிவு செய்கிறது. இன்றைய ஆன்மிக புரிதலில் “அயலான் மீது அன்பு செலுத்தாத கிறிஸ்தவன் இறைவன் பார்வையில் ஏதோமியனாய் அழிவான்” என்பதைக் கற்றுக்கொள்வோம்.

    சேவியர்
    போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பாத்திமா அன்னையின் சொரூப பவனி குளச்சல் பகுதியில் நடந்தது. தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
    குளச்சல் அருகே கண்டர்விளாகத்தில் தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. இங்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு போர்ச்சுக்கல் நாடு பாத்திமா நகரிலிருந்து உலகம் முழுவதும் உலா சென்ற தூய பாத்திமா அன்னையின் சொரூபம் வந்து சென்றது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து கண்டர்விளாகம் ஆலயத்திற்கு நிரந்தரமாக சுமார் 3½ அடி உயரமுள்ள தூய பாத்திமா அன்னையின் சொரூபம் வழங்கப்பட்டது.

    இந்த சொரூபம் நேற்று மாலை குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் இருந்து கண்டர்விளாகத்திற்கு பவனியாக எடுத்து செல்லப்பட்டது. நிகழ்ச்சியில், குளச்சல் மறை வட்டார முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி.சேல்ஸ் திருப்பலி நிறைவேற்றினார்.

    பவனியானது சைமன்காலனி, கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை, ஆலஞ்சி வழியாக கண்டர்விளாகம் தூய பாத்திமா அன்னை ஆலயம் சென்றடைந்தது. பின்னர் அங்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், அருட்பணியாளர்கள் மரிய செல்வன், ஜான் குழந்தை மற்றும் அருட்சகோதரிகள், பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    கோட்டப்பாளையத்தில் உள்ள புனித மகதலா மரியா ஆலய தேர்பவனி நடைபெற்றது. திருவிழாவில் மத பாகுபாடின்றி மக்கள் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்தனர்.
    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையத்தில் பழமை வாய்ந்த புனித மகதலா மரியா ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் 16-ம் நூற்றாண்டில் சிறிய வழிபாட்டு தலமாக அமைக்கப்பட்டு, பின்னர் 18-ம் நூற்றாண்டில் வீரமா முனிவரால் மேம்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி திருப்பலிகள், மறையுரை உள்ளிட்டவை நடந்தன. 2 நாட்களுக்கு முன்பு இரவில் 7 சப்பரங்களில் ஏசு உலா வந்தார். இதையொட்டி வாண வேடிக்கை நடந்தது. நேற்று முன்தினம் மதியம் ஏசுவின் சொரூபம் அலங்கரிக்கப்பட்டு, தேரில் வைக்கப்பட்டது. இதையடுத்து தேர்பவனி நடந்தது. இத்துடன் திருவிழா நிறைவுபெற்றது.

    திருவிழாவில் மத பாகுபாடின்றி மக்கள் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்தனர். திருவிழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    நாகர்கோவில் புனித அல்போன்சா ஆலய திருவிழா திருப்பயண நேர்ச்சை தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.
    நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் உள்ள புனித அல்போன்சா ஆலய திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவின் 2-ம் நாள் விழாவையொட்டி திருப்பயண நேர்ச்சை நடந்தது.

    இந்த பயணத்துக்கு தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பவ்வத்து பறம்பில், மறை மாவட்ட இளைஞர் இயக்க தலைவர் ஜோசப் சந்தோஷ், சூசைபுரம் வட்டார முதன்மை பணியாளர் ஆன்றனி ஜோஸ், தக்கலை மறை மாவட்ட அருட்தந்தையர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சிரோ மலபார் கத்தோலிக்க சபையில் தக்கலை மறை மாவட்ட ஆலயங்கள் அமைந்துள்ள நித்திரவிளை, படந்தாலுமூடு, முஞ்சிறை, கிள்ளியூர், கருங்கல், சூசைபுரம், பாலப்பள்ளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட பங்கு மக்கள், 20-க்கும் மேற்பட்ட பங்குதந்தைகள், 50-க்கும் மேற்பட்ட அருட் சகோதரிகள் திருப்பயணமாக ஆலயத்துக்கு வந்து நேர்ச்சையை நிறைவேற்றினர்.

    நடை பயணமாக வந்தவர்களை ஆலய அதிபர் சனில் ஜாண் பந்திச்சிறக்கல், துணை பங்குதந்தை அஜின் ஜோஸ் மற்றும் பங்கு மக்கள் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் ஆலயத்தில் திருப்பயணமாக வந்தவர்களுக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள் மற்றும் சிறப்பு திருப்பலி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு மக்கள் செய்திருந்தனர்.
    சிதம்பரத்தில் நிர்மலா மெட்ரிக் பள்ளி அருகே இருதய ஆண்டவர் ஆலய பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.
    சிதம்பரத்தில் நிர்மலா மெட்ரிக் பள்ளி அருகே இருதய ஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய பெருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்து வந்தது. விழாவில் நேற்று முன்தினம் இரவு ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு சிறப்பு ஜெபவழிபாடு நடைபெற்றது.

    ஆலய பங்கு தந்தை சுந்தர்ராஜன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் இருதய ஆண்டவர் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. கனகசபைநகர், தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி மற்றும் போல்நாராயணன் தெருவழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை இரவு 9.30 மணிக்கு வந்தடைந்தது.

    நிகழ்ச்சியில் பங்கு மன்ற செயலாளர் அலெக்சாண்டர், துணைத்தலைவர் ஜெகநாதன், முன்னாள் செயலாளர் ஆரோக்கியசாமி, மோகன், வல்லபதாஸ், சின்னையன், ஸ்டீபன், சாமுவேல் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    இவ்வுலகில் எவ்வளவு நாம் உபத்திரவத்தின் வழியாய் கடந்து போனாலும் உள்ளத்திற்குள் தேவன் கொடுக்கிற சந்தோஷம் ஒருவருக்கு இருக்குமானால் அந்த சந்தோஷம் அந்த நபருடைய உள்ளத்தை பூரிப்பாக்கும்.
    ‘கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிற படியால் நான் அசைக்கப்படுவதில்லை’. சங்.16:8

    இந்த வசனத்தை சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கும்போது மிகவும் ஆசீர்வாதமானவைகளை ஆண்டவர் தம்முடைய வசனத்தில் உள்ளடக்கி வைத்திருக்கிறார்.

    தேவனுடைய தாசனாகிய தாவீது நம்மைப்போல மாம்சமும், ரத்தமும் உடையவராக வாழ்ந்து மரித்தவர். அவர் ஆண்டவரை பலவிதங்களில் ருசித்து அனுபவப்பட்ட ஒரு வல்லமையுள்ள ஊழியக்காரர். அவர் சொல்லுகிற வார்த்தைதான் ‘நான் அசைக்கப்படுவதில்லை’.

    பாடுகளும் உபத்திரவங்களும் நிறைந்த இவ்வுலகத்தில் பலவிதங்களில் நாம் அசைக்கப்படக்கூடிய சூழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்டு விடுகிறோம். அவ்வேளைகளில் நம்முடைய உள்ளான மனுஷனில் பெலகீனமும், ஆத்மாவில் சோர்வும், ஆவியில் கலக்கமும், பயமும் உண்டாகி தேவ பிரசன்னத்தையும் இழக்க நேரிடுகிறது.

    உங்களுக்கு முன் ஆண்டவரை நிறுத்துங்கள்

    உன்னதமான தேவனுடைய ஊழியக்காரனாகிய தாவீது சொல்கிறார், ‘ஆண்டவரை எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்’. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இவ்வுலக வாழ்வில் நமக்கு முன்பாக வைக்க வேண்டியவைகளைக் குறித்து நாம் மிகவும் ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்க வேண்டும். சிலர் எப்பொழுதும் தங்களுக்கு முன்பாக பணத்தையும், பொருளாதாரத்தையும் உலகப் பிரகாரமான சொத்துக்களையுமே நிறுத்தி வைத்து அவைகளின் மேலே கண்ணோக்கமாய் இருக்கிறார்கள்.

    இன்னும் சிலர் தாங்கள் விசுவாசிகள் என்ற ஸ்தானத்தில் இருந்தாலும், தான் தேவனுடைய பிள்ளை என்பதை மறந்து, உலகத்தை தங்களுக்கு முன்பாக நிறுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு எப்போதும் உலகப் பிரகாரமான படிப்பையும், தங்கள் தொழிலையுமே தங்களுக்கு முன்பாக நிறுத்தி அவைகளில் மூழ்கிப் போய்க்கிடக்கிறார்கள்.

    இவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கைக்கு அவசியம். ஆகிலும் இவை அனைத்தும் சில காலங்கள் தோன்றி மறையக்கூடியவைதான். ஆனால் உங்களை உருவாக்கின ஆண்டவரை உங்களுக்கு முன்பாக நிறுத்தி அவரையே அனுதினமும் நோக்கிப் பார்ப்பீர்களேயானால் எந்த ஒரு எதிர்ப்பு சக்திகளும் உங்களை அசைக்க முடியாது என்பது நிச்சயம்.

    ஆண்டவர் உங்களுக்கு முன்பாக நிற்பாரேயானால் உங்களுக்கு விரோதமாய் எழும்பி உங்களை தாக்க வருகிற சகல சத்துருவின் அம்புகளையும் ஆண்டவர் தாமே மடங்கடித்து உங்களுக்காக யுத்தம் பண்ணுவார் அல்லவா?, ஏனென்றால் அவர் யுத்தத்தில் வல்லவர்.

    கர்த்தர் உங்களுக்கு முன்பாக நிற்பாரேயானால் உங்களுக்கு விரோதமாய் எழும்புகிற சகல பொல்லாத ஆவிகளிலிருந்து உங்களைப் பாதுகாத்து தமது செட்டையின் கீழே அடைக்கலமாக்கி கொள்ளுவாரல்லவா?, ஏனெனில் அவரே நமக்கு அடைக்கலம்.

    ஒரு சமயம் இயேசு கிறிஸ்துவினுடைய சீடர்கள் கடலில் பயணம் பண்ணிக் கொண்டிருந்தபோது நடுக்கடலில் எதிர்காற்று அவர்களை தாக்கினபடியினால் அவர்கள் சென்ற படகு அவைகளினால் அலைக்கழிக்கப்பட்டது. அவ்வேளையில்தானே இயேசு கடலின்மேல் நடந்து அவர்களிடத்திற்கு வந்து அவர்கள் படகில் ஏறினார். அவர் படகில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. மத்தேயு 14:32

    இயேசுவின் சீடர்களை அலைக்கழிக்கச் செய்த எதிர்காற்றை மேற்கொள்ள இயேசு அவர்களுக்கு முன்பதாக வந்து நின்றார். அவ்வேளையில் தானே அவர்களை எதிர்த்த காற்று அவர்களை விட்டு கடந்து போனது.

    இதைப்போல் உங்கள் வாழ்வில் தேவபிள்ளை என்ற ஸ்தானத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும், உங்கள் ஆவிக்குரிய பயணத்திற்கு விரோதமாக அவ்வப்போது இப்படிப்பட்ட பிரச்சினைகள், போராட்டம், வியாதி, கடன்பாரம், வேலையில்லாத நிலைமை பல ஆண்டுகளாய் திருமணமாகாத தடைகள் இன்னும் அநேக உபத்திரவங்களாகிய எதிர் காற்றுகள், உங்கள் இறைநம்பிக்கையை தாக்க நேரிடும்.

    இப்படிப்பட்ட சூழ்நிலைகள் வரும்போது நம்முடைய சுயஞானத்தை நமக்கு முன்பாக நிறுத்திவிடாமல் உங்களையும் என்னையும் உருவாக்கின நம் அருமை இரட்சகரை உங்களுக்கு முன்பதாக நிறுத்தி விடுங்கள். அவரே உங்களுக்கு முன்னதாகப் போய் சகல கோணலான பாதைகள் எல்லாவற்றையும் செம்மையாக்குவார்.

    ‘ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது’. சங்கீதம் 16:9

    ஆண்டவரை நமக்கு முன்பாக நிறுத்தி அவரையே நாம் நோக்கிக் கொண்டிருக்கையில் நாம் உலகத்தாலும், சாத்தானாலும் அசைக்கப்படாத ஜீவியம் செய்யமுடியும். ஆண்டவர் நமக்கு முன்பாக இருப்பாரேயானால் நம்முடைய உள்ளம் அவரது சந்தோஷத்தால் பூரிக்கும் என்று தாவீது சொல்கிறார்.

    இவ்வுலகில் எவ்வளவு நாம் உபத்திரவத்தின் வழியாய் கடந்து போனாலும் உள்ளத்திற்குள் தேவன் கொடுக்கிற சந்தோஷம் ஒருவருக்கு இருக்குமானால் அந்த சந்தோஷம் அந்த நபருடைய உள்ளத்தை பூரிப்பாக்கும். அப்படிப்பட்டவர்கள் எத்தனை உபத்திரவத்தின் வழியாய் கடந்து போனாலும் அவர்களுடைய முகத்தில் ஒரு தெய்வீக சந்தோஷம் இருப்பதைக் காணலாம்.

    ஒரு மனுஷனுக்கு எவ்வளவு ஆஸ்தியும் சொத்தும் இருந்தாலும் சமாதானம், சந்தோஷம் இல்லையென்றால் இவ்வுலகில் வாழ்வது வீணாயிருக்கும். உலகம் தரக்கூடாத சந்தோஷத்தை தருகிற கர்த்தரிடத்தில் பரிபூரணமாய் திரும்பி, உங்கள் எதிர்காலத்தை அவருடைய கரத்தில் அர்ப்பணித்து வேதவசனத்தை மாத்திரம் பிடித்துக் கொண்டு சந்தோஷத்தோடே ஆண்டவரை அனுதினமும் முன்பாக நிறுத்தி அவருடைய சித்தத்திற்கு உங்களை அர்ப்பணியுங்கள்.

    சகோ ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
    நாகர்கோவில் புனித அல்போன்சா ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் உள்ள புனித அல்போன்சா ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இன்று மாலை 6.30 மணிக்கு தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பவ்வத்து பரம்பில் கொடியேற்றி வைக்கிறார்.

    விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு திருவிழா சிறப்பு ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறுகிறது.

    9-ம் நாள் திருவிழாவன்று மாலை 6.30 மணிக்கு செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி நீதிநாதன் கலந்து கொண்டு மரியன்னையிடம் பக்தி கொண்டவள் புனித அல்போன்சா என்ற சிந்தனையுடன் மறையுரையாற்றுகிறார். நாகர்கோவில் புனித அல்போன்சா துணை பங்குதந்தை அஜின்ஜோஸ், சிறப்பு நவநாள் வழிபாட்டை நடத்துகிறார்.

    10-ம் நாள் விழாவன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து சாதி, மத வேறுபாடுகளை கடந்து திருப்பயணமாக வருகிறார்கள். காலை 9 மணிக்கு சிறப்பு நவநாள் வழிபாட்டை தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பவ்வத்து பரம்பில் வழிநடத்துகிறார். தொடர்ந்து தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. பின்னர் திருவிழா தேர் பவனியும், நேர்ச்சை விருந்தும் நடைபெறும்.

    மாலை 3.30 மணிக்கு செங்கோட்டை, வாஞ்சிநகர் புனித லொரேட்டோ மாதா ஆலய பங்குதந்தை லிஜோ தெக்கேல் தலைமையில் நவநாள் வழிபாடும், 4 மணிக்கு அருட்தந்தை தோமஸ் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி, விருதுநகர் சீறோ மலபார் அருட்தந்தை பீட்டர் கிழக்கேல் மறையுரையாற்றுகிறார்.

    ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் அகஸ்டின் தறப்பேல், ஜேம்ஸ் கல்லூக்காரன், அருள்செல்வம், ஜார்ஜ் மற்றும் திருவழிபாட்டு ஏற்பாடுகளை பேரருட் தந்தை சனில் ஜாண் பந்திச்சிக்கல், துணை பங்குதந்தை அஜின் ஜோஸ் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    ×